Tuesday, 13 September 2022
Saturday, 10 September 2022
சொல்லவேண்டிய நாளிது...
விலங்குகள் எதுவும்
தங்களைத் தாங்களே
மாய்த்துக்கொள்வதில்லை...
இயற்கையாகவோ
இன்னொருவரால்
செயற்கையாகவோ
உயிர் இழக்கும்வரை
ஓடித் திரிந்து
உற்சாகமாய் விலங்குகள்
மண்ணில் வாழ்கின்றன...
உலகில் உள்ள பொருட்கள்
அனைத்தையும்
அடித்துச்சுருட்டி
அள்ளி வைத்துக்கொண்டு
உலகத்தின் பணக்கார
மிருகம் நான்தான் என்று
எந்த மிருகமும்
அறிவித்துக்கொள்வதில்லை..
அப்படிப்பட்ட மனநிலை
எந்த விலங்குக்கும்
இருப்பதாகத் தெரியவில்லை...
தினம் தினமும்
குடித்துக் குடித்து
கொஞ்சம் கொஞ்சமாய்
தற்கொலைக்குத் தயாராகும்
அபத்தங்கள் எதுவும்
விலங்குகளிடம் இல்லை...
மனிதர்கள் ஏன்
தங்களைத் தாங்களே
மாய்த்துக்கொள்கிறார்கள்?..
உளவியலும் அறிவியலும்
உச்சகட்டத்தில் இருக்கும்
இந்தக் கணினி யுகத்தில்தான்
தாறுமாறான தற்கொலைகளும்
நம் கண்முன்னால் ...
எனக்கு என் குடும்பத்திற்கு என
அலைந்து திரிந்து
சேர்த்துவைத்த பலரும்கூட
சொல்லாமல் கொள்ளாமல்
பட்டென்று முடித்துக்கொள்கிறார்கள்
தங்கள் வாழ்க்கையை.
உலகில் நாற்பது நொடிக்கு
ஒருவர்
தன்னைத்தானே மாய்த்துக்கொள்கிறார்
இதில் இளம் வயதில்
இருப்பவர்கள் அதிகமென
புள்ளி விவரங்கள் சொல்கிறது...
மகன் தன்னைத்தானே
மாய்த்துக்கொள்ள
மனதொடிந்த பெற்றோரும்
சில நாட்களில்
தங்களைத் தாங்களே
மாய்த்துக்கொண்ட செய்தி
மனதைப் பல நாளாய்
பிழிந்திட்ட செய்தி...
எல்லாவற்றையும் விட
உயர்ந்தது உன் உயிர்...
என்பதை மண்ணில் வாழும்
ஒவ்வொரு மனித உயிரிடமும்
விதைக்க வேண்டிய நாளிது..
செல்பேசிகளை
சில மணி நேரம்
தூக்கியெறிந்துவிட்டு
நட்புகளோடு
சிரித்து மகிழுங்கள்..
இன்பமோ துக்கமோ
எது எனினும்
பகிர்ந்து பழகுங்கள்
என்று நம்மைச்சுற்றி
இருக்கும் இளையவர்களிடம்
சொல்லவேண்டிய நாளிது...
வா.நேரு,10.09.2022.
Wednesday, 7 September 2022
பெரியாரும் உலக எழுத்தறிவு நாளும் முனைவர் வா.நேரு
உலக அளவில் எழுத்தறிவு நாள் (The World Literacy Day) என்று செப்டம்பர் 8 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. 1965-இல் ஈரான் நாட்டில் உள்ள டெக்ரான் நகரில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றிருக்கிறது. அங்கு கல்லாமையைப் பற்றிக் கவலை கொண்டு, அதற்கென ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து கல்லாமையை உலக அளவில் நீக்கவேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை உலக அளவில் பேச வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். அதை யுனெஸ்கோ நிறுவனத்திற்கு அனுப்பி-யிருக்கிறார்கள். அதனை ஏற்றுக் கொண்டு 1966-ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள் உலக எழுத்தறிவு நாளாக யுனெஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு, 1967-ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
செப்டம்பர் 8 அன்று ஒவ்வொரு நாட்டிலும் கல்வி கற்றவர்கள் எத்தனை சதவிகிதம் பேர், அதில் ஆண்களில் கல்வி கற்றவர்கள் எத்தனை சதவிகிதம், பெண்களில் எத்தனை சதவிகிதம்? உலகிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற நாடு எது? குறைவான எழுத்தறிவு பெற்ற நாடு எது? போன்ற பல புள்ளி விவரங்கள் வெளியிடப்-படுகின்றன. எழுத்தறிவு சதவிகிதத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அரசும் மற்ற அரசு சாரா நிறுவனங்களும் பேசும் நாளாக செப்டம்பர் -8 என்பது அமைகின்றது. இந்த ஆண்டு (2022) புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் கல்வியறிவு சதவிகிதம் 77.7. இதில் ஆண்களில் கற்றவர்கள் சதவிகிதம் 84.7, பெண்களில் கற்றவர்கள் சதவிகிதம் 70.3, நகரங்களில் கற்றவர்களின் சதவிகிதம் 87.7, கிராமப் புறங்களில் கற்றவர்களின் சதவிகிதம் 73.5, அதிகமாகக் கற்றவர்கள் இருக்கும் மாநிலம் கேரளா(96.2), குறைவாகக் கற்றவர்கள் இருக்கும் மாநிலம் ஆந்திரப்பிரதேசம்(67.35) என்று ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு’’
என்றார் திருவள்ளுவர். கல்வி என்பது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதைத் திருவள்ளுவர் ‘கல்வி’ என்னும் அதிகாரத்திலும் ‘கல்லாமை’ என்னும் அதிகாரத்திலும் மிகவும் வலியுறுத்திக் கூறுவதைக் காணலாம். ஆனால், அதற்குப் பின்னால் இடைப்பட்ட காலத்தில் பார்ப்-பனியத்தால் நம்முடைய கல்வி முடக்கப்-பட்டதும், சென்ற நூறு ஆண்டுகளில் நாம் பெற்ற கல்வியும், வாய்ப்பும், திராவிட இயக்கத்தின் கல்விக்கான முன்னெடுப்பும் நாம் அறிந்ததே. பார்ப்பனரல்லாதவர்களின் கல்வி சதவிகிதம் 1900இ-ல் 1 சதவிகிதம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்று தமிழ் நாட்டில் கல்வி சதவிகிதம் 87.9. இது எவ்வளவு பெரிய மாற்றம்!
