Thursday, 7 January 2021

ஜனவரி-6-ம் அமெரிக்காவும்...

 ஜனவரி-6-ம் அமெரிக்காவும்...


அமெரிக்க வீதிகளில்

சில விசித்திரமான

நிகழ்வுகள் நிகழ்ந்ததை

உலகம் வேடிக்கை

பார்த்துக்கொண்டிருக்கிறது....


தேர்தலில் நான் தோற்கவில்லை...

மோசடி செய்து வெற்றியென

இன்றைய அதிபர் ட்ரம்ப் 

கீறல் விழுந்த ரிக்கார்டு போல

சொன்னதையே திரும்பத்திரும்ப

சொல்லிக்கொண்டிருக்கிறார்....


எவ்வளவு பெரிய பொறுப்பு...

கலவரம் செய் எனத்தூண்டும்

பேச்சினைக் கக்கியிருக்கிறார்

ஆதாரவாளர்கள் கூட்டத்தில்...


டிரம்ப் ஒரு கோமாளி எனக் 

கடந்து செல்ல இயலாது...

வலது சாரித் தத்துவத்தின்

அமெரிக்கக் குறியீடு அவர்...


மனது முழுவதும் 

வன்மமும் வெறுப்பும்

தாங்களே பிறப்பால் உயர்வு

எனும் எண்ணமும்

படர்ந்து நிற்கும்

பாசிசக் கூட்டத்தின் 

அடையாளம் அவர்....


பிறப்பொக்கும்  எல்லா

மனிதர்க்கும் என்னும் 

தத்துவத்திற்கு எதிராக

உள் நாட்டுப் போர் புரிந்த

வெள்ளையர்களின் பிரதிநிதி அவர்...


கறுப்பின உயிர்களும் உயிர்களே

என ஆர்த்தெழும் 

உரிமைப் போராட்டங்களுக்கு எதிராக

நெருப்பாய் வெறுப்பைக் கக்கியவர்...

கறுப்பின மக்கள் அடிமைகள்...

அவர்கள் அடிமைகளாகவே 

இருத்தல்  வேண்டும்

என எண்ணுபவர்...

நமது நாட்டில் ஜாதி வேண்டும்

எனச்சொல்லும் 

மன நோயாளிகளை ஒத்த

மனதுடையவர் அவர்....


"எல்லோருக்கும் எல்லாம்'

என்னும் ஒற்றைக்குரலில்

உழைக்கும் மக்கள் எல்லாம்

ஒன்றிணையும் நாள் உலகில்

வெகுதூரம் இல்லை....


நாங்களே உயர்ந்தவர்கள் பிறப்பால்

என்று சொல்லும் 

மந்தைகள் எல்லாம் அன்று

மனிதர்களாக மாறும்...

இல்லையெனில் மண்ணில்

மக்கிப்போகும்.....


                  வா.நேரு,07.01.2020





Wednesday, 6 January 2021

தந்தை பெரியாரே.. உங்களை நினைவில் கொள்வது

 தந்தை பெரியாரே..

தத்துவத் தனிச்சுடரே!

இந்தக் கொரனா

காலத்தில் உங்களை

நினைவில் கொள்வது

எவ்வளவு பொருத்தமானது ?


மனிதர்கள் அஞ்சி

அஞ்சியே சாகிறார்கள்!

தாங்கள் சொர்க்கத்துக்கு

போவதற்காக மட்டுமே

பணத்தை செலவழித்தவர்கள்

நேரத்தை ஒதுக்கியவர்கள்

எதற்காக  அஞ்ச வேண்டும்..?


எல்லாம் வல்ல அவனின்

செயல் இது ...சரி சரி விடு.

சீக்கிரம் போவோம் சொர்க்கம் 

எனும் நிம்மதியைக் காணாமே...

எந்தப் பக்தரிடத்தும்


பக்தர்கள் அனைவருக்கும்

நன்றாகவே தெரிந்திருக்கிறது...

இப்பிறப்பு மட்டுமே பிறப்பென்று...

இந்த வாழ்க்கை மட்டுமே வாழ்க்கையென்று...


பிணங்களை அவர்கள்

எரிப்பவர்களில்லை...

என்றோ ஒரு நாள்

தங்கள் கல்லறைகள்

திறக்கப்பட்டு

கடவுளுக்கு முன்னால்

பாவங்கள் கணக்கிடப்பட்டு

சொர்க்கமோ நரகமோ

நமக்கு எனும்

நம்பிக்கையில் இருப்பவர்கள்...


கொரனாவில் இறந்தவர்க்கு

கல்லறை இல்லை 

என்று சொல்லிவிட்டார்களாம்

கல்லறை பாதுகாப்பாளர்கள்..

கதி கலங்கிப் போனார்களாம்

பிணத்தை என்ன செய்வது...

 சுடுகாட்டில் சென்று

சுட்டிட்டு

மிஞ்சிய சாம்பலை

எடுத்து வந்து

பேழைக்குள் வைத்து

கல்லறையில் புதைத்தார்களாம்!

அட உங்கள் பாவமன்னிப்பு

எழுப்புதல் கணக்கு என்ன ஆனது ?


அவரவர் கடவுள் நம்பிக்கைகள்

அவரவர்க்கு தானாகவே தகர்கிறது...

தவிடு பொடியாகிறது..

இருந்தாலும்

மீசையில் மண் ஒட்டாத கதையாக

காப்பார் கடவுள் என்று

கதை சொல்கிறார்கள்..

இருப்பது கடவுள் அருளால் என்றால்

செத்தவர் எல்லாம்

எவர் அருளால் செத்தார்கள் என்றால்

எக்குத்தப்பாய்

பேசாதே என்கிறார்கள்....


அனைத்தையும் கேள்வி கேள்..

என்ற எங்கள் அய்யா பெரியாரே...

கொரனா காலத்தில் உங்களை 

நினைவில் கொள்வது

உண்மையை உணர்ந்து கொள்வது...


                                                  வா.நேரு,   06.01.2021

Monday, 4 January 2021

பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்....ஈரோடு தமிழன்பன்

 


https://tinyurl.com/y79sywfs                                 நூல் மதிப்புரை

   நூல் : பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்
   நூல் ஆசிரியர் : ஈரோடு தமிழன்பன்
   வெளியீடு     : சண்முகம் பெரியசாமி,நியூயார்க்,அமெரிக்கா.
   விற்பனை உரிமை : விழிகள் பதிப்பகம்,சென்னை-41.
   மொத்தபக்கங்கள் :196,விலை ரூ 160.            

 நெருப்புத்துண்டாய் தமிழ் உணர்வை,பகுத்தறிவைப் பற்றவைக்கும் புரட்சிக்கவிஞரின் கவிதைகளைப் படித்ததுண்டு.படித்ததை உள்ளத்தில் ஏற்றியது உண்டு.உள்ளத்தில் ஏற்றிய உணர்ச்சிமிகு கவிதையை மற்றவர் மனதில் பதியும்வண்ணம் எடுத்துச்சொன்னது உணடு. ஆனால் அந்த மாபெரும்  புரட்சிக்கவிஞரை நேரில் நான் பார்த்தவனில்லை. அவரோடு பேசியவனில்லை.என்னைப்போன்றுதான் இந்த மதிப்புரையை வாசிக்கும் பலரும். ஆனால் அந்தப்புரட்சிக்கவிஞரை அருகில் இருந்து பார்த்தவர்,அவரின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை உடனிடருந்து கேட்டவர், அவரின் கிண்டலை அருகே இருந்து சுவைத்தவர் அந்த அனுபவங்களைச் சொன்னால்,சொல்லச்சொல்ல நமக்கு இனிக்கும்.  ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக சொல்ல நேரம் இன்மையால்,கவிஞர் பெருந்தகை ஈரோடு தமிழன்பன் அவர்கள் ஒரு நூலாக அதனை யாத்து நமக்கு அளித்திருக்கிறார். அந்த நூலின் பெயர் ‘பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்’.

 இந்த நூலினை வெளியிட்டவர் நியூயார்க்கில் வாழும் சண்முகம் பெரியசாமி அவர்கள். அவரை " கண்டியார் குடும்பம் தண்டமிழ் காக்கும் தலைமைக்குடும்பமாக இன்றும் விளங்கி வருகிறது என்பதற்குக் கண்காண் சான்றாக இருப்பவர் திரு.பெ.சண்முகம் " எனக் கதவுரையில் குறிப்பிடும் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் " புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களோடு பழகும் வாய்ப்பு எனக்கு என் கல்லூரி நாள்களிலேயே வாய்த்தது.விட்டுவிட்டு நேர்ந்தாலும் அவ்வாய்ப்பு அவர் மறைவு நாள்வரை தொட்டுத் தொடர்ந்து கொண்டிருந்தது....நான் பழகிய பத்து ஆண்டுகளில் -அவருடைய தமிழாற்றல்-கவிதை மேதமை,தமிழின உணர்ச்சி அழுத்தம்,பாரதி நேயம், அழகியல் ஈடுபாடு எனப் பலவற்றையும் நான் உணரமுடிந்தது- ஒரு பக்கம் எனில் ,கனிந்த மனிதம்,கட்டற்ற வெகுளி,விருந்தேற்கும் விருப்பு,தன்னிரக்கம் என அவருடைய மானுட ஆளுமையின் பல பரிமாணங்களை நுகர முடிந்தது மறுபக்கம் என்று சொல்வேன் " என்று இந்த நூலின் உள்ளடக்கத்தை ஒரு சில சொற்களில் முன் கூட்டியே நூல் ஆசிரியர் கொடுத்து விடுகின்றார்.

பாரதி-பாவேந்தர்,பாவேந்தர்-தமிழன்பன் என இருக்கும் ஒற்றுமைகளை அழகு ததும்ப' பாட்டு இடையிட்ட உரைநடைக்காப்பியம் ' எனும் தலைப்பில் பேரா.வ.ஜெயதேவன் அவர்கள் முன்னுரையாகக்  கொடுத்திருக்கின்றார்.'பாரதியார்..பாரதிதாசன்..தமிழன்பன்' எனத் தலைப்பிட்டு பேரா.சி.அ.சங்கர நாராயணன் அவர்கள் முன்னுரை அளித்திருக்கின்றார்.இந்த நூலினை வெளியிட்ட நியூயார்க் சண்முகம் பெரியசாமி அவர்கள் 'உளமார்ந்த நன்றி ' எனும் தலைப்பில் தன்னுரையைக் கொடுத்திருக்கின்றார்.அதில் "படித்த பின் உணர்ந்தேன்.இது வழக்கமான நூல் அல்ல.இந்நூல் தமிழ் இலக்கியத்தின் தகைமைசால் ஆளுமைகள் இருவர் குறித்த ஓர் ஆவணம் என்பதை உணர்ந்தேன்" என்று நியூயார்க் சண்முகம் பெரியசாமி குறிப்பிடுகின்றார். உண்மைதான்,அந்த உணர்வு எனக்கும் படித்து முடித்தபின் தோன்றியது. இந்த நூல் படிக்கவேண்டிய நூல் மட்டுமல்ல,பத்திரமாக வைத்திருந்து அடுத்த தலைமுறைக்கு அளித்துச்செல்லவேண்டிய நூல் என்று.

இந்த நூலின் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் அவர்களைப் பற்றி இருபது ஆளுமைகளின் கருத்துகள் " அறிஞர்கள் பார்வையில் தமிழன்பன் " என்னும் தலைப்பில் இடம் பெற்றிருக்கின்றன." தமிழன்பன் நல்ல தமிழ்க்கவிஞர் வாழ்க,தமிழன்பு மேலும் தழைத்து ." எனப் புரட்சிக்கவிஞரின் கூற்றிலிருந்து ஆரம்பித்து "...தமிழன்பன் கவிதைகள் எல்லாம் வரலாற்றுக்கு முக்கியமானவை. தமிழன்பன் தமிழ் நாட்டுக்கவிஞர் அல்லர்;அவர் உலகத்தமிழ்க்கவிஞர் " என்று குறிப்பிடும் பேரா.முனைவர்.சாச்சா எபிலிங் அவர்களின் கூற்றுவரை இடம் பெற்றிருக்கும் கருத்துகள் நாம் பெருமை கொள்ளத்தக்கவை, தமிழன்பனைத் தமிழ் நாடு ஈண்டு ,உலகத்திற்கு கொடுத்திருப்பதால்...

