Wednesday 8 April 2020

'பயன்தரும் மரம் 'போன்ற இந்த 'நட்பெனும் நந்தவனம் ' புத்தகம்......

அண்மையில் படித்த புத்தகம்  : நட்பெனும் நந்தவனம்
நூல் ஆசிரியர்               :  இறையன்பு
பதிப்பகம்                        :  கற்பகம் புத்தகலாயம்,சென்னை-17
முதல் பதிப்பு               :   ஜனவரி-2020 மொத்த பக்கங்கள் 448 விலை ரூ 375/-


                           முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி...2


நட்பு குறித்து எத்தனை தகவல்கள் இந்தப்புத்தகத்தில்..."மன நலத்திலும் உடல் நலத்திலும் அக்கறையோடு நடந்து கொள்வது நட்பின் இலக்கணம்" என்று குறிப்பிடும் நூலாசிரியர் நட்புக்கான இலக்கணத்தை,வரையறைகளை, எல்லைகளை மிக விரிவாகவே குறிப்பிடுகின்றார். "ஒரு வகையில் வாழ்க்கை என்பதே எஞ்சி நிற்கும் நினைவுகள்தாம் "..அந்த எஞ்சி நிற்கும் நினைவுகளை அழகுற வரிசைப்படுத்துவதும் ஆற்றுப்படுத்துவதும்தானே இலக்கியம். அந்த இலக்கிய நோக்கினை நிறைவாகவே நிறைவு செய்கிறது இந்தப்புத்தகம்.

காவியங்களில் நட்பு, திருக்குறள் கூறும் நட்பு,சங்க இலக்கியங்களில் தோழியின் முக்கியத்துவம், தோழிகள் எப்படி நட்புக்கான இலக்கணமாக இருந்தார்கள் என்று சொல்வது புதிய கோணமாக இருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் தலைவிக்கு தோழியாக வருபவளை நிறையப் படித்திருக்கிறோம்." சங்க கால இலக்கியங்களில் தோழிகள் முக்கியமான இடத்தைப் பெறுகிறார்கள்.பெண்களுக்குள் நெருங்கிய நட்பு இருக்க முடியும்,எதையும் மனம் விட்டுப் பேசமுடியும், தோழி ஆறுதலாக இருப்பாள்.,அவள் துயர் துடைப்பாள் என்பதை உணர்த்தும் வகையில் தோழியின் பாத்திரம் சங்க கால இலக்கியங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. ..தோழி பிரதிபலிப்பதில் ஆடி,உடல் நலம் உணர்த்துவதில் நாடி, ரகசியங்களைப் பாதுகாப்பதில் மூடி, பண்பைக் காப்பாற்றுவதில் வேலி,அறிவுருத்துவதில் ஞானி...உயிர்க்குயிரான நட்பாய்,வழி நடத்தும் தாயாய் தோழி தலைவியின் வாழ்வை நிர்ணயிக்கிறாள்  ' எனக்குறிப்பிட்டு அதற்கான சங்க இலக்கியப் பாடல்களை எல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.



மேற்கைப் பொருத்தவரை சமமானவர்களே நட்பு பாராட்ட முடியும். ...இந்தியாவிலோ ஒருவர் இளையராகவும்,மற்றவர் பெரியவராகவும் சித்தரிக்கப்படுவதைப் பார்க்கலாம்...காந்திக்கும் ஜவஹர்லால் நேருவுக்கும் இருந்த நட்பு அப்படிப்பட்டது  ..' எனக் கிழக்குக்கும் மேற்குக்குமான நட்பு வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகளோடு சுட்டிச்செல்வதோடு அதற்கான காரணங்களையும் ஆராய்ந்து தெரிவித்திருக்கிறார்.குஷ்வந்த்சிங்கின் நாவலைச்சுட்டிக்காட்டி " பஞ்சாபியர்களுடைய கோட்பாடு குழப்பமடையச்செய்துவிடும்.அவர்களுக்கு உண்மை,மானம்,பண விஷயத்தில் நேர்மை போன்றவை சரியானவை.ஆனால் ...நண்பனுக்காக நீதிமன்றத்தில் பொய் சொல்லலாம்.ஏமாற்றலாம். மற்ற பஞ்சாபியர்கள் அவர்களைக் குறை சொல்லமாட்டார்கள்..." எனக்கு புதிய செய்தி இது. சரியா? தவறா ? என்பதைத் தாண்டி பஞ்சாபியர்கள் நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குஷ்வந்த்சிங்கின் நாவல் மூலம் விவரித்திருக்கின்றார். 

