சில நாட்களுக்கு
முன் முதன்முதலாக 85 வயது இளைஞர் தோழர் இரா.சண்முகவேல், ஜீவா படிப்பகம்,,கீழக்கலங்கல்
,தென்காசி மாவட்டம் அவர்களைச் சந்தித்தபோது, எனது ‘நெருப்பினுள் துஞ்சல்’ சிறுகதைத்
தொகுப்பு நூலினைக் கொடுத்தேன்.ஓரிரு நாட்களுக்குள் அத்தனை கதையையும்
படித்துவிட்டு, எனது முகவரி வாங்கி வீட்டிற்கு அந்த நூல் பற்றிய மதிப்புரையை எழுதி
அனுப்பி இருக்கிறார்.எத்தனையோ நண்பர்களிடம் நூலைக் கொடுக்கிறோம். நாமும் நூலை நண்பர்களிடம்
வாங்குகிறோம்.ஆனால் எத்தனை நூல்களை நாம் படிக்கிறோம்.அந்த நூல் பற்றிய நமது எண்ணத்தை,
கருத்தைத் தெரிவிக்கிறோம் என்பது மிகப்பெரிய கேள்வி.தோழர் இரா.சண்முகவேல்
அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்…இனி அவரது கடிதம்.
தோழர் இரா
சண்முகவேல் ஜீவா படிப்பகம்,கீழக்கலங்கல்-627860,தென்காசி
மாவட்டம்
மரியாதைக்குரிய தோழர் முனைவர் நேரு அவர்களுக்கு, தோழர் இரா சண்முகவேல் எழுதும் கடிதம். நலம்; தங்கள் நலம், குடும்ப நலம்,இதர தோழர்கள் நலம் அறிய ஆசை.
தங்களை மதுரையில் ஸ்டுடியோவில்
சந்தித்தேன். நல்ல மனிதர்களைச் சந்திப்பதில் அவர்கள் வாழ்க்கையில் ஒரு
மாற்றம். வயது ஆகிவிட்டதே என்று நினைக்காமல் எப்பொழுதும்
சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஒன்று மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும், அல்லது உடலுக்கு வேலை கொடுக்க வேண்டும்.
தாங்கள் கொடுத்த இரண்டு புத்தகங்கள் ஓர் அறிவு பெட்டகம், அதில் தாங்கள் எழுதிய ‘நெருப்பினுள் துஞ்சல்’ தலைப்பு. தலைப்பே ஒரு வித்தியாசமாக இருக்கிறது. தாங்கள் எழுதிய அனைத்து புத்தகங்களையும் படிக்க வேண்டும்
போல் தோன்றுகின்றது. அதை எனக்கு நாம் சந்திக்கும் போது கொடுக்க வேண்டும்.
‘நெருப்பினுள் துஞ்சல்’ விரைவாக வரி விடாமல் படித்து விட்டேன். காலத்திற்கேற்ற கதை என்பதை விட நாட்டில்
நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளை யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளீர்கள்.
நூல் விமர்சனம்
முதலில் தங்களின் ஆசான் திரு வீ. விரி (செட்டி) அவர்களுக்கு மரியாதை செலுத்தியது எல்லா மனிதர்களும்
கடைப்பிடிக்கின்ற ஒன்று. மாதா, பிதா, குரு என்ற வாக்கியத்தை நினைவு
படுத்தி உள்ளீர்கள்.
அணிந்துரை வழங்கிய தோழர் சு.கருப்பையாவின் விமர்சனம் பாராட்டப்பட
வேண்டியது. கடைசி மூன்று கதைகள் வேகமில்லை என்று எழுதி இருந்தார்கள். அது சிறப்பாக இருப்பது போல் தான்
எனக்குத் தோன்றியது.
உங்களுடைய என்னுரை எல்லோருக்கும் நன்றி தெரிவித்துள்ளீர்கள் ஆனால் படித்த
நண்பர்களின் விமர்சனத்தை எதிர்பார்க்கின்றேன் என்று பதிவு செய்து முகவரியை பதிவு
செய்திருக்கலாம் .
1.அடி உதவுகிற மாதிரி
நாட்டில் இன்றைய சமுதாயத்தில் உள்ள அவலங்களை அப்பட்டமாகக் கூறியுள்ளீர்கள். குடும்பத் தலைவன், தான் கல்வி கற்காவிட்டாலும் பிள்ளைகள்
படித்துச் சிறப்பாக வாழ வேண்டும் என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துள்ளீர்கள் இன்றைய மாணவன் அவல நிலையில்
உள்ளான் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளீர்கள். முத்துக் கதாபாத்திரம் ஒருவனை எப்படித் திருத்த வேண்டும் என்பதற்கு ஓர் முன் உதாரணம்.
2.சீரு சுமந்து அழிக்கிற
ஜாதிசனமே
இன்றும் இந்த அறிவியல் நாகரீக உலகில் கிராமங்களில் நடப்பது தொடர்கிறது. காதணி விழா, மொட்டை அடித்தல், பிறந்தநாள், நினைவு நாள், திருமணம், பூப்புனித நீராட்டு விழா, பெயர் சூட்டல் என நடந்து அதில் கடன் வாங்கி மானத்தைக் காப்பாற்றவும் நிலை. இதில் பல தற்கொலைகள், குடித்துவிட்டு தகராறு ,அத்தனையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆசிரியர் இதை மாற்றுங்கள் என்று கூறுவது
தன் அனுபவத்தில்.
3.. முட்டுச் சுவரு
ஒரு மாணவன் ஒரு தகப்பனாரிடம் படிப்பதாக நடித்துக் கடைசியில் தற்கொலைக்கு
முயற்சிக்கிறான். அந்த மாணவன் செயல்பாட்டின் நிலைமை அப்படி. அரசு என்கின்ற ஐயா அஞ்சல் வழியில்
படித்துக் கொள்ளச் சொல்லி அவன் சம்பாதிக்கும் பணத்தின்
படிப்பது தான் அவனுக்கு ஒரு தண்டனை போல் உள்ளது. சிறந்த முடிவுதான்.
4. இட்லி மாவு
தெருவோரத்தில் நடக்கும் கடைகள், வியாபாரம். அதனால் ஒருவர் பிழைக்க மற்றொருவர் வீட்டில் ஏதும்
செய்யாமல் பொருளாதாரத்தை விரயமாக்கும் செயல். இன்று நகரங்களில் இருந்து கிராமம்வரை நடைமுறையாகி விட்டது. காபி கூட வீட்டில் போடுவதில்லை.
இட்லி மாவு மின்சாரம் இல்லாதபோது அதைக் கல்லில் அரைத்து விற்பனை செய்யும்
குடும்பம். அதற்குப் போட்டியாக ஓர் அம்மா கூவி கூவி கூவி விற்பதிலும் போட்டி. உழைத்து ஓர் குடும்பத் தலைவி இறக்க கணவர் பிள்ளைகள் மீண்டும் அந்தத் தொழிலுக்கு வருவது
வேறு தொழில் தெரியாததுதான்.
5.உடையார் முன் இல்லார் போல
கல்லூரியில் குறைந்த மார்க் பெற்ற ஜோயலுக்குக் குணசேகரன் ஒரு வழியாக இடம் வாங்கித் தந்த கதை. கடைசியில் குணசேகரன் தண்டனை
அவனை வாழ வைத்தது.பிள்ளை பிழைத்து விட்டது என்று
முடித்துள்ளீர்கள் .
6. ஒரு வளாகம் ஒரு நாய் ஒரு பூனை
எழிலரசன் நடைப்பயிற்சி செல்லும்போது கண்ட காட்சி, நாயும் பூனையும் ஒன்றாக நடப்பது. அதில் எம்.என்.ராயின் பூனைக் கதையில் எங்களை விட மனிதர்கள் எந்த விதத்தில் உயர்ந்தவர்கள், எங்களை அபசகுனம் என்று கூறுகிறீர்களே ,மனிதர்களே கூறுகிறீர்களே என்ற கேள்வி?. ஆனால் விதவைத் தாய்மாரை, விறகுக்கட்டு சுமக்கும் ஒரு மனிதனைக் கண்டால் அபசகுனம் என்று பயணத்தை நிறுத்திவிடுவதும் உண்டு .உண்மையான அன்பு இருந்தால் எந்தச் சடவும் வராது என்பது கதையின் கரு.
7.நெருப்பினில் துஞ்சல்
புத்தகத்தின் தலைப்பு.
மணி பரோட்டா கடையில் புரோட்டா வாங்கச் செல்ல, அங்கு புரோட்டா மாஸ்டர் சப்ளையர் நகைச்சுவையாக வேலை பார்க்கும் நளினம். புரோட்டா மாஸ்டர் காலை 7:00 மணி முதல் 12 மணி வரை ஓரிடம் ,3 மணிக்கு மேல் 11 மணி வரை ஓரிடம்.உழைப்பின் திலகம் தான். 15 மணி நேரம் உழைப்பு, உடல்நிலை பாதிப்பு. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் உயிர் பிழைத்தது.
மணி நண்பர் இலவசம் என்ற பெயரில்
நாட்டைக் கெடுத்ததாகக் கூறுவது
உண்மைதான். காரணம் மது என்ற அரக்கன் காசு இலவசத்தைக் காப்பாத்துவது உண்மை. பொருளாதார ரீதியில் இலவசம் அவசியம். வாக்குகள் வாங்குவதற்கு இலவசம் என்ற நிலை உருவாகிவிட்டது. சிறப்பான கதை, நல்ல தலைப்பு.
8 தீவிர சிகிச்சை பிரிவு
இன்றைய கால மருத்துவமனையைப் பற்றி அறிந்து
எழுதியுள்ளீர்கள். முத்துவின் அம்மா கதையிலிருந்து
துவங்குகிறது. பாம்பு கடித்த பையன், அடிபட்ட பொறியாளர், கடவுள் படத்தை கையில் வைத்துக் கொண்டு காப்பாற்றி
விடும் என்ற நம்பிக்கையில் உள்ள குழந்தை என்று பலதரப்பட்ட நோயாளிகள். ஒரு சிலது தவிர எல்லாம் இறந்து
கட்டிலில் தூக்கி வரும் காட்சி. பொருளாதாரத்தில் எல்லாவற்றையும் இழந்து வீடு செல்ல முடியாத நிலைக்கு பொருளாதாரம். இப்படி யதார்த்தத்தை ஆசிரியர் சித்தரித்துள்ளார்.
“தேவையற்றுப் போன இடமே கடவுள் செத்துப் போன இடம்” பெரியாரின் வாசகத்தை நினைவுபடுத்தியுள்ளார்கள்.
9. ஒரு வாரம்
கழிந்தது
இது மருத்துவமனையில் நடந்த கொடுமை மாதிரி சென்னையில் மழை வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர் நிலமை மாதிரி, 9 நாட்கள் மழையோடு பூவரசன் கூறுவது மாதிரி எழுதி உள்ளீர்கள் .இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட விபரீதம். இயற்கை பாதிப்பில் மதம், ஜாதி, இனம்,மொழி வேறுபாடு இல்லை, சென்னை வெள்ளப்பெருக்கில் ஏற்பட்ட அனுபவம். தனிமை என்பது, தோழர் பால தண்டாயுதம் தன் வாழ்நாளில் ஒன்பது ஆண்டுக் காலம் தனிமை சிறை. அதுதான் தியாக வாழ்க்கை
10. உயிர் ஈறும் வாளது:
இது தொழிற்சங்கத்தின் கதை. ஒரு காலத்தில் ஆர்ப்பாட்டம் போராட்டம்
என்றால் தொழிலாளர்கள் ஒற்றுமையாய் நின்று நடத்திய காலம். தொழிற்சங்கம் அப்போது அதிகம் இல்லை A I T U C தான் முதல் தொழிற்சங்கம்.அதன் பிறகு அரசியலுக்காகப் பல தொழிற்சங்கம் தோன்றி அரசாங்கத்திற்கு
ஆதரவு, எதிர்ப்பு. ஜீவா கூறியது போல் “ ஒன்றுபட்டு போர் புரிந்து உயர்த்துவோம்
செங்கொடியை இன்றுடன் தீருமடா இம்சை முறைகளெல்லாம்” என்று பாடிய பாடல் வரி.
