Tuesday 7 April 2020

அண்மையில் படித்த புத்தகம் : நட்பெனும் நந்தவனம்....இறையன்பு

அண்மையில் படித்த புத்தகம்  : நட்பெனும் நந்தவனம்
நூல் ஆசிரியர்               :  இறையன்பு
பதிப்பகம்                   :  கற்பகம் புத்தகலாயம்,சென்னை-17
முதல் பதிப்பு               :   ஜனவரி-2020 மொத்த பக்கங்கள் 448 விலை ரூ 375/-

                       'இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும் 'என்பது எனது முனைவர் பட்ட தலைப்பு. 2005-ல் நான் இந்த தலைப்பில் பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன் அய்யா அவர்களை நெறியாளராகக் கொண்டு முனைவர் பட்ட ஆராய்ச்சி ஆரம்பித்தபோது 16 நூல்கள் திரு.இறையன்பு அவர்களால் எழுதப்பட்டிருந்தது. இன்று நூற்றுக்கு அதிகமான புத்தகங்களை எழுதியிருக்கின்றார். இப்போது வரும் அவரின் ஒவ்வொரு புத்தகமும்,ஒரு முனைவர் பட்டம் பெற உதவிடும் வகையில் வருவது வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அண்மையில் அவர் எழுதியுள்ள 'நட்பெனும் நந்தவனம் ' என்னும் புத்தகத்தின் வாசிப்பு அனுபவம் மிக அருமையாக அமைந்தது. 

                      உறவினர்களை விட நண்பர்களே வாழ்க்கையில் மிக நெருக்கமாக இருக்கிறார்கள், நெருக்கடிகளில் உதவுகிறார்கள்,உண்மையாக இருக்கிறார்கள்..நட்பின் மேன்மை தெரிகின்றது, நல்ல நண்பர்கள் வாழ்க்கையில் வேண்டும் என எண்ணுகின்றோம்.தீய நண்பர்களை வாழ்க்கையிலிருந்து விலக்கிவிட வேண்டும் என எண்ணுகின்றோம்.யார் நல்ல நண்பர்கள்..எப்படி கண்டுகொள்வது, நல்ல நண்பர்களை உளவியல் ரீதியாக எப்படி கண்டுகொள்வது?,நல்ல நண்பர்களை சங்க  இலக்கியங்களின் வழியாக எப்படி கண்டுகொள்வது? நல்ல நண்பர்களை திருக்குறளின் வழியாக எப்படி கண்டுகொள்வது ? நல்ல நண்பர்களை மேல் நாட்டு இலக்கியங்கள் வழியாக எப்படி கண்டுகொள்வது ?நல்ல நண்பர்களை நூல் ஆசிரியர் தன்னுடைய அனுபவத்தால் எப்படி கண்டுகொண்டார் என்பதையெல்லாம் இணைத்து ஒரு அற்புதமான நட்பியல் பெட்டகமாக வந்திருக்கும் புத்தகம்தான் 'நட்பெனும் நந்தவனம் '.



                         இந்த நூலை தன்னுடைய நெருங்கிய நண்பர் திரு,இரத்தினசாமிக்கு காணிக்கை என்று குறிப்பிட்டிருக்கிறார். நானும் தெரிந்த ஆளுமை திரு. இரத்தினசாமி சார் அவர்கள்.அவருக்கு எனது அன்பான  வணக்கங்கள்.இந்த நூலில் 70 தலைப்புகள் இருக்கின்றன.அனைத்தும் நட்பைப் பற்றி மட்டுமே..." நட்பு குறித்து நிறைய வாசிக்கும்போது விரிவான ஒரு நூலை தமிழில் எழுதவேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது.உலக இலக்கியங்கள் காலந்தோறும் கூறி வந்திருக்கும் நட்பு முதல் இன்று சமூக வலைதளம் மூலம் ஏற்படுத்திக்கொள்ளும் அறிமுகம் வரை நட்பைப் பற்றி விரிவாகப் பேசவேண்டும் என்று வெகு நாட்களாக யோசிக்க நேர்ந்தது. ....எவ்வளவு எழுதினாலும் சலிக்காத பொருண்மை நட்பு. காலப்போக்கில் நட்பு எனக்குள் ஏற்படுத்திய தாக்கமும் இதற்கொரு காரணம்.. பல நெருக்கடியான நேரங்களில் கால வெள்ளத்தில் என்னைக் கரை சேர்த்த துடுப்பாக இருந்த பல நட்புகள் பேருருவாக என்முன் தோன்றி சிந்திக்க வைத்தன...மூன்று ஆண்டுகளாக நட்பு குறித்து நான் சேகரித்த தகவல்களையும் ,நூல்களையும் படித்து அசை போட்டு அவை எனக்குள் நன்றாக ஊறிய பிறகே இந்த நூலை எழுதத் தொடங்கினேன்' என நுழைவு வாயிலில் நூல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ...நூல் ஆசிரியரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.