யுனெஸ்கோ நிறுவனம் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை என்று அறிவித்திருக்கிறது. கல்வி வாழ்க்கையை மாற்றுகிறது, உலகில் அமைதியை நிலைநாட்ட, வறுமையை ஒழிக்க, இயற்கையோடு இயைந்த வளர்ச்சியை அடைய கல்வி ஒன்றே வழி என்று யுனெஸ்கோ குறிப்பிடுகிறது. வெறுமனே ஒரு மொழியில் படிக்கவும் எழுதவும் தெரிந்தால் அவர்கள் கற்றவர்கள் கணக்கில் சேர்க்கப்படுகிறார்கள். ஆனால், தந்தை பெரியார் நோக்கில் கற்றவர்கள் யார்? கற்பது எதற்காக என்று நாம் சிந்திக்க வேண்டும்.
“கல்வி என்பதைப் பற்றி நமது மக்கள் பெரும்பாலும் புத்தகப் படிப்பையும், குருட்டு உருப்போட்டுத் தேர்வுகளில் தேறி விடுவதையுமே கல்வி என்று கருதிக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, ஆங்கிலத்தில் பி.ஏ., எம்.ஏ. படித்துப் பட்டம் பெற்றவர்களையும் தமிழ்ச் சங்கத்தில் படித்து வித்துவான் பரீட்சை பாஸ் பண்ணி பட்டம் பெற்றவர்களையும் கல்வியாளர் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் ஏதோ ஒரு வித்தையில், அதாவது குருட்டு உருப்போட்டு ஒப்புவிக்கக்கூடிய ஒரு வித்தை அல்லது ஒரு சாதனத்தில் தேர்ந்தவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அதாவது, அலமாரியில் உள்ள புத்தகங்களைப் போல், இவர்களும் தங்கள் மனத்தில் பல விஷயங்களைப் பதிய வைத்திருக்கும் ‘ஒரு நகரும் அலமாரி’ என்றுதான் சொல்லவேண்டும்.’’ (‘குடிஅரசு’ 27.7.1930) என்று குறிப்பிடுகின்றார்.
தந்தை பெரியாரின் சொல்லாடலைப் பாருங்கள். நகரும் அலமாரி என்று படித்தவரைக் குறிப்பிடுகின்றார். நகரும் அலமாரிகளால் சமூகத்திற்கான பயன் என்ன? என்னும் கேள்வி எழுகிறது. நான் ஒரு மாதத்தில் 100 புத்தகங்கள் படிக்கிறேன் என்று சொல்லும்போது, வெறுமனே ஒருவர் அவராகப் படித்துக் கொண்டிருப்பதனால், சமூகத்திற்கு ஏற்படும் நலன் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். அவர் படிக்கும் படிப்பு மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளில் வரும் புத்தகங்கள் பற்றிய சிந்தனைகள் போல மற்றவர்களுக்கும் பயன்படும்படி ஒருவரின் வாசிப்பு அனுபவம் அமையவேண்டும்.
“கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம், ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும் அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்குவது என்பதாகும்’’ என்றார் தந்தை பெரியார். ஒருவருக்குக் கிடைக்கும் எழுத்தறிவு, அந்த எழுத்தறிவைக் கற்றுக்கொள்-பவருக்கு சுயமரியாதையையும், பகுத்தறிவையும் ஏற்படுத்த வேண்டும். எழுத்தறிவு கிட்டுவதால், அவருக்குத் தன்மான உணர்ச்சி ஏற்பட-வேண்டும்.
ஒருவருக்கு எழுத்தறிவு கிட்டினால், அந்த எழுத்தறிவு மேன்மையான வாழ்க்கைக்கு, தொழில் செய்வதற்குப் பயன்படவேண்டும் என்பதுவும் தந்தை பெரியாரின் கருத்து.
புகழ்பெற்ற கல்வியாளர் பாவ்லோ பிரையர் ஒருமுறை சொன்னார், “எழுதப் படிக்க மட்டும் கற்றுக் கொடுப்பது கல்வியல்ல. வெறும் மனப்பாடத் திறமையில் தகவல் தொகுப்பாக குழந்தைகளை மாற்றுவது கல்வியின் பணியல்ல.
மாறாக, ஒட்டுமொத்த சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் விருப்பு வெறுப்பின்றி விசாரணை செய்வதும், சமூக அநீதியைக் களைவதும், ஒரு சிலர் மட்டும் அனுபவிக்கும் முறையற்ற செல்வப் பகிர்வை உலகில் உள்ள அனைவருக்கும் பயனுடையதாக மாற்றுவதுமே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்!’’ என்றார் எனக் குறிப்பிடுவர்.
கணினியும் இணையமும் எழுத்தறிவு சதவிகிதத்தை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. எழுத்தறிவும் கணினி அறிவும் முக்கியமானவை. ஆனால், அதையும்-விட பகுத்தறிவும் உலக அறிவும் முக்கிய-மானவை. எழுத்தறிவு என்பது பகுத்தறிவு அடிப்படையில் அமைதல் வேண்டும். ஏன், எதற்கு, எப்படி என்னும் கேள்விகளை எழுத்தறிவு பெற்றவர்கள் கேட்கும் வண்ணம் எழுத்தறிவு அமைதல் வேண்டும். “உலக அறிவே முக்கியமானது. உலகத்துடன் பழகியவர்க்குத்-தான் பொது அறிவு வளர முடியும்’’ என்றார் தந்தை பெரியார். உலக அறிவை, பகுத்தறிவை வளர்ப்பது குறித்தும் எழுத்து அறிவு நாளில் நாம் சிந்திக்கும் நாளாக செப்டம்பர் -8 அமையட்டும்!
நன்றி : உண்மை செப்டம்பர் 01-15 இதழ்
Wednesday, 31 August 2022
கொரனா காலத்திற்குப் பின்பாவது...
ஓடி ஓடிக் கலந்து
கொண்ட காலங்கள்
போல அல்லாது
ஓய்வு கேட்கிறது கால்கள்..
மூன்று பேருந்து
நான்கு பேருந்தென
மாறி மாறி
மதுரையிலிருந்து
சென்னைக்குப்
போன காலம்
போலல்லாது
படுக்கையுடன் கூடிய
தொடர்வண்டி
முன்பதிவு வேண்டி
நிற்கிறது மனது...
நட்பு உறவுகளின்
நல்லது கெட்டதன
பரபரவெனக் கலந்து
அலைந்து வந்த
காலம் போலல்லாது
கட்டாயம் போகவேண்டுமா
எனும் கேள்விக்கு
ஆம் என்னும் பதில்
வந்த பின்புதான்
பயணம் செய்யத் தோன்றுகிறது...
எதையோ சாதிக்கப்போவதாய்
பறந்து திரிந்த கால்களும்
பரபரவென அலைந்த மனதும்
நிலையாமையை உணர்ந்ததுபோல
நிறுத்தி நிதானாமாய்
நடக்கச்சொல்கிறது...
எது தேவை
எது தேவையற்றது
என ஒவ்வொன்றையும்
அளக்கச்சொல்கிறது...
