Friday, 5 April 2024

ஆசிரிய வாழ்வினிது...கலகல வகுப்பறை சிவா

 

சங்கப் பலகை

நூல் அறிமுகம்

நூலின் தலைப்பு ஆசிரிய வாழ்வினிது !

நூல் ஆசிரியர் கலகல வகுப்பறை சிவா

வெளியீடு புக்ஸ் பார் சில்ரன்,சென்னை-18

முதல் பதிப்பு அக்டோபர் 2021 ,63 பக்கங்கள் விலை ரூ. 60.

கலகல வகுப்பறை சிவா அவர்கள் எழுதியிருக்க கூடிய ஆசிரிய வாழ்வினிது!  என்னும் இந்த நூல்  ஒரு ஆசிரியருடைய  பணிக்காலத்தில் ஆசிரியர் மாணவர் உறவுகளில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை எடுத்துக்காட்டக் கூடிய ஒரு  நூல்.. பள்ளிக்கூடத்திற்குள்ளும்  வெளியிலும் ,மாணவர், ஆசிரியர், பெற்றோர் உடனான சில உரையாடலின் தொகுப்பே இந்த நூல் .இன்றைய சூழலுக்கு மிகத்தேவையான ஒரு  நூலாக எனக்குப் படுகிறது..

“இச்சிறு நூலில் உள்ள கட்டுரைகளை வாசிப்பவர்கள், தங்கள் மாணவர்கள் அல்லது  ஆசிரியர்கள் பற்றிய மலரும் நினைவுகளில் மூழ்கினால் அதுவே எனக்கு மகிழ்ச்சி …என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வகுப்பறைகளுக்கும் பேரன்பின் நன்றிகள் என்று புத்தகத்தின் தொடக்கத்தில் இந்த நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

என்னுடைய  அம்மாவுக்கு வேலை கிடைத்துவிட்டது என்று குதூகலிக்கிறான்  ஒரு மாணவன்., அவனிடம் “ என்ன வேலை” என்று கேட்கிறார் இவர் . “கூட்டும் வேலை” என்று சொல்கின்றான் , அதற்கு என்ன சம்பளம் என்று கேட்டால், மாதம் 2000 ரூபாய்  என்று சொல்கின்றான் அந்த மாணவன். .” “ஏறத்தாழ எனது ஒரு நாள் சம்பளம் ,ஒரு குடும்பத்தின் மாத வருமானம் அதைக் கொண்டு எங்கள் கஷ்டமெல்லாம் தீரப் போகிறது என்று ஒரு குழந்தை குதூகலிக்கிறது தொடர்ந்த எண்ணங்கள் மனதுள்  பாரமாயின “ என்று குறிப்பிடுகின்றார்.ஒரு நல்ல புத்தகம் என்பது வாசிக்கும்போது நமக்கும் பல நினைவுகளைக் கொண்டு வந்து கொடுக்கவேண்டும்.மூளை உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்குமான வேறுபாடு,மரியாதை,ஊதியம் என்று பல்வேறு புள்ளிகளை இணைக்கும் கட்டுரையாக இந்தக் கட்டுரை இருக்கிறது.

ஓர் ஆசிரியர் மேல் ஒரு மாணவன் வைத்திருக்கும் உச்சபட்ச மதிப்பு என்பது தனது துன்பங்களை இவரிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கும்  நினைப்பு..ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் மெல்ல,மெல்ல இவரின்  அருகில் வருவதும் தயங்கி தயங்கி ஏதோ சொல்ல வரும் பொழுது, பக்கத்தில் இருக்கும் ஆசிரியர்கள் ஏன் இவ்வளவு  நெருக்கமாக வருகிறாய் என்று திட்டுவதும்,அதையும் தாண்டி பக்கத்தில் நெருங்கிய அந்த மாணவன் “சார் ,எங்கள் அப்பா இறந்துவிட்டார் “ என்று உடைந்த குரலோடு சொன்னபோது தடுத்த ஆசிரியர்களும் கலங்கி நிற்க, “ அவன் கண்களில்  வழிந்த நீர் என் கண்களில் நிறைந்து நின்றது. எத்தனை சூழல்கள், எத்தனை மனநிலைகள், பாடம் சொல்லித் தர மட்டுமா பள்ளி ?குழந்தைகளின் குரல்களை கேட்கும் காதுகளை பள்ளிகள் எங்கும் நிறைக்க வேண்டும் “ என்று குறிப்பிடுகின்றார். வாசிக்கும்போது நமக்கும்கூட மனம் கனக்கிறது. குழந்தைகளில் குரல்களை கேட்கும் காதுகளை பள்ளிகளுக்குள் எப்படி உருவாக்குவது?அதனை எப்படி வளர்த்தெடுப்பது? ..பதில்களை நாம்தான் தேடவேண்டும்.

தெருவில் பார்த்துவிட்டு ஒதுங்கி ஒதுங்கி போகும் ஒரு மாணவன் பக்கத்தில் நெருங்கும் பொழுது விர்ரென்று பார்க்காமல்  சென்று விடுகிறான் சரி என்று சொல்லி அவனை விட்டு விலகி நடக்கும் பொழுது அருகில் வந்து பேசுகிறான் . “இந்தக் கடைக்கு அம்மா சாப்பிட்ட இலை எடுக்க வருவாங்க இன்னைக்கு நான் வந்தேன் கடைக்காரர் ஒரு பொருள் வாங்கிட்டு வரச் சொன்னாரு உதவி கேட்டா செய்யணும் இல்ல ,அதான் நான் வாங்கிட்டு வந்தேன் திடீர்னு உங்கள பார்த்ததும் ஏதோ ஒரு மாதிரி ஆயிடுச்சு அதான்  நிற்காமல் போய்விட்டேன் தப்பா நினைச்சுக்காதீங்க “ என்று அந்த மாணவன் சொல்கின்றான்.அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் எத்தகைய சூழலில் பள்ளிக்கு வருகிறார்கள் என்பதை உணர்த்துவதாக இந்தக் கட்டுரை இருக்கிறது.

இவரிடம்  படித்த மாணவன், ராஜா, திருநங்கையாக மாறி அவனுக்கு உரிய வாழ்க்கையை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான்.அவனி(ளி)டம் தொடர்ந்து பேச முயற்சிக்கின்றார். பிளஸ் டூ படித்துக்கொண்டிருக்கிறவன் ராஜா. பிளஸ் டூ முடித்துவிட்டு போ ,அதற்குப் பின் உனது விருப்பப்படி இரு என்று போனில் சொல்கின்றார். “ நான் வரவில்லை”  என்று சொல்லி ராஜா தொடர்பைத் துண்டித்துவிடுகின்றான். புரிந்து கொள்ளாத குடும்பம், கேலி பேசியே கொள்ளும் சமூகம், இதற்கு இடையில் பள்ளிக்கு வந்து செல்லும் ராஜா திடீரென நின்று கொள்வதும், அதற்குப்பின் அவனை அழைத்து வர செய்த முயற்சிகள் பயன் அளிக்காமல் போனது பற்றியுமான  ‘ வாழ்க்கைத் தேர்வு’ என்னும் இந்தக் கட்டுரை நிரம்பவே யோசிக்க வைக்கின்றது..

 “ சமூக ஆசிரியர்”என்று ஒரு கட்டுரை இருக்கிறது ஓடி ஓடி உதவும் தூத்துக்குடியைச் சார்ந்த டேவிட் என்பவரைப் பற்றிய கட்டுரை.அவர் இவரது பள்ளியில் ,தான் செல்லும் வகுப்புகளான 9,10 வகுப்பு மாணவர்களிடம் டேவிட்டைப் பேச வைக்கின்றார்.டேவிட் பேசுகின்றார்.”தனது படிப்பைப்  பதினொன்றாம் வகுப்பிற்குப் பின் தொடர இயலாத காரணம், படிப்பின் மீதான ஆசையே மற்றவர்களை படிக்க வைப்பதாக மாறியது என்று பல செய்திகளை மாணவருக்கு சொன்னார் “ என்று அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.தனக்கு என்ன கிடைக்கும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் மாணவர்களின் கல்விக்கு உதவும் எவரும் மனதில் நிற்கிறார்கள்.மீனவரான அவரிடம் மாணவர்கள் விதம் விதமாகக் கேள்வி கேட்கிறார்கள்.” கடலில் எப்படி எல்லை தெரியும்?,புயலில் சிக்கிய அனுபவம் உண்டா?கடலுக்குள் சென்று மீன் பிடிப்பதில் பெண்கள் ஈடுபடுகிறார்களா?உங்களுக்குப் பிடித்த பாடம் கணக்கு என்று சொன்னீங்க.அது எப்படி பிடிச்ச பாடமாக ஆனது?புத்தக வாசிப்பில் எப்படி ஆர்வம் வந்தத்? மத்தவங்களைப் படிக்கவைக்க காரணம் என்ன?”போன்ற கேள்விகளுக்குப் பதிலோடு இறையன்பு எழுதிய புத்தகம்,சங்கு என்று பரிசுகளும் கிடைத்தன என்று குறிப்பிடுகிறார்.