விழிகள் பதிப்பகத்தின் உரிமையாளர்,எளிமையும் இனிமையும் குடி கொண்டிருக்கும் பதிப்பாளர் தி.நடராசன் அவர்கள் 'உங்களுக்காகப் பழைய பதிவு ' என்று தன்னுடைய கருத்துகளை, முதல் நூலாக தனது பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்த நூல் பற்றி, வெளியிட்ட நிகழ்வில் இனமானப்பேராசிரியர் அன்பழகனார் அவர்கள் ஆற்றிய உரை பற்றி,அந்த நிகழ்வில் நூலின் ஆசிரியர் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் உரைபற்றி நெகிழ்வாகக் குறிப்பிட்டுள்ளார்.அடுத்து 2.9.2000-ல் நிகழ்ந்த இந்த நூலின் வெளியீட்டு விழா அழைப்பிதழ்,கவிஞர்கள் புரட்சிக்கவிஞரும்,ஈரோடு தமிழன்பனும் இடம் பெற்றிருக்கும் புகைப்படம்,அந்த வெளியீட்டு விழாவின் புகைப்படங்களின் அணிவகுப்பு என நூலுக்குள் நுழைவதற்குமுன்பே நிறைவு தருகிறது,விருந்தில் சோற்றுக்கு முன்பே வைக்கப்படும் இனிப்புகள் போல... .

தனது பேராசிரியர் அய்யா ந.இராமநாதன் அவர்கள் பற்றி இந்த நூலில் பல இடங்களில் நூல் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். 1983-84-ஆம் ஆண்டுகளில் நான் பெரியார் சிந்தனை பட்டயப்படிப்பு படித்த காலங்களில் அய்யா பேரா.ந.இராமநாதன் அவர்கள் தந்தை பெரியார் பற்றியும் புரட்சிக்கவிஞர் பற்றியும் நடத்திய பாடங்கள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன. புரட்சிக்கவிஞர் பாடல்களில் மூழ்கி ,முத்தெடுத்து அவர் கூறிய கருத்துகள் மறக்க இயலாதவை என் வாழ்க்கையில். " எங்கள் பேராசிரியர் ந.இராமநாதன் அவர்கள் என்மீது தாய்மைப்பிரிவு கொண்டவர்.தனி அன்பு காட்டியவர்" என்று சொல்லி அவரைப் பற்றிச்சொல்லும் உரைநடையே கவிதையாய் மிளிர்கிறது." பேராசிரியர் ந.இராமநாதனார்,அன்று 'கரும்பைத்தின்னு' என்று சொல்லவில்லை...'தேன்பாகு உண்க' என்று சொல்லவில்லை...பின் என்ன சொன்னார்?நான் தாம்திரிகிட தாம்திரிகிட...என்று ஆட?...தன்னானா,தன்னானா என்று பாட ?
" புரட்சிக்கவிஞருக்குப் பக்கத்தில் இரு !
 புரட்சிக்கவிஞர் தேவை தெரிந்து நிறைவு செய் !" போதாதா ? மின்மினிகளைத் துரத்திக்கொண்டிருந்தவனிடம் நட்சத்திரங்களை அள்ளிக் கையில் போட்டது போலாயிற்று ! "இது நூலாசிரியரின் உரைநடை மொழி...கவிதை மொழியாய் உரை நடை மொழி. நூலில் பல பக்கங்கள் இப்படி கவிதை மொழியில் ...புரட்சிக்கவிஞரை முதலில் பார்த்த நிகழ்வில் இருந்து ஆரம்பிக்கும் இந்த நூல் பலமுறை நாம் படிக்கவேண்டிய நூல்.

மாணவர் விடுதிக்கு வந்த புரட்சிக்கவிஞர்,கரடிக்கறி,புலிக்கறி தின்ற கவிஞர் என்று புரட்சிக்கவிஞரை புகைப்படம் போல ஒவ்வொரு தலைப்பிலும் அப்படியே படம் பிடிக்கிறார் நூல் ஆசிரியர். "இரு சூரியர்கள் ஒரு வானில் ஒரு பொழுதில் வந்தது போல-மேடையில் தந்தை பெரியாரும் புரட்சிக்கவிஞரும் தோற்றம் கொடுத்தனர்." என இருபெரும் ஆளுமைகள் மேடையில் தோன்றியதைக் குறிப்பிடுகின்றார்.
"இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழனுக்கு தலைவன் இல்லை.இதோ! தலைவன் உங்கள் முன்னால் !இவர் கையில் ஆயுதமாக உங்களை ஒப்படையுங்கள்..நீங்கள் விரும்பும் தமிழ் மீளும்.தமிழ் நாடு வாழும்!முண்டங்களாய்,முட்டாள்களாய் இதுவரை இருந்தது போதும்,இன்னும் அப்படி இருக்க வேண்டுமா?உங்களுக்குள் இருக்கும் தமிழனை மதங்கள்,சமயங்கள்,வேதங்கள்,வியாக்கினங்கள் எல்லாம் அழுத்தி அழுத்தி அவமானச்சேற்றில் புதைத்துவிட்டன.உங்களுக்குள் இருக்கும் தமிழனை,உங்கள் சாதிகளே வீழ்த்திவிட்டன....தமிழனை விடுதலை செய்ய,தமிழனுக்குச் சுயமரியாதையை மீட்டுத்தர இவரை விட்டால் நாதி உண்டா? " "என்று அனலாய் கக்கிய புரட்சிக்கவிஞரின் உரையை நமது மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் தனது நினைவிலிருந்து பதிவு செய்து " அன்று புரட்சிக்கவிஞர் பேசிய பேச்சில் வெளிப்பட்ட கருத்துகள் இன்றும் என்னுள்ளிருந்து புறப்பட்டுப்போகாமல் பதிந்து இருக்கின்றன" என்று குறிப்பிடுகின்றார்..ஆகா, என்ன அருமையான பதிவு. தந்தை பெரியாரின் தலைமை பற்றி,புரட்சிக்கவிஞர் பேசியதை அருகில் இருந்து கேட்ட கவிஞரின் பதிவு,காலத்தால் அழியாத பதிவு.

புரட்சிக்கவிஞரின் பல்வேறு பரிமாணங்கள் நூல் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. "முரட்டுக்கவிஞர் பாரதிதாசன் -குளிரும் பனியாவதும் இனிக்கும் கனியாவதும் ஆகிய அழகிய மனிதப் பரிமாணத்தை என்னைப்போலவே அவருடன் பழகியவர்கள் உறுதியாகக் கண்டறிந்திருப்பர்" என்று குறிப்பிடும் நூல் ஆசிரியர்  தனது அனுபங்களை முத்துச்சரங்களாய் தொடுத்துக்கொடுத்திருக்கிறார்.

"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். " என்னும் குறளைப் போல தனக்கு தீமை செய்பவருக்கு கூட நன்மை செய்யும் நயத்தக்க நாகரிகம் உடையவர் புரட்சிக்கவிஞர் என்பதனை, புரட்சிக் கவிஞரின் சொற்களிலேயே இப்படிக்கொடுக்கின்றார்.

" வாய்ப்பு நேர்ந்த போதெல்லாம் பிறரைத்
 தூக்கி விடுவதில் சோர்ந்ததே இல்லை
 படிப்புத் தந்தேன் சோறு தந்தேன், தலை
 எடுக்கச்செய்தேன்..என்தலை தான் அவன்
 அறுக்க முயன்ற போதும் சிரித்தேன்"......

இளைஞராய்,மாணவராய் இருந்த காலத்தில் புரட்சிக்கவிஞரோடு பயணித்த நினைவுகளை தனது மனக்கண் முன்னால் கொண்டு வந்து அதனை உணர்வோடும் நெகிழ்ச்சியோடும் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் பதிவு செய்து  நமக்கு கொடுத்திருப்பது,மிகப்பெரிய வாய்ப்பு நமக்கு. புதியவர்களை ஊக்கப்படுத்துவது,வழிகாட்டுவது அவர்கள் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்துவதற்கு அடிப்படையாக அமையும் என்பதற்கு புரட்சிக்கவிஞரால் ஊக்கப்படுத்தப்பட்ட ,வழிகாட்டப்பட்ட நூல் ஆசிரியர் அவர்களே நமக்கு நல்பெரும் சான்று."உன்னிடம் நல்ல தமிழ் ஆளுமை இருக்கிறது.உபயோகப்படுத்தினால் கதை,கவிதை எதை வேண்டுமானாலும் செய்து வெற்றிபெற முடியும் " என்று ஊக்கப்படுத்தினார்.ஒரு 'தந்தைமை அக்கறை' அவரிடத்தில் அன்று பொங்கி வழிந்தது என்பால் " என்று நன்றியோடு புரட்சிக்கவிஞரை நினைவு கூறுகின்றார் நூல் ஆசிரியர்.
 
"எழுதறவன் எப்போதும் படிக்கிறவனாகவும் இருக்கவேண்டும் ' என்னும் தலைப்பில் இருக்கும் கட்டுரையை இன்று எழுத வருபவர்கள் பலமுறை படித்தல் வேண்டும். அதில் நூல் ஆசிரியரின் அறச்சீற்றமும் புரட்சிக்கவிஞரின் சீற்றத்தோடு இணைந்து பயணிக்கும் கட்டுரை.பாரதி-பாரதிதாசன் பிணைப்பு பற்றி அருமையான தகவல்கள் இந்த நூலில் உள்ளன. புரட்சிக்கவிஞருக்கு ஞானபீட பரிசு கிடைக்காமை-அதில் இராஜாஜி அவர்களின் பங்கு,பிரின்ஸ்டன் கவிதை-கவிதையியல் 'கலைக்களஞ்சியத்தில்' தமிழ்க்கவிஞர்கள் பட்டியலில் புரட்சிக்கவிஞரின் பெயர் இடம் பெறாமை-அதில் சென்னைப்பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத்துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் வே.இராகவன் பங்கு போன்ற சில செய்திகள் இன்றைய தலைமுறை வாசித்து உள்வாங்கி வைக்கவேண்டியவை. அதற்கு எதிர்வினையாக வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் புரட்சிக்கவிஞரை,புரட்சிக்கவிஞரின் கவிதைகளைப் பதிவு செய்ய வேண்டிய உந்துதலைப் பெற வேண்டியவை.

"உங்கள் கவிதைகள் எம்மோடு இருக்கின்றன.போய் வாருங்கள் புரட்சிக்கவிஞரே' என்று கரையில் நின்று கொண்டே ,கையை அசைத்தவர்கள் கண்களிலும் கடல்கள் இருந்தன"...என்று நூல் ஆசிரியர் குறிப்பிடுவதைப் போல படைப்பாளிகள் மறைவதில்லை, அவர்கள் தங்கள் படைப்புகளால் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இனியும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்.அதுவும் புரட்சிக்கவிஞர் எப்போதும் தமிழர்கள் உள்ளங்களில், உலக மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பார்.கரும்பின் எந்தப் பாகத்தை இனிப்பு என்று சொல்வது என்று உண்பவர் திகைப்பது போல, இந்த நூலின் எந்தப் பாகத்தை சிறப்பு என்று சொல்வது என்னும் திகைப்பு இருக்கிறது எனக்கு இருக்கிறது.அப்படி ஒவ்வொரு பக்கத்தையும் விவரிக்கலாம்.வரலாற்றோடு இணைத்துச்சொல்லலால். ஒப்பியல் நோக்கில் மற்ற நூல்களோடு ஒப்பிட்டு விவரிக்கலாம்.ஆனால் ஒன்று மட்டும் உறுதி. இந்த நூல் வரலாற்றுப்பெட்டகம். இரண்டு மாபெரும் கவிஞர்களின் வாழ்வியல் பெட்டகம். வாங்கி வையுங்கள் வரும் தலைமுறைக்காக, படித்து, படித்து உள்ளத்தில் தேக்கி வையுங்கள், உங்களுக்காக.

நன்றி : வல்லினச்சிறகுகள் ,திசம்பர் 2020.