கொரனா காலத்திற்குப்
பின்பு மனதும் உடம்பும்
நிரம்பவே மாறிவிட்டது
என்றான் நண்பன்....
ஒரு பேரழிவு நோயினால்
எத்தனை மாற்றங்கள்...
எத்தனை இழப்புகள்...
நம்மைச்சுற்றி என்றான் மேலும்...
எது தேவை
எது தேவையற்றது
என ஒவ்வொன்றையும்
அளப்பது நல்லதுதான்...
உனக்கென வாழும்
ஒவ்வொரு நாளும்
சோர்வைத்தான் தரும்...
மற்றவருக்கென வாழ்ந்துபார்..
கொடுத்துப்பழகு
இந்தக் கொரனா காலத்திற்குப்
பின்பாவது...
வாழ்வும் இனிக்கும்...
கால்களும் பறக்கும்...
என்றேன் நான்..
வா.நேரு, 31.08.2022
Monday, 29 August 2022
சொற்களின் கூடுகளுக்குள்- வா.நேருவின் நூல் பற்றி வழக்குரைஞர் மதிவதனி அவர்களின் உரை
''சொற்களின் கூடுகளுக்குள்'' ஒரு தேடல்!
Sunday, 28 August 2022
எனக்குரிய இடம் எங்கே - ச.மாடசாமி....
நேற்றைய நிகழ்வு 'எனக்குரிய இடம் எங்கே - ச.மாடசாமி ' அவர்களின் நூல் பற்றிய எனது(வா.நேரு)வின் உரை.எழுத்தாளர் பேரா.ச.மாடசாமி அவர்களின் ஏற்புரை உள்ளிட்டவைகளின் தொகுப்பு.
யூ டியூப் இணைப்பின் சுட்டி
Friday, 26 August 2022
5ஜி தொழில்நுட்பம் – சில பார்வைகள்
5ஜி தொழில்நுட்பம் – சில பார்வைகள்
முனைவர்.வா.நேரு
இந்தியாவில் 5ஜி ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தில் முழுமையாக டிஜிட்டல் உலகத்தை ஆக்கிரமிக்கப் போகும் இரு நபர்களாக இந்தியாவின் பெரும் பணக்காரர்களான கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி உருவாகி இருக்கிறார்கள். அம்பானியின் ரிலையன்ஸ் _ஜியோ, வோடஃபோன் அய்டியா, பார்தி ஏர்டெல், அதானி டேட்டா நெட்வொர்க் எல்லாம் இந்த ஏலத்தில் பங்கெடுத்து பணம் கட்டியிருக்கிறார்கள். இன்னும் இந்த சேவையையே தொடங்காத அதானி கம்பெனிக்கு 5ஜி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 100 ஆண்டுகளுக்கு மேலாக தொலைதொடர்பு சேவையில் இருக்கும் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் 5ஜி ஏலத்தில் பங்கெடுக்க அனுமதிக்கப்படவில்லை. இன்னும் கேட்டால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி தொழில் நுட்பமே இன்னும் கொடுக்கப்படவில்லை. 4ஜி தொழில்நுட்பம் கொடுக்கப்பட வேண்டுமென பல ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராடிப் பார்த்து விட்டார்கள். ஒன்றிய அரசு கொடுக்க மறுக்கிறது. இந்த ஏலத்தில் அம்பானி, அதானி மற்றும் இருவர் என மொத்தமே நான்கு நிறுவனங்கள் மட்டுமே போட்டியில்…
முன்னாள் ஒன்றிய அரசின் அமைச்சர், எந்நாளும் தந்தை பெரியாரின் மாணாக்கர் மானமிகு ஆ.இராசா அவர்கள் இந்த ஏலத்தில் 2,80,000 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார். பி.ஜே.பி.யிலிருந்து மழுப்பான பதில்கள் மட்டுமே வருகின்றன. 2ஜியில் 1 லட்சத்து 76,000 கோடி ஊழல் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி, ஊதிப் பெருக்கிய ஊடகங்கள் அமைதி காக்கின்றன…. பார்ப்பனியத்தின் நரித்தனத்தை அறிய 5ஜி ஏலமும் ஒரு வழியாக அமைந்திருக்கிறது.
5ஜி வந்தால் இணையத்தின் வேகம் கூடும் என்பது நமக்குத் தெரியும்.சேமிக்கப்படும் செர்வரிலிருந்து கூகுள் போன்ற வழங்குகின்ற மென்பொருள் மூலம் தேவைப்படுகிறவர்களுக்கு வழங்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் கணினி மூலம் தாங்கள் எழுதும் கவிதைகளை, கதைகளை கட்டுரைகளை எழுதி அதனை இணையத்தில் ஏற்றுகிறார்கள். அவை மொத்தமாகச் சேமிக்கப்படுகின்றன. எனக்கு பெரியார் பற்றிய கவிதை தேவை என்றால் பெரியார் பற்றிய கவிதை என்று கூகுள் வழங்கியிடம் கேட்கிறேன். அது உலகத்தில் இருப்பவர்கள் யார் யாரெல்லாம் பெரியாரைப் பற்றிக் கவிதை எழுதியிருக்கிறார்களோ அவற்றை எல்லாம் செர்வரிலிருந்து எடுத்து வந்து காண்பிக்கிறது. எனக்குத் தேவையானதை நான் எடுத்துக்கொள்கிறேன். இது இன்றைய நிலை.
வருகின்ற 5ஜி தொழில் நுட்பத்தில் மனிதர்களின் இணையமும் இருக்கும். அதோடு பொருள்களின் இணையம் பெரிய அளவில் வளர்ச்சி பெறும். ஒரு வயற்காடு இருக்கிறது. அந்த வயற்காட்டில் ஒரு கிணறு நீர் இறைக்கும் இயந்திரத்தோடு இருக்கிறது.
இந்த வயற்காடும், மின்சார மோட்டாரும் பொருள்கள். இந்த இரண்டு பொருள்களும் இணையத்தால் இணைக்கப்படும். வயற்காட்டில் நெல் பயிரிட்ட பின் வயற்காட்டிற்கு தண்ணீரை இணையத்தின் மூலம் இயந்திரம் பாய்ச்சும். எல்லா நெல் பயிருக்கும் தண்ணீர் பாய்ந்துவிட்டால் போதும், நிரம்பிவிட்டது என்று அந்த வயற்காட்டில் இருக்கும் உணரி சொல்லும். உடனே இயந்திரம் நின்றுவிடும். மனிதர்கள் அங்கு தேவையில்லை.