‘தக்காளி செந்தில் ‘ என்னும் ஒரு கட்டுரை செந்தில் என்பவரைப் பேசுகிறது. அவனது செல்லப்பெயர் ‘தக்காளி’,உணமைப் பெயர்  செந்தில் என்று விவரிக்கும் இந்தக் கட்டுரை முதலில் அவன் என்று சொல்லி ஆரம்பிக்கிறது  பாதிக்குப்பின்  அவர்  என்று மாறுகிறது தக்காளி என்று புனை பெயரால் அழைக்கப்பட்ட அந்த மாணவனுடைய  உடல் கோளாறு, அந்த உடல் கோளாறை மீறி இவரது அணுகுமுறையால் அவன் வெற்றிபெறுவது,  இப்படி வெற்றி பெற்ற பின்பு  தனது பகுதியில் படிக்கும் பல மாணவ,மாணவியர்களுக்கு அவன் உதவி செய்வது  என்று விவரிக்கின்றது

ஒரு பெண் திடீரென்று  இவரது காலில் விழுகிறார் .அவள் யார் என்று இவருக்குத் தெரியவில்லை.  நீ  யார் என்று இவர் கேட்க “ சார் ,நான் இன்ஜினியரிங் படிக்கிறேன் செந்தில் அண்ணனால்தான்  நான் படிச்சேன் நீங்க அவரோட சார் உங்களால்தான் அவர் படித்தேன் என்று எங்களிடம் சொல்வார்.அதனால் உங்கள் காலில் விழுந்தேன் “ என்று சொல்லும்  நிகழ்வு வாசிக்கும்  நம்மையும் கூட சிலிர்க்க வைக்கிறது

“ செல்பேசி ஒலித்ததில் திடுக்கிட்டு எழுந்தேன்.அழைப்பு நின்றிருந்தது.யாரென்று பார்த்தேன்.மாணவனின் எண்.நேரம் இரவு மூன்று மணி “ என்று ஆரம்பிக்கும் ‘அப்பா பிள்ளை ‘ என்னும் கட்டுரை அப்பா,அம்மா சண்டைக்கு இடையில் மாட்டிக்கொள்ளும் மாணவனைப் பற்றிப் பேசுகிறது.அப்பாவோடு இருக்கிறான் என்றாலும் அவனுக்கு அதில் மனம் ஒப்பவில்லை.’அப்பாவும் வேணாம்,அம்மாவும் வேணாம், நான் தனியாக இருந்துகொள்கிறேன் ‘ என்று சொல்லும் மாணவனை இவர் அணுகும் விதமும் ஆற்றுப்படுத்தும் விதமும் சிறப்பாக இருக்கிறது.”பகல் பொழுதில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடமாகவும், ஆறுதலான இடமாகவும் பள்ளி இருக்கிறது அதை முழுமையாக்குவதில் நமது பங்கு முக்கியமானது .குழந்தைகளின் சேட்டை, கற்றலில் ஆர்வமின்மை ஆகியவற்றிற்குப்  பின்னால் என்ன காரணம் இருக்கிறது? என்பதை அறிவதும் எனது கடமை என்று மனதில் தோன்றியது “ என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். தன்னை ஒத்த அத்தனை ஆசிரியப்பெருமக்களுக்கும் கூறுகின்ற அறிவுரையாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

 

“கடளானியான அப்பா ஊரை விட்டு ஓடிப்போய்விட ‘ துன்பப்படும் மாணவன்,அவனது அம்மா பற்றிய விவரிக்கின்ற கட்டுரை ‘ காலம் காலமாக ‘ என்னும் கட்டுரை.பொருளியல் சார்ந்து நிகழும் துன்பங்களை,அதனால் சுமைதாங்கிகளாக மாறிப்போகும் அம்மாக்களைப் பற்றி இந்தக் கட்டுரை பேசுகிறது. “அப்பா எங்கே?” என்றேன்.அழத்தொடங்கினான்.கண்ணீரின் கதைகளை உணரும் சக்தியற்றுக் கலங்கி நின்றேன்.எனக்குப் பேச்சு வரும்வரை அவன் முதுகில் தட்டிக்கொண்டிருந்தேன் “ என்று குறிப்பிடுகின்றார். முடிவில் “வார்த்தைகளைத் தவிர வேறு என்ன தந்து விட முடியும் ?சங்க காலத்தில் இருந்தே அதே நிலை தான் “ என்று குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டில் கட்டாயமாக இந்திய ஒன்றிய அரசால் திணிக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வு ,மாணவ,மாணவிகளை அறிவியல் பாடத்தைப் படிக்காமலே தவிர்க்கச்செய்யும் எதார்த்தத்தை ‘அறிவியல் படிச்சா கஷ்டம் ‘ என்னும்  கட்டுரையில் பேசுகின்றார். “எங்கள் பள்ளியிலேயே காமர்ஸ் பிரிவில் 100 பேர் அறிவியல் பிரிவில் 20 பேர் நிறைய மதிப்பெண்கள் எடுத்தவர்களையும் பயப்பட வைக்கிறது நீட் அறிவியல் பாடங்கள் புறக்கணிக்கப்படுவது எதிர்காலத்தில் பேராபத்துகளை உண்டாக்கும் “ என்று கள நிலவரத்தை கட்டுரையாகப் பதிவு செய்திருக்கிறார்.

ஒரு ஆசிரியராக , இந்த புத்தகத்தில் நாட்குறிப்பு மாணவர்கள் எழுதச் செய்யும் வழிமுறைகள் பற்றி பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றார் மாணவ,மாணவிகள் நாட்குறிப்பு எழுதுவதன் பலனை,அதனால் ஏற்பட்ட விளைவுகளை எல்லாம் விரிவாக எழுதியிருக்கின்றார். நான் இதுவரை படித்த கல்வி சம்பந்தப்பட்ட நூல்களில் இல்லாத ஒரு வழிமுறை ,இந்த நாட்குறிப்பு எழுதுவது.இவரது எழுத்துக்களின் மூலம் மிக நேர்மறையான அணுகுமுறை , நாட்குறிப்பு எழுதுவது என்று தோன்றுகிறது.

கூட்டாஞ்சோறு, மகள்களைப் பெற்ற அப்பா, நீ …சரி ,பஞ்சாயத்து, படிக்கச் சாப்பிடு, என் ஆசான் ஒரு  தேவதை போன்ற கட்டுரைகளும் மனதில்  நிற்கின்றன.

ஒரு மாணவனின் நிலையில் தன்னை பொருத்தி,அதற்கேற்றார்ப்போல் பல்வேறு செயல்பாடுகளைப் பேசும் இந்தச்சிறிய நூல் ஒரு ஆசிரியரின் வாழ்க்கை எவ்வளவு இனிதானது,மகிழ்ச்சியானது,உற்சாகமானது, உதவுக்கூடியது என்பதை வெறும் பாடமாக மட்டும் சொல்லாமல், வாழ்க்கையில் ,வகுப்பறையில் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டுச்சொல்வதால் இந்த நூலும் கூட வாசிக்க,வாசிக்க இனிக்கிறது














                                                                






நன்றி: வல்லினச்சிறகுகள்- மார்ச் 2024 அச்சு இதழ்.








 

Wednesday, 3 April 2024

ரசாயன மனிதர்கள்… – முனைவர் வா.நேரு

ரசாயன மனிதர்கள்… – முனைவர் வா.நேரு


 ‘‘மேற்கு ஜப்பானில் உள்ள புகுயாமா நகரில் ஒரு பூனையைக் கண்டு அஞ்ச வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அந்தப் பூனை ஏதும் செய்துவிடுமோ என்ற பயம் இல்லை. அந்தப் பூனை மீது ஒட்டியிருக்கும் ரசாயனம்தான்.

ஒரு தொழிற்சாலையின் நச்சுத்தன்மை மிக்க ரசாயனம் இருந்த தொட்டியில் இந்தப் பூனை விழுந்தது. அதன்பின் அது அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அதனிடமிருந்து விலகி இருக்குமாறு அப்பகுதியின் மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
புகுயாமாவில் உள்ள அதிகாரிகள் பொதுமக்களை இந்தப் பூனையிடம் இருந்து விலகி இருக்குமாறும், அது எங்கேனும் தென்பட்டால் காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஹெக்ஸாவலண்ட் குரோமியம் என்று அழைக்கப்படும் இந்த ரசாயனம்,ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறத்திலானது. மிக அதிக அமிலத்தன்மை கொண்டது. புற்று நோயை உண்டாக்கக் கூடியது. இப்படிப்பட்ட ரசாயனத்தில்தான் இந்தப் பூனை விழுந்துள்ளது.

