Thursday, 28 August 2014

இட்லி மாவு.......(சிறுகதை )

                                                         இட்லி மாவு......
                                                                                 -- வா. நேரு
அரைத்தூக்கத்தில் இருந்த அறிவுக்கு இரவே மாசறுபொன் காலையில் இட்லி மாவு வாங்கவேண்டும் என்று சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது.படாரென்று படுக்கையில் இருந்து எழுந்து நேரத்தைப்பார்த்தான். நேரம் காலை 5.50. மாசறுபொன்னும் பிள்ளைகளும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களைத் தொந்தரவு செய்யாமல் சைக்கிளை தூக்கி வீட்டிற்கு வெளியே வைத்தான் . இட்லி மாவு வாங்கும் தூக்குச்சட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். இவன் இட்லி மாவு வாங்கும் இடத்திற்கு போவதற்கும் முன்னால் இட்லி மாவு விற்கும் இடங்கள் மூன்று இருக்கின்றன. இவன் வாங்கும் இடத்திற்கும் முன்னாலும் பின்னாலும் இரண்டு பேர் இட்லி மாவு விற்கின்றார்கள். ஆனால் அறிவு வாங்கும் இடத்தில்தான் இட்லி மாவு வாங்கக் கூட்டம் நிற்கும். ஏதோ வெள்ளைக்காரன் கம்பெனி போல காலை 6 மணி முதல் 6.15 வரைக்கும்தான் அந்த இடத்தில் மாவு கிடைக்கும் . அந்த இடத்தில் மாவைக் கொண்டுவருவதற்கு முன்னாலேயே கூட்டம் வரிசையாக நிற்கத்தொடங்கிவிடும். பின் வந்து இங்கு மாவு இல்லை என்பவர்கள் அடுத்த இடங்களில் வாங்குவார்கள் அல்லது திரும்பிப்போவார்கள். அறிவு எப்போதும் இங்கு மாவு இல்லையென்றால் திரும்பிப்போகும் பட்டியலில் இருப்பான். மாசறுபொன் தெளிவாகச்சொல்லியிருந்தாள், ஒன்று வாங்கினாள் அந்த அம்மாவிடம் வாங்கி வாருங்கள், இல்லையென்றால் சும்மா வாருங்கள், நான் வேறு ஏதாவது காலை டிபன் ஏற்பாடு செய்து விடுகிறேன் என்பாள். வேறு டிபன் என்றால் சப்பாத்தி என்றாலும் , பூரி என்றாலும் மாவை எடுத்து ஊறவைத்து, பின்பு பிசைந்து , உருட்டி, தேய்த்து அடுப்பில் எடுத்து போட்டு எடுப்பதற்குள் நேரம் ஓடி விடும். வீட்டில் பிள்ளைகள் இரண்டு பேரும் காலையில் எட்டுமணிக்குள் பள்ளிக்கூடத்திற்கு ஓடவேண்டும். அறிவும் , மாசறுபொன்னும் அலுவலகத்திற்கு அடுத்து ஓடவேண்டும். அதனாலேயே இந்த இட்லி மாவு வாங்குவது ஒரு காலைக் கடமையாகிவிட்டது அறிவுக்கு.

முதன்முதலில் இந்தப் பகுதிக்கு குடி வந்தவுடனேயே வித்தியாசமாக இருந்தது அறிவுக்கு. நிறைய சின்னச்சின்ன கடைகள். காலையிலும், மாலையிலும் சுடச்சுட பணியாரம், வடை என்று ஒரு சிலர். இட்லி கடை சிலர். இடியாப்பம் , புட்டு என்று சிலர் .சமசோ, கீரை வடை என்று சிலர். முள்ளு முருங்கைக் கீரை வடை, எண்ணெய்க்கடலை என்று சிலர். சின்னச்சின்ன இடங்களில், ஒரு நாளில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் விற்றுக் கொண்டிருந்தார்கள். முள்ளு முருங்கைக்கீரை வடை எல்லாம் இந்தப்பகுதிக்கு வரும் முன் அறிவு சாப்பிட்டதே இல்லை. இப்போது அந்த வடைப் பிரியர் ஆகிவிட்டான். எல்லோரும் சாதாரண உழைக்கும் மக்கள். நெசவுத்தொழில் செய்து கொண்டிருந்தவர்கள். நெசவுத்தொழில் நலிவடைந்த நிலையில் , ஏதோ சின்னச்சின்ன வேலைகளைச்செய்து தங்கள் வயிற்றுப்பாட்டை போக்கிக்கொண்டிருந்தார்கள் .ஆனால் எல்லோருமே , மகிழ்ச்சியாக தங்கள் வாழ்வை கிடைத்த அளவில் மகிழ்ச்சி என்ற மன நிலையில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தார்கள். இட்லி மாவு வாங்கலாம், அல்லது இட்லியாக வாங்கலாம் . நினைத்ததை நினைத்த நேரங்களில் குறைந்த செல்வில் வாங்கிச்சாப்பிட வசதியான பகுதியாக அந்தப் பகுதி இருந்தது, கணவன் , மனைவி இருவரும் வேலைக்குப்போகும் அறிவு குடும்பத்திற்கு மிக வசதியாக இருந்தது.

அதுவும் எஸ்.இராமகிருஷ்ணன் ஒரு கட்டுரையில் ஒரு பெரிய உணவு விடுதிக்குச்சென்று பிள்ளைகளுக்கு எல்லாம் கண்டபடி வாங்கிக்கொடுத்து, பணத்தைக் காலிபண்ணியதைப் பற்றியும் தான் அங்கு இட்லி சாப்பிட்டு வந்ததைப் பற்றியும், இட்லியும் சாம்பாரும் எவ்வளவு நல்ல உணவு என்று விரிவாக எழுதியிருந்தைப் படித்தபின்பு அறிவு சோம்பேறித்தனம் படாமல் காலையில் போய் மாவு வாங்கி வந்து கொடுத்துக்கொண்டிருந்தான்.வீட்டில் இட்லி மாவு சில நேரம் ஆட்டி வைப்பதுண்டு. இப்போது எல்லாம் மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும் என்று தெரியவில்லை.சில நேரம் பாதி , பாதி மாவை ஆட்டி வைத்துவிட்டு அலுவலகம் ஓடிவந்து விட்டால் மாலையில் போய் அதனை வெளியில்தான் கொட்டவேண்டும். முழுமையாக ஆட்டப்படாத மாவு எதற்கும் பயன்படுவதில்லை. இல்லையென்றால் இரவில் வெகு நேரம் முழித்து மாவை ஆட்டிவைக்க வேண்டும். காலையில் போய் அலுவலகத்தில் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்க வேண்டி வரும். எதற்கடா இந்த வம்பெல்லாம் என்று இட்லி மாவை வாங்கி விடுவான் அறிவு. வீட்டு மாவுக்கும் , அறிவு வாங்கி வரும் இடத்தின் இட்லி மாவுக்கும் ஒன்றும் பெரிய அளவில் வேறுபாடு இருக்காது. வீட்டு மாவு போலவே வெளி மாவும் அமைந்தால் வீட்டில் மாவு ஆட்டும் வேளை மிச்சம்தானே ! கொஞ்சம் நாள் பழகப் பழக , மாவு விற்பவர்கள் குடும்பத்தைப் பற்றியும் அறிந்து கொண்டான்.

கணவர், மனைவி, இரண்டு குழந்தைகள்.மூத்த பெண் 6-ம் வகுப்பும் இளைய பெண் 4-ம் வகுப்பும் படித்துக்கொண்டிருந்தனர். குடும்பமே இட்லி மாவு விற்பனையில் . காலை, மாலை இரண்டு வேளை மட்டும் இட்லி மாவு விற்பனை . முதலில் அம்மா ஒரு பெரிய தண்ணீர் வாளியோடு வருவார். பின்னால் அப்பா சைக்கிளில் மாவு கொண்டு வருவார். அந்த ஆறாவது வகுப்பு படிக்கும் பெண் கையில் கரண்டியோடும் ஒரு சின்ன மாவு வாளியோடும் வருவாள். ஒரு தேர்ந்த சிற்பி போல சில வினாடிகளில் இட்லி மாவு விற்பனை நிலையம் ரெடியாகி விடும். 3 சில்வர் அண்டாக்களில் மாவு இருக்கும் . ஒவ்வொன்றாக சைக்கிளில் கணவர் கொண்டு வருவார். அந்த அம்மா கையில் கரண்டியை எடுத்து மாவைக் கலக்கும் விதமே அருமையாக இருக்கும். அவ்வளவு கவனமாக, நேர்த்தியாக ஒவ்வொரு தூக்கு வாளியோ, சட்டியோ வாடிக்கையாளர்களின் பாத்திரங்களில் மாவு நிரப்பப்படும். ஒரு கப் மாவு 15 ரூபாய்.ஒவ்வொரு கப் மாவிற்கும் ஒரு கரண்டி மாவு போனசாக ஊற்றப்படும் 2 கப் மாவு வாங்கினால் அறிவு குடும்பத்திற்கு ஒரு வேளை உணவு சரியாகிப்போகும். சுடச்சுட இட்லியை மாசறுபொன் அவித்துத்தர , பிள்ளைகள் திருப்தியாக பள்ளிக்கூடம் கிளம்பிவிடுவார்கள். ஆனால் ஒரு அண்டா என்பது ஒரு 30 கப் மாவு பிடிக்கலாம். 3 அண்டா மாவு என்றால் 90 கப் மாவு . ஒரு கப் மாவு 15 என்றால் 90 கப் மாவிற்கு 1350 ரூபாய் . அதில் எப்படியும் 200, 300 ரூபாய் இலாபம் கிடைக்க வழி இருக்கிறது. ஆனால் தரமாக கொடுப்பதனால் இலாபம் குறைவாக இருக்கலாம், ஆனால் உணவுப்பண்டம் வந்தவுடன் பறந்து விடுகின்றதே, ஒரு நாள் கூட மாவு விற்காமல் வெகு நேரம் நின்றதாக அவர்களைப் பார்த்ததேயில்லை அறிவு . இட்லி மாவோ, உணவு விடுதியோ இருக்கும் பொருள் நன்றாக அமைந்து விற்று விட்டால் இலாபம்தானே !, மகிழ்ச்சிதானே.

காலையில் மாவு வாங்கும் இடத்தில் இருக்கும் பிரச்சனை கொசுக்கள்தான். விடிந்தும் விடியாமல் இருக்கும் காலைப்பொழுது. கொசுக்கள் எல்லாம் மொத்தமாகப் படையெடுத்து மொய்க்கும். இரண்டு, மூன்று நிமிடத்தில் நாம் மாவு வாங்கும் நேரத்திற்குள்ளேயே இவ்வளவு கொசு கடிக்கிறதே, கால் மணி நேரம், அரை மணி நேரம் என்று இந்த இடத்தில் நின்று கொண்டே வேலை செய்கின்றார்களே என்று அறிவு யோசிப்பான். சில நாட்கள் சில கொசு வத்திகளை பொருத்தி வைத்திருப்பார்கள். மற்ற நாட்களில் கொசு வத்தி இருக்காது. ஒரு நாள் இரவு முழுவதும் மாற்றி மாற்றி கரண்ட் கட் ஆகிக்கொண்டயிருந்தது. இரவு முழுவதும் தூக்கம் இல்லை. இரவில் இவ்வளவு நேரம் மின்சாரம் இல்லையென்றால் எப்படி மாவு ஆட்டியிருப்பார்கள் - மாவு இன்று இருப்பது சந்தேகம்தான் என்று நினைத்துக்கொண்டு அறிவு போனான். மாவு இருந்தது. மாவு விற்கும் பெண்ணிடமே கேட்டுவிட்டான். "இரவு முழுவதும் மின்சாரம் வந்து, வந்து போனதே ? எப்படி மாவை ஆட்ட முடிந்தது ? " என்று கேட்டபோது, " அண்ணே, இரவு முழுவதும் தூங்கவில்லை, மின்சாரம் நின்றதும், மாவை மூடிவைத்து, பின்பு வந்தவுடன் அரைத்து, மறுபடியும் மூடிவைத்து, பின்பு அரைத்து , இப்படித்தான் அரைத்தோம் " என்று சிரித்துக்கொண்டே அந்தப்பெண் சொன்னபோது அறிவினால் ஏனோ சிரிக்கமுடியவில்லை. வருத்தமாக இருந்தது.

இந்த இட்லி மாவு விற்பனை நிலையத்திற்கு எதிர்த்தாற்போல் ஒரு பெண் தனியாக இட்லி மாவு விற்பனை செய்துகொண்டிருப்பார். காலையில் 6 மணியிலிருந்து காலை 8 , 8.30 வரை ஒரே ஒரு பெரிய சட்டியில் கொண்டுவந்து இட்லி மாவு விற்றுக்கொண்டிருப்பார். ஒரு நாள் எப்போதும் வாங்கும் இடத்தில் இட்லி மாவு இல்லையென்று எதிர்த்தாற்போல் இருக்கும் பெண்ணிடம் மாவு வாங்கிக்கொண்டு போனான் அறிவு. வீட்டில் அடி விழுகாத குறைதான். ஏங்க, மாவு கலர் பார்த்தாலே தெரியலையா, ஏதோ மட்டமான அரிசியிலே அரைச்ச மாவு மாதிரி இருக்கே என்று புலம்பிக்கொண்டே அடுப்பில் இட்லியை வைக்க . சுட்டு வைத்த இட்லியைத் திங்கமுடியாமல் திரு திருன்னு அறிவு முழிக்க, நீங்க இப்படி முழிப்பிங்கே, நாம வாங்கிட்டு வந்த மாவு இட்லியை நாமே திங்கமுடியலையே, பிள்ளைகள் எப்படி திம்பாங்கன்னுதானே முழிக்கிறீங்க, எங்கெளுக்கெல்லாம் வெண்பொங்கல் அப்பவே செஞ்சுட்டேன், போய் குப்பையிலே அந்த இட்லியைக் கொட்டிட்டு, வெண்பொங்கல் சாப்பிட வாங்க என்றாள் மாசறுபொன். அன்றிலிருந்து அந்தப் பக்கம் இட்லி மாவு வாங்குவதையே விட்டுவிட்டான் அறிவு .

ஆனால் இந்தப் பொம்பளைக்கு உறைக்காதா? ஒருவரிடம் வந்த 15 நிமிடத்தில் மூன்று அண்டா இட்லி மாவு எல்லாம் காலியாகிவிடுகிறது நம்மிடத்தில் ஒரு வாளி இருப்பது 2 மணி நேரமானாலும் விற்க மாட்டேங்கதே ! தரம்தானே பிரச்சனை. தரமாக கொடுத்தால் நாமும் கொஞ்சம் நேரத்தில் விற்று விட்டுப்போய்விடலாமே என்று நினைக்க மாட்டார்களா என்று அறிவு நினைப்பான். ஒரு தெருவில் பெரிய நிறுவனத்தின் ஜவுளிக்கடை வந்தால், மற்ற ஜவுளி நிறுவனங்கள் எல்லாம் படுத்துவிடும் .ஏனென்றால் புதிய நிறுவனம் விளம்பரத்திற்கு அள்ளித்தெளிக்கும் பணம். விளம்பரத்தின் மூலம் தன்னை நிலை நிறுத்த மற்ற விற்பனை நிலையங்களைப் படுக்க வைத்துவிடுகின்றார்கள். ஆனால் இங்கு அப்படியில்லையே, தரம்தானே விளம்பரம். மக்கள் இன்று தரமாக இருந்தால் தொலைவில் இருக்கும் இடத்தைக் கூடத் தேடி வருகின்றார்களே என்றெல்லாம் அறிவு நினைத்துக்கொண்டிருந்தான். ஏன் நாமும் அவர்களைப் போலத் தரமாக மாவைக் கொடுக்கக் கூடாது என்று நினைக்கமாட்டார்களா என்று நினைத்தான் . " Satisfied Customer is the best advertiser " - திருப்தியடைந்த வாடிக்கையாளரே மிகப்பெரிய விளம்பரதாரர் என்று தான் படித்த சர்ட்டிபிகேட் -விற்பனையாளர் படிப்பில் படித்தது ஞாபகம் வந்தது அறிவுக்கு .


இரண்டு நாளாய் தொடர்ந்து அறிவு வாங்கும் இட்லி மாவு கடை இல்லை. போய் பார்த்து விட்டு , திரும்பி திரும்பி வந்தான் அறிவு. மூன்றாவது நாள் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தான் ." சார், உங்களுக்குத் தெரியாதா, அந்த இட்லி மாவு விற்கும் பெண்ணிற்கு உடம்பு சரியில்லை என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் என்றார்கள். மேலும் நாலு, ஐந்து நாட்கள் வெளியூர் சென்றதால் இட்லி மாவு விற்கும் பக்கம் போகவில்லை. ஒரு நாள் திடீரென்று எப்போதும் அறிவு இட்லி மாவு வாங்கும் இடத்தில், 8 மணி வரைக்கும் இட்லி மாவு விற்கும் எதிர்த்த இட்லிமாவு கடைப்பெண் உட்கார்ந்திருந்தார். என்ன, இந்த அம்மா உட்கார்ந்திருக்கின்றார்களே, எதிர்த்த இடத்திலிருந்து இந்த இடத்திற்கு ஏன் வந்தார் ? என்று யோசித்துக்கொண்டே அந்தப் பெண்ணிடமே விசாரித்தான். எப்போதும் இங்கு இட்லிமாவு விற்பவர்கள் வரவில்லையா?" என்று கேட்டான் அறிவு. ஒரு மாதிரியாக ஏறிட்டு அறிவைப் பார்த்த அந்தப்பெண் " இனிமேல் அவர்கள் வரமாட்டார்கள், நான் தான் இனி இந்த இடத்தில் இட்லி மாவு விற்பேன் " என்றார். "ஏன் வரமாட்டார்கள் ? " என்றான் அறிவு . "நாலு நாளுக்கு முன்னாடி இந்த இடத்திலே இட்லி மாவு விற்கும் பொம்பளை செத்து போச்சு " என்றவுடன் அறிவுக்கு தூக்கி வாரிப்போட்டது. எப்படி, என்ன என்று விசாரித்த அவன் இறப்பு வீட்டிற்கு விசாரித்துச்சென்றான். அந்த 6-ம் வகுப்பு படிக்கும் பெண் , இவனை அடையாளம் கண்டு கொண்டு அவளது தந்தையிடம் சொல்ல, வெளியில் வந்த அவரிடம் , அவரின் மனைவி இறப்பைப் பற்றி அறிவு விசாரித்தான்.