இப்படி ஒவ்வொரு துறையிலும் இருக்கும் தொடர்புடைய பொருள்கள் எல்லாம் இணையத்தின் மூலம் இணைக்கப்படும். வீட்டிலிருந்து நாம் வெளியேறிவிட்டோம் என்பதை கதவு என்னும் பொருள் உணரி மூலம் உணர்ந்தால். வீட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் அத்தனை மின் கருவிகளையும் இணையம் அணைத்துவிடும். விளக்கு சுவிட்சை அணைக்காமல் விட்டு விட்டோமே என்று எண்ணி நாம் மறுபடியும் வீட்டுக்கதவைத் திறந்து பார்க்க வேண்டியதில்லை. இப்படி விவசாயத்தில், மருத்துவத்தில், செய்திகளில், வாகனங்களில் எனப் பல அதிசயங்கள் மிக விரைவில் நடக்க இருக்கின்றன 5ஜி தொழில் நுட்பம் மூலம். அதேநேரத்தில் 5ஜி அலைக்கற்றைகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அய்ரோப்பிய நாடுகளில் தீவிரமான எதிர்ப்பு கிளம்பியது.
“இந்தக் கதிர்வீச்சுக்கு ஆளாகும் மனிதர்களுக்குப் புற்றுநோய் ஏற்படும் என்கிற முடிவுக்கு வருவதற்கும் ஓரளவுக்கு ஆதாரம் இருப்பதால்” இந்த வகைப்பாட்டில் சேர்க்கப் பட்டுள்ளது. 4ஜி வரை செல்போன் கோபுரங்கள் உயரமாக அமைக்கப்பட்டன. தொலைவும் 3 அல்லது 4 கி.மீ.க்கு ஒன்று என அமைக்கப்பட்டன. ஆனால், 5ஜி செல் கோபுரங்கள் குட்டையாக அமைக்கவேண்டும். மிகவும் நெருக்கமாகவும் அமைக்க வேண்டும். இதற்கான செலவும் அதிகம் ஆகும் என்கிற நிலையில், தனியார் தொலைதொடர்புத்துறை நிறுவனங்கள் நகரங்களில் மட்டும் மிக மிக பக்கத்தில் 5ஜி செல் கோபுரங்களை அமைத்து, அதிக கதிர்வீச்சு ஆபத்துகளை உருவாக்கி, மிகப் பெரிய அளவிற்கு இலாபம் சம்பாதிப்பார்கள்.
பெண்களின் பங்களிப்பு இணையம் வடிவமைப்பில் இருந்தாலும் முடிவெடுத்து அமல்படுத்தும் இடத்தில் ஆண்களே முழுக்க முழுக்க இருந்துள்ளனர் _ இருக்கின்றனர். “ஆன்லைன் தளங்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதால் பாதிக்கப்படுவதில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்தான் அதிகம். சுமார் 22 நாடுகளைச் சேர்ந்த 14,000க்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் 2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, உலகளவில் 10 பெண்களில் ஆறு பேர் ஏதேனும் ஒரு வகையான ஆன்லைன் வன்முறையை அனுபவிப்பதாகத் தெரிய வந்துள்ளது.
1,600க்கும் மேற்பட்ட ஆபாச வழக்குகளின் (பழிவாங்கும் எண்ணத்துடன் பதிவேற்றப்பட்ட படங்கள், விடியோக்கள் தொடர்பான வழக்குகள்) மற்றொரு ஆய்வில் பாதிக்கப்பட்டவர்களில் 90% பெண்கள் என்று தெரியவந்துள்ளது. 2020ஆம் ஆண்டில், பியூ ஆராய்ச்சி மய்யம் நடத்திய கருத்துக் கணிப்பில், ஆன்லைனில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்வதில் ஆண்களைவிட பெண்கள் மூன்று மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டது” என்று பி.பி.சி.யில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. நிஜ உலகம் என்பது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத உலகமாக இருக்கிறது.
இந்த உலகம் இன்றைக்கு முதலாளித்துவ உலகமாக இருக்கிறது. லாபம் வேட்டையாடும் களமாக இணையமும் இருக்கிறது. பெரியாரிஸ்டுகளைப் பொறுத்தவரையில் நாம் மாறுதல்களை, அறிவியல் கண்டுபிடிப்புகளை வரவேற்பவர்கள்; வரவேண்டும் என விரும்புகிறவர்கள். அதே நேரத்தில் 5ஜி போன்ற தொழில் நுட்பம் வருகின்றபோது, அதனைச் சுற்றி என்ன விவாதங்கள் நடக்கின்றன என்பதையும், அவை எதை நோக்கி மக்களை இழுத்துச் செல்லப்போகின்றன என்பதையும் அறிய வேண்டும். தெரிந்து கொள்ள வேண்டும். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்னும் திராவிட இயக்கக் குறிக்கோளுக்கு அதனை எந்தெந்த வகையில் எல்லாம் பயன்படுத்த முடியும் என்பது பற்றிச் சிந்தனை செய்ய வேண்டும். அந்த வகையில் 5ஜி தொழில் நுட்பத்தை வரவேற்போம்.
நன்றி : உண்மை இதழ் ஆகஸ்ட் 16-31
Wednesday, 17 August 2022
14.08.2022 வாழ்க்கையில் ஒரு மறக்க இயலாத நாளாக ....
14.08.2022 வாழ்க்கையில் ஒரு மறக்க இயலாத நாளாக ஆனது.ஆம் நூற்றாண்டு காணும் ஆத்தூர் அய்யா வே.தங்கவேல் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டதுதான்.பகுத்தறிவு ஆசிரியரணி மாநிலத்தலைவர் தோழர் தமிழ்.பிரபாகரன் அவர்கள் 25 நாட்களுக்கு முன்பே ,அய்யா சிறப்பு அழைப்பாளர்களில் நீங்களும் ஒருவர்.தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்றார்.அய்யா ஆசிரியர் அவர்கள் வருகின்றார்,கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகின்றார்.அய்யா சுப.வீ. வருகின்றார்,எழுத்தாளர் மதிமாறன் வருகின்றார் என்றார்.கட்டாயம் வருகின்றேன் என்று சொல்லி முதல் நாள் இரவே ஆத்தூருக்குப் போய் இரவு தங்கி விட்டு,காலையில் ஆனந்தமாக ஒரு நடைப்பயிற்சி போய்விட்டு,பின்பு பெரியாரிய ஆய்வாளர் அய்யா பொ.நாகராசன் அவர்களோடு இணைந்து அய்யா வே.தங்கவேல் அவர்களின் கடைக்குச்சென்றோம்.100 வயது என்றால் கோல் ஊன்றி நடந்து கொண்டிருப்பார் என்று நினைத்து நான் போனேன்.அவரைப் பார்த்தவுடன் அப்படி ஒரு மகிழ்ச்சி,ஆனந்தம் மனதில் எழுந்தது.துள்ளி எழும் காளை போல சுறுசுறுப்பாக கடையில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.பார்த்தோம்.நம்மை விட வேகமாக நடக்கின்றார்.அவரோடு சேர்ந்து சிரித்தோம்.மகிழ்ந்தோம்.