சரித்திரத்தில் நட்பு என்னும் அத்தியாயம் காரல் மார்க்ஸ்,ஏங்கல்ஸ் நட்பு- " மார்க்ஸ் இறந்தபிறகு ஏங்கல்ஸ் 12 ஆண்டு காலம் உயிரோடு இருந்தார்.அந்தக் காலத்தை மார்க்சுக்காகவே வாழ்ந்தார்",ஆபிரகாம் லிங்கன்-ஜோஷ்வா ஸ்பீட் இருவருக்குமான நட்பு- "மனத்தொய்விலிருந்து லிங்கனை மீட்டெடுத்தவர் ஸ்பீட்"- ஃபிடல் கேஸ்ட்ரோ-ஷேகுவாரா நட்பு " ஃபிடல் கேஸ்ட்ரோ- ஷேகுவாரா என்று பலராலும் அறியப்பட்ட எர்ன்ஸ்டோ குவாரா ஆகியோருடைய நட்பு வாசிக்க வாசிக்க சுகம் தருவது ",அக்பர்-பீர்பால் நட்பு,சிந்தனைச்சிற்பி சிங்காரவேலருக்கும்-சிறந்த பொதுவுடமையாகிய விளங்கிய சத்பூரி சக்லத்வாலாவிற்கும் ஏற்பட்ட நட்பு, தந்தை பெரியாருக்கும் -இராஜாஜி அவர்களுக்கும் இருந்த நட்பு என வாசிக்க வாசிக்க சுகம் தரும் சரித்திர நபர்களின் நட்புக்கதைகள்.அதைப்போல இலக்கியவாதிகளின் நட்பு, சாகசத்தில் நட்பு என விரிவான தகவல்கள்.

நண்பெனும் ஆசானே என்னும் தலைப்பில் " சிறந்த புத்தகங்கள் எவை என்பதை சில நண்பர்களிடமும்,மகத்தான உலகத்திரைப்படங்கள் எவை என்பதை சில நண்பர்களிடமும்,எதையும் செம்மையாகச்செய்ய வேண்டும் என்பதை சில நண்பர்களிடமும் ,கடின உழைப்பை சில நண்பர்களிடமும் ,நேர்மையை உறுதிப்படுத்தும் உள்ளத்தை சில நண்பர்களிடமும் ,மன்னிப்பதை சில நண்பர்களிடமும் கற்றுக்கொண்டேன்" எனக் குறிப்பிட்டு " என் வாழ்க்கையில் ஆசானாகவும்,நண்பர்களாகவும் இருந்த நல்ல இதயங்களை நினைத்துப்பார்க்கிறேன். இன்று இந்த வடிவத்தில் நான் இருப்பதற்கு அவர்களே உளிகளாக இருந்தார்கள்.தூரிகையாகத் துலங்கினார்கள். என்னை அடித்துத் திருத்தி அழகான கையெழுத்தாக மாற்றினார்கள் " என நன்றியோடு குறிப்பிடுகின்றார்..

கிரேக்கத்தில் நட்பு, நட்பு குறித்து சிசரோ-"உண்மைத் தன்மை இருந்தால் மிகப்பெரிய அறிவாளி சாதாரண மனிதருடன் நெருங்கிய நண்பனாக இருக்கமுடியும் ",பேக்கன் படைப்புகளில் நட்பு-" தராதரம் பார்த்துத்தான் நட்பு வைக்கவேண்டும் என்கிற பேக்கனின் கருத்து நட்பின் உன்னதத்திற்கே விரோதமானது ",ஷேக்ஸ்பியர் படைப்புகளில் நட்பு என மேலை நாட்டு இலக்கியங்கள்,இலக்கிய ஆளுமைகள் என அவர்களின் படைப்புகளை எடுத்து வைத்துக்கொண்டு அதனை நட்போடு பேசுவது நட்பிற்கு வலுசேர்க்கும் காரணிகளாக இந்தப்புத்தகத்தில் அமைந்திருக்கின்றன.