ஒரு பூனையின் காலில் ஒட்டிக்கொண்ட ரசாயனத்தால் அந்த நகரமே பயப்படுகிறது.அதுபோல மதவெறியென்னும் ரசாயனத்தை மூளையில் அப்பிக்கொண்ட மனிதர்களைப் பார்த்து மனித நேயமுள்ள அனைவரும் அஞ்சத்தான் வேண்டியிருக்கிறது.எப்படி பூனையின் கால்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் ரசாயனம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ என அஞ்சுவதைப் போலத்தான் மதவெறி ரசாயன மனிதர்களையும் பார்த்து நாம் அஞ்சவேண்டியிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்த மதவெறி ரசாயன மனிதர்களால் ஏற்பட்டிருக்கும் கொடுமைகளும் கொல்லப்பட்டவர்களின் நினைவுகளும் நம்மை அலைக்கழிக்கிறது. பூனையின் கால்களில் கொடிய நஞ்சு படர்ந்து விட்டது என்பதும், அது எங்கே எங்கே எப்படி நகர்கிறது என்பதும் ஜப்பான் நாட்டின் புகுயாமா நகரின் கண்காணிப்புக் கேமிராவில் தெரிகிறது. ஆனால், மூளைக்குள் மதவெறி ரசாயனத்தை ஏற்றுக்கொண்ட மனிதர்களை எளிதாக நம்மால் அடையாளம் காண முடியவில்லை. வெவ்வேறு முகமூடிகளோடு வெவ்வேறு பெயர்களில் வருகிறார்கள். கொலை பாதகச்செயல்களைச் செய்கிறார்கள்.
ஹெக்ஸாவலண்ட் குரோமியம் என்னும் ரசாயனம் கொடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்பதால்தான், அந்த ரசாயனம் பூனையின் கால்களில் ஒட்டிக் கொண்டதால், புகுயாமா நகரத்து மக்கள் பயப்படுகிறார்கள். தங்கள் கண் பார்வை போய்விடுமோ, சுவாசப்பிரச்சனை வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். ஆனால் மதம் என்பது எவ்வளவு தீங்கானது, எவ்வளவு பிரச்சனைகளை, பாதிப்புகளைத் தரக்கூடியது என்பதைப் பல மனிதர்கள்
அறியாததால்தான் தங்கள் மூளைகளில் அதனை ஏற்றிக் கொண்டு அலைகின்றார்கள்.

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள்தான் இந்த மதவெறி ரசாயன மனிதர்களை மாற்றும் மாமருந்து, மதம் என்னும் கொடிய ரசாயனத்திலிருந்து மனிதர்களை நீக்கக்கூடிய தொற்று நோய் நீக்கி மருந்து. மதம் எவ்வளவு கொடியது என்பதைத் தனது வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் அவர்கள் விளக்கினார்.

”மதம் என்பது மனிதனை மடையனாக்கவே பயன்படுகிறது.மதத்தை ஏற்படுத்தியதன் நோக்கமும் அதுவே. மதத்தால் மனிதனுக்கு ஏதாவது பயன் உண்டா? ஒருவனையாவது மதமும் கடவுளும் யோக்கியனாக்கி இருக்கிறதா?
மனிதரிடையே மதம் ஒழுக்கத்தைப் புகுத்தியிருக்கிறதா? நாணயத்தைப் புகுத்தியிருக்கிறதா?. மனிதனை மனிதன் அடக்கியாளவும், பேதப் படுத்தவும், ஏமாற்றவும், முட்டாளாக்கவுமே மதம் பயன்பட்டு வருகிறது“ என்றார் தந்தை பெரியார்.

(‘இவர்தான் பெரியார்’
_ மஞ்சை வசந்தன், பக்கம் 156).

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மட்டுமல்ல தன்னுடைய வாழ்க்கைக்குப் பின்னும் மத நஞ்சை மனிதர்கள் மனங்களில் இருந்து அகற்றுவதற்கு அறக்கட்டளையையும் அதை நிறைவேற்றும் தலைவர்களாக அன்னை மணியம்மையார் அவர்களையும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களையும் விட்டுச் சென்றார்.தொடர்ச்சியான பரப்புரைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
மனிதர்கள் மனதில் கொடிய வெறுப்பு நஞ்சினை மதங்கள் ஏற்றுகின்றன. மனிதத்தைக் கொல்லும் கொடிய மத நஞ்சினை மூளையில்
ஏற்றியிருப்பவர்கள் விலங்குகளை விட மோசமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் நடந்துகொள்கிறார்கள் என்பது நமக்கு உறுதியாகத் தெரிகிறது. நாம் மட்டுமல்ல, நம்மைச்சுற்றி இருப்பவர்களிடமும் இந்த நஞ்சு மூளைக் காரர்களைப் பற்றிச்சொல்லி வைப்போம்.
அசாதாரணமாக அதீத பக்தி வேடமிட்டு வரும் நச்சு மூளைக்காரர்களை நம்ப வேண்டாம் என்று பெரியாரிஸ்டுகளான நாம் பொது மக்களிடம் வலியுறுத்தி விழிப்பூட்டுவோம். கவனமாக இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

உண்மை மாதம் இருமுறை இதழ் ஏப்ரல் 1-15


Thursday, 21 March 2024

ஆடம்பரத் திருமணம்…ஓர் ஈரோட்டுப் பார்வை ! – முனைவர் வா.நேரு

 

                                                                   


ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்காக ஓர் ஒப்பந்தம் தேவைப்படுகிறது. சுயமரியாதைத் திருமணங்களில் மணமக்கள் ஏற்கும் உறுதிமொழியைப் போல ‘வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் சமபங்கு வகிக்கும் உற்ற நண்பர்களாய், என்னிடமிருந்து நீங்கள் என்னென்ன உரிமைகளை எதிர்பார்க்கிறீர்களோ, அதே உரிமைகளை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்க உரிமை உண்டு என்னும் ஒப்பந்தத்தின் பேரில் இந்த மலர் மாலையினைத் தங்களுக்கு அணிவிக்கிறேன்’ என்று சொல்வதைப் போல வாழ்வில் இணையும் ஓர் ஆணும் பெண்ணும் உற்ற நண்பர்களாய் வாழ்வதற்கு இந்தத் திருமண ஒப்பந்தம் தேவைப்படுகிறது, அந்த ஒப்பந்தத்தைச் செய்து கொள்கிறார்கள் அல்லது செய்து வைக்கப்படுகிறார்கள் என்ற வகையில் நம்மைச்சுற்றி திருமணங்கள் நடைபெறுகின்றன.

எந்த மாநிலத்திலும் இல்லாத தனித்தன்மையான சுயமரியாதைத் திருமண முறையைத் தமிழ்நாட்டில், அன்றைய சென்னை மாகாணத்தில் 1928இல் அறிமுகப்படுத்திய தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதைத் திருமண மேடைகளில் எல்லாம் திருமணத்தில் சிக்கனத்தின் தேவையை மிக அதிக அளவில் வற்புறுத்தினார். அவரைத் தொடர்ந்து திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பு ஏற்ற அன்னை மணியம்மையாரும் அவருக்குப் பின்னால் திராவிடர் கழகத்தை வழி நடத்தி வரும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் தாங்கள் நடத்தி வைக்கும் சுயமரியாதைத் திருமண நிகழ்வுகளில் எல்லாம் சிக்கனமாகத் திருமணத்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்கள்.அதன்படியே பல திராவிடர் கழகத்தோழர்கள் சுயமரியாதைத் திருமண நிலையத்தில், திராவிடர் கழகப் பொதுக்கூட்ட மேடைகளிலும், மாநாட்டு மேடைகளிலும் தங்கள் திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள், நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இதற்கு மாறான புராண அடிப்படையிலான திருமணங்கள் சில மிகப்பெரும் செலவோடு நடத்தப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.அண்மையில் ரிலையன்ஸ் நிறுவனர் முகேசு அம்பானி-நீடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் வாரிசான ராதிகா மெர்செண்டுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் 1, 2024 முதல் மார்ச் 3, 2024 வரை நடைபெற்றது.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அம்பானியின் சொந்த ஊரில் கட்டமைக்கப்பட்ட ரிலையன்ஸ் பசுமை வளாகத்தில் நடைபெற்ற இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆன செலவு ரூ.1000 கோடியைத் தாண்டியிருக்கும் எனப் பத்திரிகைகள் எழுதியுள்ளன. முதல் நாளில் உலகப் புகழ்பெற்ற பாடகி ரிஹன்னாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் மணமகனான ஆனந்த் அம்பானி கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு சுமார் ரூ. 14 கோடி எனவும் அதனைப் பார்த்து முகநூல் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரெசில்லாசான் ஆகியோர் வியப்படைந்து விசாரித்ததாகவும் ‘தினமணி ‘நாளிதழ் எழுதுகிறது. உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள் பலர் கலந்து கொண்டதாகவும், நடிகைகள், நடிகர்கள், தொழில் அதிபர்கள் மட்டுமல்ல; ஜக்கி வாசுதேவ் போன்ற கார்பரேட் சாமியார்களும் கலந்து கொண்டதாக பத்திரிகைச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

பொது மக்களுக்கு, பணக்காரர் வீட்டுத் திருமணம். அவரிடம் பணம் இருக்கிறது, அவர் 1000 கோடி என்ன? 10000 கோடி கூடச் செலவழித்து விட்டுப்போகட்டும், அதனால் நமக்கு என்ன? என்று தோன்றலாம். இதைப் பற்றி நாம் எழுதவேண்டிய,, பேசவேண்டிய தேவை என்ன என்று கூடத் தோன்றலாம். திருமணத்தில் சிக்கனம் வேண்டும் என்பதற்கு மாற்றான திருமணம் என்பது மட்டுமல்ல, நம் ஊரில் மிகுந்த அளவு கடன் வாங்கி வைத்திருக்கும் ஓர் ஆள் மிக ஆடம்பரமாகத் தன் மகனுக்குத் திருமணம் செய்தால் எப்படிச் சுட்டிக் காட்டுவோமோ அப்படிச் சுட்டிக் காட்டப்பட வேண்டிய திருமணமும் கூட இந்தத் திருமணமும் வரவேற்பும்..
ஏனெனில், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மட்டுமல்ல முகேசு அம்பானி, இந்தியாவின் வங்கிகளில், பல நாட்டு வங்கிகளில் மிகப்பெரும் கடன்களை வாங்கி வைத்திருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய கடன்காரரும் முகேசு அம்பானி ஆவார்.” கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய சிண்டிகேட் கடன் வாங்கியவர் என்ற பெயரை உருவாக்கி இருக்கிறார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. வெவ்வேறு வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து இரண்டு தவணைகளில் அய்ந்து பில்லியன் டாலர்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளிநாட்டு நாணய கடன்கள் வடிவில் பெற்றுள்ளது. சிண்டிகேட் கடன் என்பது வங்கிகள் நிதி நிறுவனங்களின் குழுமத்தில் இருந்து வாங்கப்படும் கடன் ஆகும்” ஏப்ரல் 6, 2023 பத்திரிகை செய்தி இது.