Sunday, 3 January 2021

புத்தாண்டு உறுதிமொழி

       புத்தாண்டு உறுதிமொழி


புத்தாண்டில் ஓர்

உறுதிமொழி என்றார் அவர்..


அவர் ஓய்வு பெற்று ஓர்

இருபது ஆண்டுகள் இருக்கும்..

ஓடி ஓடி உழைத்தவர்..

ஓயாது உறவுகளுக்கு 

செய்து செய்து திளைத்தவர்..

என்ன உறுதிமொழியாக 

இருக்கும் ?....


உடலைப் பேணுவ்தாக இருக்குமோ?

இனிப்பைக் குறைப்பதாக இருக்குமோ?

வங்கியில் போட்டிருக்கும் 

பணத்தைப் பற்றி இருக்குமோ?

என்னவாக இருக்கும் ?

மனதிற்குள் அது இதுவென

ஏதேதோ ஓடியது....


என்ன உறுதிமொழி 

என்றேன் நானும்..

நானாக எவரையும் 

அழைத்துப்பேசுவதில்லை..

எவரேனும் பேசினால்

பேசுவது என்னும்

உறுதிமொழி என்றார்...


எல்லோருமே பிசியாக 

இருக்கிறார்கள்...

அழைத்தால் ஒரு வேலையாக

இருக்கிறேன்...

அழைக்கிறேன் என்கிறார்கள்..

அழைக்க மறக்கிறார்கள்....

மீண்டும் அழைத்தாலும் 

வேக வேகமான 

அவர்களின் பதிலில் 

மனம் வேதனைப்படுகிறது...


இந்த மனத்தொல்லையே

வேண்டாம்...

நாம் வேண்டுமென நினைத்தால்

அழைக்கப்போகிறார்கள்...

நலம் விசாரிக்கப்போகிறார்கள்..

இல்லையெனில் பெத்ததோ

உடன் பிறந்ததோ,நட்போ

ஓடும்வரை அவர்கள் ஓடட்டும்

அவர்கள் அழைக்கும்போது

பேசுவோம் என முடிவெடுத்தேன் என்றார்...


நல்ல முடிவாகத்தான் தெரிந்தது

எனக்கும் கூட...

முக நூலில் வாட்சப்பில் 

செலவழிக்கும் 

நேரம்  குறைத்து 

சில மணி நேரம் 

பேச ஒதுக்கவேண்டும்


யார் யாரோடு பேசல் வேண்டும்

எவ்வளவு நாளுக்கு ஒருமுறை

பேச வேண்டும் என்னும்

பட்டியல் போடவேண்டும்

எனும் எண்ணம் தோன்றியது

எனக்கு..

.உங்களுக்கு?


                  வா.நேரு,

                  03.01.2021

                 


Friday, 1 January 2021

புத்தாண்டும் உழவர்போராட்டமும்

                          

புத்தாண்டும் உழவர்போராட்டமும்

                                                                  முனைவர்.வா.நேரு


2020-ஆம் ஆண்டைக் கடந்து 2021-ஆம் ஆண்டில் நுழைகின்றோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.2020-ஆம் ஆண்டு உலகை அச்சுறுத்திய,அச்சுறுத்தும் கொரனா என்னும் கொடுந்தொற்று பரவிய ஆண்டு. பலரைப் பாதிப்புக்கு உள்ளாக்கிய ஆண்டு. மன அளவில் பல மனிதர்களை முடக்கிய ஆண்டு.இதன் கொடுமையை உலகம் முழுவதும் மக்கள் உணர்ந்திருக்கின்றனர். கொரனாவை ஒழிக்க வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் தடுப்பு மருந்துகளை கண்டு பிடித்துக்கொண்டுள்ளனர். தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள் கொரானாவை விடக்கொடியது ஆரியம் என்று குறிப்பிட்டார்கள்.கொரனாவின் கொடுமை பலருக்கும் தெரிகிறது,ஆனால் ஆரியத்தின் கொடுமை அனைவருக்கும் புரிவதில்லை.தந்தை பெரியாரின் ஈரோட்டுக்கண்ணாடியை போட்டுக்கொண்டு பார்த்தால் எளிதில் புரியும்.

திசம்பர் மாதக் குளிர் மதுரையிலேயே நம்மை நடுங்க வைக்கிறது. இரவில் போர்வையைத் தேடித் தேடி போர்த்திக்கொள்ளத்தூண்டுகிறது.மதுரையிலேயே இப்படி என்றால் இந்தியாவின் தலைநகர் டில்லியில் குளிரும் பனியும் எத்தனை மடங்கு அதிகம்...சென்றவர்கள் அறிவார்கள்.உறைய வைக்கும் அந்தக் குளிரில்,பனியில் இலட்சக்கணக்கான இந்திய விவசாயிகள் திரண்டு இருக்கிறார்கள்.டெல்லிக்கு செல்லும் சாலைகளில் அமர்ந்து இருக்கிறார்கள். உணர்வு மயமாக ஒன்றாக நின்று  போராடுகிறார்கள்.தில்லியைச்சுற்றி இருக்கும் சாலைகள் எல்லாம் விவசாயிகளின் தலைகளாக இருக்கின்றன. பிரித்து சூழ்ச்சி செய்யும் மத்திய அரசின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு விவசாயிகள் ஒன்றாக நின்று போராடுகின்றனர்.மற்ற நாடுகளில் இருக்கும் ஊடகங்கள் எல்லாம் இந்தப் போராட்ட செய்தியை மிக விரிவாக வெளியிடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் ?..ஊடகங்கள் மவுனம் காக்கின்றார்கள்.ஏன் ?

கொரனாவைப் புரிந்து கொள்வது போல இந்தியாவின் இன்றைய ஆட்சியைப் புரிந்து கொள்ளவேண்டும்.பார்ப்பனர்களைப் புரிந்து கொள்ளவேண்டும்.பார்ப்பனர்களுக்கு உழவு என்றாலும் ,உழவுத்தொழில் என்றாலும் மனதளவில் வெறுப்புதான்,கசப்புதான்.ஏன்? அவாளின் சாஸ்திரமான மனு சாஸ்திரத்தில் உழவுத்தொழில் செய்வது பாவம் என்று எழுதியிருக்கிறது."விவசாயம் செய்வது உயர்ந்த தொழில் என்று சிலர் நினைப்பார்கள்.  ஆனால் நல்லோர் இதை ஏற்கவில்லை கலப்பை மண்வெட்டி போன்றவற்றால் பூமியை விடுவதாலும் பூமியில் உள்ள உயிரினங்களை வெட்டுவதால் இது உயர்ந்த தொழில் அல்ல".சுலோகம் (10 :7).பசுவையையும் குதிரையையும் துடிக்க துடிக்க வெட்டி யாக குண்டத்தில் போட்டு அதனை சுவைத்து சாப்பிட்ட பார்ப்பனர்கள்,நிலத்திற்குள் கலப்பையை,மண்வெட்டியை விடுவதால் உயிரினங்கள் சாகின்றன. அதனால் உழவுத்தொழில் பாவம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதனால் உழவுத்தொழிலில் பார்ப்பனர்கள் யாரும் அன்று முதல் இன்றுவரை ஈடுபடுவதில்லை. நெற்றி வியர்வை நிலத்தில் விழ அவர்கள் யாரும் நிலத்தில் உழைப்பவர்கள் இல்லை.

தில்லியின் எல்லையில் நின்று போராடும் விவசாயிகள் ,தங்களின் போராட்டத்தில் ஒருபகுதியாக கார்பரேட் நிறுவனங்களான அம்பானி,அதானி பொருட்களை பயன்படுத்தாதீர்கள்,புறக்கணியுங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ரிலையன்ஸ் நிறுவனத்தின் செல்போன் சிம்கார்டை பலரும் மாற்றி மற்ற நிறுவனத்திற்கு மாறுகின்றார்கள்.விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் ஏன் இப்படி ஒரு கோரிக்கையை வைக்கின்றார்கள். அவர்கள் வைத்திருக்கும் இந்தக் கோரிக்கை சரிதானா?.செய்தித்தாள்களின் பின்னோட்டங்களில் இதனை ஒட்டி விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
 
"உலகத்தொழிலாளர்களே ஒன்றிணையுங்கள். நீங்கள் இழப்பதற்கு கைவிலங்குகளைத் தவிர வேறில்லை,பெறுவதற்குப் பொன்னான உலகம் இருக்கிறது " என்றார் பொதுவுடமை தத்துவத்தை எடுத்துரைத்த காரல்மார்க்ஸ் அவர்கள்.உலகம் முழுவதும் இருக்கும் உழைக்கும் தொழிலாளர்கள் ஒன்றிணைவார்கள்,புரட்சி செய்வார்கள்.அதன் மூலம் மாற்றம் வரும்.என்று நம்பினார்.உலகில் உள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைவார்கள் என்ற காரல் மார்க்ஸ் அவர்களின் எண்ணத்திற்கு மாற்றாக உலகில் உள்ள முதலாளிகள் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.அதுவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று சொல்லக்கூடிய பெரு நிறுவனங்கள் தங்கள் தங்கள் நாட்டில் ஆட்சி யார் நடத்த வேண்டும், யார் நடத்தக்கூடாது என்று தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள்,அப்படிப்பட்ட பெரு நிறுவனங்கள்தான் இந்தியாவில் இருக்கும் அம்பானி மற்றும் அதானி கம்பெனிகள்.

இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் 119 பேர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 100 கோடிக்கு மேல் சொத்து இருக்கிறது.100 கோடிக்கு மேல் சொத்து இருப்பவர்களின் எண்ணிக்கை 2000 ஆவது ஆண்டில் 9 ஆக இருந்தது.இன்று அது 119 ஆக உயர்ந்திருக்கிறது.இந்தியாவில் உழைப்பவர்களின் உழைப்பு எல்லாம் இவர்களுக்கு லாபமாக சென்று சேர்கிறது. 2017-ல் இந்தியாவில் கிடைத்த வருமானத்தில் 73 சதவீதம் இந்த 119 பேர்கள் உள்ளிட்ட 1 சதவீத பணக்காரர்களுக்கு போய் இருக்கிறது.மீதம் இருக்கிற 27 சதவீத வருமானம்தான் ஏறத்தாழ 124 கோடி மக்களுக்கு போய்ச்சேர்ந்திருக்கிறது.இந்த 119 பெரும்பணக்காரர்களில் ஒருவர் கூட தாழ்த்தப்பட்டவர் இல்லை, முழுக்க முழுக்க பார்ப்பனர்களும் பனியாக்களும் உயர் ஜாதிக்காரர்களும்தான் இந்தப் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். அதில் முதன்மையாக இருப்பவர்கள் இந்த முகேஷ் அம்பானியும், அதானியும்.மத்தியில் பி.ஜே.பி.ஆட்சி வந்தபின்பு இவர்கள் இருவரின் சொத்து மதிப்பு பல மடங்கு கூடியிருக்கிறது.பெரும் பணக்காரர்கள் மேலும் பெரும் பணக்காரர்கள் ஆகின்றார்கள். ஏழைகள் மேலும் பரம ஏழைகளாக ஆகிக்கொண்டுள்ளார்கள்.

இன்றைய மத்திய அரசு என்பது பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆட்சி என்பது ஒரு பக்கம் என்றால்,இன்னொரு பக்கம் பணக்காரர்களுக்காக பணக்காரர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆட்சியாகவும் இருக்கிறது.இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் அனைவரும் உயர் ஜாதிக்காரர்கள் மட்டும்தான் என்பதனை புரிந்துகொண்டால் எளிதில் விளங்கும்.


இந்தியா என்பது வளர்ந்துவரும் நாடு. இதில் பாதி மக்கள்தொகைக்கு வேலை கொடுப்பது விவசாயமே ஆகும்.500 ரூபாய் நோட்டு, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று இரவில் அறிவித்து ,மத்திய அரசு செய்த கூத்துகளால் சிறு,.குறு வணிக நிறுவனங்கள் எல்லாம் அழிந்து போய் இருக்கின்றன.அதன் மூலமாக வேலை கிடைத்த பல கோடிப்பேர் இப்போது வேலை இல்லாமல் நிற்கிறார்கள்.நோட்டு செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து வந்த ஜி.எஸ்.டி. அடுத்து வந்த கொரனா பாதிப்பிற்காக கதவடைப்பு என்று தொடர்ந்து இடி மேல் இடியாக, அடி மேல் அடியாக விழுந்ததால் சிறுதொழில்கள் நசுங்கிவிட்டன.சிறுதொழில் செய்தோர் கதி கலங்கி நிற்கின்றனர்.. ஆனால் இந்தக் காலகட்டத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் லாபத்தை கொட்டி அள்ளியிருக்கிறது.