நீர்க்குமிழி நட்பு என்னும் தலைப்பில் மின்னனுச்சாதனங்களால் உண்டாகும் நட்புகளை விவரிக்கிறார். " நட்பே நம்பிக்கை,அன்பு,பரஸ்பரப் புரிதல்,அந்தரங்கச்செய்திகளைக் கூறுதல் போன்றவற்றின் அடிப்படையில்தான் உருவாக முடியும். மின்னணுச்சாதனங்களால் உண்டாகிற நட்புகளுக்கு அந்தச்சாத்தியக் கூறு இல்லை " என்பதைக் குறிப்பிடுகின்றார். மின்னணு நட்புகளால் " நேர விரயம் ,கண்களுக்குக் கெடுதல்,காசுக்குச்செலவு என்று ஏற்படும் இழப்புகள் அதிகம் ' என்பதனைக் குறிப்பிடுகின்றார்.மின்னணு நட்பு பழைய நட்புகளைத் தொய்வு இல்லாமல் தொடர்வதற்கும், இயக்கரீதியாக அல்லது ஒரு நோக்கத்திற்காகப் பணியாற்றுபவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது 

ஆளுமையும் நட்பும் என்று வரும்போது " நம்மோடு நெருங்கிப் பழகிய ஒருவருடைய திறன்கள் நமக்குத் தெரியும். அவர் சாதனை புரிந்தால் அல்லது சாதனை புரிய முயற்சி செய்தால் நமக்கும் உந்துதல் ஏற்படும். ", "நண்பர்கள் ஒரே மாதிரி இருந்தால் வாழ்க்கை தோட்டமாக இருக்கும்...பலவித நண்பர்கள் அமைந்தால்தான் பூங்காவாக இருக்கும் " என்பன போன்ற வாசகங்கள் பலவித நண்பர்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்னும் தூண்டுதலை ஏற்படுத்துகிறது. பணியிட நட்பு, ஆண்-பெண் நட்பு,ஆண்-பெண் நட்பு வேறுபாடு  போன்ற அத்தியாயங்கள் உளவியலோடு இணைத்து நட்பியலைப் பேசுகின்றன.போலி நண்பர்கள் என்னும் அத்தியாயம் போலியான நண்பர்களைக் கண்டுகொள்வதற்கான பாடமாக இருக்கிறது. 

ஒரு செய்தியைக் குறிப்பிடுகின்றார் நிபந்தனையற்ற நட்பு என்னும் தலைப்பில் " அண்மைக் காலங்களில் எண் சோதிடத்தைப் பார்த்து இந்த எண் உள்ளவர்கள் இந்த எண் உள்ளவர்களோடுதான் ஆத்மார்த்தமாகப் பழக முடியும் என்று கணிக்கிறார்கள். சிலர் அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு அதே எண்ணைத் தேடி அலைகிறார்கள்"..சோதிடம் இப்படியெல்லாம் கெடுத்து வைத்திருக்கிறது...உடையப்போகும் நட்பு என்னும் தலைப்பில் 'மனத்தொய்வு ஏற்படுவது நட்பை பாதிக்கும்.மூளையில் உள்ள உயிர் வேதியியல் பொருட்கள் மாறுபடுவதால் மனச்சோர்வும், மனத்தொய்வும் நிகழ வாய்ப்புண்டு ' எனக்குறிப்பிடுகிறார். தன்னுடைய "மூளைக்குள் சுற்றுலா " புத்தகத்தில் இதனைப் பற்றி விரிவாக பேசியிருக்கிறார் நூலாசிரியர்.இங்கு சில குறிப்புகளாக கொடுத்திருக்கின்றார். 