நமது நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் முகேசு அம்பானி பெற்றிருக்கும் கடன்கள் எல்லாம் ஏழை எளிய இந்திய மக்கள் தங்கள் சேமிப்புகளாகப் போட்டு வைத்திருந்த பணம். ஊதாரித்தனமாக பல ஆயிரம் கோடிகளைத் திருமண வரவேற்பு என்ற பெயரில் செலவழிக்கும் இந்த முகேசு அம்பானி போன்றவர்களின் பல இலட்சம் கோடிக் கடன்களை ஒன்றிய இந்திய அரசாங்கம் தள்ளுபடி செய்திருக்கிறது. அதனால் பல பொதுத்துறை வங்கி நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன.

இந்த ஆடம்பரத் திருமண நிகழ்விற்காக குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகரில் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக சில நாட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் திருமண வரவேற்பு நிகழ்வுக்காக நிகழ்த்தப்பட்ட சட்ட விதிமீறல்கள், கோயில்களின் ஆகம விதிமீறல்கள் பற்றியெல்லாம் செய்திகள் நிறைய வருகின்றன. ஓர் ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் இணைவதற்காக நடத்தப்படும் இந்த விழாவிற்காக இத்தனை விதிமீறல்களும் இத்தனை ஆடம்பரங்களும் தேவைதானா? என்னும் கேள்வியை ஊடகங்கள்,பத்திரிகைகள் எழுப்பவில்லை. மாறாக பக்கம் பக்கமாக அதனை விவரித்து எழுதிக்கொண்டும் புகழ்ந்து பேசிக்கொண்டும் இருக்கும் கொடுமையைப் பார்க்கின்றோம்.

“சுமார் 2,500 வகையான உணவுகள் பரிமாறப்பட்டனவாம்! இதற்காக மட்டும் சுமார் 130 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார் அம்பானி. இந்தியாவில் மட்டும் இன்றி சர்வதேச அளவில் அம்பானி இல்லத் திருமண விழா வைரல் ஆனது. சமூக வலைத்தளங்களில் திருமண விழா குறித்த பதிவுகளும் புகைப்படங்களும் டிரெண்டிங்கில் இருந்தன.

ஜாம்நகரில் உற்சாகமாக நடைபெற்ற இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மட்டும் முகேஷ் அம்பானி ரூபாய் 1,250 கோடி செல்வு செய்துள்ளாராம். திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியே இவ்வளவு பிரமாண்டமாக நடைபெற்றது என்றால், திருமணத்தை எப்படி நடத்தப் போகிறாரோ?.. என நெட்டிசன்கள் இப்போதே வியந்து பார்த்து வருகின்றனராம்.” இது ஒரு பத்திரிகையில் வந்த செய்தி.

இந்தியா போன்ற சமதர்ம சமத்துவமற்ற சமுதாயத்தில் நிகழும் இந்த மாதிரியான திருமண நிகழ்வுகள் மக்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தவேண்டும் n.

நன்றி: உண்மை  மார்ச்-16-31,2024.


Friday, 15 March 2024

அன்னையே! உங்கள் வழியில்....

 


அன்னையே! உங்கள் வழியில்



இடியாய் முழங்குகிறார்
எரிமலையாய்ப் பொங்குகிறார்…
தமிழர்களின் விடிவுக்கு
தேவை இவர் என உணர்ந்து
தன் வாழ்வைப் பலிகொடுத்து
தந்தை பெரியாரின் வாழ்க்கையை
நீட்டித்தந்த எங்கள் அன்னையே!

நேற்று வரை உடன் இருந்தோர்
அவதூறுகளை அள்ளிவீசியபோதும்
அமைதிக் கடலாய்
இடதுகையால் தள்ளிவிட்டுக்
கடந்து செல்வதுபோல்
அவர்… இவர்… என எல்லோரையும்
கடந்து சென்ற எங்கள் தாயே!

அய்யாவின் சொத்துகளை
இவர் பாதுகாப்பாரா? என
அய்யமுற்ற அனைவருமே
மூக்கில் விரலை வைத்து
வியக்கும் வண்ணம்
அய்யாவின் அறக்கட்டளைச்
சொத்துக்களை பன்மடங்காக்கி
தனக்குக் கிடைத்த பரம்பரைச்
சொத்துகளையும்
அறக்கட்டளையாக்கி
பொதுமக்களுக்கு பயன்பெறும்
வண்ணம் தந்து சென்ற
எங்கள் தாயே!
அன்னை மணியம்மையாரே!

அறிவிலிகள் சிலர்..
யாரால் பலன்பெற்றோம்
என அறியாத…
படித்த
தற்குறிகள் சிலர்…
அவதூறாய் தங்களை
ஊடகங்களில் பதியும்போது
உள்ளமெலாம் கொதிக்குதம்மா!
உலையில் போட்ட அரிசிபோல
வெந்து நொந்து மனம் வேகுதம்மா..

ஆனாலும்
அவதூறுகளைப் புறந்தள்ளி
அய்யாவின் கொள்கைகளைப்
பரப்பும் வழியைத்
தந்து சென்ற எங்கள் அன்னையே!
தாங்கள் காட்டிய வழியில்
அய்யாவின் கொள்கை பரப்பும்
அய்யா ஆசிரியர் அடிச்சுவட்டில்
நாங்கள் தொடர்கிறோம்..
தந்தை பெரியாரின் பணிமுடிப்போம்.
எதையும் எதிர்பாரா.
அன்னையே ! உங்கள் வழியில்..

முனைவர் வா.நேரு தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

நன்றி : விடுதலை 11.03.2024

Wednesday, 6 March 2024

நிகழ்வும் நினைப்பும் 2024(5) -நட்புத் தமிழ் வட்டம் மதுரை

 

நட்புத் தமிழ் வட்டம் என்னும் ஓர் அருமையான அமைப்பு மதுரையில்.ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் அய்யா புலவர் நா. ஆறுமுகம் அவர்கள் அதன் தலைவராக இருக்கிறார்.தொடர்ச்சியான இலக்கிய நிகழ்வுகள்,கல்லூரிகளுக்குச்சென்று பேச்சுப்போட்டி,கட்டுரைப் போட்டிகள் நடத்துதல், பரிசு அளித்தல் எனத் தொடர்ந்து இயங்கும் இயக்கமாக அந்த நட்புத் தமிழ் வட்டம்,மதுரை இருக்கிறது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை,03.03.2024 உழைக்கும் மகளிர் தினவிழா ,அந்த அமைப்பின் சார்பாக மதுரை கே,புதூரில் உள்ள அல் அமீன் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.நட்புத் தமிழ் வட்டத்தின் செயலாளர் நாவினி நாசர் அனைவரையும் வரவேற்று நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.அத்தோடு நிகழ்வு முழுமைக்கும் அழகான,சிறப்பான இணைப்புரை வழங்கினார்.அய்யா நா.ஆறுமுகம் அவர்கள் தலைமையேற்று,இன்றைய நிலையில் பெண்கள் எப்படி இருக்கிறார்கள்,எப்படி இருக்கவேண்டும்,மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம், அது உலக மகளிர் தினம் என மாற்றப்பட்டது ஏன் என்பது பற்றிக் குறிப்பிட்டு உரையாற்றினார்.காலை 11 மணிக்குத் தொடங்கித் தொடர்ச்சியாக மதியம் 2.30வரை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



பள்ளியில் படிக்கும் மாணவிகள் ,மகளிர் தினத்தைப் பற்றிய தங்கள் எண்ணங்களை அவையில் அழகுற எடுத்துவைத்தனர்.முதலில் செயசிறி கணீர்க்குரலில் வெடிப்பேச்சாய் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.தொடர்ந்து மொழினா,தர்சனி,ச.சபரிசா,மகாலெட்சுமி,இராசராசேசுவரி,தாரணி,வினிதாசிறீ, நிரஞ்சனா என மாணவிகள் ஒளவை,திருக்குறள்,சாதனைப்பெண்கள்,பெண்கள் சொந்தக் காலில் நிற்கவேண்டும்,பெண்கல்வி ஏன் தேவை போன்ற பல்வேறு கருத்துகளைக் குறிப்பிட்டு உரையாற்றினர்.இளையவர்களின் கருத்துகள் காதுக்கு இனிமையாக வந்து சேர்ந்தது. .