மருத்துவ செலவு,படிப்பு செலவு, குடிக்கும் தண்ணீருக்கு செலவு,நகரங்களில் வசிப்போர் குளிக்கும் தண்ணீருக்கு வாங்கும் செலவு, பெட்ரோல்  டீசல் உயர்வினால் ஏற்படும் செலவு என்று ஏழைக்குடும்பங்களும், நடுத்தரக்குடும்பங்களும் தத்தளிக்கின்றன.கிராமத்தில் வசிக்கும் ஒரு விவசாயக்கூலி,ஒரு பன்னாட்டுக்கம்பெனியில் இருக்கும் உயர் அதிகாரியின் ஒரு வருட சம்பளத்தைப் பெறுவதற்கு 941 வருடம் உழைக்கவேண்டும் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.விவசாயக்கூலி ஒடுக்கப்பட்டவராக இருப்பதையும்,பன்னாட்டுக்கம்பெனியின் உயர் அதிகாரி பெரும்பாலும் பார்ப்பனர்களாக இருப்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

" பா.ஜ.க. எப்படிப்பட்ட கோட்சே பக்தர்களையும் வருணாசிரமத்திற்கு வக்காலத்து வாங்கும் வன்னெஞ்சர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதற்கு - ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ' என்பது போல இது ஆதாரம் " என்று ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 15.12.2020 விடுதலை நாளிதழ் அறிக்கையில் குறிப்பிட்டதைப்போல " சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் " என்று பொருளிருக்கும்போது சூத்திர்ன் என்றால் ஏன் எதிர்ப்பு,ஏன் கோபம் என்று கேட்கிறார் காவி சாமியாரிணி பிரயாக்சிங் தாக்கூர் " என்னும் தலைப்பில் வந்த அறிக்கையை படிக்கும்போது , இன்றைய பா.ஜ.க. பழைய வருணாசிரம முறையை கொண்டு வருவதற்கு எவ்வளவு துடிக்கிறது என்பதனைப் புரிந்து கொள்ளலாம்."கீழ் ஜாதியில் பிறந்தவன் மேல் வருடத்திற்குரிய குலத் தொழிலை செய்தால் அவன் செல்வத்தை பறித்து நாடு கடத்த வேண்டும் (மனு 10: 85) .சூத்திரன் தன் குடும்பத்தை காப்பாற்றும் அளவுக்கு மேல் பொருள் சேர்த்து வைக்கக் கூடாது" போன்ற மனு நீதியின் சட்டங்களோடு இன்றைய விவசாய சட்டங்களைப் பொறுத்திப் பார்த்தால், நிலம் வைத்திருக்கும் விவசாய சூத்திரர்களிடமிருந்து விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றும் திட்டமே மோடி அரசின் விவசாய சட்டங்கள் என்பது புரியும்.  

விவசாயிகளுக்கு மேம்பட்ட சட்டங்கள் வேண்டுமா என்றால் வேண்டும்.டாக்டர் கலைஞர் அவர்கள் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொண்டு வந்தார்.சட்டம் இயற்றினார்.டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக ஆனவுடன் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தார்.மத்திய மோடி அரசு பதவி ஏற்றவுடன், பெரும் முதலாளிகள் வாங்கியிருந்த ஒரு இலட்சம் கோடிக்கு மேற்பட்ட கடன்களைத் தள்ளுபடி செய்தார்கள்..  தமிழகத்தில் திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில்,இன்றைய திராவிட முன்னேற்றக்கழகத்தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சிதுறைத்தலைவராக இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் மிகப்பெரிய மாற்றத்திற்கு வழிவகுத்தது. சிறு விவசாயக் கூலிகளாக கிராமங்களில் இருக்கும் மகளிர் இணையவும்,அவர்கள் வங்கியில் கடன்பெறவும் மற்றும் பலவகையில் முன்னேறவும் அந்தக் குழுக்கள் பயன்பட்டன.பயன்படுகின்றன. இது பெரும்பான்மையான மக்களின் நன்மை கருதி கொண்டுவரப்பட்ட திட்டம். ஆனால் இன்று மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள விவசாயிகள்  நலச்சட்டம் என்னும் மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடியவை அல்ல. மாறாக கார்பரேட் நிறுவனங்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்டவை.கோடிக்கணக்கான விவசாயிகளைப் பலி கொடுத்து சில நிறுவனங்கள் வாழ்வதற்கும்,வளமாவதற்கும் வழி வகுப்பவை,

திராவிட ஆட்சி  என்பது 'அனைவருக்கும் அனைத்தும்' என்னும் நோக்கம் கொண்டது..அதனைத் தமிழகம் நிருபித்தது.இனியும் நிருபிக்கும். ஆரியம் என்பது 'பார்ப்பனர்களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமே உரிமையும் சலுகையும் 'என்பது.தில்லியில் எல்லையில் நின்று போராடும் இந்தியாவின் பல மாநிலத்தைச்சார்ந்த விவசாயிகள் ஆரிய ஆட்சியின் வஞ்சகத்தைப் புரிந்து கொண்டுள்ளனர். அகிம்சை வழியில் அயராது போரிடுகின்றனர்.அவர்களின் போராட்டம் வெல்லட்டும்,வெல்லட்டும். கொரானாவை ஒழிப்பது,தடுப்பது தடுப்பூசி என்றால்,அதனைவிடக் கொடிய ஆரியத்தை தடுப்பது,ஒழிப்பது திராவிடமே..திராவிடக் கருத்துக்களே என்றும் வெல்லும்,வெல்லும்.ஆம், திராவிடம் வெல்லும்








எழுத நினைக்கும் என் தோழரே..

       

எழுது...எழுது..

எழுத‌ எழுத..

எழுத்து வரும்..

எழுது..எழுது...


ஆகச் சிறந்த 

கதைகளைத்

தேடித் தேடிப்படி..


கதைகளை அவர்கள்

நகர்த்தியிருக்கும்

உத்திகளைக் கண்டுபிடி..


நமது உள்மனதில்

புகுந்து எப்படி

கதைகளால் நம்மை

அழ வைக்கிறார்கள்

என்பதைக் கண்டுபிடி.....


தனிமையில் நம்

மனதை உருட்டும்

எழுத்தின் வலிமையைக் கண்டுபிடி.....


இணையமும் 

கணினியும் இல்லாக்

காலத்திலும்

பல்லாயிரம் பக்கங்கள் அவர்களை எழுத 

வைத்தது எது 

என்பதைக் கண்டுபிடி...





புகழ் வரும்..

பணம் வரும்..

என்பதற்காக 

எழுதியவர்கள்

நிலைக்கவில்லை.....


நிலைத்து நிற்கும்

எழுத்தாய்‌ நான்

எழுத முயல்வேன் என

ஓரிடத்தில் அமர்ந்து

மனதை

ஒருமுகப்படித்தி..


எழுது...எழுது...

எழுத நினைக்கும்

என் தோழரே..

எழுது...எழுது..

                  வா.நேரு..

                  01.01.2021

Wednesday, 2 December 2020

அதிசயமான இயக்கத்தின் ஆச்சரியமான தலைவரே !

 அதிசயமான இயக்கத்தின் 

ஆச்சரியமான தலைவரே !

                     வா.நேரு




அய்யாவின் அடிச்சுவட்டில்
நீங்கள்...
உங்களின் அடிச்சுவட்டில்
நாங்கள்...

தந்தை பெரியார் தந்த
புத்தி போதும் உங்களுக்கு....
நீங்கள் தரும் புத்தி
போதும் எங்களுக்கு....

"தந்தை பெரியாரின் கொள்கை
கைத்தடி நான்"-..நீங்கள்..
உங்களின் கொள்கை
கைத்தடிகள் நாங்கள்...

பெரியார் பணி முடிப்பே
வாழ்வின் இலக்கு- உங்களுக்கு..
தாங்கள் இடும் பணிகளை
முடிப்பதே எங்கள் வாழ்வின் இலக்கு...

'ரத்தமும் சதையும் நகமுமாய்'
எனது தோழர்கள் என
ஆனந்தக்  களிப்பு தங்களுக்கு,,,
உலகு எங்கும் உள்ள
தங்களின் தோழர்கள்
எங்களின் தோழர்கள் ஆவதால்
இரட்டிப்பு மகிழ்ச்சி எங்களுக்கு,,,

கொடுந்தொற்று கரோனா
கொல்கிறது மக்களை...
கொடிது கொடிது கரோனாவினும்
கொடிது ஆரியம் எனும்
அறிவுறுத்தல்
கேட்கிறது தங்களிடமிருந்து...

அனைவருக்கும் அனைத்தும்
இதுதான் திராவிடம்...
திராவிடத்து காளைகளே
செப்புவீர் இதனை செகமனைத்தும்
எனும் குரல் கேட்கிறது
பிறந்த நாள் குரலாக தங்களிடமிருந்து..

ஆரிய ஆதிக்கம்
ஆக்டோபஸ் போல,,,
தெரிந்த கரங்களை விட
தெரியாத கரங்கள் அதிகம்...
பெற்றவை கையளவு..
பெறவேண்டியதோ மலையளவு...

கையளவு பெற்றதையும்
காணாமல் ஆக்கிடவே
நச்சுக்கொள்கைப்  பாம்புகள்
படம் எடுத்து ஆடுகின்றன...
காளைகளே புறப்படுங்கள்...
களம் நோக்கி என
கட்டளையிடும் எங்கள் தலைவரே..

வயது 88 எனினும்
கட்டளை இடுவதில்
களத்தில் நிற்பதில்
கருத்தில் மோதுவதில்
என்றும் 28 வயது இளைஞரே...
எங்கள் தலைவரே..

உங்கள் தொண்டர் ஒருவர்
தனது ஆசையை
என்னிடம் சொன்னார்....
எனது படத்தை அய்யா
ஆசிரியர் திறந்து வைக்க வேண்டுமென..
அங்கணமே நிகழ்ந்தது..
துன்பமான நிகழ்வு எனினும்
தங்கள் தொண்டர்கள்
அவர்கள்  இறப்பு
குறித்து கவலைப்பட்டதில்லை...
அய்யா பெரியார் கொள்கை வளர..
நமது இனம் வாழ
அய்யா ஆசிரியர் வாழவேண்டும்
என்பதே அவர்கள் நினைப்பு
அவர்கள் வாழ்க்கை எல்லாம்...

அதிசயமான இயக்கத்தின்
ஆச்சரியமான தலைவரே !
78 ஆண்டுகள்
பெரியார் பணியின் தொகுப்பே...
100 ஆண்டுகள்
பெரியார் பணியின் தொகுப்பாய்
உங்களைக் காண
எங்களுக்கும் ஆசை....
வாழ்க ! வாழ்க !
நீங்கள் வாழ்க !
                             வா.நேரு  





நன்றி : விடுதலை 02.12.2020 


 

Thursday, 19 November 2020

படைப்பையும் கூடத்தான்..

              


தண்ணீரில் போட்ட

கல் போலக்கிடந்தன...

அக்காலக் கதைகள்...


பத்திரிக்கை அலுவலகம் போனதா?

பிரித்தார்களா?

படித்தார்களா?

வெளியிடுவார்களா?

மாட்டார்களா ?

எதுவும் தெரியாமல்

சகதியில் மாட்டிய

எருமை போல

மனசு அல்லல்படும்....


எடுத்து வைத்த நகல்

சில நாட்களில்

மறைந்து போகும்...

பின்பு எடுத்துக்கூட்டி

எழுத இயலுவதில்லை...

பெரும்பாலும்...

மறைந்து போன கதைகள்

பட்டியலில் இடம் பெறும்...


மறைந்து போன கதையென

மறந்து போன கதையை

திடீரென்று பிரசுரித்து

களிப்பூட்டும் சில நேரங்களில்

சில பத்திரிக்கைகள்...