அழுகையும் கண்ணீருமாய் நடந்த நிகழ்வுகளைச்சொன்னார். நாலைந்து நாளில் எல்லாம் தலை கீழாக மாறிப்யோயிடுச்சு சார். இந்தப்பிள்ளைகளை எப்படி நான் மேலே கரை சேர்க்க? கொசு எப்பவும் கடிக்கிற இடம்தான். சில நாள் கொசுவத்திச்சுருள் எல்லாம் காலையில் பொருத்தி வைப்போம்.எப்படி வந்தது , எதனால் வந்தது என்று தெரியவில்லை. மிகுந்த காய்ச்சல் என்று ஆஸ்பத்திருக்குப்போனாம். டெஸ்ட் எல்லாம் எடுத்து விட்டு டெங்கு காய்ச்சல் என்றார்கள். முத்தி விட்டது, முதலில் வந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று சொல்லி டாக்டருகளும் கைவிட்டு விட்டார்கள். பட்டுன்னு போயிட்டாலே சார் இப்படி ? என்று அவர் அழுக, அழுக அறிவுக்கும் அழுகை வந்தது. சேர்ந்து இவனும் அழுதான். அந்த 4-வது படிக்கும் பெண் பக்கத்தில் வந்து அழும் அறிவையே பார்த்துக்கொண்டே இருந்தது. அவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு வெளியில் வந்து வீட்டிற்கு வந்த பின்பும் மனது வலித்துக்கொண்டேயிருந்தது. எப்போதும் துயரம் அதிகமாக இருக்கும் நேரங்களில், ஏதேனும் நல்ல புத்தகத்தை எடுத்து வாசிப்பது அறிவின் வழக்கம். மேசை மேல் எப்போதே வாசித்த ராகுல்ஜியின் 'வால்கா முதல் கங்கை வரை " புத்தகம் இருந்தது. எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.

பழங்கால மனிதர்களின் நிச்சயமில்லாத வாழ்வை சுவை பட விவரித்திருந்தார் ராகுல்ஜி. மனிதர்கள் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்த காலம். இன்றைய சொத்துக்கள், தனி உடமை, பண்ம போன்றவை இல்லாத காலம். மனிதர்கள் மண்ணை எனது , உனது என்று பிரித்துக்கொள்ளாத காலம். தாய்வழிச்சமூகமாய், பெண்கள் மனிதர்களை வழி நடத்திய காலம். ஒரு தாய் தலைமையில் மொத்தமாய் வேட்டைக்கு போய்விட்டு திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில் , திடீரென்று பாய்ந்து வந்த ஓநாய்கள் , குழுவில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணைப் பிடித்துக்கொள்ள, அவளை மிருகத்திடமிருந்து காப்பாற்ற முயன்று மீட்கமுடியாத நிலையில், ஓநாய்கள் அந்தப்பெண்ணின் தசைகளை பிச்சு, பிச்சு திண்ண ஆரம்பிக்க, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அந்த இளம்பெண்ணை அப்படியே விட்டுவிட்டு , குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஓட்டம் ஓட்டமாய் ஓடுவதை சில பக்கங்களில் விவரித்திருந்தார் ராகுல்ஜி. மனக்கண் முன்னால் அந்த நிகழ்வு நிகழ்வதை கற்பனை செய்து பார்த்தான் அறிவு. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்கள், இன்றைய நவீன வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் இருந்த மனிதர்கள் , தங்களோடு இருக்கும் ஒரு உயிர் ஓநாய்களிடம் வசப்பட்ட நிலையில் எப்படி தப்பித்து ஓடி தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் .ஓநாய்கள் இளம்பெண்ணைக் கொன்று அவளது தசைகளைத் தின்றுகொண்டிருக்க, பெண்கள், ஆண்கள், குழந்தைகள் அந்த ஓநாய்களிடம் இருந்து தப்பித்து ஓடுவதை, ஒரு சாண் வயிற்றை நிரப்ப படும்பாட்டை விவரித்திருந்தார் ராகுல்ஜி. ஆண்டாண்டு காலமாய் மனிதர்கள் , வயிற்றை நிரப்புவதற்காக படும்பாடு.... அன்றைக்கு காட்டு மிருகங்கள், இன்றைக்கு நாட்டு மிருகங்கள், கொடிய நோய்கள் மனித உயிர்களைப் பறிக்கின்றன என்று நினைத்துக்கொண்டே தூங்கிப் போனான்.

இரண்டு நாளில் மீண்டும் அந்தப் பகுதிக்கு சைக்கிளில் வந்த போது காலை 6 மணி. இறந்த பெண்ணின் கணவர் இட்லி மாவைத் தள்ளிக்கொண்டுவர, அந்தப் பச்சைப் பெண் பிள்ளைகள் இரண்டு பேரும் தண்ணீரும் வாளியும் கொண்டு , அந்த இட்லி மாவு விற்கும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தார்கள். இறந்த ஒரு வாரத்திற்குள் மீண்டும் மாவு விற்க வந்து விட்டார்களே என்று எண்ணிக் கொண்டு அருகில் சென்றான். " அண்ணா, எப்போதும் போல எங்களிடம் மாவு வாங்குங்கள் " என்று மழலைக் குரலில் அந்த சின்னப்பெண் கூற, அவளின் அப்பா " எங்களுக்கு இந்தத் தொழிலை விட்டால் வேறு தெரியாது சார். பெரிய சம்பாத்யம் எல்லாம் ஒன்றுமில்லை. காலையில் மாவு , மாலையில் மாவு விற்பதுதான் தொழில். அதில் கிடைப்பதை வைத்துத்தான் அன்றாடம் சாப்பாடு. முந்தி இடைப்பட்ட நேரத்தில் நெய்வோம். இப்போ அந்தத் தொழிலும் நசிஞ்சு போச்சு. நான் சாப்பிடணும், அதுக்கு மேலே இந்தப்பிள்ளைகள் இரண்டும் சாப்பிடணும். மகராசி, எப்படி இட்லி மாவுக் கடையை நடத்துறதுன்னு சொல்லிக்கொடுத்துப் போயிருக்கா, நாங்க தொடர்ந்து இந்த மாவை வித்தாத்தான் வாழ முடியும்.இந்த இடத்தை வேறு யாரும் பிடித்துக்கொண்டால் நான் போய் சண்டை போடுவதெற்கெல்லாம் சத்தும் இல்லை, மனசில் தெம்பும் இல்லை " என்று சொன்னபோது ராகுல்ஜியின் வால்கா முதல் கங்கை வரை கதைதான் மனதில் ஓடியது. இட்லி மாவு வாங்க இதோ போய் பாத்திரம் எடுத்து வருகின்றேன் என்று சொல்லிவிட்டு வீட்டை நோக்கி சைக்கிளில் வந்து கொண்டிருந்தான் அறிவு

                                 *************************************











நன்றி : எழுத்து. காம்.

Wednesday, 20 August 2014

இந்நாள்: நரேந்திர தபோல்கர் நினவு நாள்


இன்று டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் 10-வது நினைவு நாள். இன்றுவரை அவரைக் கொலைசெய்த இந்துத்துவ தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை கொடுக்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் பகுத்தறிவாளர் கழகம்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி தோழர்கள் இணைந்து 'அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நாளாக கூட்டங்கள் நடத்துகின்றனர். இந்த மாதம் 31வரை இந்தக் கூட்டங்கள் நடக்க இருக்கிறது. 'போராளிகள் புதைக்கப்படுவதில்லை,விதைக்கப்படுகிறார்'.அறிவியல் மனப்பான்மையை வளர்த்தத்தற்காக கொல்லப்பட்ட டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களுக்கு  வீரவணக்கம்.








2014-வருடத்திய எனது பதிவு:

நரேந்திர தபோல்கர்- மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய களப்போராளி. சாமியார்கள் என்ற போர்வையில் நடமாடும் மனிதர்களின் முகமூடிகளைக் கிழித்தெறிய தன் வாழ்க்கையை  அர்ப்பணித்துக்கொண்டவர். அதனாலேயே தன் உயிரை இழந்தவர். இன்று (20.8.2014) அவரின் முதலாம் ஆண்டு  நினைவு நாள். இன்னும் அவரைக் கொன்ற குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அகில இந்திய நாத்திகக் கூட்டமைப்பில்( The Federation Of Indian Rationalist Association) அகில இந்திய உதவித் தலைவராகப் பணியாற்றியவர். சென்னையில்  நடைபெற்ற அகில இந்திய நாத்திக மாநாட்டில் கலந்து கொண்டு பணியாற்றியவர். கொண்ட கொள்கைக்காக இறுதி மூச்சுவரை பாடுபட்ட அவரை சில பிற்போக்குவாதிகள் கொன்றுவிட்டதால், அவரின் கொள்கைகளைப் புதைத்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கின்றார். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் போல, இந்தியா முழுமைக்கும் கொண்டுவர பாடுபடுவதே அவருக்கு நாம் செலுத்தும் வீரவணக்கமாக் இருக்கும். ந்ரேந்திர தபோலகர் பற்றிய செய்தியை இன்றைய(20.8.2014) விடுதலையும், ஆங்கில இந்து நாளிதழும் வெளியிட்டுள்ளன. அந்த பகுத்தறிவாளரை நினைவுகூர்ந்த பத்திரிக்கைகளுக்கு நன்றி. 



இந்நாள்: நரேந்திர தபோல்கர் (01.11.1945 - 20.08.2013)



மூடநம்பிக்கைக்கெதிரான போராளி நரேந்திர தபோல்கர் கடந்த ஆண்டு இதே நாளில் அதிகாலை நடைபயிற்சிக்காக சென்று கொண்டு இருந்தபோது துப்பாகியால் சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இந்தப் படு கொலை, நம்பிக்கைக்கும் அறிவாராய்ச்சித் திறனுக்கும், பகுத்தறிவு வாதத்திற்கும் இருண்மை வாதத்திற்கும் இடையே, நமது தேசத்தில் தொடரும் யுத்தத்தையே பிரதிபலிக்கிறது. நாகரீகம் தொடங்கிய காலந்தொட்டு ஆளும் வர்க்கங்கள் அந்தந்த காலகட்டங்களில் தங்க ளது எண்ணங்கள் மற்றும் ஒட்டு மொத்த சமுதாய உணர்வு நிலைகள் மூலம் சமூகத்தைக் கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செய்து வருகின்றன.
இச்சவாலை எதிர்கொண்டதன் விளைவாக தபோல்கர், மூடநம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, இருண்மைவாதம் ஆகியவற்றின் மூலம் கொள்ளை லாபம் ஈட்டிய கும்பலின் சீற்றத்திற்கு உள்ளானார்.
தனிநபர் பிரச்சினைகள் முதல் உடல் நலம் குறித்த பிரச்ச னைகள் வரை மூடப்பழக்கங்களே தீர்வுகளின் அடிப்படையாக மாறி விடுகின்றன. இதைப் பற்றி எல்லாம் பெரிதாகக் கண்டு கொள் ளாதவர்கள்  விடுத்லை நாளேடு போன்ற பகுத்தறிவையே முக்கிய நோக்கமாக கொண்டு வெளிவரும் நாளிதழை படித்துப் பார்க்க வேண்டும். நாடு முழுவதிலும் உள்ள மூடநம்பிக்கையில் மோசமான செயல்பாடுகள் குறித்து நன்கு தெரிந்து கொள்ள அது உதவும். ஜாலவித்தைகள் புரியும் வணிகர்கள் எந்த அளவிற்கு சொத்துக்களைக் குவித்து பிரம்மாண்டமான சாம்ராஜ்யங்களை உருவாக்கியுள்ளனர் என்பது குறித்தெல்லாம் அறிந்து கொள்ள முடியும்.

அரசியல் அமைப்பின் பிரிவு 51A (h), அறிவியல் உணர்வு, மனிதநேயம், தேடல் கொண்ட அறிவு மற்றும் சீர்திருத்தப் பாங்கு போன்றவற்றை குடிமக்களிடம் வளர்ப்பது அரசின் கடமை என்று கூறுகிறது. இத்தகு மாண்புகளின் அடிப்படையில் கல்வித் திட்டங்கள் உருவாக்கப்படவில்லை எனில் இந் நாட்டில் எந்த ஒரு குடிமகனும் தன் கட மையைச் செவ்வனே செய்ய இயலாது. ஒரு பல்கலைக்கழகம் என்பது மனிதநேயம், சகிப்புத் தன்மை, அறிவாராய்ச்சி, புதுமையான கருத்துக் களின் எழுச்சி, உண்மையைத் தேடும் இலட்சியம் போன்றவற்றிற்காக செயல் படுதல் வேண்டும். மனித குலத்தை இவற்றைவிட உயரிய இலக்கு களை நோக்கி அழைத்துச் செல்லும் பயணத்திற்கு அவை உதவ வேண்டும்.
நமது கல்விமுறை இவ்வகையில் நுட்ப மாக வடிவமைக்கப் படவில்லை எனில் அறிவியல் கண்ணோட்டத்திலும், பகுத்தறிவாற்ற லிலும் நாம் வெற்றி பெற இயலாது என் பதையே தபோல்கரின் படுகொலை நமக்கு உணர்த்துகிறது.
சமூக சீர்திருத்தங்களுக்கான பிரச்சாரங்களை நடத்துகிற அதே வேளையில், மூடப்பழக்க வழக்கங்கள் பரவுவதற்கு துணை நிற்கும் மக்களின் பின் தங்கிய வாழ்நிலை யினை மேம்படுத்து வதையும் உறுதி செய்ய வேண்டும். இருண்மை வாதம் என்பது, ஒரு சில நல்ல எண்ணம் கொண்டோர் மட்டுமே போராடக்கூடிய சிறிய பிரச்சினை அல்ல. நமது அரசியலமைப்பின் பகுத்தறிவார்ந்த அடித்தளத்தை அது நேரடியாக கேள்விக்குள் ளாக்கும் நிலையில், அதை எதிர்த்துப் போரா டுவது நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும்
நன்றி : விடுதலை -20.8.14

Dabholkar, dissent and democracy

Anti-superstition campaigners will not only pay tribute to Narendra Dabholkar, their acclamation will also be an indictment of the government’s utter failure to find his killers

At 7.20 a.m. on August 20, supporters of the courageous and gritty rationalist Narendra Dabholkar will gather near the Omkareshwar Temple in Pune, where he was gunned down while on a morning walk exactly a year ago. Through street plays and songs, anti-superstition campaigners will pay tribute to one of India’s foremost critics of charlatan godmen and black magic.
The tribute will also be an indictment of the government’s utter failure to find his killers. Dr. Dabholkar’s daylight murder was initially probed by the Congress-Nationalist Congress Party government in Maharashtra and then transferred to the Central Bureau of Investigation (CBI). So far it has yielded nothing.
Ironically, a month ago, Outlook magazine ran an investigation claiming that the Pune police had resorted to planchet and tantriks to trace the killers of the very man who had opposed such forces all his life. The police have denied this and have even threatened a defamation case.
However, there is widespread disillusionment with both the Centre and the State’s inability to push the probe. “It is very distressing. We are hurt and anguished. Are they trying to hide something and shield someone?” asks his son Hamid Dabholkar. “There were groups which had consistently been attacking and defaming him. They had filed many cases against him. The investigation should have focussed on that,” he emphasises.
Dabholkar’s legacy

Dr. Dabholkar was both fearless and relentless in his single-minded drive against blind faith. He had braved vilification and death threats, even physical attacks. His programmes were routinely disrupted.
Yet, he continued to challenge godmen, often on their own turf surrounded by mobs of followers. His targets included the influential Sathya Sai Baba and his claims of producing “miracle ash” out of thin air.
In the late 1990s, Dr. Dabholkar had taken on Ratnagiri’s Narendra Maharaj at his own ashram. The godman, who claimed miracle cures for ailments, arrived with 20,000 followers for a tense face-off with Dr. Dabholkar and his group of 15. Narendra Maharaj finally conceded defeat after a debate monitored by an anxious District Collector.
In 2000, Dr. Dabholkar led a massive campaign demanding the entry of women into the Shani Shingnapur temple trust in Ahmednagar. The issue finally ended up in court.
Hindu right-wing groups were among his fiercest critics, mainly the Hindu Janjagruti Samiti and Sanatan Sanstha. Both organisations have vehemently denied any hand in his murder. However, the Sanatan Sanstha proclaimed in an editorial just a day after the murder that it was “God’s wish.” One member of the organisation was briefly questioned by the police before being let off for lack of evidence.
Dr. Dabholkar’s greatest victory — a law against superstition and black magic — came posthumously, after a dogged 18-year struggle. One day after he was killed, the Maharashtra government cleared an ordinance, and in December 2013, a law against superstitious practices.
The Maharashtra Prevention and Eradication of Human Sacrifice and other Inhuman, Evil and Aghori Practices and Black Magic Act, 2013 is a diluted version of the ambitious draft Dr. Dabholkar had championed. It does not allow third parties to lodge complaints. Only the affected party has that right.
However, the law has already had a massive impact with nearly 80 cases being registered across the State in less than a year. These include cases against human sacrifice, the sexual exploitation of women by local godmen and the fleecing of the gullible by promises of instant wealth. However, the cases have mostly come to the Maharashtra Andhashraddha Nirmoolan Samiti (MANS) set up by Dr. Dabholkar and then been registered with the police.
“In the last year, we have received nearly one such complaint daily,” says MANS working president Avinash Patil. The survival of the organisation, founded nearly three decades ago, has been critical to continuing his campaign.
The deceptively gentle activist had built a robust movement across all the districts in the State, drawing on students and volunteers to propel the battle against superstition. Even today, MANS has nearly 250 branches and 5,000 volunteers. “Sustaining the organisation was a challenge. With his death we lost our security cover. But we have survived and passed the test,” says Mr. Patil.
The perils of activism

Dr. Dabholkar was well aware of the risks he faced by questioning obscurantism in a country steeped in superstition. “In this movement, even expressing a thought is sometimes a fight,” he would say. Indian rationalists have long walked a vulnerable path, even though under our “Fundamental Duties”, citizens are obliged to “develop a scientific temper, humanism and the spirit of inquiry and reform.”
Yet it’s not only rationalists who have the odds stacked against them. Whistle-blowers who have exposed corruption, now increasingly through the Right to Information (RTI) Act, have been targeted, sometimes paying with their lives.
Close to Pune city itself, RTI activist Satish Shetty was murdered in 2010. Last week the CBI filed a closure report in the case saying it had not found evidence against any of those accused of his murder. The probe into his father’s killing, Hamid Dabholkar feels, fits into this larger pattern.
“This is an issue which goes beyond my father. If voices which stand for social causes are silenced and no action is taken against the perpetrators, it is an attack on democracy,” he says. And on simple rational thinking itself.
priyanka.k@thehindu.co.in 

Nantri : THE HINDU

Tuesday, 12 August 2014

அணமையில் படித்த புத்தகம் : தூங்காமல் தூங்கி -டாக்டர் S.மாணிக்கவாசகம்



அணமையில் படித்த புத்தகம் : தூங்காமல் தூங்கி
                                             (ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை)
புத்தக் ஆசிரியர்           : டாக்டர் S.மாணிக்கவாசகம்
பதிப்பகம்                       : சந்தியா பதிப்பகம், சென்னை-600 083
முதற்பதிப்பு                 :  2008
மொத்த பக்கங்கள்    : 96 , விலை ரூ 50
நூலக எண்                  : 172987

                                35 ஆண்டுகள் மயக்க இயல் மருத்துவராகப் பணியாற்றிய மருத்துவரின் வாழ்க்கை நிகழ்வுகள் அவராலேயே சொல்லப்பட்டிருக்கின்றன. சொந்தக் கதை என்றாலும் இலக்கியமும் , தத்துவமும் , வாழ்வியலும் கலந்த இலக்கியக் கதையாகச்சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கை.

