அண்மையில்
படித்த புத்தகம் : தவிப்பின் தடாகத்தில் மலர்ந்தவை
நூல்
ஆசிரியர்
: சுமித்ரா சத்தியமூர்த்தி
பதிப்பகம் : சந்தியா முதல் பதிப்பு :
2023
மொத்த
பக்கங்கள் 101
விலை ரூ 120
இந்த நூல் ஒரு கவிதைத்
தொகுப்பு நூல்.மொத்தமாக 88 கவிதைகள் சிறிதும் ,பெரிதுமாக 101 பக்கங்களுக்குள்
இருக்கின்றன.
இந்த நூலில் எனக்கு முதலில்
பிடித்தது ..மொழி,கவிதை மொழி...கணினி ஆசிரியராகப்
பட்டுக்கோட்டை அரசுப்பள்ளியில் பணியாற்றும் தோழர் சுமித்ரா சத்தியமூர்த்தி அவர்களுக்கு
கவித்துமான சொற்கள் இயல்பாக வருகிறது.அதனால் இந்தக் கவிதைப் புத்தகத்தின்
அடர்த்தியும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.கனமான சொற்களால் கருத்தை மிக நன்றாகக்
கடத்துகிறார்.
இந்த நூலில் இரண்டாவதாக எனக்குப் பிடித்தது,தனக்குத் தோன்றுவதை
இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார்,எந்தவிதமான தயக்கமும் இல்லாமல். இதைப் பற்றி
எழுதினால்,அதைப் பற்றி எழுதினால் இவர் என்ன சொல்வாரோ,அவர் என்ன சொல்வாரோ என்னும் தயக்கங்கள்
எல்லாம் இல்லாமல் எழுதியிருக்கிறார்.சங்க காலத்தில் பெண் பாற்புலவர்கள் எழுதாத காதல்,
காமத் தன்னுணர்வுக் கவிதைகளா?..இடையில் மறந்து போனதை, இன்றைய பெண் கவிஞர்கள் எழுதுகிறார்கள்.காதலும்
இருக்கிறது, கவித்துவமும் இருக்கிறது. பின் என்ன கவிதையை சுவைப்பதில் தயக்கம்? ‘அரசவால்
ஈபிடிப்பானை’ பெயர் மாற்றவேண்டுமென கவிதை 73-ல் எழுதியிருக்கிறார். இந்தப் பெயரை இதுவரை
நான் கேள்விப்பட்டதில்லை.புதிய செய்தி எனக்கு
இன்னொருத்தி என்னும் தலைப்பிட்டு.
மல்பெரி இலைகளாய்
நின் நினைவுகளை
தின்று செரித்து
பட்டிழையால் கூடு பின்னி
பாழும் இவ்வுடல்
மறைத்து வைக்கிறேன் !
அள்ளிக் கொதிநீரிலிட்டு
அவளுக்கேனுமொரு
ஆடையாய் தரித்துக்கொடு !..
இன்னொருத்தியை நாடி இருக்கிறாய்.
அவளுக்காவது உண்மையாக இரு என்பதை அறிவியலோடு இணைத்துக்கொடுத்திருக்கிறார்.
‘மரம் போல வளர்ந்திருக்கிறாய்
‘ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.அருமையாக
உள்ளது.மரம் பற்றிய கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதையும் மனதுக்குள் வந்தது
இதை வாசிக்கும்போது…
சான்றிதழ் கொடுக்க மறுத்த
ஒருவருக்கு பதில் எழுதுவதாக இருக்கும் ஒரு கவிதை எனக்கு
மிகவும் பிடித்திருந்தது.
“சாணிக் கரைசலோடுதான்
நாளைத் தொடங்கினாள்
சாவித்திரி பாய் புலே
வள்ளியம்மையை மட்டும்
வெள்ளித்தட்டு வைத்தா
அழைத்திருக்கும் வீதி
உடன் கட்டைக்கு ஒன்றாமல்
ஆட்சிக் கட்டிலில்
அமர்ந்தவள்தானே
மங்கம்மாள்
முத்துலெட்சுமியின்
முன்னமர்ந்து கேட்டால்
மூச்சு முட்டச்சொல்வாள்
முட்டிக் கொண்ட கதைகளை
நீர் கொடுக்கும் சான்றிதழை
நீரே வைத்துக்கொள்ளும்
காலைக் கடன் முடித்து
துடைத்துக்கொள்ளலாம்
தண்ணீர் மிச்சம் !...”
முன்னர் பெண்களின் நிலைமை எப்படி
இருந்தது என்பதை 5 வரிகளுக்குள் முடித்து கடந்து செல்கிறார் இப்படி எழுதி…
“பாடுகள் பழகிப்போன
பழங்காலப் பொழுதுகளில்
பச்சைப் பெல்ட்ட்டிகள்
பாக்கியதையாகவே
பகிரப்பட்டன !!..”
தன்னுடைய உணர்வை,தவிப்பை,தனக்கு
முன் வாழ்ந்த பெண்களின் பரிதாபத்தை சுருக்கமான சொற்களால் நறுக்கென வாசிப்பவருக்குத்
தைக்கும்வண்ணம் கவிதைகளாக எழுதி நமக்குக் கொடுத்துள்ளார்.
‘ உண்மையென்று எதையும்
உரத்துச் சொல்லிவிடாதே
பொய்யென்றே போதும்
பாழும் இச்ஜென்ம
பாவங்கள் தீர்க்க !! ‘ என்று ஒரு
கவிதையில் எழுதியிருக்கிறார். இந்த ஜென்மம்,போன ஜென்மம் போன்ற சொல்லாடல்களைத் தவிர்க்கலாம்..பாவம்
செய்ததால் பெண்ணாகப் பிறந்திருக்கிறாள் என்று சொல்லும் மதத் தத்துவங்களுக்கு நாமும்
வலு சேர்ப்பதுபோல் இந்த மாதிரியான சொல்லாடல்கள் அமைந்துவிடும் என்பது எனது கருத்து.
மொத்தத்தில் ஒரு நல்ல கவிதைத்
தொகுப்பை கவிஞர் சுமித்ரா சத்தியமூர்த்தி கொடுத்திருக்கிறார். இன்னும் பல படைப்புகளை
கொடுக்க வாழ்த்துகள்.
தோழமையுடன்
வா.நேரு, 10.11.2025


2 comments:
மிக்க நன்றி தோழர் 🙏
மகிழ்ச்சி.
Post a Comment