இந்தப் பத்திரிக்கைக்கு

இப்படி எழுதல் வேண்டும்...

அந்தப் பத்திரிக்கைக்கு

அப்படி எழுதல் வேண்டுமென

நீண்ட பட்டியல்

பத்திரிக்கைக்கு ஏற்றபடி

எழுதுவதற்கு

பட்டியல் வைத்திருப்பான்

அக்கால எழுத்தாள நண்பன்...



கணினி வந்தது...

எல்லாம் மறைந்து போனது...

கணினி தானாகவே

நகல் வைத்திருக்கிறது இன்று...

எனது கருத்து இது...

எனது கதை இதுவெனப்

பதிய முடிகிறது...

வலைத்தளங்களில் பதிந்தவுடன்

படித்தவர்கள் எண்ணிக்கை வருகிறது...

பின்னோட்டம் வருகிறது....

விளைவுகள்...எதிர்விளைவுகள் என

படைப்பைக் கொண்டாடி

மகிழ்கிறது....


அட ! கணினி

வாழ்க்கையை மட்டுமா மாற்றியது...

படைப்பையும் கூடத்தான்..

                         வா.நேரு,20.11.2020

Tuesday, 17 November 2020

இனி வரும் காலத்தில் பிரபஞ்சம்.....வா.நேரு


நன்றி : உண்மை (16-30 நவம்பர்,2020)..மாதம் இருமுறை பகுத்தறிவு இதழ்

                                   இனி வரும் காலத்தில் பிரபஞ்சம்
                                         (முனைவர்.வா.நேரு)
                                               

"இன்றைய உலகமானது பழங்கால உலகம் என்பதிலிருந்து நாளுக்கு நாள் எப்படி மாறுதலடைந்து வந்திருக்கிறது? இனிச் சில நூற்றாண்டுகளில் எப்படிப்பட்ட மாறுதலை அடையும்.?என்பனவாகிய விஷயங்கள் பகுத்தறிவாதிகளுக்குத்தான் ஏதாவது தெரியக்கூடுமே தவிர புராண இதிகாசப்பண்டிதர்கள் என்பவர்களுக்கு,அதுவும் நம் "கலை காவியப் பண்டிதர்களுக்கு தெரிவது சுலபமான காரியமல்ல" என்றார் தந்தை பெரியார்.(இனிவரும் உலகம்..முன்னுரை).அறிவியல் பற்றி எல்லாம் கவலைப்படாமல், புராண இதிகாசப்பண்டிதர்கள் கதை அளந்து கொண்டிருந்த காலத்தில் கரோனா அவர்களின் கதையை எல்லாம் பொய் என்பதனை நிருபித்துக்கொண்டிருக்கிறது.நாம் பகுத்தறிவாதிகள் இந்தப் பிரபஞ்சம் பற்றிச்சிந்திப்போம்.

"வானம் எனக்கு ஒரு போதிமரம்/நாளும் எனக்கு அது சேதி தரும் " என்பது ஒரு திரைப்படப்பாடலின் வரிகள்.வானத்தைப் பற்றி நாள்தோறும் புதுப் புதுச்செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
பிரபஞ்சம் என்றால் என்ன?இரவில் வீட்டின் மாடியில் படுத்துக்கொண்டு வானத்தை நோக்கினால் சின்ன சின்ன புள்ளிகளாக நிறைய நட்சத்திரங்கள் தெரிகின்றன. சில நட்சத்திரங்கள் பெரிதாகவும்,சில நட்சத்திரங்கள் சிறிதாகவும் வானம் நமக்கு ஒரு நட்சத்திர தொகுப்பாக தெரிகிறது.நாத்திகரான அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் இந்தப் பிரபஞ்சத்தை ஆராய்ந்து சில செய்திகளைச்சொன்னார்." நமது பிரபஞ்சத்தில் பல இலட்சக்கணக்கான காலக்சிகள்(Galaxy)உள்ளன.ஒருகாலக்சியில் 10,000 கோடி நட்சத்திரங்கள் இருக்கலாம்.அந்த காலக்சிகளில் ஒன்றுதான் நமது பால்வெளி மண்டலம்.இந்த பால்வழி மண்டலத்தில் 100 மில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன, அவற்றில் ஒன்றுதான் நமது சூரியன்.நமது சூரியன் ஒரு நட்சத்திரம்.சூரியனை 8 கிரகங்கள்,வால் நட்சத்திரங்கள்,குள்ளக்கோல்கள்,விண்கற்கள் எனச்சுற்றிக்கொண்டு இருக்கின்றன.இதனை சூரியக்குடும்பம் என்கிறோம்.இது போலவே மற்ற நட்சத்திரங்களையும் கிரகங்கள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன.நமது பால்வழி மண்டலத்தில் மட்டும் பூமியைப் போல் 5000 கோடி கிரகங்கள் இருக்கின்றன"(ஸ்டீபன் ஹாக்கிங்-தன்னம்பிக்கையின் நாயகன்,ஏற்காடு இளங்கோ,மங்கை வெளியீடு,சென்னை-18.பக்கம் 99).பிரபஞ்சத்தை பற்றி நினைத்துப்பார்ப்பதே மலைப்பாக இருக்கிறது.நாம் இருப்பது பூமியில். பூமி இருப்பது சூரியன் எனும் நட்சத்திரக் குடும்பத்தில். நமது பால்வெளி சூரியனைப் போன்ற 100 மில்லியன்(10 கோடி) நட்சத்திரங்கள் அடங்கியது, .நமது பால்வெளியைப் போல இலட்சக்கணக்கான பால்வெளிகள்(காலக்சிகள்) அடங்கிய தொகுப்பிற்கு பிரபஞ்சம் என்று பெயர்.எவ்வளவு பெரிய பிரபஞ்சம்.இவ்வளவு பெரிய பிரபஞ்சம் என்றவுடனேயே ஒரு ஆத்திகர், கடவுள் படைப்பு என்று சொல்ல ஆரம்பிப்பார்.ஆனால் கடவுள் படைப்பு,சொர்க்கம் என்பதனை எல்லாம் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் முழுமையாக மறுத்தார்.

"ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய புத்தகமான பிரம்மாண்ட வடிவமைப்பு(The Grand Design) என்பதில் உலகத்தைக் கடவுள் படைக்கவில்லை.இயற்பியல் விதிகளுக்கு ஏற்ப அது தானாகவே உருவானது என்று குறிப்பிட்டுள்ளார்.இந்தப் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பு எதுவும் இல்லை.இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை.கடவுள் இதனை உருவாக்கவும் இல்லை.மதத்தத்துவவாதிகள் கூறுவது போல உலகுக்கு வெளியிலிருந்தும் எவரும் படைக்கவில்லை.அதற்கு வாய்ப்பும் இல்லை.கடவுள் வந்து ,தடவிப்பார்த்து,பிரபஞ்சமே,நீ உருவாகு என்று கூறுவது அபத்தமானது என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார் "(ஸ்டீபன் ஹாக்கிங்-தன்னம்பிக்கையின் நாயகன்,ஏற்காடு இளங்கோ,பக்கம் 86). தனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்பதனையும்,சொர்க்கம் என்று ஒன்று இல்லை என்பதனையும் ,பிரபஞ்சத்தினைப் பற்றிய விளக்கங்கள் கூறும்போது மிக அழுத்தமாகச்சொன்னவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

சரி, இந்தப் பிரபஞ்சம் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகளும் அது பற்றிய சிந்தனைகளும்  எப்படியெல்லாம் மனித குலத்திற்கு பயனுள்ளதாக இருக்கப்போகிறது? நாம் வாழும் இந்த உலகம்,பூமி எத்தனை ஆண்டுகள் இருக்கும்? பூமி இருக்கும் சூரிய குடும்பம் எத்தனை ஆண்டுகள் இருக்கும் ?நாம் வாழும் பூமி ஒரு நாள் அழிந்து போகுமா ? என்பதை எல்லாம் பிரபஞ்ச அறிவியலோடு இணைத்து பார்ப்பது நமக்கு வியப்பைத் தருகிறது.

ஒரு நாள் பூமியில் இனி மனிதர்கள் வாழ முடியாது  என்ற நிலைமை வருமா?. வரும் என்று சொல்கின்றார் பிரபஞ்சத்தைப் பற்றி பல்வேறு அறிவியல் உண்மைகளைத் தனது ஆராய்ச்சிகளின்மூலம் நிருபீத்த ஸ்டிபன் ஹாக்கின்ஸ் அவர்கள்.இன்றைய கரோனா காலமே அப்படி ஒரு நிலைமையை உண்டாக்கி இருக்கிறது.நமது அருமையான தோழர்கள் சிலரை இழந்திருக்கிறோம்.பல தோழர்கள் கரோனா நோயை எதிர்கொண்டு, முழு குணம் பெற்று இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.கரோனாவால் உலகமே பெரும் அச்சத்தில் உள்ளது.மக்கள் பயப்படுகிறார்கள். கரோனா போன்ற பல தொற்று நோய்கள்,, மிக எளிதாக மனிதர்களிடையே பரவக்கூடிய தொற்று நோய்கள், இனியும் தொடர்ந்து தோன்றும்,பரவும், மனித குலத்தை அச்சுறுத்தும்  என்று அறிவியல் அறிஞர்களும் சுற்றுச்சூழல் அறிஞர்களும்  சொல்கிறார்கள்.அப்படிப்பட்ட நிலைமை தொடர்ந்து வருகின்றபோது என்ன செய்வது என்னும் கேள்வி எழுகிறது.அதற்கான பதிலாக ஸ்டீபன் ஹாக்கின்ஸ், மனிதன் வேறு கிரகங்களில் சென்று குடியேற வேண்டும் என்று சொன்னார்.இனி வரும் உலகம் பற்றி சிந்தித்து சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள் பல்வேறு கருத்துக்களை சொன்னது போல,இனி வரும் பிரபஞ்சத்தைப் பற்றி சிந்தித்து ஸ்டீபன் ஹாக்கின்ஸ் பல்வேறு கருத்துக்களைச்சொன்னார்.

நாம் வேறு கிரகங்களில் குடியேறி வாழலாம். அப்படி வாழும் காலம் எதிர்கால நூற்றாண்டுகளில் மனிதர்களுக்கு கிடைக்கலாம். மனித இனம் எப்போது தோன்றியது,எங்கே தோன்றியது, எப்படி இப்போது இருக்கும் பூமி முழுவதும் பரவியது என்பதைப் பற்றி பல செய்திகளை மரபியல் ஆய்வுகள் சொல்கின்றன.ஒரு இடத்தில் தோன்றி வாழ்ந்த மனித இனம்,.பல ஆயிரம் ஆண்டுகள் பயணத்தின் விளைவாக இன்றைக்கு உலகம் முழுவதும் பரவி இருக்கிறது.முதல் பரவல் என்பது கால்நடையாக. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு. கால்நடையாக சென்றிருக்கிறார்கள். போகும் வழியில் தங்கி, தங்கி பின்னர் அங்கிருந்து கிளம்பி ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு. அது போலவே ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு கால்நடையாகவே மனிதர்கள் குழு குழுவாகச்சென்றிருக்கிறார்கள்.தங்களது பண்பாட்டை, நாகரித்தை வளர்த்திருக்கிறார்கள். பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு கிடைத்த மூளை வளர்ச்சியும், இரண்டு கால்களால் நேராக நிமிர்ந்து நடக்கும் தன்மையும் விளைவித்த அற்புதம் அவனை உலகம் முழுவதும் பரவ வழி செய்தது.பேருந்து,இரயில்,விமானம் என்று அடுத்தடுத்த வந்த நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கோ, ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கோ செல்வதை மிக எளிமையாக்கி இருக்கிறது.சில மணி நேரங்களில் கண்டம் விட்டு கண்டம் செல்ல முடிகிறது.ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிறந்து வாழ்ந்து, அங்கேயே செத்து மடிந்த மனிதன், இன்றைக்கு அறிவியலால் பல நாடுகளில், பல கண்டங்களில் வாழும் மனிதனாக மாறியிருக்கிறான்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு விமானத்தில் செல்வது போல , நமது பூமியிலிருந்து வேறு கிரகங்களுக்கு இராக்கெட் மூலமாக செல்வதும், அங்கு சென்று வேலை பார்ப்பதும், பின்னர் பூமிக்கு,தாய் நாட்டிற்கு திரும்புவது போல தாய்க்கிரகத்திற்கு திரும்புவதும் எதிர்காலத்தில் இயல்பு ஆகலாம்.அமெரிக்காவைக் கண்டுபிடித்தவுடன்,அங்கிருந்த இயற்கை செல்வங்களை எல்லாம் வெள்ளையர்கள் அள்ளிக்கொண்டு சென்றது போல,வேறு கிரகத்தில் இருக்கும் இயற்கை வளங்கள் பூமிக்கிரகத்தில் இருப்பவர்களுக்குப்  பயன்படலாம்.கொண்டு வரலாம்.இப்படியெல்லாம் கூட நாம் யோசிக்கலாம்.