                            நானும் 2,3 அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கின்றேன்.. மயக்க இயல் மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை மருத்துவரோடு நிற்பார். ஆனால் அந்த மயக்க இயல் மருத்துவர் எவ்வளவு முக்கியமானவர் என்பது இந்தப் புத்தகத்தைப் படித்தபின்பு மிகத் தெளிவாக விளங்குகின்றது. மருத்துவப்பட்டப்படிப்பில், மதுரையில் படித்த புத்தகங்கள் பற்றிய அவரின் விவரிப்பு வியப்பைத்தருகின்றது. அந்த ஆழ்ந்த புத்தகப்படிப்புத்தான் , பணி ஓய்வுக்குப் பிறகு அமெரிக்காவில் அமர்ந்து இப்படி ஒரு தன் வரலாற்று நூலை எழுத அடித்தளமாக இருந்திருக்கும் போலும்.

                             தூக்கம் வரும் என்னும் பகுதியில் ஒரு மாமி சொல்லும் வார்த்தைகளோடு ஆரம்பித்து, தான் பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு மருத்துவமனையில் , மயக்க இயல் மருத்துவராக சேர்ந்த நிகழ்வைச்சொல்கின்றார், நடுவயதுப்பெண்ணுக்கு ஏற்பட்ட மரணம், மருந்தைக் குடித்த பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மாணவனின் மரணம் போன்ற நிகழ்வுகள் ஆரம்ப கட்டங்களில் எவ்வளவு வேதனையைக் கொடுத்தது, இந்த மருத்துவ தொழிலையே விட்டுவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு தன்னைப் பாதித்த நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளார். இனி பிழைக்க வாய்ப்பே இல்லை என்று எண்ணப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி பிழைத்ததன் மூலம் கிடைத்த மன நிறைவு, மனதையே மாற்றிய நிகழ்வு எனக் குறிப்பிடுகின்றார்.

                                 குடும்பவாழ்க்கையை ஏற்றுக்கொண்டு, மேல்படிப்பையும் முடித்துவிட்டு தான் தொடர்ந்த  மய்க்க இயல் மருத்துவ அனுபவங்களைத்தொடர்ந்து சொல்கின்றார். "Sleep apnoea Syndrome"   உள்ள ஒரு நோயாளியைக் காப்பாற்றிய நிகழ்வையும் , நோயாளியின் தந்தையைப் பற்றியும் விவரித்துள்ள பாங்கு அருமை.

                                குத்தப்பட்ட பெண்ணும், குத்தியவனும் மருத்துவமனையில் சேர்ந்ததையும், அந்த இளம் பெண் இறந்ததையும் அந்த ஆண் பிழைத்ததையும் குறிப்பிட்டு அந்த இரண்டு குடும்பங்களில் நிகழ்ந்த மனமாற்றங்கள், பழிவாங்கும் உணர்வுகள் போன்றவற்றை ஒரு சிறுகதைபோல விவரித்துள்ளார்.

                                                                         தன்னுடைய ஆசிரியரின் மனைவிக்கு மருத்துவம் பார்த்ததை எழுதுகிறபோது , அந்த ஆசிரியரைப் பற்றி விவரிக்கும்போது , எப்படிப்பட்ட ஆசிரியர் எல்லாம் இருந்திருக்கின்றார்கள் என்று உணர்கின்றோம். கணக்கு ஆசிரியர், ஆங்கிலப்பாடங்களில், தமிழ்ப்பாடங்களில் இருக்கும் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார். தனக்கு தமிழ் கவிதைகளில் ஆர்வம் வந்ததற்கு அந்த ஆசிரியர்தான் காரணம் என்பதனை " அவனுக்குத் தமிழ்க் கவிதைகளை ரசிக்க நாக்கில் சீனித் தண்ணி தொட்டு வைத்தவரே அவர்தான். " பக்கம் 57 , இறுதித்தேர்வின்போது, கூடப்படிக்கும் பையனின் தகப்பனார் இறந்துபோக, அவனை அழைத்துச்சென்று தேர்வு எழுதவைத்து, மீண்டும் வீட்டிற்கு அழைத்துவந்ததை, அவர் இன்று பி.ஹெச்.டி பட்டம் பெற்று உயர் நிலையில் இருப்பதையும் அவர் அமெரிக்காவில் இருந்து வரும்போதெல்லாம் அந்த ஆசிரியரைப் பார்ப்பதையும் எழுதி, கடைசியில் அவர் மனைவி இறந்தபோனதையும் ,அது எந்தப் பிழையால் நிகழ்ந்தது என்பதை அறிய முடியாததை அவருக்கே உரித்தான பாணியில் மருத்துவர் மாணிக்கவாசகம் குறிப்பிடுகின்றார்.

                            ஒரு வயதான பாட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதையும், அவரைக் கவனிக்க விருப்பமில்லாத பணக்கார மகன்கள் பற்றியும், பாட்டியைக் கவனித்துக்கொண்ட வேலைக்காரப் பெண்மணி பற்றியும் , கடைசியில் அந்தப்பாட்டி இறந்து போனதையும் , அந்தப்பாட்டிக்காக வேலைக்காரப்பெண் மட்டுமே அழுததையும் குறிப்பிட்டு கடைசியில் ,
'இது ஒரு மனிதக் காட்சி சாலை
பால் குடித்த மிருகங்கள் அவ்வப்போது
வந்து போகும்
" என்று முதியோர் இல்லம் பற்றி எழுதப்பட்ட வரிகள் ஞாபத்திற்கு வந்தது என்று முடிக்கின்றார். கடைசி பகுதியில் தன்னுடைய தந்தையின் மரணம் பற்றியும், தன்னுடைய தாயின் மரணம் பற்றியும் விவரிக்கின்றார் இயல்பான நடையில்.

                               முடிவாக 40 ஆண்டுகளுக்கு முன்னால் மருத்துவ மாணவர்களாக இருந்தவர்கள், ஒன்று கூடிய நினைவுகளின் பகிர்வு மிக நன்றாக உள்ளது. காண்டேகர் தன்னுடைய இருமனம் என்னும் நாவலில் குறிப்பிட்ட சுந்தரம் போல கல்லூரிக் காலத்தில் பேசியதிற்கு முற்றிலும் மாறாக வாழும் தன்னுடன் படித்தவர்களைக் குறிப்பிடுகின்றார். முடிவில் தன்னுடைய மனைவியும், குழந்தைகளும் எவ்வளவு தூரம் தங்கள் நேரங்களைத் துறந்தார்கள், ஒத்துழைத்தார்கள் என்பதனைச்சுட்டுகின்றார்.

                                        மருத்துவப்பணியில் நிறைவாக, அடுத்தவர்களின் வாழ்க்கைக்காக உழைத்த உழைப்பை மிக நேர்மையாகவும் , இலக்கியமாகவும் பதிவு செய்திருக்கின்றார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் எஸ். மாணிக்கவாசகம் அவர்கள், 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மருத்துவம் பற்றியும் , இன்று கணினி வந்ததால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் விவரித்திருக்கின்றார். மருத்துவம் என்பது மனம் சார்ந்தது, அதுவும் தொண்டற மனப்பான்மையோடு அணுகினால் எவ்வளவு புகழும், மன நிறைவும் கிடைக்கும் என்பதற்கு இவரின் வாழ்வின் நிகழ்வுகள் எடுத்துக்காட்டு. பல தமிழர்கள் ,இப்படித் தங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைப் பதிய வேண்டும். பல்பேருக்கு அது முன்னுதாரணமாக அமையும். நூலைப் பற்றிய சி.கல்யாணியின் 'அயல் முகங்கள் மீது விழும் மனிதாபிமான நிழல் ' என்னும் அணிந்துரையும் நன்றாக அமைந்துள்ளது.  மிக நல்ல ஒரு புத்தகத்தை வாசித்த மன நிறைவு எனக்கு இன்று
இணையத்தில் பார்த்தபொழுது இரண்டாம் பதிப்பும் கண்டுள்ளது இந்தப்புத்தகம். இன்னும் பல பதிப்புகள் வரக்கூடிய புத்தகம்..

                              

Monday, 11 August 2014

அண்மையில் படித்த புத்தகம் : மண்ணும் பெண்ணும்-பாலு மணிவண்ணன்

அண்மையில் படித்த புத்தகம் : மண்ணும் பெண்ணும்
நூலின் ஆசிரியர்                          : பாலு மணிவண்ணன்
பதிப்பகம்                                         : பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14
முதற்பதிப்பு                                   : டிசம்பர் 2008.
மொத்த பக்கங்கள்                      : 163
மதுரை மாவட்ட மைய நூலகம் எண் : 181541

                            பெண்கள் நிலைமை பற்றிப் பேசும் புத்தகம். பொத்தாம் பொதுவாக இல்லாமல், மிக நுட்பமாக நமது நாட்டில் பெண்கள் நிலைமை குறித்து நிறைய கேள்விகளை எழுப்புகின்ற புத்தகம். 'பெண்ணே நீ ' என்ற இதழில் திரு. பாலு மணிவண்ணன் அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்தப் புத்தகம். மொத்தம் 34 கட்டுரைகள், எல்லாக்கட்டுரைகளின் மையப்புள்ளியாக ஏன் இந்த நிலைமை பெண்களுக்கு என்னும் குரல் இருக்கின்றது.
                              பெண் நிலமாக இருக்கிறாள் என்னும் மனுநீதி எப்படி பெண்களுக்கு அநீதியைக் கருத்துக்களால் விளைத்திருக்கிறது என்பதனை முதல் 3 கட்டுரைகளில் குறிப்பிடுகின்றார். "பெண் என்ன கணவனின் உடமையா? 'ஷாப்பிங் கேர்ளா'? பாலியல் பாவையா? உரிமையற்றவளா ? " என்னும் தலைப்புகளில் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணிற்கு ஒரு நீதி என இருப்பதை புளளி விவரங்களோடு சுட்டிக் காட்டுகின்றார்.பெண்களுக்கு 33 சத வீத இட ஒதுக்கீடு பாராளுமன்றத்தில் என்பது இன்னும் கானல் நீராகவே இருப்பதை 8 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியிருக்கின்றார். இன்னும் கானல் நீராகத்தான் இருக்கின்றது.

                        "படைப்பின் சாரம் ஆண்/ ஆணின் சாரம் பெண் / "  என்னும் கவிஞர் அப்துல் ரகுமானின் கவிதை ஆண்களின் கட்டுக்கதைகளுக்கு எப்படித்துணை போகின்றது என்பதனையும், தாய்வழிச்சமூகம் எப்படி ஆண்களின் சூழ்ச்சிகளால் தந்தை வழிச்சமூகமாக மாறியது, அதற்கு மதங்கள் எப்படித் துணை புரிந்தன என்று விவரிக்கின்றார்.
                        திருமணத்திற்காகத் தயாரிக்கப்படும் பொம்மையாகத்தான் பெண்ணின் வளர்ப்பு இருக்கிறது என்பதனையும், குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தில் கூட எப்படி ஆண்கள் தப்பித்துக்கொள்கின்றார்கள் என்பதனை விவரிக்கின்றார். பூப்புனித  நீராட்டு விழா என்னும் சடங்கு ஒரு சிறு பெண்ணை எப்படியெல்லாம் உளரீதியாகக் காயப்படுத்துகிறது, அவமானப்படுத்துகிறது என்பதனைச்சுட்டுகின்றார்.திரைப்படங்கள் எப்படியெல்லாம் பெண்களை இழிவுபடுத்திக் காட்டுகின்றன, ஆணுக்கு ஒரு நீதி , பெண்ணுக்கு ஒரு நீதி எப்படி என்பதனை இரண்டு திரைப்படங்களை எடுத்துக்கொண்டு ஒப்பிட்டு உண்மையைக் கூறுகின்றார்.

                       பெரும்பாலான ஏழைகள்(70 %)  பெண்கள் என்பதையும், அமைப்பு சாரா தொழிலாளிகளில் 85 % பெண்கள் என்பதையும் சுட்டி ஏன் இந்த நிலைமை என்னும் காரணங்களைப் பட்டியலிடுகின்றார். பெண்கள் முன்னேற்றத்திற்கு அமெர்த்தியாசென் காட்டும் 5 வழிகளைக் குறிப்பிடுகின்றார். குடும்பங்கள் பல பெண்களுக்கு வன்முறை நிகழ்த்தப்படும் இடமாக அமைவதையும், புராணங்களில், கதைகளில் பெண்கள் குடும்பம் என்ற பெயரால் கொடுமைகளுக்கு உள்ளானதைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.

                      இப்படிப்பல்வேறு கோணங்களில் பெண்களின் உரிமை பறிக்கப்படுவதைக் கூறும் இந்தப்புத்தகத்தின் ஆசிரியர், பெண் என்ன பாதை தெரியாதவளா என்னும் கடைசி கட்டுரையில் அவருக்கும் அவரது நண்பருக்கும் இடையில் நடக்கும் பெண்ணியம் பற்றிய உரையாடலைக் குறிப்பிடுகின்றார். பெண்ணியத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கும் நண்பரிடம்
1. ஆண் , பெண்களின் மரபு சார்ந்த சிந்தனைகளில் புதிய பார்வையைப் புகுத்த வேண்டும்.
2. ஆண், பெண் உறவுகளில் சமத்துவப்போக்கை வளர்க்க வேண்டும்.
3. குடும்ப அமைப்பை முற்றிலும் ஜன நாயகப்படுத்த வேண்டும்.
4. பெண்ணுக்கு பொருளாதார சுதந்திரமும் அரசியல் அதிகாரமும் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.

                         "சமூகத்தளத்திலும், அரசியல் தளத்திலும் (ஆணும் பெண்ணும் சமம் என்பதனை) அதனை நடைமுறைப்படுத்தி முன்னுதாரணமாகத் திகழ்நதவர் தந்தை பெரியார். 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில், ' கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்த பெண்கள் அனைவரும் வருக ' என்று விளம்பரப்பலகை எழுதி வைக்கச்சொன்னார். அது அன்றைய காலகட்டத்தில் ,சமூக அங்கீகாரத்தை சவுக்கால் அடித்து வரவழைத்து, அதனை பெண்களுக்குப் பெற்றுத்தந்த முதல் அடி , மேலும் பெரியார் நடத்திவைத்த சுயமரியாதைத் திருமணங்கள் , ஆண்களிடமிருந்து சம அந்தஸ்தைப் பிடுங்கி பெண்களுக்கு வழங்கிய அதிரடி "  பக்கம் (161) என்று குறிப்பிடும் இந்தப்புத்தகத்தின் ஆசிரியர் பாரதியின் பங்களிப்பு பற்றியும் , பொதுவுடமை இயக்கங்களின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிடுகின்றார்.

                       பின் அட்டையில்  ": ஆண்மை என்ற தத்துவம் பெண்களால் அழிக்கப்பட்டாலல்லது 'பெண்மை'க்கு விடுதலையில்லையென்பது உறுதி எனும் தந்தை பெரியாரின் பெண்ணியச்சிந்தனைகளைத் தமது படைப்புகளில் வெளிப்படுத்தி வரும் பாலு மணிவண்ணன் ...: என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மைதான். பெரியாரியல் கண்ணாடியைப் பயன்படுத்தி இந்த நூலைப் படிக்கும்போது ,  எளிமையாக -பெண் ஏன் இன்னும் அடிமையாக இருக்க வேண்டும் ? என்னும் உணர்வை எழுப்பி, பெண்களே ஒன்று சேர்ந்து போராடுங்கள் என்னும் போராட்டக்குரலை ஒலிக்கும் புத்தகமாகவே எனக்கு இந்தப்புத்தகம் தோன்றுகிறது

                        

Sunday, 10 August 2014

கையில் ஒரு கவிதைப்புத்தகம்......

கையில் எப்போதும்
ஒரு கவிதைப்புத்தகம்
இருப்பது வசதிதான் !

பேருந்துக்காக
காத்திருக்கும் வேளைகளில்
சில மனிதர்களோடு
பேச்சினைத் தவிர்க்க
நினைக்கும் நேரங்களில்
கோபத்தால் மனம்
கொந்தளிக்கும் சூழல்களில்
கையில் கவிதைப் புத்தகம்
இருப்பது வசதிதான் !

அவர் எழுதியது
இவர் எழுதியது
தெரிந்தவர் எழுதியது
தெரியாதவர் எழுதியது
என எவரோ, எங்கேயோ
எழுதிய ஒரு
கவிதைப் புத்தகம்
கையில் இருப்பது
வசதிதான் எப்போதும் !

மழைக்குப் பிடிக்கும்
குடைபோல
மனதிற்குப் பிடிக்கும்
இதமான வார்த்தைகள்
சுருக்கென்று தைக்கும்
உண்மைகள்
நறுக்கென்று தைக்கும்
உவமைகள்
வாய்விட்டுச்சிரிக்க
வைக்கும் வசவுகளால்
நிறைந்து இருக்கும்
கவிதைப் புத்தகங்கள்
மட்டுமல்ல

உண்மையும் இல்லாமல்
உவமையும் இல்லாமல்
அவருக்கு நன்றி சொல்லி
இவருக்கு நன்றி சொல்லி
எழவு -இந்தப் புத்தகத்தில்
என்ன இருக்கிறது?
இதையெல்லாம் ஒரு
கவிதைப் புத்தகமாக
வெளியிட்டு விளம்பரம்
செய்யும் வேளையில்
நமது கையில் இருக்கும்
புத்தகம் பரவாயில்லை
என ஆறுதல்படுவதற்காகவாவது
கையில் ஒரு கவிதைப்புத்தகம்
இருப்பது வசதிதான் !!!!!!!!.

  • எழுதியவர் : வா. நேரு
  • நாள் : 10-Aug-14, 12:15 pm
  • நன்றி : எழுத்து.காம்
     

Saturday, 12 July 2014

முட்டுச்சுவரு - வா. நேரு

                                        முட்டுச்சுவரு  - வா. நேரு

அழுது அழுது மாரியின் கண்கள் எல்லாம் வீங்கி இருந்தன. அறுபது வயதைக் கடந்தவர் , இப்படி அழுகை கோலத்தோடு அவரைப் பார்த்தபொழுது தூக்கி வாரிப்போட்டது அரசுக்கு. " ஏன் இப்படி , இந்த நேரத்தில் , என்ன நிகழ்ந்தது ? " என்று அடுக்கடுக்காக அவரிடம் கேள்விகளைக் கேட்டான் அரசு. " ஏமாந்து விட்டேன் அரசு, ஏமாந்து விட்டேன் , பெத்த பிள்ளைகிட்டயே ஏமாந்திட்டேன், என் தலையிலே மண்ணை வாரிப்போட்டுட்டான் " என்ற போது அவரின் ஒரே மகன் வாசு எவளையும் காதலித்து , திருமணம் முடித்து விட்டானோ என்று அரசு எண்ணினான். காதல் திருமணம் என்றால் நாம் ஆதரவு தரும் ஆள் என்று எல்லோருக்கும் தெரியுமே, அப்படி ஒரு செய்தி என்றால் நம்மிடம் வரமாட்டாரே என்று நினைத்துக்கொண்டு " முதலில் அழுகையை நிப்பாட்டுங்கள், அப்புறம் சொல்லுங்கள் , எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம், இழவு வீட்டில் அழுவது போல் தயவு செய்து அழுகாதீர்கள் " என்றான் அரசு.

கொஞ்ச நாட்களுக்கு முன்னால்தான் பணி ஓய்வு பெற்றார் அரசுவோடு வேலை பார்த்த மாரி. அரசுக்கு மாரி பக்கத்து ஊர்க்காரர். ஒரே அலுவலகத்தில் உடன் இருந்தவர். . மாரி மிகப்பெரிய பதவி வகித்தவரல்ல. அலுவலகத்தில் கடை நிலை ஊழியராக வேலை பார்த்தவர். ஆனால் தான் கடை நிலை ஊழியர் என்றாலும் பிள்ளைகள் முதல் நிலை ஊழியராக வரவேண்டும் என்று படிக்கவைத்தார். ஒரு மகன், ஒரு மகள் என்றாலும் மகளை விட மகன் படிப்பில் மிகவும் அக்கறை காட்டினார். எல்.கே.ஜி-க்கே பல ஆயிரம் கட்டி மகனைப்படிக்கவைத்தார். அரசு தன் பிள்ளைகளைத் தாய்த்தமிழ்ப் பள்ளியில் மொட்டு, மலர் என்று சேர்த்து விட்டிருந்தார். ஒரு நாள் அரசுவிடம் மாரி,"உன் மகனுக்கு எவ்வளவு வருடக் கட்டணம் ? " என்றபோது அரசு "என் மகன் மொட்டு வகுப்பு படிக்கிறான் , அவனுக்கு வருடக்கட்டணம் ரூ 2000-" என்றபோது அரண்டு போனார். " என்ன, என் பிள்ளையை வருடக்கட்டணம் இருபத்தி ஐந்தாயிரம் கொடுத்து படிக்கவைக்கிறேன், நம்ம சுந்தரு வருடத்துக்கு 65000 பணம் கட்டி எல்.கே.ஜி.யில் படிக்க வைக்கிறார். என்னைவிட அதிகம் சம்பளம் வாங்குற ஆள் நீ, ஏன் இப்படி ? "என்றார். "எனக்கு அதிகக் கட்டணம் கொடுத்து படிக்க வைத்தால்தான் , நல்ல படிப்பு என்பதில் நம்பிக்கை இல்லை. நல்ல பள்ளிக்கூடம் என்பது கட்டணத்தில் இல்லை " என்றபோது மாரி அரசுவிடம் " போப்பா, இப்படித்தான் ஏதாவது ஏட்டிக்கு பூட்டியா ஏதாவது நீ சொல்லுவே, செய்யுவே " என்றார்.

மாரி தன் பிள்ளையின் படிப்பிற்காகப் பட்டபாட்டையெல்லாம் அரசு நன்றாக அறிவான். எல்.கே.ஜி.படிக்கும்போது அவனுக்கு ஆரம்பித்த செலவு கடந்த வருடம்தான் முடிந்தது. எல்.கே.ஜி. படித்த பள்ளிக்கூடத்திலேயேதான் வாசு பத்தாம் வகுப்புவரைக்கும் படித்தான். அவன் பத்தாம்வகுப்பு படிக்கும்போது அவனுக்கு பள்ளிக்கட்டணம் ஆயிரக்கணக்கில் கட்டிவிட்டு, டியூசனுக்கு என்று ஏகப்பட்ட பணத்தை செலவழித்தார். பின்பு பத்தாம் வகுப்பு விடுமுறையின்போதே, பதினொன்றாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு டியூசனுக்கு போகச்செய்தார்.பத்தாம் வகுப்பில் 70 சதவீதம் எடுத்த மகனை , அந்த நகரத்திலேயே மிகப்பெருமையாகப் பேசப்படும் மற்றொரு பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். அந்தப் பள்ளிக்கூடம் மாணவ், மாணவிகள் மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் என வருடந்தோறும் முதல் மூன்று ரேங்குகளுக்குள் வந்து கொண்டிருந்தார்கள். முதலில் க்ட்டிட நிதி என்று 10 ஆயிரம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் வாசு படித்த காலத்தில் ஒரு இல்ட்சம் என்று மாற்றி விட்டார்கள் . ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடையாகக் கொடுத்து அந்தப் பள்ளிக்கூடத்தில் போய் மாரி, மகனைச் சேர்த்து விட்டார். +2 -வில் மதிப்பெண் அடிப்படையில் நல்ல கல்லூரி கிடைக்கவில்லை என்று தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டு இலட்சம் பணம் கொடுத்து , பின்பு சுய நிதிக்கல்லூரி பிரிவில் அதிகமாகப் பணம் கட்டி சேர்த்து விட்டார். கோவைக்கு அருகில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த மகனின் வங்கிக் கணக்கிற்கு அடிக்கடி பணம் அனுப்பிக்கொண்டே இருப்பார். "ஏன் இவ்வளவு பணம் அடிக்கடி அனுப்பிகின்றீர்கள்" என்று கேட்டதற்கு " விடுதி பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டான். நாலைந்து பையன்களோடு இணைந்து ரூம் எடுத்து வெளியில் சாப்பிட்டுக்கொண்டு படிக்கின்றான். கோயம்புத்தூர் சும்மாவே நிறைய பணம் புழங்குமிடம், விலைகளும் மற்ற ஊர்களை விட அதிகம். என் பிள்ளை அங்கே துன்பப்படக்கூடாதல,அதனாலதான் பணம் அடிக்கடி அனுப்புகின்றேன்" என்பார். திடீர் திடீரென்று பி.எஃப் பணத்தை சேமிப்பிலிருந்து எடுப்பார். கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடனை வாங்குவார். சில நேரங்களில் அலுவலங்களில் , வெளியிடங்களில் வட்டிக்கு கொடுப்பவர்களிடம் கடன் வாங்குவார். மாரி தன் வாழ்க்கையில் என்றும் ஆடம்பரமாக, தேவையில்லாமல் செலவழித்தாக ஞாபகம் இல்லை. பார்த்து , பார்த்துச்செலவழிப்பார். ஆனால் பிள்ளைகள் படிப்பு என்று வந்தால், அதுவும் மகனின் படிப்பு என்றால் கடன் வாங்கியாவது படிக்க வைத்துக்கொண்டிருந்தார்.சில வருடங்களுக்கு முன் சில நேரம் அவரின் செயல்கள் கிறுக்குத்தனமாகத் தோன்றும். அலுவலகத்தில் வேலை மும்மரமாகப் பார்த்துக்கொண்டே இருப்பார்,திடீரென்று மகன் ஞாபகம் வந்து விடும். மகனை டியூசனுக்கு அழைத்துச்செல்லவேண்டும் என்று சொல்லி, மேலதிகாரியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு பறந்து பறந்து போய் வருவார்.ஏற்கனவே அவருக்கு உடலில் சில பிரச்சனைகள் இருந்தன. மருத்துவரிடம் காண்பித்து மாத்திரை வாங்கிக் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

சென்ற வருடம் பணி ஓய்வு விழாவிற்கு அவரது மனைவி, மகன், மகள், மகளின் கணவன் என வந்திருந்தனர். மகனைக் காண்பித்து அரசுவிடம் பெருமையாகச்சொன்னார். எனது மகன் டிரிபில் ஈ பாடம் எடுத்து தொன்னூறு சதவீதம் எடுத்து பாஸ் செய்திருக்கிறான். தற்சமயம் ஒரு சின்ன வேலையில் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறான். நானும் அனுபவம் கிடைக்கிட்டும் என்று அனுப்பி வைத்திருக்கிறேன். அனுபவம் கிடைசசு , நல்ல கம்பெனிக்கு வேலைக்கு போயிருவான். வேலைக்கு போயிட்டா வெளி நாடுகளுக்கெல்லாம் போற வாய்ப்பு கிடைக்கும். நானும் கூட பாலு சாரு மாதிரி வெளி நாடு போறதெக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இவர்களோடு வேலை பார்த்த பாலுவின் மகன் அமெரிக்காவில் வேலை பார்க்கின்றான். காடு ஆறுமாதம், நாடு ஆறு மாதம் என்பது போல பாலு தமிழ் நாட்டில் ஆறுமாதம், அமெரிக்காவில் ஆறுமாதம் என்று அலைந்து கொண்டிருந்தார். நன்றாக போட்டோ எடுக்கக் கூடியவர் பாலு. அமெரிக்கா சென்றது, அங்கே தங்கியது, ஒவ்வொரு நாடாக விமானத்தில் இறங்கி, இறங்கி மாறி அமெரிக்கா போனது என்று வித விதமான கலர் படங்களைக் கொண்டு வந்து பாலு அலுவலகத்தில் அசத்திக் கொண்டிருந்தார். அரசுவுக்கு பாலு போலத் தானும் தன் மகனால் அமெரிக்காவிற்கு செல்லப்போகிறோம் என்று நம்பிக்கை இருந்தது. படாத பாடுபட்டு , நிறையச்செலவழித்து தன் மகனை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டுவந்து விட்டோம் என்ற தெம்போடு இருப்பவராக மாரி இருந்தார்

அப்படிப்பட்ட மாரிதான் " நான் மோசம் போயிட்டேன், நான் மோசம் போயிட்டேன், பெத்த பிள்ளையால மோசம் போயிட்டேன் " என்று அரசுக்கு முன்னால் அழுதுகொண்டிருந்தார். " என்னண்ணே நடந்தது " என்ற அரசுவிடம் மாரி விளக்கியபோது அரசுவே கதிகலங்கிப் போனான். மாரியின் மகன் வாசு பொறியியல் பாடத்தில் தேர்ச்சி பெறவேயில்லை. ஏகப்பட்ட பாடங்கள் இன்னும் அரியர்ஸ் வைத்திருக்கிறான். மொத்தம் உள்ள 48 பாடங்களில் 10 பாடங்களில் அவன் தேர்ச்சி பெறவேயில்லை. ஊரிலிருந்து வந்த மாரியின் அண்ணன் மகன் , எத்தனை மதிப்பெண் , என்ன கூட்டுத்தொகை, எவ்வளவு சதவீதம் என்றெல்லாம் கேட்டபோது வாசு மழுப்பியிருக்கிறான். சந்தேகமடைந்த மாரியின் அண்ணன் மகன் மாரியிடம் சொல்ல, இரண்டு பேரும் வாசு இல்லாத நேரத்தில் அவனது பெட்டியை எடுத்துப் பார்த்தபொழுதுதான் அந்த அதிர்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது. ஏற்கனவே 90 சதவீதம் எடுத்து வெற்றி பெற்றதாகச்சொன்ன சான்றிதழ்களும் , உள்ளே இருந்த சான்றிதழும் ஒன்று போல இருக்க, மதிப்பெண்கள் மட்டும் மாறியிருந்திருக்கின்றது. மாலையில் வந்த வாசுவிடம் கேட்க, கையோடு பிடிபட்ட கள்வன்போல ஆமாம் என்று சொல்லியிருக்கின்றான். இருதய வலி வந்து விடும் அளவுக்கு கத்திக் குமித்த மாரி, வீட்டை விட்டுத் தாண்டி ஓடி வந்து அரசுவிடம் வந்து நின்று இப்படி புலம்பிக்கொண்டிருக்கின்றார்.

அரசு அறிந்த வரையில் வாசு தெரிந்து தவறு செய்யக்கூடிய பையன் அல்ல, திட்டமிட்டுச்செய்யும் கிரிமினலும் அல்ல. ஏதோ , எங்கோ சிக்கல் இருக்கிறது என்று புரிந்த அரசு, "இப்போ வாசு எங்கே" என்றான் மாரியிடம் . "தா.... மகன் எங்கோ இருக்கானோ, என்ன திருட்டுத்தனம் பண்ண திட்டம் போட்டிருக்கானோ "என்று மாரி குமுறினார். " இல்லை, என் கூட வாருங்கள் " என்று மாரியையும் அழைத்துக்கொண்டு மாரி வீட்டுக்கு விரைந்தான் அரசு.

மாரியின் மனைவி ஒரு பக்கம் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அவரிடம் " வாசு எங்கே " என்ற போது உள்ளே கையைக் காட்டினார். விறு விறுவென்னு மாரியைக்கூட எதிர்பார்க்காமல் உள்ளே நுழைந்த அரசுவைக் கண்டதும் பரக்க, பரக்க முழித்த வாசு , ஏதோ ஒரு பாட்டிலை எடுத்து ஒளித்துவைப்பதை அரசு பார்த்து விட்டான். நேரே போய் அரசு அதை எடுத்துப் பார்த்தான் , நஞ்சு மருந்துப் பாட்டில். " ஏண்டா, செய்வதையெல்லாம் செய்துவிட்டு, கேவலப்படுத்தனது எல்லாம் போதாதுன்னு இனி விஷ்ம் குடித்து செத்து வேற கேவலப்படுத்த போறயா? எப்படிடா உங்கப்பாவை ஏமாத்த உனக்கு மனசு வந்துச்சு ? என்னென்ன பண்ணினாரு மனுசன் உனக்கு, எப்படி எப்படி எல்லாம் உன்னைப் பொத்தி பொத்தி வளர்த்தாரு, " என்ற அரசு " ஏண்டா இப்படி செஞ்ச ? " என்றான் கோபமாக.அரசுவின் ஆங்காரத்தை, அழுகையை, கோபத்தைக் கண்ட வாசு என்ன நினைத்தானோ " அங்கிள் , என்னை மன்னிச்சிடுங்க" என்று சொல்லிக் கொண்டே படாரென்று நெடுஞ்சாங்கிடையாக அரசுவின் காலில் விழுந்தான்.

" அங்கிள், எப்பயுமே அப்பா, என் கிட்ட அதிகமாக எதிர்பார்த்தாரு, சின்னப் பிள்ளையில் இருந்தே என்னையை பெரிய பெரிய பள்ளிக்கூடத்திலே சேர்த்தாரு, மத்த பிள்ளைகள் எல்லாம் கார்ல் வந்து இறங்கும்போது, நான் மட்டும் அப்பாவின் சைக்கிளில் போய் இறங்குவேன்,அந்த படிப்பு எனக்கு தன்னம்பிக்கையை வளர்க்கிறது பதிலாக, ஒரு இன்பிரியாரிட்டி காம்பளக்ஸ் மனப்பான்மையைத்தான் ஏற்படுத்துச்சு. பத்தாவது வரைக்கும் கொஞ்சம் என்னால் முடிந்த அளவு படித்தேன். 11-ஆம் வகுப்பு வேற பெரிய பள்ளிக்கூடத்திலே போய் சேர்த்தாரு, அந்தப் பள்ளிக்கூடத்திலே பதினொன்றாம் வகுப்பு பாடமே நடத்தல. 11-ஆம் வகுப்பு தொட்க்கத்திலே இருந்து 12-ஆம் வகுப்பு பாடத்தைத்தான் நடத்துனாங்க. மனப்பாடம் பண்ண வச்சு , பண்ண வச்சு பேப்பரிலே எழுதவச்சாங்க, நானும் சாப்பிட்டு சாப்பிட்டு வாந்தி எடுக்கிற மாதிரி படிச்சு படிச்சு பேப்பர்ல் கக்குனேன். செரிக்கலை எனக்கு அது. மனசுலே அது என்னன்னு விளங்கலை.கணக்கையே மனப்பாடம் பண்ண வச்சாங்க. சில பதில்களை, பாடப்பகுதிகளை குருட்டு மனப்பாடம் பண்ண வச்சாங்க, நானும் ஏதோ என்னால முடிஞ்ச அளவு மார்க் எடுத்து +2 முடிச்சேன் " என்றவன் கேவிக் கேவி அழுதான் பின்பு தொடர்ந்தான்

" அப்பா சேர்த்து விட்ட் பொறியியல் கல்லூரியும் பெரிய கல்லூரி. ஆனால் அங்க போனதும் 11-ஆம் வகுப்பு பாடம்தான் அடிப்படை , அதை வைத்துத்தான் பாடத்தை புரிஞ்சுக்கிறனும் அப்படினாங்க. சில வாத்தியார்கள் கொஞ்சம் சைக்கோ டைப்பிலேயே இருந்தாங்க. அவங்களைப் புரிஞ்சு , நான் தயார் ஆகுறதுக்குள்ள முதல் செமஸ்டர் வந்திருச்சு. ஆறு பாடத்துக்கு நாலு பாடத்திலே பெயிலு. அப்பா கிட்ட வந்து நான் பெயிலுன்னு சொல்ற வர்றதுக்குள்ள , எங்க அப்பா என் மேல் அளவுகடந்த நம்பிக்கை வைத்து 90 மார்க்கா, 95 மார்க்கான்னு கேட்டாரு. 90 மார்க்குன்னு பொய் சொன்னேன். உள்ளுக்குள்ளே உறுத்தினாலும் , சொன்ன பொய்யை மறைக்கிறதுக்காக போலி மார்க் சர்ட்டிபிகேட் வாங்கினேன். எங்க கல்லூரிக்குப் பக்கத்திலேயே ஒரு கம்ப்யூட்டர் செண்டர் இருக்கு. 500 ரூபா கொடுத்தா வேற மார்க் சீட், அதிகமாக மார்க் போட்டுக் கொடுத்துருவாங்க. . முதல் செமஸ்டரில் பெயிலானாலே, கேம்பஸ் இண்டர்வியூவிக்கு தகுதி இல்லைன்னு சொல்லிட்டாங்க. அப்பவே அப்பாவின் வெளி நாட்டுக் கனவு நிறைவேறாதுன்னு தெரிஞ்சு போச்சு. பக்கத்து ரூம்ல் இருந்த பையன் முதல் செமஸ்டரில் 4 பாடத்தில பெயில் ஆனவுடன் தற்கொலை பண்ணிக்கிட்டான். எனக்கு அப்படி பண்ணிக்கிறலாமுன்னு தோனுச்சு. ஆனா அப்பா என்ன பாடுபட்டு என்னைப் படிக்கவைக்கிறார்ன்னு நினைச்சுப்பார்த்தேன். அந்த மனுசர் ஓய்வு பெற்றவுடன் நான் சம்பாரிச்சு அவருக்கு நல்ல சாப்பாடு போடணும்ன்னு நினைச்சேன். முதன் முதலில் தேர்வில் தோல்வி, வகுப்பில் பெயிலானவங்க 20 பேரில் நானும் ஒருத்தன் என்பது என்னை ரொம்பவுமே பாதிச்சது. அந்த வெறுப்பிலேயே படித்தும், படிக்காமையும் நாள் ஓடிப்போச்சு. நான் பண்ணியது தப்புத்தான், மகா தப்புத்தான், எங்க அப்பா என்னை எப்படி துயரப்பட்டு படிக்கவச்சாருன்னு எனக்குத் தெரியும், அவரை மனசளவில துன்பப்பட வைக்கக்கூடாதுன்னுதான் நான் இப்படி பண்ணினேன். ஏற்கனவே இருதயத்திலே அடைப்பு இருக்கு, பைபாஸ் பண்ணனும்ன்னு அப்பாவுக்கு சொல்லியிருக்காங்க. அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்க வேண்டாம்ன்னு நினைச்சேன். ஏதோ ஒரு வேலைக்குப் போய்கிட்டே மீதப்பாடத்தை முடிச்சு, பொறியியல் பட்டத்தை வாங்கி விடுவோமுன்னு இந்த இரண்டுவருடமா தேர்வு எழுதிக்கிட்டு இருக்கேன் , முடிக்க முடியலையே மாமா, முடிக்க முடியலையே " என்று சுவரில் போய் நங்கு நங்கு என்று முட்டினான்.

அவனைப் பார்க்கவும் பரிதாபமாக இருந்தது அரசுக்கு. மகனுக்கு தன் துன்பம் தெரியக்கூடாதென்று மாரி துன்பப்பட்டு பணம் அனுப்பியதுபோலவே, படிக்கும் இடத்தில் தனக்கு இருக்கும் துன்பம் தன் தந்தைக்கு தெரிய வேண்டாம் என்று வாசு நினைத்திருப்பான் போலும். என்ன இருந்தாலும், போலி மதிப்பெண் சான்றிதழ் காட்டியது எவ்வள்வு பெரிய தவறு என்பதனை வாசுவுக்கு அரசு விளக்கிக்கொண்டிருந்தான். " படிப்பு என்பது ஒன்றும் வாழ்க்கையை விட பெரிசு இல்லே, ஒத்துப்போகலைன்னா , தலைமுடி போச்சுன்னு போயிரனும்.ஒரு பாதையில போறோம், முட்டுச்சுவரு , இதற்கு மேல போக முடியாதுன்னு உணர்ந்து திரும்பிவந்து , வேற பாதையில போறது இல்லையா, அது மாதிரிதான் படிப்பும். ஒரு படிப்பு புடிக்கலேன்னா, போகுது கழுதைன்னு விட்டுட்டு வேற படிப்பை படிக்க வேண்டியதுதானே, முதல் வருடம் விட்டுட்டு, ஏதாவது வேறு ஒரு பட்டப்படிப்பை படித்திருந்தால் அவருக்கும் நிம்மதி, உனக்கும் நிம்மதி. நீ ந்டிச்சு, நீயும் உருப்படாம, அவரையும் இப்படி உருக்குலைச்சிட்டேயே , விடு, வேலைக்கு போய்கிட்டே அஞ்சல் வழியில் ஏதாவது ஒரு பாடத்தைப் படி " என்ற அரசு "என்ன பாடம் உனக்குப் பிடிக்கும் "என்றான். " ஆங்கில வழியிலேயே படித்தது, ஆங்கிலப்பாடம் பிடிக்கும்" என்றான் வாசு. மாரியை அருகில் அழைத்த அரசு வாசுவை அஞ்சல் வழியில் இளங்கலை ஆங்கிலப் பட்டப்படிப்பு படிக்கச்சொல்லுங்கள். அவன் சம்பாரிக்கும் காசிலேயே அவனைப் பணம் கட்டச்சொல்லுங்கள். படிக்கட்டும் , பணத்தைக் கட்டட்டும் . புரிதல் இல்லாமல் நன்றாக ஆக்குகிறேன் என்று சொல்லி ஒருவரை ஒருவர் சாகடித்து விடாதீர்கள் என்று சொல்லி அவர்களை சமாதானப்படுத்தி , சாப்பிட வைத்து விட்டு வந்த அரசுவிடம் அவரது மனைவி சாப்பிட வாருங்கள் என்று சொன்னபோது " இல்லைப்பா, எனக்கு சாப்பிட பிடிக்கல, மனசு சரியில்ல, கொஞ்ச நேரம் தூங்கப்போகிறேன் " என்று சொல்லிவிட்டு படுக்கைக்கு வந்த அரசு, மாரிக்கு அவன் மகன் செய்த நம்பிக்கைத்துரோகத்தை தாங்கமுடியாமல் படுக்கையில் உருண்டு உருண்டு புரண்டு கொண்டிருந்தான் .மாரி சமாதானம் ஆனாலும் அரசுவால் சமாதானம் ஆகமுடியவில்லை, படுக்கையில் உருண்டு கொண்டிருந்தான்

சிறுகதையை வெளியிட்ட எழுத்து. காம் - இணையதளத்திற்கு நன்றி . வா. நேரு

Wednesday, 9 July 2014

சாப்பிடலாம் வாங்க ......

                                                         சாப்பிடலாம் வாங்க ......
                                                                (வா. நேரு )

அதிகாலைப் பொழுது. பொழுது புலரப்போவதை அறிவிக்கும்வண்ணம் பறவைகள் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தன. வித விதமான பறவைகள், விதவிதமான ஒலிகள், வாழ்வில் சந்திக்கும் விதவிதமான மனிதர்கள் அவர்களின் பிரச்சனைகள் போலவே. ஒலி எழுப்பும் ஒரு பறவையைப் பார்த்த மணி , அதன் குரலைப் போலவே ஒலி எழுப்ப முயன்றான்.முடியவில்லை, போலச்செய்தல்-எப்போதும் முடிவதில்லை மணிக்கு. தனது குரலுக்கும், பறவையின் குரலுக்குமான வேறுபாடு மணிக்கு வெட்கத்தை அளித்தது. பக்கத்துவீட்டுக்காரர்கள் யாரும் தான் ஒலி எழுப்புவதைப் பார்த்தார்களா என சுற்றுமுற்றும் பார்த்தான். ஒருவரையும் காணவில்லை. அந்தப் பறவைகளின் ஒலியும் , அதிகாலைப் பொழுதின் இளங்காற்றும் ஓர் உற்சாகத்தை மணிக்கு அளித்தன. மெல்ல சீட்டி அடித்துக்கொண்டே, சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்து சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான் மணி.

மதுரை கற்பக நகர் வீட்டிலிருந்து ,நெல்பேட்டை வரை சைக்கிளில் செல்லவேண்டும். மெல்ல வீட்டிலிருந்து அழகர்கோயில் மெயின்ரோட்டை வந்தடைந்து , தெற்கு நோக்கிச் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். அந்த அதிகாலைப் பொழுதிலேயே அழகர்கோயிலுக்குச்செல்லும் பேருந்துகள் பெரியாரிலிந்து போய்க்கொண்டிருந்தன. அழகர் கோயில் செல்லும் ரோடு, ரோட்டில் செல்லும் வித விதமான மனிதர்கள், அவர்களின் அதிகாலைப் பரபரப்பு எனப்பார்த்துக்கொண்டே வந்து கொண்டிருந்தான் மணி. புதூர் பேருந்து நிலையம், புதூர் மார்க்கெட், தமிழ்நாடு ஹோட்ட்ல், தல்லாகுளம், கோரிப்பாளையம் எனக் கடந்து நெல்பேட்டை அலுவலகத்திற்குள் உள்ளே நுழைந்தான் மணி. உள்ளே நுழைந்து சைக்கிளை நிறுத்துவிட்டு நேரத்தைப் பார்த்தான் . மணி 6.30 . டூட்டிக்கு இன்னும் 10 நிமிடம் இருக்கிறது . விட்டல் ராவ் ஒரு கதையில் தனக்கு 16.40 டூட்டி எனச்சொல்லியிருந்தார். சொல்லிவிட்டு, இது யாருக்கு புரிகிறதோ , இல்லையோ தொலைபேசி அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு, அவர்களது உறவுகளுக்கு எளிதாகப் புரியும் எனச்சொல்லியிருந்தார். அப்படித்தான் இந்த 6.40 டூட்டி என்பது உங்களுக்கும்.காலையில் 6.40 க்கு வேலைக்கு வரவேண்டும் . 1.30 மணிக்கு வேலை முடிந்து விடும் . அப்புறம் மறு நாள் காலையில் 6.30க்கு வந்தால் போதும். எப்போதும் மணிக்கு இந்த அதிகாலை டூட்டி பிடிக்கும். மற்றவர்கள் அரை நாள் விடுமுறை எடுத்து செய்வதை மணி மதிய வேளைகளில் எளிதாகச்செய்து விடுவான்.

சைக்கிளை நிறுத்திவிட்டு மேலே பார்த்தான் .ஏட்டு. அவர் இய்ற்பெயர் வேறு என்றாலும் , அலுவலகத்தைப் பொறுத்தளவில் அவர் எல்லோருக்கும் ஏட்டுத்தான் . எல்லோரும் அவரை ஏட்டு என்று அழைக்க, அவரும் பார்க்கும் அனைவரையும் ஏட்டு என்றுதான் அழைப்பார். வணக்கம் ஏட்டு என்று சொல்லிக்கொண்டே உள்ளே போய்க்கொண்டிருந்தார். மணியை விட 30 வருடம் மூத்தவர். இவனும் பதிலுக்கு வணக்கம் ஏட்டு சார் என்று சொல்லிக்கொண்டே உள்ளே போனான். வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை, கையில் வைத்திருக்கும் கர்சீப் கூட வெள்ளைதான் . உடை வெள்ளையை விரும்பவதாலோ என்னமோ, உள்ளமும் வெள்ளை. அவ்வளவு வெகுளியாக இருப்பார். அவர்தான் சூபர்வைசர் இன்றைக்கு, படிகளில் தாவித்தாவி , இரண்டு இரண்டு படியாய்ப், போனான். இவனுக்கு முன்னால் மேலே ஏறிக்கொண்டிருந்த முனியாண்டி," ஏய் மணி, பார்த்துப்போப்பா, இள ரத்தம் தாவித்தாவி போகத்தூண்டுது, அடியேய், நாங்களும் இப்படி 30 வருடத்துக்கு முன்னாடி போனவங்கதான், இப்போ ஒவ்வொரு படியா நின்னு நின்னு போய்க்கொண்டிருக்கோம், பார்த்துப்போ " என்றார். சரி, சரி என்று தலையாட்டிக்கொண்டே நடக்காமல் தாவித்தாவி மேல் மாடியை அடைந்தான் மணி.

வருகைப் பதிவேட்டில் கையெழுத்தைப் போட்டுவிட்டு , தனது போர்டில் அமர்ந்தான் மணி. பக்கத்துப்போர்டில் அந்தோனி சார் இருந்தார். அவர்தான் மணி இந்த அலுவலத்திற்கு வந்தவுடன் வேலைகள் எல்லாம் சொல்லிக் கொடுத்தவர். ஏதோ எர்த் ஏ, எர்த் பி, டி பாரின் என்றெல்லாம் சொல்லப்படும் வார்த்தைகளை கண்டு மிரண்ட மணியை , அழைத்து ஒவ்வொன்றாய் சொல்லிக் கொடுத்தார். ஏங்க, மணி தொலைபேசிக் கம்பி எப்படிப்போகும் என்பார், சார் ரெண்டு வயர் போகும் சார் என்றான் மணி, இரண்டு வயரும் ஒன்றை ஒன்றைத் தொட்டுக்கொண்டால் டி பாரின் என்பார் , இப்படி தொலைபேசி சம்பந்தப்பட்ட பல விசயங்களை சொல்லிக் கொடுப்பவர் அவர். நேரம் 6.40 ஆனதும் அனைத்துப் போர்டுகளிலும் ஊழியர்கள் உட்கார்ந்திருந்தனர்.

ரொட்டின் டெஸ்ட் எல்லாம் 20, 25 நிமிடங்களில் முடிந்தது.நேரத்தைப் பார்த்தான் . 7.30 ஆகி இருந்தது . இனி லைன்மேன்கள் வந்த பின்புதான் வேலை. 8 மணிக்குத்தான் ஒவ்வொருவராக அழைப்பார்கள். இரண்டாவது போர்டில் பாலன் உட்கார்ந்திருந்தார். சூபர்வைசர் ஏட்டு முதல் ரிலீப் போற ஆள் போங்க , போய் சாப்பிட்டு வாங்க என்றார். பாலன் , அகமது, கனி, தீரன், என்று 4, 5 ப்ர் கேண்டினில் காலைச்சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு ஓய்வறைக்கு வந்தனர். ." பாலா, ஏதாவது பாட்டு பாடுங்க" என்றார் கனி. . "அப்படியா", என்று யாராவது சொல்லட்டும் என்று காத்திருந்தவர் போல பாலா ' கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் " என்று பாட ஆரம்பித்தார். பாலாவுக்கு அப்படி ஒரு குரல் . டி.எம்.எஸ். போல, எஸ்.பி. போல பாடக்கூடியவர்.இசையில் அவ்வளவு ஆர்வம், அவ்வளவு ஈடுபாடு. அவர் பாட ஆரம்பிக்க அவருக்கு அகமது மெல்ல தாளம் போட ஆரம்பித்தார். இரண்டு மூன்று பாடல்கள் பாடிய பாலன் அடுத்து 'இறைவனிடம் கையேந்துங்கள், அவர் இல்லையென்று சொல்லுவதில்லை " எனும் பாடலைப் பாடி முடித்தார்.பாட்டைக் கேட்டுத்தாளம் போட்டுக் கொண்டிருந்த மணி, "ஏன் இப்படி ஆல் இண்டியா ரேடியா மாதிரி ஒவ்வொரு மதப்பாட்டாப் பாடிக்கிட்டு இருக்கேங்க அண்ணே, நெஞ்சமுண்டு, நேர்மையுண்டுன்னு தத்துவப்பாட்டைப்பாடுங்க, இல்லையென்றால் டூயட் பாட்டைப் பாடுங்க, எல்லா மதத்துக்காரர்கள், நாத்திகர்கள் எல்லோரும் கேட்கலாம் "என்றான். உடனே கனி அதனை மறுத்து பக்திப்பாட்டையே பாடுங்க என்றார். . "என்ன இருந்தாலும், இன்னும் கல்யாணம் முடிக்காத பையன், டூயட் பாட்டு கேட்கிறார், பாடுகிறேன்" என்று சொல்லி விட்டு டூயட் பாட்டு இரண்டைப் பாலன் பாடினார். சிரிப்பொலி, மகிழ்ச்சி , பாடல் என நேரம் கழிந்திருந்தது. . கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த சுந்தரம் மட்டும் இந்த சிரிப்பொலி, பாட்டு , மகிழ்ச்சி எதிலும் கலந்து கொள்ளாமல் தனியாக் உட்கார்ந்து ரொம்ப நேரமாக சாப்பிட்டுக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் அமர்ந்திருந்தார்.

காலையில் எழுந்து வந்த உற்சாகமும் பின்பு இசை கேட்ட உற்சாகமும் காலை 8 மணி முதல் பிடித்துக்கொண்டது. வரிசையாக வந்த போன் பழுதான அழைப்புகள், அந்த அழைப்புக்களை லையனில் செல்லும் லைன்மேன்களுக்கு ஆர்டர் கொடுத்து சரி செய்வதென தொடர்ச்சியான வேலை. காலை சாப்பாடு சாப்பிட்டுவந்து இப்போதுதான் அமர்ந்ததுபோல் இருக்கிறது. நேரம் ஓடிவிட்டது. மாமுண்டி ஒரு லைன்மேனோடு தொலைபேசியில் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். "நீ சொல்வதற்காக எல்லாம் பால்ட்டை குளோஸ் பண்ண முடியாது, போன் வாடிக்கையாளரைப் பேசச்சொல்" என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். நன்றாக வேலை பார்க்கும் 10 பேரையும் சமாளித்து வேலை வாங்கி, நாமும் வேலை செய்து விடலாம், ஆனால் ஒரு ஆள் எக்குத்தப்பாக மாட்டினால் தொலைந்தோம். அவரோடு சத்தம் போட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். வந்த புதிதில் மணிக்கு ஒன்றும் புரியவில்லை. வந்த மூன்றாம் நாள் , மேலதிகாரி அழைத்து விட, அவரது அறைக்குள் சென்று வணக்கம் தெரிவித்தான். "வாங்க சார், இந்தப் பழுதை நீங்கள்தான் குளோஸ் செய்தீர்களா" என்றார் . "ஆமாம்" என்றான். "வாடிக்கையாளர் போன் பழுது சரியாகாமல், சரியானதாக குளோஸ் செய்து விட்டார்கள் என்று புகார் கொடுத்திருக்கிறார்" என்றார். இவன் அப்பாவியாக " சார், லைன்மேன் சரியாகிவிட்டது என்று போனில் சொன்னார், நான் கம்யூட்டரில் குளோஸ் செய்தேன் " என்றான். சிரித்த அவர், "இது முதன் முறை என்பதால் உங்களுக்கு மெமோ இல்லை, லைன்மேன் சொல்வதால் பழுதை நீங்கள் குளோஸ் பண்ணக்கூடாது, டெஸ்ட் செய்து பார்த்து சரியா என்று பார்க்கவேண்டும். வாடிக்கையாளரை அழைத்து போன் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும் . அவர் திருப்தி என்று சொன்னால்தான் குளோஸ் செய்ய வேண்டும்.சீனியர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள் " என்றார். இது என்னடா வம்பா போகிவிட்டது என்று வெளியில் வந்தான், இந்த 6 மாதத்தில் பழகிவிட்டது ..

சீனியர்கள் பலர் வெகு திறமைசாலிகளாக இருந்தார்கள். டேவிட் சார் டையல் டெஸ்ட் எடுத்தால், 30 கி.மீ தூரம் செல்லும் எல்.டி. வயரில் எந்த இடத்தில் பால்ட் என்று கண்டுபிடித்து விடுவார். அவரிடம் டிமிக்கி கொடுக்கும் லைன்மேன் வேலையெல்லாம் செல்லுபடியாது .ஆனால் பால்ட் பார்ப்பவர்கள் ஒவ்வொரு பாயிண்டாக டெஸ்ட் கொடுக்க, கொடுக்க இந்தப் பக்கம் பால்ட் இல்லை, அந்தப் பக்கம் இன்னும் போங்கள், போங்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பார். ஜோசப் தன்னுடைய ஆங்கிலம் கலந்த தமிழ் பேச்சில் அவ்வளவு தோழமையாய், ஆனால் அதே நேரத்தில் வெகு நேர்த்தியாய் வேலை செய்து கொண்டிருப்பார். .வியப்பாக இருக்கும். பெரிய அளவு படிப்பெல்லாம் இல்லை. பெரும்பாலும் 11-ஆம் வகுப்பு படித்தவர்கள், பழைய எஸ்.எஸ்.எல்.சி. ஆனால் அவர்களின் வேலைத்திறனும், கமிட்மெண்டும், ஆங்கிலத்தில் எழுதுவதும் இன்றைய எம்.ஏ.க்களிடம் கூட கிடைப்பது அரிது.

மணி நேரத்தைப் பார்த்தான். மணி ஒன்று . இன்னும் அரைமணி நேரத்தில் வேலை முடிந்துவிடும். கொஞ்ச நாள் அம்மா கூட இருந்து சாப்பாடு ஆக்கிப் போட்டார்கள். இப்போது கிராமத்திற்குப் போய்விட்டார்கள். இவனாக சில நாள் சமைத்துப் பார்த்தான் . சரியாக வரவில்லை. சாப்பாடு ஆக்குவது கூட பெரிதாகத் தெரியவில்லை.சமைத்த பிறகு பாத்திரங்களைக் கழுவுவது தான் பெரிய பிரச்சனையாக இருந்தது. ஏற்கனவே கொஞ்சம் சமைத்துப் பழகியிருந்தான். மணியின் தாய்மாமா மிக நன்றாக சமைப்பார். ஒரு தடவை நக்கலப்பட்டியில் வாத்தியார் வேலைபார்த்த மாமாவைப் பார்க்கப் போயிருந்தான் . சாம்பாரும் ரசமும் மண மணக்க சமைத்துப் போட்டார். சாப்பிடும் போது சிரித்துக்கொண்டே சொன்னார், வெளியூரில் போய் வேலை பார்க்க வேண்டியிருக்கும், சில நேரம் திருமணம் முடித்தபிறகுகூட ஏதோ சண்டையில் திடீரென்று பெண்டாட்டிகாரி 2, 3 நாள் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குப் போய்விட்டால், சாப்பாடு நமக்கு திண்டாட்டமாகிவிடும். ஆம்பளையும் நல்லா சமைக்க கத்துக்கறனும் என்றார். மணியும் கொஞ்சம் பழ்கி வைத்திருந்தான். கஞ்சி வைப்பது, வெறும் சோற்றை வடித்து தயிர் வாங்கி வந்து ஊத்துவது, ரசம் வைப்பது தாண்டி சமையல் போக மறுக்கிறது. அதுவும் மதுரைக்கு வந்த பின்பு அலுவலகத்தை சுற்றிச்சுற்றி இருக்கும் ஹோட்டல் எல்லாம் அப்பப்போ சுண்டி இழுத்தது. அதனால் பெரும்பாலும் மதியச்சாப்பாடு என்பது உணவு விடுதிகளில் சாப்பிடுவதாகவே போய்க்கொண்டிருந்தது.

இன்றைக்கு எந்த ஹோட்டலில் சாப்பிடுவது என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தான். பக்கத்து தெருவில் இருக்கும் ஹோட்டலில்தான் இன்று சாப்பாடு. மதுரையில் மிகப்பிரபலமான அசைவ ஹோட்டல். ஏற்கனவே அசைவ உணவு பிடிக்கும் அவனுக்கு, அந்த உணவு விடுதியின் சாப்பாடும் ,ருசியும் மிகவும் பிடித்துப்போய்விட்டது. ஆனால் பெரும்பாலும் சாப்பிடப் போகும் போது தனியாகப் போவதில்லை, கூட எவரையாவது அழைத்துப்போய் அவர்களுக்கும் பிரியாணி வாங்கித்தந்து தானும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான் மணி.

காலையில் அருமையாகப் பாடிய பாலன் சாரை அழைத்துப்போக வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். மணி 1.30 ஆனதும் , 1.30 டூட்டிக்காரர்கள் வேலைக்கு வந்து கையெழுத்துப் போட ஆரம்பித்தவுடன், ஆப் டூட்டியில் கையெழுத்துப்போட்டு விட்டு, பாலன் சார் கையெழுத்துப்போடும் வரை காத்திருந்தான். வெளியில் பாலன் சார் வந்தவுடன் , "சார் வாங்க இன்றைக்கு ஹோட்டலில் சாப்பிடலாம்" என்றான்.ஏற்கனவே இரண்டு நாளுக்கு முன்னால் சார், நாம் இரண்டு பேரும் போய் ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று சொல்லியிருந்தான். பார்ப்போம், பார்ப்போம் என்று அன்றைக்கு சொல்லியிருந்தார். எனவே அழுத்தமாக சார் இன்றைக்கு நாம் ஹோட்டலுக்கு போறோம் என்றான். "இல்லை மணி, நீங்கள் போய் சாப்பிடுங்கள், நான் வீட்டிற்குப் போய் சாப்பிட்டுக் கொள்கின்றேன் " என்ற பாலனிடம் , பணம் யார் கொடுப்பது என்று யோசிக்கின்றாரோ என்று நினைத்த மணி " சார், நான் பணம் நிறைய வைத்திருக்கின்றேன், நான் பணம் கொடுத்து விடுகின்றேன் , வாருங்கள் அசைவ உணவு அந்த ஹோட்டலில் மிக நன்றாக இருக்கும் ,வாருங்கள் " என்றான்.

"இங்கே வாங்க மணி" என்று தனியாக அழைத்துச்சென்ற பாலன் , " மணி, நான் விரும்பி சாப்பிட வேண்டும் என்று அழைக்கின்றீர்கள், அந்த ஹோட்டலில் சுவையாக இருக்கும் என்று நானும் கேள்விப்பட்டு இருக்கின்றேன். இன்றைக்கு நீங்கள் பண்ம் கொடுப்பீர்கள், இன்னும் 4, 5 நாள் கழித்து அங்கு போய் சாப்பிட வேண்டும் என்று நான் நினைத்தால், யார் பணம் கொடுப்பார்கள் ? " என்றார்.
என்ன சொல்ல வருகிறார் என்று தன்னை குழப்பமாகப் பார்க்கும் மணியிடம் தொடர்ந்தார் பாலன் " என் குடும்பத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. நான் மட்டும்தான் வேலை பார்க்கின்றேன். எனது மனைவி, என் தந்தை, என் அம்மா வீட்டில் இருக்கின்றார்கள், மூன்று பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஒன்றாம் தேதி சம்பளம் வாங்கி, உப்பு எவ்வளவுக்கு, புளி எவ்வளவுக்கு, பிள்ளைகள் படிப்பு எவ்வளவுக்கு, மருத்துவச்செலவுக்கு எவ்வளவு என்று பட்டியல் போட்டுத்தான் செலவு செய்கிறேன் " என்றார். மேலும் ' உங்களைப் போல நான் தனிக்கட்டை இல்லை, குடும்பம் இருக்கிறது " என்றார். " சார், எனக்கும் அம்மா, இருக்கின்றார்கள், கூடப்பிறந்தவர்களெல்லாம் இருக்கின்றார்கள். நானும் சம்பளம் வாங்கி பணத்தை அம்மாவிடம் பாதி கொடுக்கின்றேன் " என்றான் மணி.

                                                    கூட வாங்க சாப்பிட என்றால் மனுசன் என்னென்னமோ பேசுகிறாரே என்று நினைத்துக்கொண்டு இருந்த மணியிடம் " மதுரையில் ஒரு இலட்சம் ரூபாயை ஒரு நாளில் செலவழித்து விடலாம் , அதற்கான இடங்கள் இருக்கின்றன. சூது ஆடும் இடமும், குடிக்கும் இடமும் இன்னும் பல பல இடங்களும் இருக்கின்றன். மதுரை போன்ற இடங்களில் கெட்டுப்போவதற்கான சூழல்கள்தான் நிறைய நம்மைச்சுற்றி இருக்கின்றன. இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டியிருக்கிறது. என் குடும்ப சூழலில் பிரியாணியும் கூட எனக்கு ஆடம்பரம்தான். ஒரு நாள் ஓசியில் சாப்பிட்டால் , நாலு நாள் கழித்து எனக்கு சாப்பிட வேண்டும் போல் தோன்றும். இப்படி மாதத்திற்கு நாலு, ஐந்து நாள் போனால் நானும் கடன் வாங்க வேண்டும். பின் சுந்தரம் சார் போல ஒளிந்து ஒளிந்து வாழ வேண்டும் " என்றார்" ஏன் சார், ஒரு நாள் வந்து சாப்பிடுவதாலா நீங்கள் கடன் காரராகப் போய்விடுகிறீர்கள் ? " என்றான்
.
                      " இல்லை தம்பி, சில வரைமுறைகள் தேவைப்படுகின்றன, இப்போதுதான் உங்களுக்கு இருபது வயது ஆகிறது. உலகம் உங்களுக்குத் தெரியாது. சுந்தரம் சார் இருபது வருடங்களுக்கு முன்னால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் தெரியுமா ? "எங்களையெல்லாம் விட மகிழ்ச்சியாக இருந்தார், மிக நல்ல மனிதர், யாருக்கும் ஒன்று என்றால் ஓடிப் போய் செல்வு செய்வார், பணத்தைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டார். வீடு கட்டுகிறேன் என்று கடன் வாங்க ஆரம்பித்தார். பின்பு அதனைக் கட்ட முடியாமல், வட்டி கட்டுவதற்கு வட்டிக்கு வாங்கி , வட்டி கட்டி கட்டியே , இப்படி ஆகிப்போனார். இப்போது யாரிடமும் பேசுவதில்லை, தனித் தீவாக வந்து கொண்டிருக்கின்றார். சில நேரம் கடன் வாங்கியவன் வந்து விட்டால், ஒரு மணி நேரம் , 2 மணி நேரம் ஆபிசை விட்டு வெளியில் போகாமல் உள்ளேயே பதுங்கிக் கொண்டிருப்பார் . பாவம். சில வரைமுறைகள் இல்லாததால் இவ்வளவு துன்பப்படுகின்றார். அப்படி நான் ஆக விரும்பவில்லை " என்றார்.

" மனிதன் பணத்தைக் கண்டுபிடித்தான் . ஆனால் அந்தப் பணத்தால் அவனுக்கு ஏற்படும் அவமானங்கள் உனக்குத் தெரியாது தம்பி . பணம் எவ்வளவு பெரிய ஆளையும் கண நேரத்தில் அசிங்கப்படுத்திவிடும், அவமானப்படுத்தி விடும். எனக்குத்தெரிந்த ஒரு மனிதர் பொது நோக்காளர். மிக நல்ல மனிதர் .அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் மூன்று நாட்கள் அவரைத் தனி அறையில் வைத்து வைத்து அடித்தார்கள் தெரியுமா? ஒரு பத்திரத்தை அவரது உறவினர்கள் எடுத்துவந்து , சொத்தை எழுதிக் கொடுத்த பின்புதான் அவரை வெளியில் விட்டார்கள். காவல்துறையையும் மீறி சில விசயங்கள் இருக்கின்றன. நீங்கள் எல்லாம் புதியவர்கள். கை நிறையச்சம்பாதிக்கிறோம் என்று நினைத்து கண்டபடி செலவழிக்காதீர்கள். சின்னச்சின்ன செலவுகள்தான் பிறகு பெரிதாகி நம்மை கடனாளி ஆக்கி விடும். கொஞ்சம் மிச்சம் பிடித்து ப்ழகுங்கள். வாழ்க்கையில் கடனே இல்லாமல் வாழ்ந்து விட்டால் நீங்கள்தான் இராஜா, இல்லையென்றால் சிக்கல்தான் " என்றவரிடம் மணி " சார் ,நீங்கள் என்னோடு சாப்பிட வ்ரவேண்டாம் , வீட்டிற்குச்சென்று சாப்பிடுங்கள், நானும் கூட ஏதாவது சின்னக் கடையில் இன்று சாப்பிட்டு விட்டு , நாளை முதல் சமைக்க முயற்சி செய்யப்போகிறேன் " என்று சொல்லிவிட்டு நடந்து கொண்டிருந்தான் மணி

நன்றி : எழுத்து.காம்


Sunday, 22 June 2014

சூரியக்கீற்றுகள்-வா.நேரு.-நூல் அறிமுகம்- பொள்ளாச்சி அபி




சூரியக்கீற்றுகள்-வா.நேரு.-நூல் அறிமுகம்- பொள்ளாச்சி அபி

சூரியக்கீற்றுகள்..தனது வெளிச்சக் கைளால் உலகை அளந்து,நிலவும் இருளை துளைத்து சிதறடித்து,எங்கும் பரவுகின்ற தன்மையால் சுற்றிலுமிருக்கும் மெய்யை உணரச்செய்யும் தன்மை கொண்டது.

“தோழர் வா.நேருவின் சூரியக்கீற்றுகள் கவிதைத் தொகுப்பும்”,ஆண்டாண்டு காலமாய் அகத்திலே நிலவும் இருண்ட சிந்தனைகளை அகற்றி,தெளிந்த சிந்தனையெனும் புதிய வெளிச்சம் தருகின்றதாய் அமைந்திருக்கிறது.

பொதுவாய் கவிதைகள் எனில்,வாசிப்பவனை வார்த்தை ஜாலங்களுக்குள் சிக்கவைத்து,சொல்லவருவது என்ன என மனதை அலைபாயவைத்து,இறுதிவரை இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது..என்றே புரிந்துகொள்ள முடியாத,வாசகனின் ரசனையை,அறிவை மட்டம் தட்டும் கவிதைகள் இப்போது ஏராளமாய் வந்து கொண்டிருக்கின்றன.

வாசிப்பவன் உணரவேண்டியதை,நேரடியாக உணர்த்தாமல் நிற்கின்ற கவிதைகள்,வாசகனின் மனதிற்குள், கடக்க முடியாமல்,அப்படியே புறவெளியில் நின்று,பின் மறைந்தே போகின்றன.ஆனால், “பேனாவால் எழுதியதை வாளாலும் வெட்டியெடுக்க முடியாது”என்று ரஷ்ய இலக்கியமேதையான மக்சீம் கார்க்கி சொன்னதைப்போல,எளிமையையும், வாழ்வின் யதார்த்தத்தையும் கொண்ட கவிதைகள் காலம்தோறும்,சந்ததிகளோடும் பேசிக் கொண்டே இருக்கின்றன. கவிஞர் நேருவின் வார்த்தைகளிலேயே குறிப்பிடுவதென்றால், “ஏழுகோடித் தமிழர்களும் கவிதை எழுதினாலும்,காலவெள்ளத்தில் கரைவது எது.? என்பதனைக் காலம் தீர்மானிக்கும்.”

கவிஞர் வா.நேருவோடு,நேரடியாக பரிச்சயம் இல்லாதபோதே,அவரின் கவிதைகள் மூலம் எனக்குள் நுழைந்து இடம் பிடித்துக் கொண்டவர்.. என்பதை, மிகப் பெருமையோடு இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.இவர் எழுதியுள்ள 51 கவிதைகளைத் தொகுத்து,அழகு மிளிரும் அட்டைப் படத்துடனும், திராவிடர் கழக செயலவைத்தலைவர் திரு சு..அறிவுக்கரசு,மற்றும் தோழர்.அகன் அவர்களின் அணிந்துரைகளோடும், இவரின் இரண்டாவது தொகுப்பாக “சூரியக் கீற்றுகள்” கவிதை தொகுப்பு வந்துள்ளது. இவருடைய முதல் தொகுப்பு “பங்குனி உத்திரமும்,பள்ளிக்கூடமும்..!”

இவருடைய கவிதைகளில் எப்போதும்,மானுட நலன் விரும்பும் சிந்தனைகள் துளிர்த்து நிற்பதோடு,மானுட நலனைப் புறக்கணிக்கின்ற எதனையும் வெறுக்கின்ற போக்கும் நிச்சயம் இருக்கும்.அவ்வாறான காரணிகளில் முதலிடம் பிடித்துக் கொண்டிருப்பது மதமும்,சாதியும்.

தொகுப்பிலுள்ள முதல் கவிதையே,பட்டினி கிடக்கும் பிள்ளைகளுக்காக உணவைத் தேடிச் சென்று, மதவெறியர்களால் பலிவாங்கப்பட்ட,காதர்மைதீனைப் பற்றி உருக்கமாகப் பேசுகிறது.
“எந்தத் தவறும் செய்யவில்லை
எனது பெற்றோர் புகட்டிய
மதத்தினைப் பின்பற்றியதைத் தவிர..!
.. .. .. .. ..
மதவெறியின் கோரதாண்டவத்தினால்,வயிற்றில் குத்துப்பட்டு இறந்துபோன சம்பவத்தை நான் மறக்கவில்லை என,நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென் குறிப்பிட்டுள்ள நினைவுகளையும் பகிர்ந்து சென்றுள்ளார்.


“என்காலில் பட்டு
என்னை அறியாமலேயே
சிற்றெறும்பு ஒன்று
சிதைந்துபோனது போலவே
உனது வாழ்க்கையும்
எனது வாழ்க்கையும்..!

இதில் எதற்கு
சாதிப் பெருமையும்
தற்பெருமையும்..?
முடிந்தால்
எவருக்கேனும் உதவு
இல்லையெனில்
அமைதியாய் முடங்கு..!” - என்று ஒரு கவிதையில் சொல்லும் கவிஞர்,தனக்குள் குமுறுகின்ற ஆத்திரத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு,மிக நாகரீகமாக,உதவு அல்லது அமைதியாய் முடங்கு..என்று சொல்லும்போது, படியாத பிள்ளையின் தலையில் லேசாக கொட்டு வைப்பதுபோல,அவர் அடக்கிவைத்த வார்த்தை நம் மனதுக்குள்,‘இன்னொரு வார்த்தையாக’வந்துபோவதை தவிர்க்க முடியவில்லை. ,

சாதியையும் மதத்தையும்
நெஞ்சுநிறைய சுமந்து திரியும்
அந்தப் பெரிய மனிதர்
ஊரை அழைத்து வைத்த
விருந்தில்.., -அறியாத வயதில் கலந்து கொண்டு,உண்ட உணவு,”இன்னும் செறிக்க மறுக்கிறது”. என்று சொல்லும்போது,சாதிய உணர்வுகள் எந்த அளவிற்கு,ஒரு பக்குவப்பட்ட மனதில் அருவெறுப்பை ஏற்படுத்துகிறது..என்பதை துல்லியமாகப் பதிவு செய்துள்ளார்.இந்த கவிதையை வாசிக்கும்போது,நாமும் அப்படிப்பட்ட விருந்துகளில் ஏதாவது கலந்து கொண்டிருந்தால்..,நமக்கும் குமட்டத்தான் செய்யும்.

மாடாய்த்தான் அலைகிறோமோ..?,நடமாடும் கடவுளாகி விடு,முடநம்பிக்கை நாட்டியம்,எங்கே கடவுள்.? நியாயநாள் தீர்ப்புகள்,ஏடெழுதும் எழுத்தாளர்கள், பசியால் உலர்ந்து.., போன்ற கவிதைகள் சாதி மதங்களை மறுத்து மானுடம் பேசும் கவிதைகளாக இருக்கின்றன.

தன்னை கேள்விக்குள்ளாக்கும் சக்திகளை நசுக்குவதும்,பெரும் வணிகக் குழுமங்களின் போஷாக்கில்,தன்னை வளர்த்து கொள்ளும் முயற்சியில் காலம்,இடம்,சூழல் என அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டு, அதிகாரத்தைக் கைப்பற்றி,அதன் அடிப்படைப் பண்புக்கேற்ப,ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்கிறது ஆத்திகம்.

மேலும்,மதத்தையும்,சாதியத்தையும் தமது வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப் போராடிய அய்யா வைகுந்தர்,நாராயண குரு,மற்றும் உலகறிந்த புரட்சிக்காரனான பகத்சிங் மட்டுமின்றி, “சிவசக்தி,பீம்சக்தி, இந்துசக்தி..” என அம்பேத்கர் பிறந்த மராட்டிய மாநிலத்தில் தலித்துகளுக்கு நடுவே முழக்கங்கள் எழுப்பி, அம்பேத்கரையும் மதச் சட்டகத்திற்குள் அடைக்கப் பார்க்கின்ற காலமாக, நிகழ்காலம் கடந்து கொண்டிருக்கிறது.

அன்றைய பேரரசுகளின் மறுஉருவமாக இன்று இருக்கும் பெருவணிகக் குழுமங்களின் பொருளாதார நலன்களை முன்னிறுத்தும் வகையில், மதத்தை ஒரு காப்புக் கேடயமாகப் பயன்படுத்தும் முயற்சியே இது என..‘மதம்’ பிடிக்காத சிந்தனையாளர்களும் பொதுமக்களும் அறிவார்கள் என நம்பலாம்.

இந்த நேரத்தில்,தோழர்.வா.நேருவின்,‘சூரியக் கீற்றுகள்’ வெளிப்பட்டு, சாதி, மதங்களின் மென்னியைத் திருகும் கேள்விகளை முன்வைப்பதும் பொருத்தமாக இருக்கிறது. ‘மதம்’பிடித்தவர்கள் இப்போது ஏற்றுக் கொள்ளாவிட்டால்தான் என்ன..? அவர்கள் ஏற்றுக் கொள்ளும்வரை, சொல்லவேண்டியதை சொல்லிக் கொண்டேதான் இருக்கும் இவரது கவிதைகள்.

இதுமட்டுமின்றி,புத்தகங்களைப் பற்றிப் பேசுகின்ற கவிதையாக இருக்கும் ‘எழுதுவோம் தினந்தோறும்’ எனும் தலைப்பிலான அவர் கவிதை,

உனது வாசிப்பும்
எனது வாசிப்பும்
ஒரே நேர்கோட்டில் என
அறியும்போது
முகிழ்க்கும் நட்பும்
உதவ நீளும் கரங்களும்
புத்தகத்தின் வெற்றி மட்டுமல்ல,
மானுடத்தின் வெற்றியாய்..!

உன்னை நானும்
என்னை நீயும்
அறிந்திட
வார்த்தைகளை விட
வலிமையாய்
வாசிக்கும் புத்தகங்களும்
எழுதும் எழுத்துக்களும்
இணைக்கும் பாலமாய்..! –என்று சொல்லியிருப்பது ஒத்த சிந்தனையுடையவர்களுக்கு, உற்சாக டானிக்.

உள்மனதின் ஓசை எனும் தலைப்பில்,அவலங்களைச் சுட்டிக்காட்டி,அதனைக் களைவதற்காக ஏதேனும் செய்வோமா..? என்ற பரிதவிப்பே தனது கவிதையாக முகிழ்க்கிறது என கவிதை பிறக்கும் புள்ளியை சுட்டுகிற கவிஞர்,ஏழுகோடித் தமிழர்களும் கவிதை எழுதினாலும்,காலவெள்ளத்தில் கரைவது எது.? என்பதனைக் காலம் தீர்மானிக்கும் என்றும் கவிதைகளின் பொதுவான தகுதிகளையும் சுட்டிக் காட்டுகிறார்.

அழகாய் படமெடுத்தாலும் பாம்பு கொட்டப்போவது என்னவோ நஞ்சுதான்.” விளம்பரத்திற்காக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கிறது, அழகாய் படமெடுத்தாலும் கவிதை.!

என்று மாறும் இநத நிலை.?, தேவை அல்ல,மனத்தெளிவே.! என்ற கவிதைகள்,கவிதைச் சிறுகதைகள்.!

புரளிப் பிள்ளையார்..நல்ல நகைச்சுவைக் கவிதை.

இதுமட்டுமின்றி,இன்னும் பல தலைப்புகளில் உள்ள கவிதைகள் அனைத்தும் அரசியல்,சமூகம்,மனிதநேயம், உழைப்பு என தனது பாடுபொருட்களால் நம்மை ரசிக்க வைக்கிறது.

பொதுவாக நமக்கு,கையில் எப்போது,எந்தப் புத்தகம் கிடைத்தாலும் மேலோட்டமாக புரட்டி அங்கொன்றும்,இங்கொன்றுமாகப் படிக்கும்போதே அந்தப்புத்தகம் எதனைப் பற்றிப் பேசுகிறது என்று தெரிந்துவிடும். சிலநேரம் எப்போதும் படித்துச் சலிக்கின்ற விஷயங்கள்.., என அலுப்பும்,கோபமும்கூட வந்துவிடும்.எதைப்பற்றியும் கவலைப்படாத சில ஜந்துக்கள்,எப்போதும் எழுதுகின்ற சில சுயநலத் தன்னுணர்வுக் கவிதைகள் வந்துகொண்டே இருந்தாலும்,தோழர் வா.நேருவின் கவிதைத் தொகுப்பை அவ்வாறு கடந்துவிட முடியாது. காரணம்..,தோழர் நேருவின் கவிதைகள்கள்தான்,எனக்கு முதல் முகவரி.அதற்குப் பிறகுதான் அவரோடான நட்பு.

எப்போது வாசித்தாலும் அந்தக் காலத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும்,தோழர்.நேருவின் கவிதைகளை காலவெள்ளம் எந்நாளும் கரைக்க முடியாது.மாறாக,அவை விதைக்கும் சிந்தனைகளில் இருந்து புதிய விதைகள் முளைத்துக் கொண்டேதான் இருக்கும்.!..இன்னும்,இன்னும் சிறப்பாய் சொல்ல,இத்தொகுப்பில் நிறையக் கவிதைகள் இருக்கின்றதே என்ற தவிப்புடனும்,அன்புடனும்.., பொள்ளாச்சி அபி

தகவலுக்காக..,
புத்தகத்தின் விலை.ரூ 70.
மானமிகு பதிப்பகம்
3ஃ20.ஏ-ஆதிபராசக்தி நகர்,
திருப்பாலை-மதுரை-625014
தொடர்புக்கு- 94433 62300
நன்றி : எழுத்து. காம்

Tuesday, 17 June 2014

அண்மையில் படித்த புத்தகம் : வெட்டி வாழ்க்கைக்கு நோ, வெற்றி வாழ்க்கைக்கு எஸ், டாக்டர் சி.எஸ்.ராஜீ

அண்மையில் படித்த புத்தகம் : வெட்டி வாழ்க்கைக்கு நோ, வெற்றி வாழ்க்கைக்கு எஸ்
ஆசிரியர் : டாக்டர் சி.எஸ்.ராஜீ
பதிப்பகம் : சாய் பப்ளிஷ்ர்ஸ், சென்னை-87
முதல் பதிபபு : 2012, மொத்த பக்கங்கள் : 160, விலை ரூ 120.

                                 இந்த நூல் யாருக்காக ? எதற்காக? எழுதப்பட்டது என்பதனை ஆசிரியர் உரையில் இந்த நூலின் ஆசிரியர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். " ஒன்பதாம் வகுப்பில் இருந்து +2 முடிக்கும் பருவத்தில்தான் பிள்ளைகள் பெரும்பாலான உடல்வளர்ச்சி பெறுகின்றனர். அறியாத குழந்தைப் பருவத்தைத் தாண்டி அறிந்த வாலிபப்பருவத்தை அடைகின்றனர்... அந்த முக்கிய காலகட்டத்தில் பிள்ளைகளை நல்ல திசையில் திருப்பிவிடத்தான் இந்நூல் எழுதப்பட்டது ஆயிரக்கணக்கான பெற்றோர் மற்றும் குழ்ந்தைகளையும் அவர்க்ள் உயர்வு தாழ்வுகளையும் கண்ட அனுபவம்தான் இந்நூலை எழுதத்தூண்டியது.

                                     இந்தப் புத்தகம் 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, பாகம் 1 - சுய ஆய்வும் ஊக்குவிப்பும் என்னும் தலைப்பு கொண்டது. ஒரு கழுகு தன் குஞ்சுகளுக்கு எப்படிக் கூடுகட்டுகிறது.பின்பு குஞ்சு பொரித்து தன் குழந்தை வளர வளர குழந்தையை பயிற்றுவிப்பதற்காக
 எப்படிக் கூட்டைக் கலைத்து முட்களின் மேல் கழுகுக்குஞ்சை உட்கார வைத்து,விழ வைத்து,பயத்தினால் அழ வைத்து,பின்பு அச்சம் போக்கி,பயமற்ற,தானக இரையைத் தேடிக் கொள்ளும் கழுகுக்குஞ்சாக உருவாக்குகிறது என்பதனைச் சொல்லி நீங்கள் கூட்டிலிருந்து வெளியே வரவேண்டிய நேரம் வந்துவிட்டது என வளர் பருவத்திலிருக்கும் மாணவமாணவிகளுக்கு நினைவூட்டுகிறார்."உங்கள் சொந்தக்கால்களிலே நிற்பது உங்களுக்கும் பெருமை,உங்கள் பெற்றோருக்கும் பெருமை.உற்றார் உறவினருக்கும் பெருமை ,உங்கள் சிறகுகள் முளைத்து விட்டன,பறக்க ஆயத்தமாகுங்கள்'.
                                 
                                                        வளர் பருவத்தில் பிள்ளைகளைச் சமாளிக்க பெற்றோர்கள் படும்பாடு பெரும்பாடு.பெற்றோர்களை இந்த வயதினர் சரியாகப் புரிந்து கொள்வதில்லை.அவர்களுக்கு புரிய வைக்கும் விதமாக்"உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும்  உள்ள பந்தபாசம் "எனும் தலைப்பில் கொடுக்கின்றார்."நீங்கள் மேல்நிலைப்பள்ளி (அ)உயர்நிலைப்பள்ளி,அல்லது கல்லூரியில் படிக்கிறீர்கள் என்றால் எப்பொழுதாவது உங்கள் அப்பா,அம்மா உங்களுக்காக செய்யும் தியாகங்களையும் உங்கள் உயர்வில் எவ்வளவு அக்கறையையும் கொண்டுள்ளார்கள் என்பதையும் எண்ணிப் பார்த்ததுண்டா? எனப் பக்கம் 11ல் வினா எழுப்புகின்றார்."உங்கள் பெற்றோர் உங்கள் மேல் கொண்டுள்ள அன்பும் பாசமும் அளவிட முடியாதது...இந்த  உலகத்தில் அந்த அன்பிற்கு ஈடு இணையான அன்பே கிடையாது எனக் கூறும் ஆசிரியர் பெற்றோர்கள் செய்யும் தியாகங்களை பிள்ளைகளை வளர்க்க ,படிக்க வைக்க படும்  இன்னல்களை பக்கங்கள் 12,13 ல் குறிப்பிடுகின்றார். "இத்தனை தியாகங்களைச் செய்யும் உங்கள் பெற்றோர் உங்களிடம் எதை   எதிர்பார்க்கின்றார்கள்?... நீங்கள் பெற்றோருக்குச் செய்யும் கைம்மாறு அனைத்தும் உங்கள் படிப்பு வளர்ச்சி ,முன்னேற்றம் தான்.திருவள்ளுவர் ,இந்தக் கருத்தை பின்வரும் குறளிலே மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் எனச்சொல்லி ,
                            "மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி  இவன்தந்தை
             என்நோற்றான் கொல் எனும்சொல்."
என்னும் குறளைக் குறிப்பிடுகின்றார்.

                                          2 கால்களும் 2 கைகளும் இல்லாத திரு.ராஜண்ணா பெங்களூரில் ஒரு தொழிற்சாலையை வெற்றிகரமாக நடத்தி வருவதையும் ,15 மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுத்துள்ளதையும் முன்னாள் ஜனாதிபதி.டாக்டர்.அப்துல்கலாம் அவர்களிடம் உற்சாகமாக பரிசு பெற்றதையும் குறிப்பிட்டு ,
  
                         என்ன பலம் இல்லை உங்களிடம் ?
                          ஏன் இன்னும் குழம்ப வேண்டும் உங்கள் மனம்?
                          திட்டமிட்டு உழைத்திடுங்கள் தினம் தினம் .
                         வேகமாக உயரும் உங்கள் வாழ்க்கைத்தரம்.

என வளர்பருவ மாணவ-மாணவிகளுக்கு ஊக்கமூட்டுகிறார்.மாணவ-மாணவியர்களே நீங்கள் உங்களிடம் செய்துகொள்ள வேண்டிய கூட்டல்,கழித்தல்,பெருக்கல் எனப் பட்டியல்களை அணுகுமுறையின் அடிப்படையில் வரிசைப்படுத்தி பக்கம் 21,22ன்றில் குறிப்பிடுகின்றார்.

                          சுய ஆய்வு மேற்கொள்ளுங்கள்.பிரச்சனையே இல்லாத  ஒருவர் உலகத்தில் இல்லை .பிரச்சனைகளை எதிர்கொள்ளுங்கள்.
"உளிதாங்கும் கற்கள்தானே ; மண் மீது சிலையாகும்
வலிகாணும் உள்ளந்தானே ; நிலையான சுகம் காணும் ;
யாருக்கில்லை போராட்டம் ;கண்ணில் என்ன நீரோட்டம் ;
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும் ." எனும் கவிஞர் பா.விஜய் அவர்களின் திரைப்படப் பாடலைக் குறிப்பிட்டு பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.

                            அதிக பயத்தால் வாழ்வே இருள்மயமாகிவிடும் எனச்சுட்டிக் காட்டும் இந்த நூலின் ஆசிரியர் " எப்பொழுதும் ஏதாவது ஒரு நல்ல காரியத்தில் ஈடுபட்டு உற்சாகத்துடன் வேலை செய்துகொண்டிருப்பவர்களுக்கு கவலையும் , பயமும் வளராமல் அடிமட்டத்திலேயே தங்கிவிடுகின்றன " எனப்பக்கம் 42-ல் குறிப்பிட்டு உங்கள் மனதைக் கெடாமல் வைத்திருப்பதற்கு குளிர்சாதனமோ, பணமோ தேவையில்லை, உங்கள் மன உணர்வை ஒழுங்குபடுத்துவதே அதற்கு தீர்வு எனக்குறிப்பிடுகிறார்.

                             முன்னேற்றத்திற்கான தடைகள் அனைத்தும் திட்டமிடாத, செயல்படாத, நேரத்தை வீணாக்குபவர்களின் பாதைகளில்தான் அதிகம்,எனவே திட்டமிடுதலை வாழ்க்கையின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள் எனக்குறிப்பிடுகின்றார். களிமண்ணாக இருந்த களிமண் அழகிய டீ  கப்பாக மாறும்வரை அது படும் இன்னல்களைக் குறிப்பிடும் ஆசிரியர் வாழ்வின் பல்வேறு இன்னல்களைத் தாண்டித்தான் உயரத்தை அடைய முடியும் எனும் எதார்த்தத்தை பில்கேட்ஸ், எடிசன், ஐன்ஸ்டீன், கலீல் கிப்ரான், ஏலன் ஸ்டிரிக்,பென்னிப்லெயிர், ஜிக ஜிக்லர், பெஞ்சமின் பிராங்களின் போன்ற 10 மேதைகளின் கருத்துக்கள் என பல்வேறு கருத்துக்களை பாகம் ஒன்றின் முடிவுரையாக கொடுக்கின்றார். 

                                                     இலக்கை நிர்ணயித்தலும் சுயமுன்னேற்றமும் என்பது 2ம் பாகமாகும்.இலக்கு என்றால் என்ன?இன்றைக்கு அல்லது இந்த வாரத்தில் செய்ய வேண்டிய குட்டி இலக்குகள்,இந்த மாதத்தில் செய்ய வேண்டிய சிறு இலக்குகள்.இந்த ஆண்டில் செய்ய வேண்டிய பெரிய இலக்குகள்.வாழ்க்கையில் இலக்கு என்பது எதையாவது ஒன்றைச் சாதிப்பதும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் தான் மகா இலக்குகளை அடைய குட்டி இலக்குகள்,சிறு இலக்குகள்,பெரிய இலக்குகள் அவசியம் எனச் சொல்லும் ஆசிரியர், மார்டின் லூதர் சொன்ன மகத்தான கருத்து என

 'உங்களால் பறக்கமுடியவில்லை எனில் ஓடுங்கள்;
  ஓடமுடியாவிட்டால் நடந்து செல்லுங்கள்;
 நடக்க முடியாவிட்டால் ஊர்ந்து செல்லுங்கள்;
எப்படியாவது இலக்கை நோக்கி முன்னேறி செல்லுங்கள்."குறிப்பிடுகின்றார்.

                 மாணவ மாணவிகளிடம் தங்கள் பலத்தை(strength) பலவீனத்தை பட்டியலிடச் சொல்லுகின்றார்.பலவீனத்தை நீக்கி பலத்தை அதிகரிக்கச் செய்யும் பத்துப் படிகளை சுட்டிச் சொல்லுகின்றார்.10வது படியாக "நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் (பிறர் உங்களைப் பார்க்கும் போதும்,யாரும் பார்க்காத போதும்)முக்கியமானது என்னவென்றால் நீங்கள் நன்னடத்தையிலிருந்து சற்றும் நழுவக்கூடாது.உங்கள் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்றால் யாராவது உங்கள் நடத்தை பற்றி தவறாகச் சொன்னால் கூட யாரும் நம்பக்கூடாது.உங்கள் வாழ்க்கை என்னும் சூப்பர் கட்டடத்தை நேர்மை,நியாயம்,கண்ணியம்,கட்டுப்பாடு,அன்பு ஆகியவை கொண்ட அஸ்திவாரத்தின் மேல் கட்ட வேண்டும் . அப்பொழுதுதான் வாழ்நாள் முழுவதும் உங்கள் மகிழ்ச்சியுடன் தலை நிமிர்ந்து நடக்க முடியும்.நன்னடத்தைதான் உங்கள் கிரீடத்தில் பொதிக்கும் வைரக்கல்' எனப்பக்கம் 75ல் குறிப்பிட்டு ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை வேண்டுமெனில் ஒழுக்கம் வேண்டுமென்பதனை பசுமரத்தாணிபோல அடித்துக் கூறுகின்றார்.

              சுய நிர்வாகம் தேவை எனக் குறிப்பிட்டு அதற்கு ஒவ்வொரு பொருளுக்கும் ஓரிடம் அந்தந்த பொருள் அந்தந்த இடத்தில், எங்கும் எதிலும் ஒழுங்கு, எங்கும் எதிலும் சுத்தம் என்னும் வழிமுறைகளைக் கூறுகின்றார்.

                   கடுமையான் வெயிலை மறைக்க குடை பயன்படுகின்றது.மற்றவர்கள் செய்யும் கேலிய,கிண்டலை,ஏளனங்களை மறைக்க மனதளவிலே ஒரு குடையை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
யாரவது ஏளனம் செய்தால் மனதிற்குள் உருவாக்கிய குடையை விரித்து குரைக்கும் நாய்கள் என அலட்சியமாகச் சொல்லுங்கள்.எனப் பக்கம் 82,83ந்றில் குறிப்பிடுகின்றார்.

                 ஜப்பானில் ஹோண்டா என்ற இளைஞன் சந்தித்த சோதனைகளையும் தன்னம்பிக்கை,விடாமுயற்சி எனும் 2 சாவிகளால் கார் தயாரிக்கும் தொழிற்சாலையை ஹோண்டா நிறுவனத்தை நிறுவிய வெற்றி வரலாற்றைச் சொல்லி நீங்களும் வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை,விடாமுயற்சி  எனும் சாவிகளை உபயோகிங்கள் உயர்வாக எண்ணுங்கள் .நீங்கள் உயர்வீர்கள் என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.

          வளர்பருவத்தில் ஆழ்பள்ளத்தில் விழுந்து அவதிப்பட வைக்கும் 3கொடிய பழக்கங்கள் புகைப்பழக்கம்,மதுப்பழக்கம்,போதைப்பழக்கம் இப்பழக்கங்களுக்கு ஆட்பட்டு வீடாதீர்கள்.இப்பழக்கங்களுக்கு ஆட்பட்டு இருப்போர்களோடு நட்பு பாராட்டாதீர்கள்,விலகி நில்லுங்கள் எனக் குறிப்பிடுகின்றார்.

                        நேரத்தை நன்றாக கையாள 10 உன்னத உத்திகள் எனக் குறிப்பிட்டு பக்கம் 96 முதல் 101 வரை விவரிக்கின்றார்."கையில் சரியான நேரத்தைக் காட்டும் கடிகாரம் இருந்தும் குறித்த நேரத்தில் குறித்த வேலைக்கு போகவில்லையென்றால் அவர்கள் கடிகாரம் கட்டிக்கொள்ள தகுதியானவர்கள் அல்ல."

                         பேசும் ஆற்றலை வளர்த்துக்கொள்வது பற்றி பக்கம் 103 முதல் 106 வரை விவரிக்கின்றார்..மேடையில்பேசும் வாய்ப்புகள்,உங்களுக்கு தானாக வந்துவிடாது.வாய்ப்புகளை நீங்கள் தான் உண்டாக்கி கொள்ள வேண்டும்.பள்ளிகள்,கல்லூரிகள்,சங்கங்கள்,நற்பணி மன்றங்கள் போன்ற பல இடங்களிலே வாய்ப்புகளை உண்டாக்கிக் கொண்டு நன்கு தயார் செய்து பேசிப்பேசித்தான் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

               மாணவப் பருவத்திலே உடல் வளர்ச்சி இருப்பதால் உடல்நலம் நன்றாக இருக்கிறதே என்று எப்படி வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டு  ஒரு கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை வாழ்ந்தால் சுமார் 10 ஆண்டுகளுக்குள் உடல்னலம் கெடுவது நிச்சயம்.என எச்சரிக்கும் ஆசிரியர்.உங்கள் உடல்னலமே முன்னேற்றத்திற்கு பலம் .எனவே முன்னேற்றத்தை கவனியுங்கள் என அறிவுறுத்துகிறார்.

             தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்க வழிமுறைகள் என்பது 3ம்பாகமாகும் தாமஸ் ஆல்வா எடிசன் சொன்ன "அறிஞனாக தேவை ஒரு சதவீத சுய ஊக்குவிப்பும் 99சதவீத உழைப்பும் தான்.என்பதைக் குறிப்பிட்டு 30 அறிவுரைகளை படிப்பது குறித்தும்,தேர்வுக்கு தயாராவது பயிற்சிகள் குறித்தும் தேர்வுக்கு போகும் முன் தேர்வில் விடைத்தாள்களை கையாளும் முறை.,அதிக மார்க்குகள் வாங்க தேர்வு எழுதுவது எப்படி,மிகவும் கடினமான தேர்வை சந்திப்பது எப்படி!என்பதனைப் பற்றியெல்லாம் விளக்கியுள்ளார்.

              நன்னடத்தைதான் உங்களின் மாபெரும் சொத்து என்பது பாகம் 4 ஆகும்.நல்லவர் சேர்க்கை-நல்லதொரு வாழ்க்கை.பொல்லாதோர் சேர்க்கை-தொல்லைமிகு வாழ்க்கை எனக் குறிப்பிடும் இந்நூல் ஆசிரியர்.If character is lost,everything is lost எனும் ஆங்கில வாசகத்தைச் சொல்லி நன்னடத்தையை வலியுறுத்துகிறார்.

                     உங்கள் மாதாந்திர வளர்ச்சி அறிக்கை என்பது 5ம் பாகம்.இது ஒரு பயிற்சியாக இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளது,வளர்பருவத்தினர் மட்டுமல்ல,நம்மைப் போன்ற பெற்றோர்களும் படிக்க வேண்டிய புத்தகம் ,டாக்டர் சி.எஸ்.ராஜி அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை நாம் வாசிப்பது மட்டுமல்ல,நமது  பிள்ளைகளையும் வாசிக்கச் சொல்ல வேண்டும். அவர்கள் மன்ம் உவந்து வாசித்துவிட்டால் வளர் பருவப் பிள்ளைகளின் மனதில் ஒரு மாற்றம் நிகழ் வைக்கும் அளவிற்கு கருத்துக்கள் உள்ள புத்தகம் இது..

( மதுரை, அகில இந்திய வானொலியில் நூல் அறிமுகம் பகுதிக்காக தயாரிக்கப்பட்டது)

 
                      

Friday, 13 June 2014

அணமையில் படித்த புத்தகம் : ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் .....(நாவல்) -க.பஞ்சாங்கம்

அணமையில் படித்த புத்தகம் : ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் .....(நாவல்) 
ஆசிரியர்    க.பஞ்சாங்கம்
வெளியீடு : காவ்யா, சென்னை -24
முதல் பதிப்பு : 2005, மொத்த பக்கங்கள் : 170, விலை ரூ 85

                                       இவ்வளவு  பாதிப்பை உண்டாக்கும் நாவலை அண்மையில் படிக்கவில்லை. படிக்கும்போதும், படித்து முடித்து இரண்டு நாட்கள் ஆன பின்பும் கேள்விகளாக மனதில் எழுப்பிக்கொண்டேயிருக்கும் நாவல் இந்த நாவல். நான் , என் என்று தன்னை ஒரு பாத்திரமாக இந்த நாவலாசிரியர் வரித்துக்கொள்ளும் வார்த்தைகளோடுதான் கதை ஆரம்பமாகின்றது. உள்ளத்துக்குள் கொதித்துக்கொண்டிருந்த பெரு நெருப்பை வார்த்தைகளாய் கொட்டி வடிக்கும் வடிகாலாய் இந்த நாவல். ஒரு அத்தியாயம் என்பது 2, 3 பக்கங்களில் ,ஏன் ஒரு அத்தியாயம் (33) சில வரிகளில் என்றாலும், தொடர்ச்சியாய் இழவு வீட்டில் முட்டி முட்டி அழும் ஒரு மன நிலையோடு  , ஏன் இப்படி நிகழ்ந்தது , நிகழ்கிறது என்னும் கேள்விகளோடு கதை நகர்கின்றது

                                    தன்னோடு கல்லூரியில் வேலை பார்க்கும் பாலன், எந்த அநியாயத்தையும் பொறுத்துக்கொள்ள இயலாத பேராசிரியர் பாலன், தலித் என்பதாலேயே அவமானப்படுத்தப்படும் பேரா. பாலன், குழந்தைத் தனமான பாலன், போட்டித்தேர்வு எழுதி அதிகாரியாகப் போகும் பாலன், அதிகாரியாக வாழும் காலங்களில் தன்னைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளால் புழுங்கித் தவிக்கும் பாலன்,தன்னுடைய குடும்பம் முழுவதும் தன்னுடைய பணத்தை நம்பி வாழும் சூழ் நிலையால் மனம் குமுறும் பாலன், குடும்பத்து மூத்த மகனாகப் பிறந்ததால் முழுக்க குடும்பத்தை தாங்கும் பாலன்,தன்னுடைய தங்கை வாழ்க்கை திருமணம் என்னும் பந்தத்தால் தலைகீழாகப் போவதைப் பொறுக்காமல் அழும் பாலன், தன்னுடைய மனைவியின் குடும்பத்தினருக்கு தான் சம்பாதித்துக் கொடுக்கும் வீட்டில் கிடைக்கும் மரியாதையும் , மதிப்பும் தன்னுடைய குடும்பத்தினருக்கு கிடைக்கும் அவமானமும், அவமரியாதையும் கண்டு மனதுக்குள் வெம்பி, மனைவியோடு சண்டை போட்டு அடிக்கும் பாலன், இது போன்ற நேரங்களில் பிறப்பால் தலித் இல்லையென்றாலும் தன்னை தலித்தாக பாவித்துக்கொள்ளும் தன்னுடைய நண்பன் கொடுக்கும் விளக்கங்களை ஏற்றுக்கொள்ளும் பாலன், ஓசோவை படித்து ஆகோ ஓகோவென்று புகழ்ந்து விட்டு, அம்பேத்கரின் புத்தகங்களைப் படித்தபின் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து ஓசோ புத்தங்கங்களை இனித் தொடுவதில்லை என்று சொல்லும் பாலன், நண்பனின் அண்ணல் அம்பேத்கர் பற்றிய புரிதல், ஏன் இந்த சமூகம் இப்படி சாதி வயப்பட்ட சமூகமாக இருக்கிறது என்பதை அண்ணல் அம்பேதகர் புத்தகங்களால் புரிந்து கொள்ள முயலும் நண்பன், ,    தற்கொலைக்கு முயலும் பாலன், கடைசியில் டில்லியில் இறந்து போன பாலன் என்று இந்த நாவல் முழுவதும் பாலன் என்னும் மனிதனின் அகமனமும் அவன் புறச்சூழலும் முரண்படும் இடங்களும் ,முடிவில் பாலன் முடிந்து போவதும் , அவனுக்கு உயிருக்குயிராய் இருக்கும் பிறப்பால் தலித் அல்லாத நண்பனும் , அவனது நடவடிக்கைகளும் என நாவல் விரிகின்றது. 

                                                 
" நாம் ஏன் இப்படிக் கிடக்கிறோம்? நம் வாழ்வைத் திருடியவர்கள் யார் ? இதோ என் முன்னால் நிர்வாணமாக எலும்பும் தோலுமாய் நிற்கிறானே சிறுவன், இவனுக்குச்சேர வேண்டிய உணவையும் துணியையும் திருடிய தீய சக்திகள் யார் ? ஆட்டைத் தொடுகிறான், மாட்டைத் தொடுகிறான், நாயைக் கொஞ்சுகிறான் ; ஆனால் நம்மைத் தொடமாட்டானாம். அந்த அளவிற்கு நம்மைக் கேவலமான பிறவியாய் அருவருக்கத்தக்க ஒரு பொருளாய் ஆக்கிய நாசகாரர்கள் யார் ? இதிலுள்ள சூழ்ச்சிகளை எல்லாம் கொஞ்சமாவது அறிந்தோமா ? சரி, இனி மேலாவது அறிய முயல வேண்டாமா ? நமது அன்றாட வாழ்வையே அலங்கோலமாக்கிய மிருகத்தனங்களை நாம் ஏன் இன்னும் பொறுத்துக்கொண்டு வாழவேண்டும் ? பொங்கி எழ வேண்டாமா? எழுந்து இந்த அக்கிரமங்களின் ஆணிவேரையும் சல்லி வேர்களையும் அழித்து ஒழித்து விட்டலவ்வா இப்படித் திருமணம் முடிக்க நினைக்க வேண்டும். ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவனும் இத்தகைய திருமணங்கள் மூலம் , இன்னொரு தாழ்த்தப்பட்டவனைத்தானே இந்தத் திமிர் பிடித்த உயர் சாதியினருக்குப் பெற்று வளர்த்துக் கொடுக்கிறான. எண்ணிப் பார்த்துச்செயல்பட வேண்டாமா ? சரி, திருமணம் முடிக்கிறீர்கள்; பெற்ற பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும். அம்பேத்கர் சொன்னது போலப் பிச்சை எடுத்தாவது பிள்ளைகளைப் படிக்கப் போட வேண்டாமா? தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடுதலை 'கல்வி கற்பதில்தான் ' இருக்கிறது  என்பதை அந்த மேதை சொல்லால் சொல்லியதோடு மட்டுமல்லாமல் செயலால் செய்தும் காட்டினாரே ! நான் இந்த மண்விழாவில் மணமக்களுக்குச்சொல்லிக் கொள்ள விரும்பவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் . தாழ்த்தப்பட்ட மக்களாகிய நமக்கு விதிக்கப்பட்டிருக்கிற வாழ்க்கை " போராடுதல் " ஒன்றுதான் . " வாழ்க்கையே போராட்டம் " என்று சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைக் கூட்டம் நூத்துக்கு நூறு நமக்குத்தான் பொருந்தும். இதைப் புரிந்து கொள்ளுங்கள் . கணவன்-மனைவியாய் இணையும் நீங்கள் அதோடு வாழ்க்கையைச்சுருக்கிக் கொள்ளாதீர்கள் . உங்கள் மேல் இந்த ஆதிக்கச்சாதிகள் திணித்திருக்கும் பாரங்களுக்கு எதிராகப் போராட இணைந்திருக்கிறோம் என்று எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்; வரலாறு நம்மை விடுதலை செய்யும் ; வாழ்க மணமக்கள்; வளர்க நீடூழி " (பக்கம் 13). ஒரு தி.க.காரரும், பாலனும், நான் என்று வரும் பாத்திரமும் கலந்து கொண்ட திருமணத்தில் பாலன் பேசியதாக கூறப்பட்ட வரிகள்தான் மேலே சொல்லப்பட்டவை.  இதைப் போன்ற பகுதிகள் நாவல் முழுவதும் இருக்கிறன. நியாயமான பல விமர்சனங்கள் இந்த நாவலில் இருக்கின்றன.


                                                                 பாலனின் வாழ்க்கையை விவரிக்கும் பகுதி போலவே , பாலனின் டைரிக்குறிப்புகளும் பல்வேறு விவாதங்களை மனதுக்குள் எழுப்புகிறது.     ஏன் இந்த நாவல் பலரின் கவனத்தையோ, பரிசையோ பெறவில்லை என்பது கேள்விக்குரியாய் நிற்கிறது. தடித்த புத்தகங்களுக்குத்தான் பரிசு கொடுப்பார்களோ, சமூகத்தில் தடித்துப் போய்க்  கிடக்கும் சாதிக்கொடுமைகளை மிகத் துல்லியமாக, நுண் கண்ணாடிகளால் காட்டும் இதனைப் போன்ற நாவலகள் ஏன் தமிழ் இலக்கிய உலகில் விவாதிக்கப்படுவதில்லை என்னும் கேள்விக்கு சாதி சார்ந்த சமூகம் என்பதுதான் பதிலாக இருக்கும். தந்தை பெரியார் கூறியது போல, " உனது இலக்கியம் சாதியைக் காப்பாற்றும் இலக்கியம், உனது கடவுள் சாதியைக் காப்பாற்றும் கடவுள், உனது மதம் சாதியைக் காப்பாற்றும் மதம், உனது மொழி கடவுளைக் காப்பாற்றும் மொழி " என்று கூறியதைப் போல அனைத்தும் சாதிமயமாகிப் போன சூழலில், கலகக் குரலாய் வரும் இதுபோன்ற நாவல்கள் நிராகரிக்கப்படுவதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. நாத்திகனாக வாழும் நண்பனை உயிருக்குயிராய் நேசிக்கும் பாலன், தன்னுடைய சடங்குகளை விடாத தன்மையும், மகன் இறந்த நிலையிலும் கூட சடங்குகளை விடாப்பிடியாக விடாத பாலனின் தந்தை என , கவிஞர் இன்குலாப் சொன்னதைப் போல " தொட்டில் தொடங்கி சுடுகாடு வரைக்கும் " விடாது பிடித்துக்கொண்டிருக்கும் சடங்குகளை ஏன் விடாப்பிடியாக ஒடுக்கப்பட்டவர்கள்  பிடித்துக்கொண்டு தொங்கவேண்டும் எனும் கேள்வியையும் இந்த நாவல் எழுப்புகிறது.,

                                சமகாலத்தில் நிகழும் நிகழ்வுகளை முன்னிறுத்தி, மிக நேர்மையாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிகழும் அவமானங்களை, அவமரியாதைகளை பிறப்பால் தாழ்த்தப்பட்டோராக இல்லாத ஒருவர் எழுதிய நாவல் இது. மிகக் கூடுதல் கவனத்தை இந்த நாவல் பெற வேண்டும். நாவலின்  தலைப்பு ஒரு தலித், ஒரு அதிகாரி, ஒரு மரணம் என்று இருந்தாலும் ஒரு மரணம், ஒரு பேராசிரியர், ஒரு அதிகாரி, ஒரு தலித்தாக இருந்ததனால் ஏற்பட்ட நிகழ்வுகள் என இந்த நாவல் விரிகின்றது. இந்த நாவலைப் படிக்கும்போது நான் மிக நெருங்கிப் பழகிய , பழகும் சில நண்பர்களின் வாழ்க்கையோடும் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைப் போன்ற நிகழ்வுகள் பல சுட்டிக் காட்டுப்பட்டுள்ளன.  படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவத்தை இந்த நாவல் அளிக்கக்கூடும் . வாசித்துப்பாருங்கள்.
                                       :