நட்பினை கற்றுக்கொடுக்க வேண்டுமா? ஆமாம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதனை இந்த நூலாசிரியர் தெளிவாகச்சொல்கிறார்."பெற்றோர்களைப் பார்த்து பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள்... இப்போது நட்பின் தேவை அதிகரித்திருப்பதாகவே நான் கருதுகிறேன். நட்பைச்சம்பாதிக்கவும் ,தக்கவைத்துக்கொள்ளவும் பள்ளிப்பருவத்திலிருந்தே சொல்லித்தரவேண்டும்.இலக்கியங்களைப் படிப்பது மற்றவர்களுக்கு நம்முடைய அறிவை எடுத்து விரித்துக்காட்டுவதற்காக அல்ல.அவற்றின் சாரத்தை உள்வாங்கிக் கொள்வதற்காக.உன்னதமான நட்பை அவை சுட்டிக்காட்டுகின்றன. நாமும் மேன்மையான நண்பர்களாக நடந்துகொள்ளவேண்டும் என்கிற பொறுப்புணர்வு நமக்கு வந்து விட்டால் சென்ற இடமெல்லாம் நண்பர்களால் செழிப்பாகி விடும்...

  நட்பும் போதிக்கப்படவேண்டியதே. நாம் தொடர்ந்து மேன்மையடையும் சாத்தியக்கூறு கொண்டவர்கள்.நம்மிடம் முள்மரமாக வளர்ந்திருக்கிற தேவையற்ற பகுதிகளைக் கத்தரித்துக்கொண்டே இருப்பதன் மூலம் அங்கு பூஞ்செடிகள் வளர வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பதே மேன்மைக்கான வழிமுறை " நிறைவாக என்னும் முடிவுரைப் பகுதியில் நூல் ஆசிரியர் எழுதுவது.

 "இந்த உலகத்தில் நம்மைச்சூழும் தனிமையை நட்பால் நிரப்புவதைத்  தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது" என இந்த நூலை முடித்திருப்பது தனிமை கடுமையாக பலரைச்சுடும் இந்தக் கொரனா காலத்தில் வாசிப்பது மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது.உறவுகளை விட நண்பர்களிடம் அதிகமாக பேசிக்கொள்ளும் காலமாக இந்தக் கொரனாக் காலம் இருக்கிறது.மதுரையில் பணியாற்றிய அனுபவம் குறித்து,மதுரையில் கிடைத்த நண்பர்கள் குறித்து மிக விரிவாகவும் நெகிழ்வாகவும் நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்.

நட்புக்கான ஒரு என்சைக்கிளோபடியா என்பது போல இந்தப் புத்தகம் இருக்கிறது.ஆனால் வெறும் தகவல்களின் கோர்வையாக இல்லாமல் உணர்வுகளின் கோர்வையாகவும்,அனுபவங்களின் கோர்வையாகவும் அழகிய நடையில் இருக்கிறது. நல்ல நண்பர்களின் குழுவில் நாமும் ஒரு நண்பராக இருப்பதைப் போல  மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் தருவது வேறு எதுவுமில்லை. புத்தகத்தின் முடிவில் இந்தப் புத்தகம் எழுதுவதற்கு பயன்பட்ட தமிழ், ஆங்கிலப்புத்தகங்களின் பட்டியல் கொடுத்திருக்கிறார்.மிகப்பயனுள்ள புத்தகங்களின் பட்டியல்.  முதுகலை தமிழ் இலக்கியம் படிக்கும் எனது மகளுக்கு  நட்பு பற்றிய ஒரு  பயன்படும்(ரெபரன்ஸ்) நூல்,அரிதான ஒரு புத்தகம் கிடைத்திருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.   .பலருக்கும் பயன்படும் வள்ளுவர் சொன்ன 'பயன்தரும் மரம் 'போன்ற புத்தகம் இந்த 'நட்பெனும் நந்தவனம் 'என்னும் புத்தகம். படித்துப்பாருங்கள்..நீங்களும் வியந்து பாராட்டுவீர்கள்.விலைக்கு வாங்கி வீட்டில் பயன்படும் நூலாக சேமித்து வைப்பீர்கள். 

No comments: