எனது சொந்த ஊர் சாப்டூர்.அங்கிருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில்தான் 6ம் வகுப்பு பின்பு எட்டாம்வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்தேன்.இடையில் ஏழாவது மட்டும் எம்.கல்லுப்பட்டியில்.கடந்த 26.11.2025 அன்று சாப்டூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சியை, நிகில் பவுண்டேசன் பயிற்சியாளர்கள் மூலமாக நிகழ்த்துவதற்கு அங்கு இருக்கும் தலைமை ஆசிரியர் திரு க.சுந்தரராஜ் உதவித் தலைமை ஆசிரியர் திரு சு.தமிழரசன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு கூ.சிவக்குமார் ஆகியோரிடம் தெரிவித்தபோது மகிழ்ச்சி அடைந்து நடத்தலாம்,மிகவும் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டார்கள்
.நிகில் பவுண்டேசன்,பள்ளிகளில் வழிகாட்டுதல்
நிகழ்ச்சியை நடத்த தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு
நிறுவனமாகும். 26.11.2025,புதன்கிழமை இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு நிகில் பவுண்டேசன் நிறுவனர் திரு.சோம. நாகலிங்கம் IRS(Rtd) அவர்கள் ஒத்துக்கொண்டது பெரும் மகிழ்ச்சி அளித்தது.கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் முறையாக விண்ணப்பித்து, அனுமதி பெற்று இந்த நிகழ்வு காலை முதல் மாலை வரை நடத்தப்பட்டது...
மிகவும் நமக்கு பிடித்த ஒருவரின் திடீர் இழப்பை எப்படி சரி செயவது
என்பதற்கு திரு சோம.நாகலிங்கம் அவர்களின் செயல்பாடு மிகப்பெரிய
உதாரணமாகும். கல்லூரிக்குச்சென்ற தனது மகன் நிகில் திடீரென
விபத்தில் இறந்துவிட, சில
நாட்கள்(21 நாட்கள்) துக்கத்திலேயே
இருந்துவிட்டு,இனியும் இப்படி இருப்பது நாம் கற்றுக்கொண்ட
பாடங்களுக்கு உகந்தது அல்ல எனத் தீர்மானித்து,துயரத்தில்
இருந்த தனது இணையரிடமும் பேசி ,இறந்த தனது மகன் அடிக்கடி
குறிப்பிடும் ‘அரசுப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு
வழிகாட்டுதல் நிகழ்ச்சி நட்த்துங்கள்’ எனும் கோரிக்கையை
ஏற்று ,இந்த நிகழ்வினை நடத்த ஆரம்பித்தவர் திரு.சோம. நாகலிங்கம் அவர்கள்
அப்போது அவர் மத்திய அரசுப்பணியில் உயர்பொறுப்பில் இருந்தார்.அவரது இணையரும் அப்படியே.இருவரும் சனி,ஞாயிறு விடுமுறை நாட்களில் நடத்த ஆரம்பித்தனர்.இன்றைக்கு
அவரது இணையரும் இல்லாத நிலையில்.தனது பணி ஓய்வுக்குப் பின்
தொடர்ச்சியாக இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை திரு சோம. நாகலிங்கம்
சார் அவர்கள் செய்துவருகின்றார்.என்னைப் பொறுத்த அளவில் ”கல்விக்காகப் பணி
செய்பவர்களே மிகப்பெரும் மனிதர்கள் “இந்த அறக்கட்டளை பற்றி அறிந்துகொள்ள https://www.nikhilfoundation.co.in/index.php
இந்த அறக்கட்டளை பற்றி மேலே குறிப்பிட்ட வெப்சைட்டில் சென்று
பார்த்தால் முழுமையாக அந்த அறக்கட்டளை பற்றிப் புரிந்துகொள்ளமுடியும்.மிகப்பெரும்
பணி,போற்றவேண்டிய பணி.