எலன் மஸ்க்(Elon musk) என்பவர் தென்னாப்பிரிக்காவைச்சார்ந்த தொழில் அதிபர்.இவர் கடந்த சில வருடங்களாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதைப் பற்றி பேசுகின்றார். எழுதுகிறார்.அவருடைய திட்டத்தின்(பிராஜக்ட்) பெயர் ஸ்பேஸ்-எக்ஸ்(SPACE X).2019-ஆம் ஆண்டிற்கான ஸ்டீபன் ஹாக்கின்ஸ் -விண்வெளி தொடர்பு(Space communication) விருதினை பெற்றிருக்கின்றார்.அமெரிக்காவில்  உள்ள நாசாவின் உதவியோடு அதற்கான திட்டங்களை தீட்டி, முதலில் ஒரு 100 பேரை செவ்வாய்க் கிரகத்தில் குடியேற்றுவது என்று திட்டமிட்டு செயல் ஆற்றி வருகின்றார். அதனைப் போல சந்திரனில் சென்று மனிதர்கள் வாழ்வதற்கான குடியேற்றம் பற்றியும் தனது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ரைட் சகோதரர்கள் விமானத்தில் முதன் முதலில் பறப்பதற்கு முயற்சி செய்தது போல எல்ன் மஸ்க் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியிருப்பை கட்டுவதே தனது நோக்கம் என்று சொல்கிறார்.முதலில் நாம் கேட்கும்போது நமக்கு சிரிப்பு வரும்.ஆனால் பூமியில் இருந்தால் நாம் இனி உயிரோடு இருக்க முடியாது. இன்னும் கொஞ்ச நாளில் இறந்துபோவோம் என்று நிலை வருகின்றபோது, உயிரோடு இருப்பதற்கான,வாழ்வதற்கான வாய்ப்பு இன்னொரு கிரகத்திலோ அல்லது சந்திரன் போன்ற துணைக்கோளிலோ இருக்கிறது என்று சொன்னால், கொஞ்சம் பணம் அதிகம் இருந்தாலும் பரவாயில்லை,அங்கு சென்று சில ஆண்டுகள் வாழ்ந்து பார்ப்போமே என்று மனிதர்களுக்குத் தோன்றும். ஆனால் இது  நடைமுறையில் வந்தால், பல கோடி ரூபாய் வசதி உள்ளவர்கள் மட்டுமே வேற்று கிரகத்தில் சென்று வாழமுடியும்.

மாற்றி யோசிப்பதுதானே பகுத்தறிவு.கடவுள் சித்தப்படி உலகம் நடைபெறுகிறது என்று எண்ணிக்கொண்டு ஆத்திகவாதி சென்று கொண்டிருக்கிறான். ஆனால் வரக்கூடிய ஆபத்துக்களையும், எதிர்காலத்தில் வரக்கூடிய வாய்ப்புகளையும் இணைத்து முன் செல்லக்கூடியவன் பகுத்தறிவுவாதி.நாம் வேறு கிரகத்தில் சென்று வாழ்வது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறோம். வேற்று கிரகத்தில் வசிப்பவர்கள் , நம்மைப் போல அந்தக்கிரகத்தில் இருந்து வந்து பூமியில் வசிக்க வேண்டும் என்று நினைத்தால்?....வேற்று கிரகத்தில் உயிர்கள் வாழக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா? ...இருக்கிறது என்று சொன்னார் ஸ்டீபன் ஹாக்கின்ஸ். எந்த எந்தக் கிரகத்தில் எல்லாம் தண்ணீர் இருக்கிறதோ, அங்கெல்லாம் உயிர்கள் தோன்றியிருக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது.இந்தப் பிரபஞ்சம் என்பது பல இலட்சக்கணக்கான கிரகங்களைக் கொண்டது.உயிரினங்கள் இருக்கக்கூடிய கிரகங்களும் இருக்கும், இல்லாத கிரகங்களும் இருக்கும் என்றார்.பறக்கும் தட்டு என்பது எல்லாம் உண்மை இல்லை என்ற ஸ்டீபன் ஹாக்கின்ஸ் வேற்றுக்கிரகவாசிகள் நமது பூமிக்கு வரலாம் என்றார். அப்படி வந்தால் பூமியில் இருக்கும் நாம் பாதிப்புக்கு உள்ளாவோம். எப்படி கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தவுடன், அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் பாதிப்புக்கு உள்ளாகி,உயிரை இழந்தார்களோ, அப்படி பூமியில் இருக்கும் நமக்கு வேற்றுக்கிரகவாசிகளால் ஆபத்து ஏற்படும். அவர்கள் நம்மை விட பலமடங்கு அறிவுக்கூர்மை உடையவர்களாக இருக்கக்கூடும் என்ற ஆபத்தையும் நமக்கு சொன்னவர் பகுத்தறிவுவாதி ஸ்டீபன் ஹாக்கின்ஸ்.எதைக்கண்டும் அஞ்சி வாழ்வதல்ல வாழ்க்கை ஆனால் இனி வரும் பிரபஞ்சம் எப்படி இருக்கக்கூடும் என்னும் அறிவு,அறிவியல் தரும் அறிவு, நமக்கு புதிய வழிகளையும், புதிய வெளிச்சங்களையும் காட்டக்கூடும்.

 

   



Saturday, 31 October 2020

நூற்றாண்டு கடந்தும் வாழ்க!

 அய்யா ஆசிரியர் வீரமணிக்கு

அமைந்திட்ட போர்க்கருவி இவர் !

திராவிடர் கழகத்தின் 

பொறுப்புகளில் பலவற்றில் இருந்து

இன்று திராவிடர்கழகத்தின் '

செயலவைத்தலைவர் இவர் !





வானோடையில் தங்கிக் கிடக்கும்

நட்சத்திரங்கள் போல

இவரது நினைவோடைகளில் 

தங்கிக் கிடக்கும்

நினைவுகள் பல பல !

நினைவு படுத்தி அவர்

கொடுக்கும் தகவல்கள்

அரை நூற்றாண்டுக்கும் 

மேற்பட்ட வரலாறு சொல்லும்!

தமிழக வரலாறு முதல்

உலக வரலாறு வரை 

உண்மை வரலாற்றை சொல்லும்

மேடை நட்சத்திரம் இவர் !


இன்றுதான் புதிதாய் 

மேடை ஏறுவது போல

தலைப்புக்கு ஏற்றவாறு

எடுத்த குறிப்புகளோடுதான்

மேடை ஏறுவார்....

அதில் இன்றைய செய்தியும்

நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட

செய்தியும் இணையாய் வரும்!

அரை நூற்றாண்டுக்கும் மேல்

பேசுபவர் என்றாலும்

அவர் எடுக்கும் குறிப்புமுறை

எப்போதும் மேடை ஏறுபோவர்கள்

கற்றுக்கொள்ளும் முறை


தேடித் தேடிப் படிப்பதும்

படித்தவற்றை 

பகுத்தறிவு சொற்பொழிவில்

பயன்படுத்துவதும்

எவர் கேட்பினும் 

இதோ ஆதாரம் என

முகத்துக்கு நேரே 

எடுத்துக்காட்டுவதுமாய்

இவரது உரைகள்!


அரசுப்பதவி முடிந்தபின்புதான்

எழுத ஆரம்பித்தார்

20 ஆண்டுகளில் 

25க்கும் மேற்பட்ட நூல்கள்

ஒவ்வொன்றும் ஆராய்ச்சியே...

பெரியாரின் பன்முகம் தொடங்கி

உலகப்பகுத்தறிவாளர்கள் வரை

இவரது எழுத்துத் தொடாதா

பகுத்தறிவாளரே உலகில் இல்லை

பகுத்தறிவுக்கருத்துக்களே இல்லை

எனும் அளவில்

சுருக்கெனத்தைக்கும் 

எழுத்தாய் விரிகிறது 

இவரது எழுத்துலகம்....


தொழிற்சங்கப் பணியில்

உயர்பொறுப்புவரை

வகித்த தலைவர் இவர்!

அப்பணியில் கிடைத்திட்ட

விழுப்புண்ணும்

டாக்டர் கலைஞர்

மருத்துவமனையில் வந்து

விசாரித்ததும்...

இழப்பதற்கு தயாராக

இவர் திராவிடர் கழகத்தில்

தொழிற்சங்கத்தில் 

பணியாற்றிய வரலாறு சொல்லும்.....


வெகுண்டு எழுவார்

சில நேரம்

புரட்சிக்கவிஞரை நேரில்

பார்த்தது போல் இருக்கும்

பின்பு குளிர்ந்து

அன்பு செலுத்துவார்

அய்யா பெரியாரைப் 

பார்த்தது போல இருக்கும்....


அப்பா,

அறிவுக்கரசு தாத்தாவின் குரல்

ஒலி நாடாவில் கேட்கும்

தந்தை பெரியாரின் குரல்

போலவே இருக்கிறது

என்றாள்  மகள்....

உண்மைதான் 

குரல்மட்டும் அல்ல....

கருத்தும்கூட அப்படியே

தந்தை பெரியார்போல

ஒளிவு மறைவு ஏதுமின்றி

உள்ளத்தில் உள்ளதை

மக்களின் நன்மைகருதி

அப்படியே சொல்வது என்றேன்...

அப்படியா என்று அதிசயத்தாள் மகள்...


இடித்துரைப்பதில் 

இவருக்கு இணை இவர்தான்!

எதிரிகளை  மட்டுமல்ல 

சில நேரங்களில் தனது

தோழர்களையும் 

வறுத்தெடுப்பவர் இவர் !

வழி நடத்தும் செயலென

புரிந்துகொண்டார்க்கு 

இவரது சொற்கள்

'உற்ற நோய் நீக்கி 

உறாமை முற்காக்கும் "

சொற்கள் என்பது புரியும்..


வெறுக்க கற்றுக்கொள்பவனே

வெற்றி பெறுவான்

எல்லோருக்கும் நல்லவராய்

இருத்தல் இயலாது...

வெறுக்க வேண்டியவர்களை

வெறுக்க கற்றுக்கொள்

என்பார் என்னிடம்...


சில தோழமைகள் அற்புதமாய்

அமைகின்றன வாழ்வில்...

அப்படி எனக்கு கிடைத்திட்ட

பெரும் தோழமை

பெரியார் வழி தோழமை

அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள்...


எண்பது வயது கடந்து

இன்றைய நாளில்

எண்பத்தொன்று வயதில்

அடி எடுத்து வைக்கும்

அய்யா சு,அறிவுக்கரசு 

நூறையும் கடந்து வாழ்க !

நூற்றாண்டு கடந்தும் வாழ்க!

                         வா.நேரு, 01.11.2020




Wednesday, 28 October 2020

திதி பார்த்து திவசம் செய்தல்.........வா.நேரு

 நினைவலைகள் 

எப்போதும் நீள்கிறது...

நீத்தார் நினைவுகளோடு....


அப்பா இறந்து 

அரை நூற்றாண்டுகள்

ஓடிப்போனது...

ஆனாலும் அவரின்

நினைவலைகள்  தொடர்கிறது...


அப்பாவிடம் வண்டப்புலியில்

படித்தவர்கள்...

அப்பாவிடம் சாப்டூரில் 

படித்தவர்கள்....