                         புத்தகத்தில் வந்து விழும் வார்த்தைகள் , குற்றால மழைச்சாரலில் தானாகவே வந்து விழுந்து சிதறும் நீர்த்துளிகள் போல மனதுக்குள் விழுந்து விரிகின்றன.'நட்பின் மகத்துவம் ' என்னும் முதல் அத்தியாயம் 'நல்ல மனிதன் எல்லா உயிரினங்களுக்கும் நண்பனாக இருக்கிறான் ' என்னும் காந்தியாரின் பொன்மொழியோடு தொடங்குகிறது. இப்படித் தொடங்குகின்றது அந்த அத்தியாயம் ' நட்பு மனிதத்த்தின் உச்சம்,உறவுகளின் உச்சம். நண்பர்கள் உயரத்தில் இருக்கும்போது மட்டுமல்ல, துயரத்தில் இருக்கும்போதும் துணை வருபவர்கள், புன்னகையை மட்டுமல்ல,கண்ணீரையும் கடன் வாங்கிக் கொள்பவர்கள். உணவை மட்டுமல்ல, உணர்வையும் பகிர்ந்து கொள்பவர்கள்.அழுகிறபோது துடைக்கும் கரங்களாய் நீள்பவர்கள். விழுகிறபோது தாங்கும் விழுதுகளாக இருப்பவர்கள். நல்ல நண்பர்கள் வாழ்க்கையின் வரங்கள் "....இப்படிக் கருத்துக்களோடு சொற்கள் அருவியாக வந்து விழும் அதிசயத்தை 'நட்பெனும் நந்தவனம் ' நூல் முழுவதும் பார்க்கமுடிகிறது. எந்த இடத்திலும் தொய்வு இல்லை, தொடர்ச்சியாய் வந்து விழும் வார்த்தைகள்,அழகிய மாலைகளைப்போல வாக்கியங்களாக மாறுகின்றன. 

                         நட்பை விவரிக்கும் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஒரு கவிதையோ அல்லது அறிஞர்களின் பொன்மொழியோ, நிகழ்வுகளோ இடம் பெற்றிருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.'உறவுகளின் உச்சம் 'என்னும் இரண்டாவது அத்தியாயத்தின் முடிவில் 'துளியே கடல்/ என்கிறது/ காமம்./  கடலே துளி/ என்கிறது / நட்பு ...என்னும் கவிஞர் அறிவுமதியின் கவிதை இடம் பெற்றிருக்கிறது.இந்த அத்தியாயத்தில் 'நட்பில் விவாகரத்து இல்லை; விவேக ரத்து மட்டுமே உண்டு ' என்னும் வாக்கியம் படிக்கும்போதே நகைப்பை வரவைத்தது. ஆமாம் நட்பை விவாகரத்து செய்ய முடியுமா என்ன ? ஒத்து வரவில்லையென்றால் விவேகமாக ஒதுங்கிக் கொள்ளலாம். விவாகரத்தை விட விவேகரத்து சட்டப்படியாகவும் எளிது.'தொடர்புகளில் முகட்டைத் தொடுவது நட்பாய் இருப்பதே ' உண்மைதானே...நட்புதானே அனைத்து முகட்டைத் தொட வைப்பதற்கான உந்து சக்தி..

                       'பரிணாம வளர்ச்சியில் நட்பு' என்னும் அத்தியாயம் நட்பு எப்படி எல்லாம் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்திருக்கும் என்பதனைச்சுட்டிக் காட்டும் சமூகவியல் பாடம். பரிணாம வளர்ச்சியில் ' திட்டும் திறன் அல்ல,திரட்டும் திறன் ' இந்தத் திரட்டும் திறன் எப்படியெல்லாம் விசுவாசமான நண்பர்களை தேர்ந்தெடுக்க உதவியது என்பதைக் குறிப்பிட்டிருக்கின்றார்.எதற்காக நட்பு என்கிறபோது 'நல்ல நண்பர்கள் இருப்பவர்களுக்கு மனவியல் வல்லுநர்களைத் தேடி அதிகம் போகிற அவசரங்கள்  ஏற்படுவதில்லை...' என்பதைச்சொல்லிவிட்டு 'உடுக்கை இழந்தவன் ...' குறளைக்குறிப்பிட்டு ,இன்னல்களில் எப்படியெல்லாம் நண்பர்கள் கண்ணீரைத் துடைக்கிறார்கள் என்பதனை விளக்கமாகவே கொடுத்திருக்கிறார்.