26.11.2025 புதன்கிழமை சாப்டூரில் நடைபெற்ற நிகழ்வில்
கலந்துகொண்ட மாணவ மாணவிகள் ,மாலையில் மிக மகிழ்ச்சியாக
பின்னோட்டம் அளித்தனர்.அவர்களின் உற்சாகம் அவ்வளவு பெரிய
மகிழ்ச்சியை அளித்தது. இதுவரை 3
இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு
இந்தப் பயிற்சியை அளித்துள்ளனர்.
முழு நாளும் சாப்டூர் அரசுப்பள்ளியில் இருந்தது மிக மகிழ்வான நாளாக இந்த நாள்
எனக்கு அமைந்தது.என்னோடு எனது மகன் சிறப்பு பி.எட். முடித்திருக்கும்
சொ.நே.அன்புமணியும் வந்து கலந்து
கொண்ட்து மேலும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
சிறப்பு பயிற்சியாளராக திரு இராமூர்த்தி அவர்கள் நிகழ்வினை
முழுமையாக ஒருங்கிணைத்தார்.,மற்றும் பயிற்சி கொடுப்பவர்களாக திரு
எஸ்.பி.குமரகுருபரன், திரு வேல்முருகன்,திரு மாரீஸ்வரன், திரு ப்ரீத்தா,திரு சுகுமாறன்,திரு நந்தினி
மிகச்சிறப்பாக பயிற்சி கொடுத்தார்கள்.
...
சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு க.சுந்தரராஜ்
M.Sc,M.Phill.,B.Ed அவர்களும் உதவித் தலைமையாசிரியர் திரு சு.தமிழிரசன் M.Sc.,B.Ed
அவர்களும் மற்றும் அத்தனை ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சியினை திரு சோம்.நாகலிங்கம் அவர்கள் நகைச்சுவையோடும்
வாழ்வியல் எதார்த்த நிகழ்வுகளோடும் இணைத்து அருமையாக நட்த்தினார். இன்னும் இந்த அரசுப்பள்ளி
மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சிகளைக் கொடுக்க நான் முயற்சிகள் எடுக்கவேண்டும்.தலைமை
ஆசிரியரும்,தமிழாசிரியரும் நூலகத்தைக் காண்பித்தனர்.அருமையான புத்தகங்களை தமிழ்நாடு
அரசு அளித்திருக்கிறது.அதைப் பள்ளிக் குழந்தைகள் நன்றாகப் பயன்படுத்துகிறார்கள்
என்பதும் மகிழ்ச்சி அளித்தது.


10 comments:
தான் படித்த பள்ளியில் நடு நாயகனாக இருந்து இத்தகைய நிகழ்ச்சியை ஏற்படுத்தி சாப்டூர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த உன்னை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. இத்தகைய பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் நணபா💐🌹🌺🌸🌷🌼🪷
நன்றி நண்பா...நம்முடைய பகுதி அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகள் மிகவும் தேவைப்படுகிறது.பின்னூட்டத்திற்கு மகிழ்ச்சி.
மிக சிறப்பான பணி நண்பா
இன்றைய கால கட்டத்தில் நிச்சயம் இந்த நிகழ்வை அனைத்து பள்ளிகளிலும் நடத்த வேண்டும்
பாராட்டுகள்
நன்றி நண்பரே..பெயர் இல்லை...
வாழ்த்துக்கள் அண்ணே தங்களுடைய சிறப்பான பணிக்கு
நன்றி சுரேசு...
சிறப்பான முன்னெடுப்பு சார், நமது அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த நேரத்தில் மிகவும் தேவையான ஒரு வழிகாட்டல் நிகழ்ச்சி. இது போன்ற உங்களின் பணி தொடர்ந்து நிகழட்டும்.
நன்றி இளைய நண்பரே...அரசியலை எல்லாம் தாண்டி சில வேலைகள் அரசுப்பள்ளிக்கு நாமெல்லாம் இணைந்து செய்யவேண்டி இருக்கிறது...வாருங்கள்...
அருமை அய்யா தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துகள்
நன்றி ...
Post a Comment