அடுத்துப் பல்துறை சார்ந்த மகளிர்கள் பேசினர். மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனையில் ஆப்ரேசன் தியேட்டரில் மேலாளராய் இருக்கும் திருமதி ஆ.அமல கலைச்செல்வி வெகு இயல்பாகப்  பட்டறிவினால் பெற்ற படிப்பினைகளை கூட்டத்திற்குக் கடத்தினார். ஆளுமையான குரல் வளத்தோடு கு..சண்முகப்பிரியா ,தே.ஆனந்தவள்ளி, சி.பொய்யாமொழி, பா.சுமதி,பேரா.கிருஷ்ணவேணி,சி.சரிமிளா,தி.லதா ,ந.இராணி யாஸ்மின் ஆகிய ஆளுமைகள் உரையாற்றினர்.முதல் மேடை என்றார்கள் சிலர், ஆனால் உள்ளக்குமுறல்களை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டார்கள் சிலர்.’சும்மாதானே துவைக்கிறோம்,சும்மாதானே சமைக்கிறோம் …” எனச்சும்மா,சும்மா என்று சர்மிளா சும்மா கூட்டத்தைக் கலக்கிவிட்டார்.சகோதரி தி.லதா உணர்ச்சிபொங்கத் ,தான் கிராமத்தில் வளர்ந்ததையும்,சாமியாடி வீட்டுப் பிள்ளை என்பதையும் தான் ஒரு கருப்புச்சட்டைக்காரரை(சுப.முருகானந்தம்) திருமணம் முடித்து  நன்றாக வாழ்வதையும்,தனது கணவர் தனக்கு எப்படி எல்லாம் உதவியாக இருக்கிறார் என்பதையும் மிகுந்த உருக்கமாகப் பதிவு செய்தார்.இதுதான் என்னுடைய முதல் பொதுமேடைப்பேச்சு என்றார் அவர். ஆசிரியர் ந.இராணி யாஸ்மின் அவர்கள் ,பெண்கள் தாங்கள் இரட்டை வேலை ..வீட்டிலும் பள்ளியிலும் வேலை பார்க்கும் நிலைமையை மிக எதார்த்தமாக எடுத்துரைத்தார்.பேரா.கிருஷ்ணவேணி புதிர்க் கேள்விகளும் பதிலுமாய் அரங்கத்தைக் கலகலப்பு ஊட்டினார்.கேட்க,கேட்க நிறைவான,உளபூர்வமான உரைகளாக இருந்தது மகிழ்ச்சி அளித்தது.

  , பெண் ஆளுமைகள் விருது பேரா.அனார்கலி அவர்களுக்கும் ,பெண்ணிய எழுத்தாளர்,திராவிடர் கழகத்தின் மகளிரணியைச்சார்ந்த தோழர் குடியாத்தம் ந.தேன்மொழி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.வாழ்த்துரையை நானும்,அல் அமீன் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ஷேக் நபி அவர்களும் வழங்கினோம். தலைமை ஆசிரியரின் உரை எதார்த்தமாகவும் மிகச் சிறப்பாகவும் அமைந்தது

நிறைவாகப் பேரா.அனார்கலி அவர்களும் தோழர் ந.தேன்மொழி அவர்களும் ஏற்புரை நிகழ்த்தினர்.விழாவின் நிறைவாக வழக்கறிஞர் ஆசைத்தம்பி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.வரவேற்பாளர்களாக இளம்தோழர்கள் மகிழ்நன்,அமிழ்தன்,இனியன்,பொன்அரீஷ் ஆகியோர் ஓடி ஓடி வரவேற்றனர்.வேலைகள் செய்தனர்.



உரையாளர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.’பெண் ஏன் அடிமையானாள் ?’ என்னும் புத்தகம் விரும்பியவர்களுக்கு வழங்கப்பட்டது.. நட்புத்தமிழ் வட்டத்தின் உறுப்பினர்கள் மட்டுமே மிகப்பெரிய அளவிற்குச் செலவுகள் செய்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் அவர்களின் முயற்சியால் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு இப்போது கிடைக்கிறது.முக நூலில் நேரலையாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நிகழ்வில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் அண்ணன் பாவலர் சுப.முருகானந்தம்,அவரது இணையர் சகோதரி லதா,திராவிடர் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் இரா.லீ.சுரேசு,அவரின் மகள்கள்,தி.மு,.க.பொறுப்பாளர் தோழர் அன்புமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்வுக்கு தலைமை வகித்த அய்யா புலவர் நா.ஆறுமுகம் அவர்கள் நிகழ்வில் அவ்வப்போது அருமையான உரைகளை நிகழ்த்தினார்.அவரின் இணையரோடு வந்திருந்தார்.பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தது  நிகழ்வுக்குச் சிறப்புச் சேர்த்தது.

நிகழ்வு சிறக்க மகாராணி செல்வராசு,அட்சயா சிவகாமேஸ்வரன்,செ.காவ்யா,நிர்மலாதேவி ஆறுமுகம்,வனிதா நாகராசன்,சாந்தி சிறீராம்,மகாலெட்சுமி வரதராஜ்,இராசபீர்த்தி ஆகியோர் உதவியிருக்கின்றனர்.முடிவில் வந்திருந்த அனைவருக்கும் சுவையான உணவும் அளிக்கப்பட்டது.5 வயது சிறுவர்,சிறுமி முதல் 70 வயதைக் கடந்தவர்கள்வரை,எல்லா வயதினரும் துடிப்பாய் இணைந்து வேலை செய்து  நடத்திய கூட்டமாய் ,மிகுந்த நம்பிக்கையைத் தந்த கூட்டமாக இந்தக் கூட்டம் அமைந்தது.மிகுந்த மகிழ்ச்சியை,ஊக்கத்தைத் தந்த நிகழ்வு இது.நட்புத் தமிழ் வட்டம் மென்மேலும் வளரட்டும்.அதன் இலக்கிய சேவைத் தொடரட்டும்.

 

 

Saturday, 2 March 2024

மூளைக்குள் கருவி....முனைவர் வா.நேரு

                          மூளைக்குள் கருவி

                             (முனைவர் வா.நேரு)

உலகம் மாறி இருக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதன் இன்று உயிர் பெற்று வந்தால், இன்றைய உலகம் அவனுக்குப் புரியாது. அவ்வளவு புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகத்தை மாற்றி இருக்கிறது.



1847 மார்ச் 3, தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல் அவர்களின் பிறந்த நாள். 177 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். இன்று செல்பேசியை, தொலைபேசியை உபயோகிக்கும் பலருக்கு இவரின் பெயர் தெரியாது. ஆனால், உலகத்தின் மாற்றத்தில் மிகப்பெரும் பங்கு இவருக்கு இருக்கிறது. அலெக்சாண்டர் கிரகாம் பெல்லின் மனைவிக்குக் காது கேட்காது. அவரின் தாயாருக்கும் காது கேட்காது. காது கேட்காத தனது மனைவி மற்றும் தாயாரின் காரணமாகச் செவிப்புலன் பற்றியும், பேச்சைப் பற்றியும் காது கேட்காமல் இருப்பவர்களை எப்படியாவது கேட்கவைக்க முடியுமா என்பது பற்றியும் தனது வாழ்க்கையின் பெரும்பகுதி நேரத்தைச் செலவு செய்து ஆராய்ச்சிகள் செய்தார். அந்த ஆராய்ச்சியில் தற்செயலாக 1876இல் தொலைபேசியைக் கண்டு பிடித்தார். 1877இல் பெல் என்னும் தொலைபேசி நிறுவனத்தை நிறுவினார். உலகம் முழுவதும் தொலைபேசி நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தார். பல இலட்சம் பேர் அதன் மூலம் வேலை வாய்ப்புப் பெறக் காரணமாக இருந்தார். அதற்கான அடிப்படை ஆராய்ச்சி மனப்பான்மை,அறிவியல் துணை கொண்டு தேடுதல். அலெக்சாண்டர் கிரகாம் பெல் அவர்களின் மூலமாக இன்றைய உலகம் மாறி இருப்பது கண்கூடு.



மருத்துவத்தில் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. சில பத்தாண்டுகளுக்கு முன்பு இதய வால்வுகள் பழுதுபட்டால் மாற்று இல்லை. ஆனால், இன்றைக்கு இதய வால்வுகளை மாற்றும் மருத்துவம் வந்திருக்கிறது. இதய அடைப்புகள் ஏற்பட்டால் ஸ்டென்ட் என்பதன் மூலமாக அந்த அடைப்புகளை எடுத்துவிட்டு, அவர்களை நலமாக வாழவைக்கும் முறை வந்திருக்கிறது. பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் பல இலட்சம் பேரை நலமாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
எத்தனையோ கண்டுபிடிப்புகள்,உறுப்பு மாற்று சிகிச்சைகள் வந்தாலும் மூளையில் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்வதற்கான வழிமுறை மிகக் குறைவாகவே இருந்தது. கடந்த 10,15 ஆண்டுகளில் மூளையைப் பற்றிப் பல ஆராய்ச்சிகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.