அப்பாவோடு கைப்பந்து 

விளையாடிவர்கள்...

அதற்காக ஊர் ஊராய்

சென்று வென்றவர்கள்...

கதை கதையாகச்சொல்கிறார்கள்

அப்பாவின் உயர்குணம் பற்றி...


அறியா இளம்வயதில்

அப்பாவைப் பறிகொடுத்த எனக்கு

நினைவலைகள் 

எப்போதும் நீள்கிறது...

அவரோடு இருந்தவர்கள் 

சொல்லும் அத்தனை 

நினைவுகளோடும் 

அப்பாவின் நினைவும் தொடர்கிறது... 


எப்போதும் போல 

அப்பாவின் நினைவு நாள்

முதியோர் இல்லத்தோடும்

அக்னி சிறகுகள் 

அறக்கட்டளையோடும் தொடர்கிறது...

விளம்பரம் போல இதனை

வெளிப்படுத்துவது மனதுக்குள்

உறுத்துகிறது என்றாலும்


இறந்தவர்களுக்கு திதி பார்த்து

திவசம் செய்தல் என்பது 

ஊறிப்போய்க்கிடக்கிறது 

நமது மக்கள் மூளைகளில்


அதீத சக்தி வாய்ந்தது

தர்பைப்புல்! அட!

தர்ப்பைப்புல் 

மூன்றை வைத்து

இறந்து போன உங்கள்

பெற்றோரை வரவழைக்கலாம்

என்று உழைக்காமல்

உண்ணுகின்ற பார்ப்பனர்கள்

கூறுவதை நம்புகின்ற

நம் மக்கள்


பெற்றோரின் நினைவாக

பார்ப்பனருக்கு 

அரிசி,காய்கறி..

பணம் அளித்து 

ஆசி பெற வேண்டும் என

எவனோ சொல்லிவைத்ததை

பெற்றோருக்கு செய்யும்

பெருங்கடமையாய்

படித்தவரும் கூட

செய்கின்ற இந்த நாளில்


பெற்றோர்களின் நினைவு நாளில்

இல்லாது இருப்போருக்கு உதவுங்கள்

இணைந்து ஏதேனும் நல்லது

செய்வோருக்கு துணை நில்லுங்கள்

என்னும் சொல்லை 

சொல்ல வேண்டும் என்னும் 

செய்கையே தவிர வேறில்லை...


                       வா.நேரு

                       28.10.2020

நண்பரே, இந்தக் கவிதையையும் சேர்த்து படித்துவிட்டுப்போங்கள்

https://vaanehru.blogspot.com/2014/10/blog-post_27.html

நன்றி





Monday, 14 September 2020

பற்றி எரியும் நெருப்பாய்,படைத்த படைப்பாளி பேரறிஞர் அண்ணா

 பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் இன்று..'நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர், அது தந்தை பெரியார் ' என்றுரைத்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று. நான் முதலமைச்சராகப் பதவி வகிக்கும் இந்தக் காலம் எனது வாழ்வின் வசந்த காலமல்ல,மாறாக கரடுமுரடான பாதைகளில் பயணம் செய்து,பகுத்தறிவுப்பகல்வன் தந்தை பெரியாரோடு இணைந்து பகுத்தறிவு பிரச்சாரம் ஆற்றிய காலமே, எனது வாழ்வின் வசந்த காலம் என்று எழுதிய  பேரறிஞரின் பிறந்த நாள் இன்று.அனைவர்க்கும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் வாழ்த்துகள்





திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் முகநூலில் நேற்று(14.09.2020) முதல் தொடர்ச்சியாக பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை பட்டியலிட்டு வருகின்றார். எத்தனை சிறுகதைகள்(120),எத்தனை நாவல்கள்(36),எத்தனை நாடகங்கள்..ஓரங்க நாடகங்கள்(12,60), எத்தனை கடிதங்கள்(290), எத்தனை கவிதைகள்(63),எத்தனை கட்டுரைகள்(1960) எனப் பட்டியலிட்டு தமிழில் மட்டுமா, ஆங்கிலத்தில் இத்தனை என அய்யா கொடுக்கும் பேரறிஞர் அண்ணாவின் படைப்பு பட்டியலை இளைஞர்கள் ஊன்றிப்படிக்கவேண்டும். தலைவாருவது பற்றிக்கவலையில்லை,படுத்து உறங்க மெத்தை கேட்டதில்லை,மாபெரும் தலைவராக பவனி வந்த நேரத்திலும், தொண்டன் கொடுத்த பாயில், கையை தலையணாக வைத்து படுத்து உறங்கிய அந்த மக்கள் தலைவரின் படைப்புகளின் எண்ணிக்கையே  படிப்பவருக்கு மலைப்பை ஏற்படுத்துகிறது. எழுதுவதற்கு எனக்கு மனநிலை நன்றாக இருக்கவேண்டும், நல்ல இடம் வேண்டும்,சுற்றுலாத்தலம் போன்ற இடங்களில் இயற்கை கொஞ்சும் சூழலில் அமர்ந்தால்தான் எனக்கு எழுதவரும் என்று சொல்லக்கூடியவர்கள் மத்தியில், நாள்தோறும் தொண்டர்களைச்சந்திக்க பயணித்துக்கொண்டே இருந்த ஒரு தலைவர்,மாபெரும் இயக்கத்தின் தலைவராக இயங்கிக்கொண்டே இருந்த தலைவர், இவ்வளவு படைப்புகளை எழுதிக்குவித்திருக்கிறார் என்று சொன்னால்,எப்படி விளைந்தன இத்தனை படைப்புகள்?


அன்பினால் விளைந்த படைப்புகள் பேரறிஞர் அண்ணாவின் இலக்கியப் படைப்புகள். நாடாண்ட தமிழன், இப்படி நமது நாட்டிற்குப் பிழைக்கவந்த நாடோடிக்கூட்டத்தால்,ஆரிய வஞ்சகத்தால் அடிமைப்பட்டு கிடக்கிறார்களே என்னும் ஆற்றாமையால் விளைந்த படைப்புகள் அவை.நமது மக்கள் வீரத்தில் குறைந்தவர்களா? அறிவில் குறைந்தவர்களா? ஆற்றலில் குறைந்தவர்களா?, எதில் குறைந்தோம் நாம்? ஆனால் ஆண்டாண்டு காலமாக 'நாங்கள்தான் அறிவிற்கு முதன்மையானவர்கள்' என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொண்ட பரதேசிகள்,நம்மைப் பழிக்கிறார்களே என்னும் கோபத்தில் விளைந்த படைப்புகள் அவை.உண்மையை நமது மக்களுக்குச்சொல்லவேண்டுமே என்னும் உணர்வில் விளைந்த எழுத்துகள் அவை.


மேன்மையான நோக்கம் இருக்கும்போது,பற்றி எரியும் நெருப்பாய் ,மனதிற்குள் கொடுமைகளைக் கண்டு குமுறும் எரிமலையாய் சிந்தனைகள் இருக்கும்போது., சுற்றி நிகழும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளும் தத்துவமும், ஆட்சி செய்பவர்களின் அதிகார மமதையை எழுத்துகளால் வடிக்க வேண்டும் என்னும் வேகம் இருக்கும்போது மகத்தான இலக்கியப்படைப்புகள் பிறந்திருக்கின்றன..மக்களின் விடுதலைக்கு வழி வகுத்திருக்கின்றன.


'தாய்' என்னும் நாவலைப் படைத்த மகத்தான எழுத்தாளன் மார்க்சிம் கார்க்கி எழுதியது பணத்திற்காக அல்ல, புகழுக்காக அல்ல. இத்தனை மொழிகளில் தனது நாவல் மொழி பெயர்க்கப்படும் என்னும் எதிர்பார்ப்பில் அல்ல. மாறாக மக்களோடு மக்களாக இருந்த மார்க்சிம் கார்க்கி, தன்னைச்சுற்றி இருக்கும் உழைக்கும் மக்களின் வேதனைகளைப் பார்த்து, உழைத்து உழைத்து ஓடாய்ப்போகும் அவர்களின் நிலையைப் பார்த்து தனக்கு பிழைப்புக்காக கிடைத்த அத்தனை வேலைகளையும் பார்த்துக்கொண்டு, அடிபட்டு,மிதிபட்டு,அல்லல்பட்டு ,வாழ்வின் வேதனைகளை முழுமையாக உணர்ந்த நிலையில்,அன்றைய ரசியாவின் ஜார் மன்னனின் கோமாளித்தனத்தையும் ,அதிகாரத்திமிரையும் உள்வாங்கி அதற்கு எதிராகக் கிளர்ந்தெழும் கதாபாத்திரங்களை உள்ளடக்கி மகத்தான நாவலைப் படைத்திட்டான். உலக மக்களின் உள்ளத்திலே நிலைத்திட்டான். 


திராவிட இயக்க எழுத்தாளர்களின் எழுத்துகள் வெறும் பொழுது போக்கு இலக்கியமல்ல.கும்பகோணத்தில், காவிரிக்கரையில் வெற்றிலையைப் போட்டுக்கொண்டு அமர்ந்துகொண்டு, கரைபுரண்டு ஓடும் காவிரியைப் பார்த்துக்கொண்டு,ஒருத்தியை மோகித்து, மோகத்தின் முள்ளினை  நூற்றுக்கணக்கான பக்கங்களை எழுதி 'இதற்குத்தானா?' என்று கேட்கும் இலக்கியங்கள் முதல்தரமான இலக்கியங்கள் தமிழகத்தில் இருக்கும் சில விமர்சகர்களுக்கு...ஆனால் உள்ளத்தில் பற்றி எரியும் ,கொடுமைகளுக்கு எதிரான கருத்துத்தீயை எழுத்துக்களாக கொட்டிய எழுத்துகள் மூன்றாம் தர இலக்கியங்கள் சிலருக்கு...வாங்கடா வாங்க, எங்கள் திராவிட இயக்கத்து எழுத்தாளர்களை மட்டுமல்ல, உங்களையும் வாசித்துவிட்டுத்தான் நாங்கள் எழுதுகிறோம்..


'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 'என்னும் தத்துவத்திற்கு மாற்றாக, கடவுளின் முகத்திலே பிறந்தவர்கள்,தோளிலே பிறந்தவர்கள், தொடையிலே பிறந்தவர்கள், காலிலே பிறந்தவர்கள் என்று கதை கட்டி ,பெரும்பான்மையான மக்களை மயக்கத்திலே ஆழ்த்திய சதிகாரர்களுக்கு எதிராக களமாடிய எழுத்துகள் திராவிட இயக்க எழுத்துகள்.


பேரறிஞர் அண்ணாவை ,பொருளாதார நிலையில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட உயர்ந்து நிற்கும் நிலைக்கு அடித்தளம் இட்டதற்காக,'தமிழ் நாடு' என்னும் பெயர் வைத்தற்காக, இரு மொழிதான் ஆட்சி மொழி என்று உறுதி செய்தற்காக,, சுயமரியாதைத் திருமணத்தை சட்டபூர்வமாக ஆக்கியதற்காக என்று அறிந்து வைத்திருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்..அதே வேளையில், தனது பேச்சாற்றலால் உலகத்தை ஈர்த்த பல்வேறு பேச்சாளர்களை வரலாற்றில் படித்திருக்கிறோம் ஆனால் அவர்கள் எல்லோரையும் மிஞ்சிய பேச்சாளராக, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்கணக்கில் காத்திருந்து, பொறுத்திருந்து கேட்ட பேச்சாளராக பேரறிஞர் அண்ணாவை அறிந்திருக்கின்ற இளைஞர்கள், எழுத்தாளர் பேரறிஞர் அண்ணாவை முழுமையாக அறிய வேண்டும். அவரது படைப்புகளை நாவல்களை,சிறுகதைகளை, கவிதைகளை,கடிதங்களை எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் நாடகங்களைப் படிக்கவேண்டும். இன்றைய நிலையோடு பொருத்திப்பார்க்கவேண்டும். ஆங்கிலத்தில் ,மற்ற மொழிகளில் புலமையுள்ளவர்கள் பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை மொழிபெயர்க்க வேண்டும்.திருக்குறளை வேறு மொழிகளில் மொழி பெயர்க்க தமிழக அரசே முயற்சி எடுப்பதுபோல, பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை வேறு மொழிகளில் கொண்டு செல்ல தமிழக அரசே முயற்சி எடுக்க வேண்டும்.இளைஞர்கள் மத்தியில் பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை கொண்டு செல்ல , இந்த நாளில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்.

               வாழ்க பேரறிஞர் அண்ணா! வாழ்க பேரறிஞர் அண்ணா புகழ்...  


Wednesday, 22 July 2020

என்னுடைய தோழர்கள்: புதுச்சேரி மு.ந.நடராசன்

என்னுடைய தோழர்கள்:    புதுச்சேரி மு.ந.நடராசன், மேனாள் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்துணைத்தலைவர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்துணைத்தலைவராக இருந்து மறைந்த அய்யா புதுச்சேரி மு.ந.நடராசன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (24.07.2020).புதுச்சேரி மு.ந. நடராசன் அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தில் என்னோடு இணைந்து பணியாற்றியவர்.2002- முதல் இறக்கும்வரை தொடர்பில் இருந்தவர். மாதம் ஒரு முறை அல்லது இருமுறை கட்டாயம் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும்.அவர் அழைக்கவில்லையென்றால் நான்  அழைப்பேன். புதுச்சேரி கூட்டத்திற்கு செல்லும்போதெல்லாம் அவரது இல்லத்தில்தான் பெரும்பாலும்  தங்கியிருக்கிறேன். அன்போடும் பாசத்தோடும் விருந்தோம்பல் செய்பவர். அவரது இணையர் அம்மா அவர்களும் அப்படி ஒரு உபசரிப்பு செய்வார்கள்.

முதலில் குடும்பத்தைச் சரிசெய்ய வேண்டும் என்பார். குடும்பக்கடமைகளை முதலில் முடிக்க வேண்டும் என்பார். மாதத்தின் முதல் வாரத்திலேயே வீட்டிற்கு வாங்க வேண்டிய பொருளை எல்லாம் வாங்கி வீட்டில் போட்டு விடுங்கள் என்பார். அவரை விட நான் 18 வயது இளையவன் என்றாலும் நான் மாநிலத்தலைவர் அவர் மாநிலத்துணைத்தலைவர் என்றாலும் எந்தவிதமான ஈகோ இல்லாமல் பழகக்கூடியவர்.அன்பு காட்டுபவர். ஆனால் தன் மனதிற்குப் பட்டதை மிகப் பளிச்சென்று சொல்வார். அய்யா ஆசிரியர் அவர்கள் அறிவிக்கும் பெரியார் திரைப்படம் உள்ளிட்ட அத்தனை அறிவிப்புக்களுக்கும் அவருடைய பங்களிப்பு என்பது முதலிலேயே இருக்கும்.தன்னுடைய பங்களிப்பை முதலில் கொடுத்துவிட்டுப் பின்பு வசூல் செய்தும் கொடுப்பார்.

தி.மு.க.வின் புதுச்சேரி மாநிலப்பொருளாராக இருந்து தி.மு.க. மாநில மாநாடு நடத்தியதைக் குறிப்பிடுவார்.மறைந்த தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் திருச்சி அன்பில்.தர்மலிங்கம் அவர்கள் அய்யா பெரியாருக்கு மோதிரம் செய்து கொடுக்க விரும்பியதையும், அதற்காக முதன் முதலில் தந்தை பெரியாரைத் திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்ததையும் அய்யா அவர்களுக்கு கைவிரல் அளவு எடுத்து மோதிரம் செய்து கொடுத்ததையும் அடிக்கடி குறிப்பிடுவார்.அந்த நிகழ்வைச் சொல்லும்போதெல்லாம் ஒரு சிறு குழந்தையைப் போல அந்த நிகழ்வை சொல்லிச் சொல்லி மகிழ்வார்.
தி.மு.க்.விலிருந்து திராவிடர் கழகத்திற்கு வந்தவர். பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்புகளிலேயே இருக்க விரும்பினார்.இருந்தார். சின்னச் சின்ன வெளியீடுகளாக பல வெளியீடுகளைக் கொண்டு வந்தார்.அந்த வெளியீடுகளை திராவிடர் கழக,பகுத்தறிவாளர் கழக நிகழ்வில் எல்லோருக்கும் கொடுப்ப்பார்.கொடுக்கச்செய்வார். மாநாட்டு நிகழ்வில் அய்யா மு.ந.நடராசன் அவர்களின் வெளியீடு கைக்கு வந்துவிட்டது என்றால் அய்யா மு.ந.நடராசன் வந்துவிட்டார் என்பதனைப் புரிந்துகொள்வோம்.  மதுரையில் நடந்த பகுத்தறிவாளர் கழகக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

விஜயவாடாவில் நடைபெற்ற உலக நாத்திக மாநாடுகள்,மகாராஷ்டிரா நாக்பூரில் நடைபெற்ற இந்திய நாத்திக மாநாடுகளில் நாங்கள் எல்லாம் இணைந்து கலந்துகொண்டு இருக்கின்றோம்.அங்கு வரும்போது ஆங்கிலத்தில் தனது வெளியீடுகளைக் கொண்டு வருவார். யார்? எவர் ? என்னும் தலைப்பில் தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி எனத் திராவிட இயக்கத்தின் தலைவர்களைப் பற்றித் தொடர்ச்சியாக வெளியீடுகளைக் கொண்டுவந்தார்.  சிக்கனமாக இருப்பார். ஆனால் நல்ல செயல்களுக்கு பணம் செலவு செய்வதைப் பற்றி எப்போதும் கவலைப்படாமல் செலவழிப்பார்.இளைஞரைப்போல எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்.

அவருடைய சொந்த ஊர் திருச்சி அருகில் உள்ள சிறுகாம்பூர். அந்த ஊரில் சில ஆண்டுகளுக்குமுன் அரசு உயர் நிலைப்பள்ளியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினார். என்னையும் மற்ற பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்களையும் அழைத்திருந்தார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி,போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி, ஆசிரியர்களுக்குத் தந்தை பெரியாரின் புத்தகங்களை வழங்கி என மிகப்பெரிய அளவில் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இன்றைக்கும் கூட நினைவில் நிற்கிறது.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில மாநாடு இரண்டு நாட்கள் புதுச்சேரியில் 2004-ஆம் ஆண்டில் நடைபெற்றது.மிகப்பிரமாண்டமாக நடந்த அந்த மாநாட்டின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு ,மிகப்பெரிய வெற்றி மாநாடாக நடத்திக்காட்டினார்.அதைப்போல இராவண லீலா தொடர் நிகழ்வுகளை புதுச்சேரியில் நடத்தினார். அய்யா சிவ.வீரமணி அவர்கள் புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத்தலைவராக வந்த பின்பு, அவரோடு இணைந்து பல இயக்க நிகழ்வுகளுக்கு உறுதுணையாக இருந்தார்.

அய்யா மு. ந.நடராசன் அவர்கள் மறைந்த பின்பு ,அய்யா மு.ந.நடராசன் அவர்களின் 73-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று(24.05.2020) மாலை நடைபெற்ற காணொளி நிகழ்வில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அய்யா துரை.சந்திரசேகரன் அவர்களும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் காணொளி வழியாக உரையாற்றினார்கள்.திராவிடர் கழகத்தின் அய்யா ஆசிரியர் அவர்கள் உரையாற்றும்போது "அருமைத்தோழர் மு.ந.நடராசன் அவர்கள் புதுவையில் மட்டுமல்ல, புதுமையான உலகம் அமையவேண்டும் என்பதற்காக தன் வாழ் நாள் முழுவதும் உழைத்து வாழ்ந்து காட்டியவர்.துரு துருவென்று சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்.எங்கு சென்றாலும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்றாலும் கூட திராவிடர் இயக்கத்தை,பகுத்தறிவாளர் கழகத்தை கையோடு எடுத்துச்சென்றவர்.விபத்துகள் எதிர்பாராதவை.அதிர்ச்சியாக நமக்கு அமைந்துவிடுபவை. ஆனால் நாம் பகுத்த்றிவாளர்கள். தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதனை செயல்படுத்துபவர்கள்.
தோழர் நடராசன் அவர்கள் தான் மட்டும் கொள்கையாளராக வாழவில்லை. அவருடைய வாழ்விணையராக இருந்தாலும் அவரது பிள்ளைகளானாலும் கொள்கைத்தங்கங்களாக இருப்பதும், விடுதலை வாசகர்களாக இருப்பதும்,இயக்கப்பணிகளுக்கு உறுதுணையாக இருப்பதும் நடராசன் அவர்கள் இன்னும் நம்மை விட்டு மறையவில்லை,ஆலமரம் விழுந்தாலும் அதனுடைய  விழுதுகள் தாங்கி நிற்பதுபோல வாழைமரம் சாய்ந்தாலும் அதன் கன்றுகள் நிற்பதுபோல அவரின் குடும்பத்தினர் இருக்கின்றனர்.ஒளிக்கீற்றாய் நடராசன் அவர்கள் பாடுபட்ட பகுத்தறிவு பரப்பலும், சாதி ஒழிப்பும், அறிவியல் மனப்பான்மை வளர்ப்புமான அந்த லட்சியச்சுடரை ஏந்தி தொடர்ந்து பயணிப்போம். " என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.


அவர் மறைந்து ஓராண்டாகி விட்டது.அவரின் நினைவு நாளில் அவரின் உணர்ச்சியும் வேகமும் இயக்க ஈடுபாடும் என் மனது முழுவதும் நிறைந்து நிற்கிறது. அவரது மூத்தமகன் பாஸ்கர் அவர்களோடு பேச வாய்ப்புக் கிடைத்தது.  மிக நல்ல பொறுப்பில் உயர் பதவியில் இருக்கும் அவரின் பெரியாரியல் பற்றி புரிதலும், அவரது அப்பாவைப் பற்றிய அவரின் மதிப்பீடும், தனது தந்தை மு.ந.நடராசன் அவர்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்து,எப்படி ஒரு எதிர் நீச்சல்காரரை வாழ்க்கையில் உயர்ந்து திடீர் விபத்தால் மறைந்தார் என்பதனை அவர் பேசப்பேச, ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவரோடு உரையாடிய நிகழ்வு, அய்யா மு.ந.நடராசன் அவர்கள் தான் மறைந்தாலும் தனது உணர்ச்சியை, வேகத்தை,அறிவை, இயக்க ஈடுபாட்டை தனது குடும்பத்தினருக்கு அளித்துச்சென்றிருக்கார் என்பது மிகப்பெரும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனது தோழர்கள் எதையும் எதிர்பாராதவர்கள்,கொள்கைக்காக உயிரையும் கொடுக்கக்கூடியவர்கள், எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக உணமையை உரக்கச்சொல்வதனால், பொய்யர்களிடமிருந்தும்,ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து வரும் எதிர்ப்புக்களை எதிர்பார்த்தும்,எதிர்கொண்டும் வாழ்வில் செம்மையாக வாழ்பவர்கள்.

முதலாம் ஆண்டு நினைவு நாளினை ஒட்டி, புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக காணொளி வழிக்கூட்டம் நடத்துகிறார்கள். பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொறுப்பாளர்களோடு திராவிடர் கழகத்தின் பொருளாளர் அண்ணன் வீ.குமரேசன்,பொதுச்செயலாளர் அய்யா முனைவர் துரை.சந்திரசேகரன்,துணைத்தலைவர் அய்யா கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் காணோளி நிகழ்வில் கலந்துகொண்டு அய்யா சுயமரியாதைச்சுடரொளி மு.ந. நடராசன் நினைவு உரை நிகழ்த்துகிறார்கள். நிகழ்வு சிறக்கட்டும்.

புதுச்சேரி மு.ந.நடராசன் அவர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்.முதலாம் ஆண்டு நினைவு நாளில் எனது அருமைத்தோழர், தமிழகம் &புதுச்சேரி மாநிலப்பகுத்தறிவாளர் கழகத்தின் முன்னாள் துணைத்தலைவர் அய்யா மு.ந. நடராசன் அவர்களுக்கு வீரவணக்கம்.

                            வா.நேரு, 23.07.2020 இரவு 10.15 மணி