நிகழ்வில் முழுக்க இருந்ததோடு அந்தக் குடும்பத்துப் பிள்ளைகள் நாலு தலைமுறையைச்சார்ந்தவர்கள் கறுப்புச்சட்டையோடும்,தந்தை பெரியார் கொள்கையோடும் அய்யா ஆசிரியர் போட்டுத்தரும் பாதையில் பயணிப்பதைக் கண்டு உற்சாகம் பெற்றோம்.அந்தப் பயண அனுபவம் பற்றி அய்யா பொ.நாகராசன் அவர்கள் எழுதியிருப்பதை இந்தத் தளத்தில் பதிவிடுவதில் மகிழ்ச்சியும்,பெருமையும்....
வா.நேரு, மதுரை
17.08.2022
நூற்றாண்டு நாயகருடன்
கழிந்த இனிய ஒரு நாள் !
****************************
● பகுத்தறிவாளர் கழகம், மாவட்ட செயலாளர், ஆத்தூர், ஆசிரியர் அ. அறிவுச் செல்வம் ( அறிவு ) அவர்களின் தாத்தா, பெரியார் பெருந் தொண்டர், ஆத்தூர் வே. தங்கவேல் அய்யாவின் 100வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள என்னையும் அழைத்திருந்தார் .
● நூற்றாண்டு விழா 14.08.2022 அன்று ஆத்தூரில் நடைபெற உள்ளதையும், அய்யாவை வாழ்த்த திராவிடர் கழக தலைவர் ஆசிரியர். கி. வீரமணி, மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பேராசிரியர் சுபவீ, எழுத்தாளர் மதிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்ய உள்ளதையும் தெரிவித்தார்.
● பெரியாரியத்தை அறிந்து கொள்ள பெரியாரின் படைப்புகளும் பெரியார் பற்றிய படைப்புகளும் நமக்கு உதவலாம்.
பெரியாரியத்தை ஆய்வு செய்ய விரும்புவோர், பெரியாரின் தொண்டர்களையும், பெரியார் பெருந் தொண்டர்களையும் சந்தித்து அவர்களின் நேரடி அனுபவங்களையும் அவர்களின் பங்களிப்பையும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது .
● அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை பெற வேண்டி, முதல் நாள் இரவே ஆத்தூரை சென்றடைந்தேன். என்னை பேருந்து நிலையத்தில் வரவேற்க அறிவும் அவர்களது தோழர்களும் வந்திருந்து மகிழ்ச்சியிலாக்கினார்கள்..
அவர்களோடு நூற்றாண்டு நாயகர் தங்கவேல் அய்யாவும் ஒரு ஸ்கூட்டரில் பின்னே அமர்ந்து, நேரில் வந்து வரவேற்றது கண்டு ஆடிப் போய்விட்டேன்..தந்தை பெரியார் தன்னை காண வருபவர்களை இப்படித்தான் வரவேற்றாரோ !
● அருகே ஏற்பாடு செய்திருந்த தங்கும் விடுதியில் தங்கி விட்டு, மறுநாள் காலையிலே தயாராகி கிளம்பினேன். அந்த விடுதியில் தங்கியிருந்த முனைவர் வா. நேரு, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மாநில தலைவர் அவர்களோடு நிகழ்ச்சி அரங்கத்திற்கு சென்றோம்.
● நிகழ்ச்சி அரங்கம் தயாராகி கொண்டிருந்த அதே வேளையில் நிகழ்ச்சியின் நாயகர் தனது தினவழக்கப்படி தங்கள் சிறிய கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவரை கடையில் வைத்தே சந்திக்க எண்ணி நானும் அய்யா நேருவும் கடைக்கு சென்றோம். எங்களோடு விருதுநகர் தோழர் நல்லதம்பியும் இணைந்து கொண்டார்.
● தங்கவேல் அய்யாவை கடையில் சந்தித்து உரையாடினோம். அவரது கடையில் பாக்கு மரத்தாலான தட்டுகள், சிறிய கப்புகள் விற்பனைக்குள்ளன..அவரது கடைக்கு எந்த நாளும் விடுமுறை கிடையாதாம். " இன்றாவது விடுமுறை விடலாமே " என்று கேட்டுப் பார்த்தேன்.. சிரிப்பு ஒன்றே பதிலாக தந்தார். அந்த கடையை 1952 லிருந்து வாடகை கொடுத்து நடத்துகிறார். அய்யா உட்கார்ந்திருக்கும் நாற்காலி அதற்கு முன்னரே வாங்கியதாம் !
ஆச்சர்யப்பட்டு போனேன்.. பெரியாரின் சிக்கனம் இது தானோ ?
● நூற்றாண்டு விழா ' அண்ணா அரங்கம் ' நிரம்பி வழிய - அய்யா தங்கவேலுவின் குடும்ப உறவுகளும் கொள்கை உறவுகளும் இணைந்து சிறப்பு அழைப்பாளர்களின் வாழ்த்துகளோடு நினைவில் கொள்ளதக்க வகையில் விழா நடந்தேறியது.. விழா நாயகருக்கு சிறப்பு செய்யும் நிகழ்வும் நடைபெற்றது. மதியம் நடைபெற்ற சிறப்பு விருந்திற்குப்பிறகு எல்லோரும் விடை பெற்றனர்..
● மாலையில் அய்யாவை சந்திக்க அவரது கடைக்கு சென்றேன். கடையில் அவரின் நண்பர்கள் எப்போதும் மூன்று நான்கு பேர் அமர்ந்து உரையாடிக் கொண்டே இருப்பார்களாம். அவர்கள் அங்கு வந்த வேளையில் படிப்பதற்காக தினமும் ' விடுதலை ' நாளிதழ் வந்து விடுகிறது. அய்யாவை பொருத்தவரை அடுத்தவர்களை பேச விட்டு இவர் அமைதியாக கேட்கிறார்..என்னை கண்டவுடன் தனது நண்பர்களுக்கு இவர் ' பொன். நாகராஜன். ' என அறிமுகம் செய்து வைத்தார்.
● அய்யாவிடம் அவர் பெரியார் பேச்சை கேட்ட முதல் அனுபவத்தை பற்றி கேட்டறிந்தேன் . அய்யா கூறுகிறார் - " நான் எனது 29 வயது வரை தீவிர பக்திமானாக இருந்தேன். பெரியாருக்கு எதிரி என்றே வைத்துக் கொள்ளுங்கள். ஒருமுறை பெரியார் ஆத்தூருக்கு பொதுக் கூட்டத்திற்கு பேச வந்தார். அந்த கூட்டத்தில் கலாட்டா நடைபெறும் என அறிந்து அதை வேடிக்கை பார்க்க சென்றேன். பெரியாரோ இரண்டு மணி நேரம் பேசினார். எல்லோரும் பெட்டிப் பாம்பாய் அடங்கி கிடந்தார்கள். வெறுப்பாகி போகி, கலவரம் ஒன்றும் நடைபெற வில்லையே என ஏமாற்றத்துடன் கிளம்ப ஆரம்பித்தேன்..
● பெரியார் தனது உரையை நிறைவு செய்யும் போது ' என் பேச்சை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டாம் ! உங்களுக்கு சரியாக பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் விட்டுத் தள்ளுங்கள் ' என்றார். அப்போது அப்படியே திரும்பினேன். இப்படியும் ஒரு தலைவர் பேசுவாரா ? என அதிசயத்துப் போனேன். அன்றிலிருந்து பெரியார் தொண்டரானேன் " என்று உற்சாகமாக எடுத்துச் சொன்னார்..
● ஒரே ஒரு முறை கேட்ட பெரியாரின் உரை ஒரு தீவிர பக்தனை நாத்திகனாக மாற்றியிருக்கிறது ! இதை அதிசயம் என்பதா அல்லது அறிவாயுதம் என்பதா ? அதனால் தான் இந்த மண்ணின் பெயர் பெரியார் மண்ணோ !..
● தங்கவேல் அய்யாவுடன் இன்னமும் அதிகமாக பேசி உறவாட எண்ணி அன்று இரவு தோழர் அறிவின் இல்லத்தில் தங்கினேன். மறுநாள் காலையில் அய்யாவுடன் அறிவு தனது காரில் தங்கள் தோட்டத்திற்கு அழைத்து சென்றார். அய்யாவும் அவரது துணைவியாரும் சிறுக சிறுக சேர்த்து வைத்து வாங்கிய தோட்டங்கள்..
● தங்கவேல் அய்யா தனது நூறாண்டு வாழ்வின் ரகசியமாக சொன்னது - ஒழுக்கம்; சிக்கனம்; சுயமரியாதை ..இந்த மூன்றின் காரணமாகவேயே அவர் பொருளீட்ட முடிந்தது.. நீண்ட ஆயுளையும் பெற முடிந்தது.
அவர் எளிமையின் சின்னம் !
● திரும்பும் வழியில் திராவிடர் கழக நகரத் தலைவர் அண்ணாதுரை இல்லத்திற்கு சென்றோம். ஆத்தூருக்கும் திராவிடர் கழகத்திற்கும் ஆரம்ப காலத்திலிருந்து இருந்து வரும் உறவை விளக்கினார்.. தங்கவேல் அய்யாவின் கொள்கைப் பற்றை விளக்கினார். கட்சி பேதமில்லாமல் எல்லோரிடமும் இனிமையாக பழகுவதை கூறினார்.. எதற்கும் அசர மாட்டார் என்றும் கூறினார்.
● ஆத்தூர் தங்கவேல் அய்யாவிடமிருந்து விடை பெறும் நேரம் வந்தது.. அவரது கையைப் பற்றும் போது எனது மூத்த உறவின் கையை பற்றுவது போல இருந்தது. தந்தை பெரியாரின் கைகளை பற்றியது போல இருந்தது !
● பெரியாரியத்தை புத்தகங்களில் அறிந்து கொள்ளலாம். ஆய்ந்து தெளிவதற்கு பெரியாரின் தொண்டர்களின் கரம் பிடித்து பார்க்க வேண்டும்.. அவர்கள் தரும் அனுபவ பாடங்களை காது கொடுத்து கேட்க வேண்டும் ..என்ற பட்டறிவு நமக்கு கிடைக்கிறது..
● " நீங்கள் மீண்டும் வர வேண்டும் " என தங்க வேல் அய்யா என்னிடம் கூறினார்.." உங்களது 101 பிறந்த நாள் விழாவிற்கும் வருவேன் ! " ..என கூறி விடை பெற்றேன்..
அப்போது என் தந்தையிடம் சொல்லிக் கொண்டு கிளம்பியது போல இருந்தது !
● உலகத்திலேயே இப்படி ஒரு கொள்கை உறவை தந்தை பெரியார் அமைத்து தந்தது போல வேறு யாரும் தந்து செல்லவில்லையே !..
● ஆத்தார் வே. தங்கவேல் அய்யா இன்னமும் பல ஆண்டுகள் வாழ்ந்து எல்லோருக்கும் கலங்கரை விளக்கமாக திகழ வேண்டும் !
● தோழர். ஆசிரியர் அ. அறிவுச்செல்வமும் அவரது குடும்பத்தாரும் பாராட்டுதலுக்கும் வாழ்த்துகளுக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள் !
பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்.
சென்னை. 17.08.2022.
**************************************
Wednesday, 10 August 2022
இத்தனை நெருக்கத்தை
இத்தனை நெருக்கத்தை
ஏழு மலை தாண்டி
ஏழு கடல் தாண்டி
ஒரு குரல் உற்சாகமாக
ஒலிக்கிறது..
உங்களோடு நான்
கொஞ்சம் பேசவேண்டும்..
நேரமிருக்கிறதா? என என்
நேரத்தைப் பெற்றுக்கொண்டு
அந்தக் குரல் அளவளாவ
ஆரம்பிக்கிறது....
அவ்வளவு மகிழ்ச்சி அந்தக் குரலில்..
அவ்வளவு நட்பு விவரிக்கையில்...
உனக்குப் படிக்கத்தெரியுமா?
தாங்கள் நிகழ்த்திய
நூல் அறிமுகத்தைக்
கேட்டவுடன்..
என் வாழ்வில் நடந்த ஒரு
நிகழ்வும் என் மனக்கண்
முன்னால் வந்து போனது..
அதைப் பற்றிப் பகிர்ந்துகொள்ளத்தான்
அழைத்தேன் இந்த நேரம்..
நான் 12-ஆம் வகுப்பு படித்து முடித்தவுடன்
உனக்குப் படிப்பே இல்லை
இனிமேல்..
உனக்கு எதிர்காலமே இல்லை
என்றான் சோதிடன் ஒருவன்...
அந்தச்சோதிடன் சொன்ன பொய்யை..
பொய் என்று நிருபித்து
அயலகத்தில் இருக்கின்றேன் நான்..
உழைப்பும் மகிழ்ச்சியுமாய்
வாழ்வின் உயரத்தில் இருக்கிறேன் நான்..
நம் நாட்டு நேரமும்
இந்த நாட்டு நேரமும் தலைகீழ்...
நமக்குப் பகல் என்றால்
இங்கோ இரவு என்று
ஒப்பீடுகளோடு அந்தக் குரல்
இன்னும் அதிக உரிமையோடு
பேசத்தொடங்குகின்றது...
தான் படித்த பிரபஞ்சனை...
தான் படித்த கு.அழகிரிசாமியை
நட்போடும் நயத்தோடும்
விவரித்துக்கொண்டே செல்கிறது
அந்தக் குரல்...
தான் பிறந்த ஊரைப்பற்றி..
இலக்கிய மேடைகள் பலவற்றை
அலங்கரித்த தன் தாயார் பற்றி...
தன்னைச்சுற்றி இருக்கும்
இலக்கிய உறவுகள் பற்றி...
பேசிக்கொண்டே செல்கின்றார் அவர்..
முன்பின் நேரில் பார்த்ததில்லை..
நான் யார் அவர் யார்
என்பதற்கான எந்தவிதமான
டேட்டாகளும் இருவர் கைகளிலும் இல்லை..
ஒற்றை புத்தக வாசிப்பும்
அதனை இணையத்தில் விவரித்த விவரிப்பும்
இத்தனை நெருக்கத்தை
மனிதர்கள் மத்தியில்
கொண்டு வர இயலுமா?...
வியப்பாகத்தான் இருக்கிறது...
இன்னும் நிறைய புத்தகங்களை
விவரிக்க ஆசையாக இருக்கிறது...
'வாருங்கள் படிப்போம்'
படித்ததை வகைவகையாய்ப் பகிர்வோம்
என்னும் வேட்கை இன்னும் கூடுகிறது..
வா.நேரு,10.08.2022
கனடாவிலிருந்து அழைத்த திருமிகு பெர்னாட்ஷாவிற்கு நன்றி.
உரை கேட்க வாருங்கள்...
வாருங்கள் நண்பர்களே,வாருங்கள் தோழர்களே,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக 12.08.2022,வெள்ளிக்கிழமை நடைபெறும் நூல் ஆய்வுரைக் கூட்டத்தில் நான் எழுதிய 'சொற்களின் கூடுகளுக்குள் ' என்னும் கவிதை நூலைப்பற்றி திராவிடர் கழகத்தின் மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் தோழர் சே.மெ.மதிவதனி உரையாற்றுகின்றார்.ஆற்றல் மிகுந்த பேச்சாளராக ,முத்திரை பதித்துவரும் தோழர் சே.மெ.மதிவதினி அவர்கள் உரை கேட்க வாருங்கள்.என அன்போடு அழைக்கின்றோம்.
Sunday, 7 August 2022
பச்சைக்குதிரை...புதிய மாதவி...நூல் மதிப்புரை
Wednesday, 3 August 2022
அறிவுத் தெளிவை உண்டாக்கும் அறிவியல்
அறிவுத் தெளிவை உண்டாக்கும் அறிவியல்
முனைவர்.வா.நேரு
வானிலுள்ள சூரியன், சந்திரன், விண்மீன்கள், கோள்கள் பற்றி பலப்பல மூடக்கதைகளை, கருத்துகளை மதவாதிகள் பரப்பினர். அதிலிருந்து ஜோதிடம் என்ற மூடநம்பிக்கை முளைத்தது. ஆனால், மதவாதிகளுக்கு முதன்முதலில் அதிர்ச்சி கொடுத்த அறிவியல் அறிஞர் கலிலியோ.
கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கி உலகத்தின் பார்வையை மாற்றி வானத்தை, விண்ணை ஆராய்வதற்கான அடித்தளத்தைக் கொடுத்தது. கலிலியோ காலம் தொடங்கி இன்றுவரை அறிவியல் ஆயிரக்கணக்கான தொலைநோக்கிகளை வடிவமைத்துக்கொண்டே இருக்கின்றனர். ‘கடவுள் செத்துப்போனார்’ என்று சொல்லும் அளவிற்கு கடவுள் பற்றிய கருத்துகளைப் போட்டு அடித்து நொறுக்கியதில் இந்தத் தொலை நோக்கிகளின் பங்கு இருக்கிறது.
சூரிய ஒளியிலேயே கண்ணுக்குத் தெரிகிற கதிர்களும், கண்ணுக்குத் தெரியாத புறஊதாக் கதிர்களும் அகச்சிவப்புக் கதிர்களும் இணைந்தே பூமிக்கு வருகின்றன. வருகின்ற வழியில் இருக்கும் ஓசோன் மண்டலம்தான் இந்தக் கதிர்களின் பாதிப்பில் இருந்து பூமியில் இருக்கும் மனிதர்களையும், விலங்குகளையும், மற்ற உயிர்களையும் காப்பாற்றுகிறது.
இந்தத் தொலைநோக்கியையும் அகச்சிவப்புக் கதிர்களையும் இணைத்து அறிவியல், உலகத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம். 2021 டிசம்பர் 25-ஆம் தேதி அன்று பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் இந்தத் தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, வானில் நிலை நிறுத்தப்-பட்டது.
வானில் என்றால் 15 லட்சம் கிலோ மீட்டருக்கு மேலே இருக்கும் இடத்தில் இந்த ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இமயமலையின் உயரத்தில் இருந்து, உயரத்தில் இருக்கும் பொருள்களைப் படம் எடுப்பதுபோல, 15 இலட்சம் கி.மீ.க்கு மேல் அமர்ந்துகொண்டு இந்தத் தொலைநோக்கி, அங்கிருந்து இந்தப் பிரபஞ்சத்தின் புகைப்படங்களை எடுத்து உலகுக்கு அனுப்பி உள்ளது. இந்தப் பதினைந்து இலட்சம் கி.மீ.க்கு மேல் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியை நிறுத்துவது என்பது எளிதான வேலை அல்ல. அமெரிக்கா, கனடா, அய்ரோப்பாவைச் சார்ந்த அறிவியல் அறிஞர்களின் 30 ஆண்டுகால, பெரும் செலவிலான உழைப்பு இதில் அடங்கி யிருக்கிறது.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்குவதற்கு ஏறத்தாழ 79,000 கோடி ரூபாய் செலவானதாகக் குறிப்பிடுகிறார்கள். நாசாவின் தலைமை நிருவாகியாக இருந்தவர்-களில் ஒருவர் பெயர்தான் ஜேம்ஸ் வெப். அமெரிக்க அதிபராக இருந்த கென்னடியால் 1961இ-ல் நாசாவின் தலைமை நிருவாகியாக நியமிக்கப்பட்டவர். மனித குலத்தின் முதல் பாய்ச்சலான நிலவில் மனிதன் காலடி வைப்பதற்கு அடிப்படையான கட்டமைப்பையும், கருத்தினையும் உருவாக்கியவர் இந்த ஜேம்ஸ் வெப். அதனால் இந்தத் தொலை நோக்கி, ஜேம்ஸ் வெப் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்த உலகம் கடவுளால் உண்டாக்கப் படவில்லை என்பதனை நிருபிக்கும் ஒரு கருவியாக இந்த ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியை நாம் பார்க்கலாம். இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதனையும் ஒளி எப்படித் தோன்றியது என்பதையும் கண்டு பிடிப்பதற்கான முயற்சிக்கு இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பயன்பட ஆரம்பித்திருக்கிறது.
7 மாதங்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட ஜேம்ஸ்வெப் தொலைநோக்கிதான் அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்தி எடுத்த ஒளிப் படங்களை பூமிக்கு_-நாசா விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவர்கள் ஜூலை-12ஆம் நாள் முதல் படத்தை வெளியிட்டிருக்கிறார். அது சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தை அறிய உதவும் படமாகும். இந்தப் புகைப்படத்தின் மூலம் நமது பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதைக் கண்டு பிடிக்க முடியும் என்று சொல்கிறார்கள்.
ஜோபைடன் அவர்கள் முதல் படத்தை வெளியிட அடுத்த 5 படங்களை அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ளது.
நமது சூரியமண்டலத்திற்கு அப்பால் உள்ள சில நட்சத்திர மண்டலங்களை மிகத் துல்லியமாக ஜேம்ஸ்வெப் படம் எடுத்து அனுப்பியுள்ளது. ஏராளமான நட்சத்திர திரள்கள் ஒளிர்கின்றன இப்படத்தின் முன்னும் பின்னும்.
நமது சூரிய மண்டலத்திற்குள் உள்ள புதன், வெள்ளி, சனி போன்ற கோள்களை நாம் அறிவோம். நம் சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள, நிறைய வாயுக்கள் நிறைந்த ஒரு கோளை படம் எடுத்து ஜேம்ஸ் வெப் அனுப்பியுள்ளது. இது மிகப் பெரிய கண்டு-பிடிப்பு என அறிவியல் அறிஞர்கள் உவகை அடைந்து உற்சாக நடனமாடுகின்றனர்.
விண்மீன் இறந்தால் என்ன நிகழும்? தூசிகள், இரசாயனங்கள் கொண்ட புகை மூட்டத்திற்கு நடுவில் இருக்கும் ஒரு விண்மீன் படத்தை இந்த ஜேம்ஸ் வெப் அனுப்பியுள்ளது. இது இறந்துபோன பின்பும் ஒளியை மட்டும் அனுப்பும் செயலற்றுப்போன ஒரு விண்மீன் என்று அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடு கின்றனர். ஏறத்தாழ 1000 தனித்தனிப் படங்களை இணைத்து, மலைகளும் மேடுகளும் இருப்பதைப் போன்ற ஒரு படத்தை இந்த ஜேம்ஸ் வெப் அனுப்பியுள்ளது.
“ஆரம்பத்தில் அருள் நிறைந்த ஆண்டவன், விண்ணையும் மண்ணையும் படைத்தபொழுது, பூமி ஒழுங்கில்லாமல் வெறுமையாக இருளில் மூழ்கி இருப்பதைக் கடவுள் பார்த்தார். ஒலி எழுப்பி ஒளி தோன்றுக என்றார். உடனே ஒளி தோன்றியது. ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். ஒளிக்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.
கடவுள் நீர்த்திரைகளுக்கு இடையில் வானம் தோன்றுக, அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும் என்றார். அது நிறைவேறியது. வானத்தை உருவாக்கி வானத்திற்கு கீழுள்ள நீரையும், வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். வானத்திற்கு விண்ணுலகம் என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது’’ என்று பைபிள் கடவுள் முதலில் மண்ணுலகையும் பின்பு விண்ணுலகையும் படைத்த கதையைச் சொல்லும்.
ஆனால், அறிவியல் முதலில் விண்ணுலகமும் அதிலிருந்து வெடித்துச் சிதறி தோன்றியதுதான் மண்ணுலகம் என்பதை தனது ஆராய்ச்சியின் மூலம் நிருபித்துக்கொண்டிருக்கிறது.
“மனித சமுதாய வளர்ச்சிக்கும், மனித ஜீவனுக்குத் துக்கமும் கவலையுமில்லாமல் இருப்பதற்கும், ‘சர்வ சக்தியுள்ள கடவுள்’ ஒருவர் இருக்கின்றார் என்கின்ற எண்ணம் அடியோடு ஒழிந்தாக வேண்டும்.
‘கடவுள் இல்லை; இல்லவே இல்லை’ என்கின்ற கருத்தை மக்களிடையே உண்டாக்கி, அவர்களுக்கு அறிவுத் தெளிவை உண்டாக்கு-வதைவிட, உலகில் ஜீவகாருண்யத் தன்மை வேறில்லை என்று சொல்லுவேன்’’ என்றார் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் அவர்கள் சொன்னதைப் போன்ற ஓர் அறிவுத் தெளிவை உண்டாக்கு-வதற்கான ஒளிப்படங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணிலிருந்து அனுப்பிக் கொண்டிருக்கிறது. நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள நட்சத்திரக் கூட்டங்களையும் அவற்றில் இருக்கும் கோள்களையும் கண்டு-பிடிப்பதற்கான மனித குலத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சலை அறிவியல் நிகழ்த்தி இருக்கிறது. இதற்கு அடித்தளம் அமைத்த ஜேம்ஸ்வெப் அவர்களை நாமும் நினைவில் கொள்வோம் _ ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தரும் அறிவியல் அற்புத ஒளிப் படங்களை அறிந்து கொள்வதன் மூலமாக, அதைப் பற்றிய செய்திகளைப் படிப்பதன் மூலமாக.
சில நூற்றாண்டுகளுக்கு முன் தொலை நோக்கிகளை வைத்து இந்த சூரியமண்டலத்தில் இருக்கும் கோள்களைக் கண்டுபிடித்தனர் _ அறிவியல் அறிஞர்கள். இன்றைக்கு கணினியும், இணையமும் இன்னும் பல தொழில் நுட்பங்களும் இணைந்து உருவாக்கி இருக்கும் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி, இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியும் பல நட்சத்திரக் கூட்டங்கள் பற்றியும் நிறைய தகவல்களைத் தர இருக்கிறது. சூரிய மண்டலத்தையே தாண்டி வேறு நட்சத்திர மண்டலங்களில் இருக்கும் கோள்களில் மனிதர்கள் எதிர்காலத்தில் குடியேறலாமா? என்னும் நோக்கிலும் ஆராய்ச்சிகள் நடைபெற இருக்கிறது. அறிவுத் தெளிவை உண்டாக்கும் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியை வரவேற்-போம். அறிவியல் அறிஞர்களைப் பாராட்டி, வாழ்த்துவோம்.
நன்றி : உண்மை ஆகஸ்ட் 1-15,2022
Sunday, 24 July 2022
மண்சட்டி....அகிலா....நூல் மதிப்புரை....
Thursday, 21 July 2022
தந்தை பெரியாரும் இங்கர்சாலும்...
