ஆனால் பக்கவாதம், வலிப்பு போன்ற நோய்கள் மூளையின் பாதிப்பால், மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுபவை.
அண்மையில் எலான் மஸ்க் என்பவரின் ‘நியூராலிங்க் ஸ்டார்ட்அப்’ பற்றி நிறையச் செய்திகள் வருகின்றன. நியூராலிங்க் என்பது மூளையையும் கணினியையும் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம்(Brain-computer interfaces (BCIs).மூளைக்குள் ஏற்படும் மின்னியல் சமிஞ்கைகளைப் புரிந்து கொண்டு அதனைக் கணினி கொண்டு இயக்குவதாகும். நான் இப்போது மூளையைப் பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்றால் என் மூளைக்கு நான் மூளையைப் பற்றி எழுதவேண்டும் என்ற கட்டளையைக் கொடுக்கிறேன். என் கைகள் சரியாக மூளையின் கட்டளையைப் பின்பற்ற முடிவதால் நான் சிந்திப்பதை இப்போது எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

இன்னொருவர் மூளையைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், அவருக்குப் பக்கவாதம். அவரது மூளை சிந்தனை செய்வதையும், சொல்வதையும் கைகளால் செயல்படுத்த முடியாது. இந்த இடத்தில் நியூராலிங்க் தொழில்நுட்பம் அவரது மூளை என்ன நினைக்கிறது, சொல்கிறது என்பதை மூளையோடு இணைக்கப்பட்டிருக்கும் கணினிக்கு அனுப்புகிறது. உடனே அந்தக் கணினி அந்தக் கட்டளையை எடுத்துக்கொண்டு ‘இதனை எழுதி அனுப்பு’ என்று செயல்படுத்துகிறது.

நான் எனது கால்களை நடக்கச்சொல்கிறேன் என்று மூளை கட்டளை இடுகிறது. கால் நடக்கிறது.இன்னொருவருக்கு கால் நன்றாக இருக்கிறது. ஆனால், காலை நடக்கச்சொல்லும் கட்டளையை மூளை பிறப்பித்தால் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் உடல் இல்லை. எனவே காலை நடக்கச் சொல்லவேண்டும் என்று மூளை சொன்னவுடன் அதனோடு இணைக்கப்பட்டிருக்கும் கணினி அந்தக் கட்டளையை எடுத்துக்கொள்கிறது. பின்பு காலுக்கு அந்தக் கட்டளையைக் கணினி கொடுக்கிறது. கால் நடக்கிறது.

“மூளை என்று பொதுவாகச் சொன்னாலும் அது ஒற்றை உறுப்பு அல்ல. அது ஒரு பன்மைக் கூட்டமைப்பு. கை என்று சொன்னாலும் அது விரல்களும், உள்ளங்கையும், மணிக்கட்டும் சேர்ந்த பகுதியே என்பதைப் போலவே மூளையும் பொதுவாகச் சுட்டப்படும் பெயர். பெருமூளை, சிறுமூளை, முதுகுத்தண்டு, தண்டுவடம், மூளை நடுப்பகுதி என்று அய்ந்து முக்கியப் பகுதிகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன. தண்டுவடம் வரிசையான எலும்பு வளையங்கள் குருத்தெலும்புகளால் பிணைக்கப்பட்ட பகுதி. கழுத்தின் மேற்புறத்தில் அது மண்டையோட்டின் பெரிய துவாரத்தின் வழியாகச் சென்று மூளையாக மருவுகிறது.”(மூளைக்குள் சுற்றுலா, வெ.இறையன்பு, பக்கம் 61) தண்டுவடத்தில் ஒரு பிரச்சனை என்றால் மூளை இடும் கட்டளை கால்களுக்குச் சென்று சேர்வதில்லை. இந்த இடத்தில் நியூராலிங்க் ஸ்டார்ட் அப், கணினியின் மூலமாக மூளையின் கட்டளையைத் தண்டுவடத்திற்குப் பதிலாகக் கால்களுக்கு கடத்தும் வேலையைச் செய்து கால்களை இயங்க வைக்கும்.

தொலைபேசியைக் கண்டு பிடித்ததால் ஏற்பட்ட மாற்றங்களைப் போல, உலகத்தில் பல்வேறு அதிசயங்கள் இந்த மனித மூளைக்குள் எலக்ட்ரானிக் சிப் பொருத்துவதால் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

எலான் மஸ்க் மனித மூளைக்குள் எலக்ட்ரானிக் சிப் பொருத்தும் நியூராலிங்க் ஸ்டார்ட் அப் ஆராய்ச்சிக்கு அமெரிக்க அரசாங்கத்திடம் அனுமதி பெற்றார் என்பது சில மாதங்களுக்கு முன் வந்த செய்தி. குரங்குகள் மற்றும் பல விலங்குகளின் மூளைகளில் சிப் பொருத்துவதைப் பற்றிய ஆராய்ச்சிகளை 2014 முதல் இந்த நியூராலிங்க் நிறுவனம் செய்து வருகிறது.
ஜனவரி 2024இல் ஒரு மனித நோயாளிக்கு மூளையில் ஒரு சிப்பை வெற்றிகரமாகப் பொருத்தியதாகவும் அவர் குணமடைந்து வருவதாகவும் இப்போது அது வெற்றிகரமாகி
யிருக்கிறது என்றும் எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார்.

“முன்னேற்றம் நன்றாக உள்ளது, என்றும் நோயாளி முழுமையாகக் குணமடைந்து விட்டதாகவும் தெரிகிறது, நரம்பியல் விளைவுகள் நமக்குத் தெரியும். ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, நோயாளி சிந்திப்பதன் மூலம் ஒரு சுட்டியைத் திரையைச் சுற்றி நகர்த்த முடியும், ”என்று எலான் மஸ்க் சமூக ஊடக தளமான Xஇல் ஒரு ஸ்பேஸ் நிகழ்வில் கூறியிருக்கிறார்.
மேலும் தன்னுடைய அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “முதல் மனித நோயாளி விரைவில் நியூராலிங்க் கருவியைப் பெறுவார். இது இறுதியில் உடல் இயக்கத்தை முழுவதுமாக மீட்டெடுக்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த ஆய்வு ஸ்டீபன் ஹாக்கிங்கிற்குக் கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்” எனவும் பதிவிட்டுள்ளார்.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் கன்னத்தில் இருக்கும் சில தசைகள் தவிர உடல் பாகங்கள் பலவும் அவருக்கு வேலை செய்யாத நிலையில், ஈக்வலைஸர் என்ற கம்ப்யூட்டர் புரோக்ராம் உதவியோடு கன்னத் தசைகளின் அசைவுகள் மூலம் கம்ப்யூட்டர் குரலில் மட்டுமே ஸ்டீபன் ஹாக்கிங் பேசி வந்தார். 2018இல் மறைந்தார். மார்ச் 14 ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் நினைவு நாள்.

இந்த மூளையில் பொருத்தப்படும் சிப் தொழில் நுட்பம் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் அவர்களுக்கு மட்டும் கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள் என்று எலான் மஸ்க் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். ஆம். நியூராலிங்க் கருவி கிடைத்திருந்தால் ஸ்டீபன் ஹாக்கிங் தன் கால்களால் நடந்திருக்கவும், கைகளைப் பயன்படுத்தவும் முடிந்திருக்கும் அல்லவா!

ஆம், மூளைப் பாதிப்பினால் பல்வேறு வகையான நோய்களுக்கு ஆட்பட்டிருக்கும் பலருக்கு இந்த நியூராலிங்க் தொழில் நுட்பம் விடிவு தரும். கண் பார்வையற்றவர்களுக்குப் பார்வை தரும் எனப் பல்வேறு செய்திகள் வருகின்றன. இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளைப் பற்றியும்
பலர் பேசுகின்றனர். ஆனால், நாம் புதிய நியூராலிங்க்
தொழில் நுட்பத்தை வரவேற்போம்.♦

நன்றி: உண்மை இதழ்,01-15 மார்ச், 2024


Monday, 26 February 2024

நிகழ்வும் நினைப்பும் 2024-4 புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களம் நடத்திய 116-வது சிறப்புக் கூட்டம்

 புதுக்கோட்டை வீதி கலை இலக்கியக் களம் நடத்திய 116-வது சிறப்புக் கூட்டம் (25.02.2024- ஞாயிற்றுக்கிழமை)தோழர் கலைமாமணி அகன் என்ற தி.அமிர்தகணேசன் அவர்களின் படைப்புலகம் பற்றிய சிறப்புக் கூட்டமாகவும் நூல் வெளியீட்டு விழாக் கூட்டமாகவும் நடைபெற்றது.  அனைவரையும் வரவேற்று வீதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ,இந்த நிகழ்வுக்கு எல்லாமுமாக இருந்து உழைத்த எழுத்தாளர் மு.கீதா அவர்கள் உரையாற்றினார். நிகழ்வுக்கு  வழிகாட்டியது மட்டுமல்லாது எப்போதும் தோழமைகளை வழிநடத்தும் தோழர் கவிஞர் ந.முத்துநிலவன் அவர்கள் தலைமை வகித்து பாடலுடன் கருத்து மிக்க தலைமையுரையை ஆற்றினார்.முனைவர் சம்பந்தம் ஏகாம்பரம் எழுதிய 'நீடு வாழ்க நிகழ்காலத்திலே' ,கோவை கவிஜி எழுதிய ' பச்சைமலைப்பூவும் உச்சி மலைத்தேனும் ', தஞ்சாவூர் உமா மஹேஸ்வரி பால்ராஜ் எழுதிய 'எழுதித் தீராத வலி',கலைமாமணி அகன் எழுதிய 'எது கவிதை? என்ன செய்யும் அது ?','வீதி 100 தொகுப்பு முதலிய 5  நூல்கள்  வெளியிடப்பட்டன. நூல்களின் ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை அவையில் எடுத்து வைத்தனர்.




தோழர் அகன் அவர்களின் படைப்புகளில்  ‘பயணங்களில் அகன் ‘ என்னும் தலைப்பில் நானும், 'உரைநடைகளில் அகன்' என்னும் தலைப்பில் கவிஞர் வித்யா மனோகர் அவர்களும்,'கவிதைகளில் அகன்' என்னும் தலைப்பில் தோழர் அ.ந. சாந்தாராம் அவர்களும் …உரையாற்றினோம்.தமிழ்ச்செம்மல் நெ.இரா.சந்திரன் அவர்களும் அகனின் படைப்புகள் என்னும் பொதுத்தலைப்பில் அருமையான பாடல்களுடன் உரை நிகழ்த்தினார்.


ஏற்புரையை தோழர் அகன் ஆற்றினார். மிக நல்ல நிகழ்வாக அமைந்தது.படைப்பாளிகள் கோவை கவிஜி,புதுக்கோட்டை சோலச்சி,'எழுதித் தீராத வலி 'நூலின் ஆசிரியர் உமா மகேஸ்வரி பால்ராஜ் என்று பலரையும் பார்ப்பதற்கான,உரையாடுவதற்கான நிகழ்வாக இன்று அமைந்தது. எழுதித் தீராத வலி நூலுக்கு நானும் அணிந்துரை வழங்கி இருந்தேன்.அந்த நூல் ஆசிரியரை இங்குதான் சந்தித்தேன். எழுத்தாளர் சோலச்சி அவர்கள் தனது முதல் நாவலான 'முட்டிக்குறிச்சி ' நூலைக் கொடுத்தார்.வாசிக்க வேண்டும்.தோழர் அகன் 'மகாகவி ' என்னும் தொகுப்பைக் கொடுத்தார். பலரும் தங்கள் வீட்டு  நிகழ்வுக்கு செலவழிப்பது போல நினைத்து, மனமுவந்து  நன்கொடை தந்து அதன் மூலம் நடைபெறும் நிகழ்வாக 'வீதி; இருக்கிறது ..வீதி கலை இலக்கியக் களத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.கீதா அவர்கள் செலவுகள் போக இன்னும் ரூ 5000 மீதம் இருக்கிறது என்று மேடையிலேயே அறிவித்தார்கள்.

நல்ல முயற்சி. படைப்பாளிகள் பலரும்,வாசகர்கள் பலரும் இணைந்து இந்த வீதி அமைப்பை மிக வீச்சாக புதுக்கோட்டையில் கொண்டு செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைய இளம் படைப்பாளிகள் பங்கு கொண்டதும் பங்களிப்பு செய்ததும் குறிப்பிடத்தக்கது .இன்று நடந்தது 116வது கூட்டம்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தக் கூட்டம் காலையில் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்கள். தொடரட்டும் இந்த இலக்கியப்பணி   

Thursday, 22 February 2024

நிகழ்வும் நினைப்பும் -2024 (3) 'பிரார்த்தனை மோசடி '





பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக வாரந்தோறும் நூல் அறிமுகம் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை மாலை 6.30 முதல் 8 மணிவரை நடக்கிறது.தவிர்க்க முடியாத சில வாரங்களில் வியாழக்கிழமை. திராவிட இயக்க கொள்கைகள் பேசும் நூல்கள்தான் பெரும்பாலும் இந்த இணையவழிக் கூட்டத்தில் பேசப்படுகின்றன.இன்று(23.02.2024)  திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 'பிரார்த்தனை மோசடி ' என்னும் நூலைப் பற்றிப் பேச இருக்கிறேன். மும்பை திராவிடர் கழகத்தைச்சார்ந்த அய்யா மும்பை கணேசன் அவர்க்ள் இன்று (23.02.2024) காலையில் மும்பையிலிருந்து  செல்பேசியில் அழைத்தார். 'பிரார்த்தனை மோசடி ' என்னும் புத்தகத்தைப் பற்றிப் பேசப்போகிறீர்களா? என்றார்.ஆமாம் என்றேன். என் வாழ்வில் மறக்க முடியாத  நூல் இது என்று சொல்லிவிட்டு நூலில் இருக்கும் பல்வேறு செய்திகளை,பெயர்கள் உள்ளிட்டவைகளை என்னோடு பகிர்ந்து கொண்டார்.இந்த நூலைப் பற்றி அப்படி ஒரு உற்சாகத்துடன் ,மகிழ்ச்சியுடன் பேசினார். .உண்மையிலேயே எனக்கு வியப்பாக இருந்தது. ஒரு நூல் இவ்வளவு தூரம் ஒரு தொண்டரின் வாழ்க்கையில்,நினைவில் ஊடுருவ முடியாமா? என்று.ஆமாம் அப்படிப்பட்ட ஒரு நூலைப் பற்றிப்பேசும் ஒரு வாய்ப்பு எனக்கு இன்றைக்கு .கேட்பது உங்களுக்கும் கூட  ஒரு வாய்ப்பாக அமையலாம். வாருங்கள் மாலை 6.30 க்கு 


 

Tuesday, 20 February 2024

தனித்து-தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ்நாடு! – முனைவர் வா.நேரு

 


ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், வளர்ச்சியை நோக்கிப் பயணமாக வேண்டுமென்றால் அதற்கான அடிப்படைத் தேவை அமைதி, ஒற்றுமை. ஒற்றுமைக்கும், அமைதிக்கும் அடிப்படை ஒருவரை ஒருவர் மதித்தல். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மனிதர்களை மனிதர்களாக மதித்து மரியாதை கொடுத்தல், அதன்மூலம் மரியாதையைப் பெற்றுக்கொள்ளுதல். இதற்கான அடித்தளத்தைத் தமிழ்நாட்டில் விதைத்தவர்,பரப்பியவர் தந்தை பெரியார் அவர்கள். அதற்கு அடிப்படையாக அமைந்தது சுயமரியாதை இயக்கம். அடுத்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாடு இந்திய நாட்டின் மற்ற மாநிலங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாதையில் பயணம் செய்கிறது என்னும் வெளிநாட்டுப் பத்திரிகையின் செய்தி கண்ணில் பட்டது.

“ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் பயணம் செய்யும் பாதையைத் தவிர்த்துத் தமிழ்நாடு வேறு வழிகளில் பயணம் செய்து வெற்றி பெற்று வருகிறது என ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி நிறுவனம் தமிழ்நாட்டைப் புகழ்ந்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், தொழில் மயமாக்கலை பொறுத்தவரை தமிழ்நாடு பல ஆண்டுகளாக முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. அதிலும், பொறியியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல் மற்றும் சர்க்கரை போன்ற உற்பத்தித் துறைகளில் தொடர்ந்து தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது. அண்மையில், தொழில்துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின் சென்று திரும்பியுள்ளார்.
தமிழ்நாட்டின் சில பகுதிகள் ஏற்கனவே தொழில்துறையில் சாம்பியனாகச் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் கார் உற்பத்தித் தொழிற்சாலைகள், கோயம்புத்தூரில் dye-casting மற்றும் மோட்டார் பம்ப் உற்பத்தி தொழிற்சாலைகள், திருப்பூரில் பின்னலாடைத் தொழிற்சாலைகள், சிவகாசியில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு உற்பத்தி ஆலைகள் நிபுணத்துவம் பெற்றவை.” என்று விரிவான செய்தியை பி.பி.சி. தமிழ் வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு செய்தி, இந்திய ஒன்றியம் முழுவதும் வளர்ச்சி – பின்பு பகிர்ந்து அளித்தல் என்னும் கோட்பாட்டைக் கொண்டு இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு மட்டும் பகிர்ந்து அளித்தல், அதன் மூலம் வளர்ச்சி என்னும் கோட்பாட்டைக் கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.இதனை விளங்கிக்கொள்ள ஒன்றிய அரசின் செயல்பாடுகளையும் தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே நாம் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்.

இந்திய ஒன்றிய அரசு அதானி,அம்பானி போன்ற பெருமுதலாளிகளின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என்று நினைக்கிறது. அதற்காகப் பெருமுதலாளிகளுக்கு ஏகப்பட்ட சலுகைகளை அளிக்கிறது.பொதுவுடைமை வங்கிகளின் மூலமாக இலட்சக்கணக்கான கோடிகளை அவர்களுக்குக் கடனாக அள்ளித் தருகிறது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்தக் கடன்களை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்கிறது. பலவிதமான சலுகைகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஏனெனில், அவர்களின் வளர்ச்சிதான் இந்திய ஒன்றியத்தின் வளர்ச்சி என நினைக்கிறது. பெரும்பாலும் இப்படி இந்தியாவின் பெருமுதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் வைத்து இருப்பவர்கள் எல்லாம் குஜராத் மாநிலத்தைச் சார்ந்தவர்கள். அதில் நிரவ் மோடி போன்றவர்கள் பல்லாயிரம் கோடி கடனை வங்கிகளிடமிருந்து வாங்கிக் கொண்டு சலுகை பெற்று,வெளி நாட்டில் சொத்துகளை,பணத்தை முதலீடு செய்து இந்தியாவிலிருந்து தப்பிப் போய் வெளி நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்ற பெரும்முதலாளிகளுக்குச் சலுகைகள் அளிப்பதன் மூலமே இந்தியா வளரும் என்பதுதான் இன்றைக்கு ஆளும் பி.ஜே.பி.அரசின் கொள்கை.அவர்கள் ஆளும் மாநிலங்களின் கொள்கை.

ஆனால், தமிழ்நாடு இவர்களின் சிந்தனையிலிருந்து மாறுபட்டுச் சிந்தித்தது. இந்தியாவிலேயே முதன்முதலில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் அளித்தது தமிழ்நாடுதான்.மற்ற மாநிலங்கள் எல்லாம் செயல்படுத்தாத காலத்திலேயே மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தமிழ்நாடு அரசாங்கம் அமைத்தது.இன்றைய முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அவர்களுக்கு வங்கிகள் மூலமும் தமிழ்நாடு அரசாங்கத்தின் மூலமும் கடனும் உதவிகளும் வழங்கப்பட்டன.கடன் பெற்றவர்கள் முறையாகக் கடனைத் திருப்பிக் கட்டினர். மீண்டும் அதிக அளவில் கடனைப் பெற்றுத் தொழில்களை மேம்பாடு செய்தனர். அலையென எழுந்த பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றனர். விழிப்புணர்வு பெற்றனர். தங்கள் மகன்களை,மகள்களை உயர்கல்வி பெறக் கல்லூரிகளுக்கு அனுப்பினர்.காலம் காலமாக ஒடுக்கப்பட்ட பட்டியல் இனத்தவருக்கும்,மலை வாழ் பழங்குடி மக்களுக்கும் பெண்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும் அரசாக தமிழ்நாட்டுத் திராவிட இயக்க அரசுகள் இயங்கின; இன்றைக்கும் இயங்குகின்றன.

ஜாதி ஒழிப்புச் சிந்தனையை மக்கள் மனதில் ஆழமாகச் சுயமரியாதை இயக்கம் விதைத்தது. அண்மையில் அறிவுச்சுடர் காணொலியில் பேராசிரியர் ஆ.திருநீலகண்டன் அவர்கள்,திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார்.அந்தப் பேட்டியில் திராவிட இயக்கம் எப்படி மக்கள் மனதில் 95 ஆண்டுகளுக்கு முன்பே ஜாதி ஒழிப்பு சிந்தனையை விதைத்தது, ஒவ்வொரு ஜாதியிலும் பிறந்தவர்களில் பலரை எப்படி ஜாதி ஓழிப்பு முற்போக்காளர்களாக மாற்றியது என்பதை விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்.ஆம். அதனால்தான் தமிழ்நாடு ஜாதிச்சண்டைகள் இல்லாத,மதச்சண்டைகள் இல்லாத ஒரு மாநிலமாக,அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.அதனால் சமூக முன்னேற்றமும்,கல்வி முன்னேற்றமும் ,பெண்கள் முன்னேற்றமும், தொழில் முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கின்றன.

அதுமட்டுமல்ல; தந்தை பெரியார் அவர்கள் ஜாதி ஒழிப்புக்குக் கிராமங்களை ஒழிக்க வேண்டுமென்றார்.கிராமங்களில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள், குலத்தொழில் ஜாதியாக முடிவெட்டுதல்,துணிகளை வெளுத்தல்,பிணங்களை எரித்தல் போன்ற தொழில்களைச் செய்பவர்களை கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களுக்கு வரச்சொன்னார். ஜாதி இழிவிலிருந்து வெளியேறி, குலத்தொழிலை விட்டுவிட்டு, கல்வி கற்று, பொருளாதார ரீதியாக, சுயமரியாதையோடு வாழ்வதற்கான வழியைத் தந்தை பெரியார் சொன்னார். திராவிட இயக்க ஆட்சிகள் அதற்கான பாதைகளை அமைத்துக்கொடுத்தன.பெரும் பாய்ச்சல் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பற்றி பல நூல்கள் இப்போது வருகின்றன. அப்படி வந்த ஒரு புத்தகம் ‘”Dravidian Years” என்பது. அதன் ஆசிரியர் எஸ். நாராயணன் அவர்கள்..
“”அரசியல், வளர்ச்சி, நிருவாகம் ஆகியவற்றின் இடையில் நெருக்கமான, உயிர்ப்புள்ள ஓர் உறவை உருவாக்குவதில் கருணாநிதி யுகம் வெற்றி கண்டது. பிற்காலத்தில் அது போன்ற பல திட்டங்களை உருவாக்குவதற்கு அது அடிப்படையாக அமைந்தது.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.அந்த நூலைக் குறிப்பிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்,

“இதுதான் ‘திராவிட மாடல்.’ எல்லாச் சமூகங்
களுக்குமான வளர்ச்சி. எல்லா மாவட்டங்களையும்
சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. இது தான் திராவிட மாடல். எல்லோரையும் உள்ளடக்கிய இந்தப் பாணியில் தமிழ்நாடு வளர வேண்டுமென நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

“மேலும், தொழில்துறை வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வியில் சாதனை போன்ற எல்லாமும் ஒரே சமயத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார வளர்ச்சியாக மட்டும் இருக்க முடியாது. சமூக முன்னேற்றமும் இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல் ஆகிய அய்ந்தும் முன்னேற்றமடைய வேண்டும். அம்மாதிரியான ஒரு வளர்ச்சியைத்தான் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் காண விரும்பினர். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி” என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.
இது குறித்துத் திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டீன் கூறுகையில், “நம்முடைய முதலமைச்சர் மறைமுகமாகச் சொல்ல வருவது என்னவென்றால், இது பெரியாரின் பூமி என்பதைத்தான்! பெரியார் எதையெல்லாம் இந்தச் சமூகத்தில் மாற்ற வேண்டுமென நினைத்தாரோ அதன் அடிப்படையில் அமைந்த அரசுதான் இந்த அரசு என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் முதலமைச்சர். ஆகவே, தற்போது கிடைத்த வெற்றியை இந்த அரசின் திட்டங்களுக்கு, பெரியாரின் கொள்கைகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறார். பிறப்பொக்கும் எல்லாரும் சமம்; எல்லோருக்கும் சமவாய்ப்பு. அதைத்தான் திராவிட மாடல் பாணி அரசு என முதல்வர் குறிப்பிடுகிறார்” என்கிறார்.”(பத்திரிகைச் செய்தி)

“நியூயார்க் டைம்ஸ்” பத்திரிகையின் செய்தி பற்றிப் பேசிய தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் “எங்கள் வளர்ச்சியை மற்ற இந்திய மாநிலங்களுடன் நாங்கள் ஒருபோதும் ஒப்பிடுவதில்லை” என்று கூறினார். தொழிலில் வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்றும் அதை எப்படி முறியடிக்க முடியும் என்பதை நாங்கள் திட்டமிடுகிறோம். ஸ்காண்டிநேவிய நாடுகளின் வளர்ச்சி மற்றும் அதை எப்படி முறியடிக்க முடியும் என்பதை நாங்கள் பார்க்கிறோம்” என்று தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சிக்கு மோடி தலைமையில் அமைந்த ஒன்றிய அரசு பல்வேறு முட்டுக்கட்டுகளைப் போடுகிறது. தமிழ்நாட்டிற்கு கொடுக்கவேண்டிய முறையான நிதிப்பங்கீட்டைக் கொடுக்க மறுக்கிறது. பெரிய அண்ணன் தோற்றத்தைக் காட்டுகிறது. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி தமிழ்நாடு வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 5 சதவிகிதம். ஆனால் ஒட்டுமொத்த இந்திய தொழிற்சாலை பெண் ஊழியர்களில் 43 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டில் வேலை செய்கிறார்கள் என்பது ஒரு மிகப்பெரிய வெற்றி. இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் இருந்தாலும்,’அனைவருக்கும் அனைத்தும்’ என்னும் திராவிட மாடலின் நோக்கம் முழுமையாக அடையப்படவில்லை என்றாலும் அதை நோக்கிய வெற்றிகரமான பயணமாக தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசின் பயணம் இருக்கிறது. வாழ்த்துகிறோம், பாராட்டுகிறோம்.
தொடரட்டும் இந்த வெற்றிப் பயணம்!

நன்றி : உண்மை இதழ் -பிப்ரவரி 16-29 ,2024