                    நட்பு எப்படி ஏற்படுகிறது? எத்தனையோ பேர் இருக்க ஒரு சிலரிடம் மட்டும் எப்படி நட்பு ஏற்படுகிறது என்பதனை சமூகவியல் பாடங்கள் மூலம் விளக்குகின்றார். ஆனால் 'விளக்கத்திற்கு அப்பாற்பட்டது நட்பு 'என்பதையும் குறிப்பிடுகின்றார். 'அருகில் இருக்கும்போது ஆனை பலம் வந்ததாக உணர வைப்பதே உன்னதமான நட்பு ' எனக்குறிப்பிடுகின்றார். 'ஒரே மாதிரியான விழுமியங்கள் உள்ளவர்கள் ஒன்று சேர்கிறார்கள் ' என்னும் அறிவியல் கோட்பாட்டைக் குறிப்பிடுகிறார்.நட்பினை ஆழப்படுத்திய கடிதப்போக்குவரத்தையும் இன்று மின்னஞ்சலில் மூலம் பெறுகிற கடிதத்தில் சுவையும் இல்லாமல் தொடுதலும் இல்லாமல் அது வெறும் இயந்திரமயமாகிப் போனதையும் குறிப்பிடுகின்றார்.  

                                                                                                ...... தொடரும்

                          

                        
                    

7 comments:

kowsy said...

வாசிக்க ஆர்வமாக இருக்கிறது.

முனைவர். வா.நேரு said...

உறுதியாக படிக்க,படிக்க ஆர்வத்தைக் கூட்டும் புத்தகம். கருத்து இட்டமைக்கு நன்றி

eraeravi said...

நனிநன்று. பாராட்டுகிறேன். நல்ல நூலிற்கு சிறப்பான மதிப்புரை.

Unknown said...

அருமையான மதிப்புரை. மிக சிறப்பு.
"நட்பு ஒவ்வொரு துளிராகத் தழைத்து, நாட்பட நாட்பட கிளைத்து வளரும் கற்பக விருட்சம் போன்றது." - முனைவர் இறையன்பு அவர்களின் தமிழ் சொல்லாடல் அற்புதம் இந்நூலில்..

முனைவர். வா.நேரு said...

"நனிநன்று. பாராட்டுகிறேன். நல்ல நூலிற்கு சிறப்பான மதிப்புரை."நன்றி கவிஞர் இரா.இரவி அவர்களே

முனைவர். வா.நேரு said...

"அருமையான மதிப்புரை. மிக சிறப்பு.
"நட்பு ஒவ்வொரு துளிராகத் தழைத்து, நாட்பட நாட்பட கிளைத்து வளரும் கற்பக விருட்சம் போன்றது." - முனைவர் இறையன்பு அவர்களின் தமிழ் சொல்லாடல் அற்புதம் இந்நூலில்.."நன்றிங்க....யார் என்பது விவரக்குறிப்பில் இல்லை...நன்றி

முனைவர். வா.நேரு said...

"எனது நண்பர் ஒருவருக்கு STROKE ஏற்பட்டு என்னிடம் சிகிச்சைக்கு வந்தார்.மிகவும் வசதியானவர். இரண்டு குழந்தைகளுக்கும் திருமணமாகி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.உங்களுக்கு எப்படி STROKE வந்தது ?. என்று கேட்டேன்.என் நண்பன் இறந்து விட்டான். அவனை அடக்கம் செய்துவிட்டு வந்தேன். அன்று இரவு எனக்கு STROKE வந்தது.என் மாமனார் திரு. சுப்பன் அவர்களின் பால்ய நண்பர் திண்டுக்கல்லில் இறந்து விட்டார். அவரை அடக்கம் செய்து விட்டு வந்த அடுத்த நாள் இவருக்கு STROKE வந்து இறந்து விட்டார்.நட்பு எவ்வளவு வலிமையானது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்"...திரு.சு.கருப்பையா, வாசிப்போர் களம் வாட்சப் குழுவில்