இதில் அழகர்சாமியின் நடவடிக்கை வன்முறையைத் தூண்டுவது போல் இருப்பதாகச் சொல்லி அதைப் பொறியாளரிடம் பேசி தீர்த்து அவனுக்கு உத்திரவாதமான வாழ்க்கையைத் தொழிற்சங்கத் தலைவர்கள் கொடுத்த காலம். இன்று முதலாளி தொழிலாளி உறவு நன்றாக
இருந்தால் நாடு சிறப்பாக இருக்கும்.
11. யார் யார் வாய்க் கேட்பினும்
இந்தக் கதை சமுதாயத்தை அலக்கழிக்கும் மூடநம்பிக்கை சோதிடம், அந்தச் சோதிடத்தால் நடந்த விளைவு. ஜீவா, பெரியார் இவை ஒழிய வேண்டும் என்று பாடுபட்டார்கள். பலன் குறைவே என்று சொல்லலாம்
பகுத்தறிந்தவன் பிழைத்துக் கொள்வான். வாழ்க்கை ஒரு கலை. அந்தக் கலையை மனிதன் நேசிக்க வேண்டும்.
12 தீதும் நன்றும்
இது தொலைத்தொடர்பு சம்பந்தமான கதை. பாலன், மணி சம்பந்தப்பட்ட கதை. தாங்கள் அதில் வேலை பார்த்தன் அனுபவத்தில் எழுதிய கதை. பாலன் கொஞ்சம் கஷ்டப்பட்ட குடும்பம். ஹோட்டலில் சாப்பிடுவதைப் பொருளாதார ரீதியாக விரும்பாதவர். மணி அவர் மேல் இருந்த பாசத்தால் ஒரு தடைவையாவது சாப்பாடு கொடுக்க நினைத்தார். ஆனால் பாலன் பணத்தின் அருமையைப் பற்றி, யதார்த்தத்தில் நடந்த உண்மைகளைக் கூறி கடைசி வரை பாலன் ஹோட்டலில் சாப்பிட மறுத்து விடுகிறார்.
13 எங்களுக்குத் தேவை என்றால்
மாசறுபொன், ஒரு சிறுமியின் மனதில் அறிவியலும் ஆன்மீகமும் எப்படி
என்பதைக் கதையில் தெளிவுபடுத்தி உள்ளார்கள். தகப்பனைக் காப்பாற்ற கோவிலுக்குச் சென்று விட்டு,ஆசிரியைகளிடம் அடி
வாங்குவது, சிறு பிள்ளைகளிடம் தெய்வத்தைத் திணிக்காதீர்கள் என்ற கருத்தை கூறி உள்ளீர்கள். இந்தக் காலத்தில் இள வயதில் கடவுள் நம்பிக்கை ஊட்டி மூட
நம்பிக்கையை வளர்க்க வேண்டாம் என்பதைத் தெளிவாகக் கூறி உள்ளீர்கள். அறிவியலைக் கற்றவர்களே ஆன்மீகத்தில் பிடிப்புள்ளவர்கள் 99 சதவீதம்.
சிந்தித்துத் தெளிவு பெற ஒரு மூளை வேண்டும்.
சிறுகதைத் தொகுப்பில்
இருந்த அத்தனை கதைகளையும் படித்து, செய்ய வேண்டியதையும் குறிப்பிட்டு, விமர்சனத்தை
கைகளில் எழுதி அனுப்பி இருக்கிறார்.கைப்பட எழுதிய கடிதத்தில், நலம், நலமறிய ஆசை என்பதை எல்லாம் படித்து பல ஆண்டுகள்
ஆகிவிட்டது.இதைப் படித்தவுடன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
சிறுகதை எழுதி கொஞ்ச
நாட்களாகிவிட்டது.தன்னுடைய விமர்சனத்தின் மூலம் சிறுகதை எழுதுங்கள் என்ற ஊக்கத்தை
85 வயதுத் தோழர் சண்முகவேல் அவர்கள் கொடுத்திருக்கிறார். நன்றி தோழருக்கு..அவர் எழுதிய இந்த விமர்சனத்தை
பிரிண்ட் எடுத்து, நலமா என அவரை விசாரித்து பதில் கடிதம் எழுதவேண்டும்.
அன்புடன்,
வா.நேரு,
02.11.2025

