Monday, 14 September 2020

பற்றி எரியும் நெருப்பாய்,படைத்த படைப்பாளி பேரறிஞர் அண்ணா

 பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் இன்று..'நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர், அது தந்தை பெரியார் ' என்றுரைத்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று. நான் முதலமைச்சராகப் பதவி வகிக்கும் இந்தக் காலம் எனது வாழ்வின் வசந்த காலமல்ல,மாறாக கரடுமுரடான பாதைகளில் பயணம் செய்து,பகுத்தறிவுப்பகல்வன் தந்தை பெரியாரோடு இணைந்து பகுத்தறிவு பிரச்சாரம் ஆற்றிய காலமே, எனது வாழ்வின் வசந்த காலம் என்று எழுதிய  பேரறிஞரின் பிறந்த நாள் இன்று.அனைவர்க்கும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் வாழ்த்துகள்





திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் முகநூலில் நேற்று(14.09.2020) முதல் தொடர்ச்சியாக பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை பட்டியலிட்டு வருகின்றார். எத்தனை சிறுகதைகள்(120),எத்தனை நாவல்கள்(36),எத்தனை நாடகங்கள்..ஓரங்க நாடகங்கள்(12,60), எத்தனை கடிதங்கள்(290), எத்தனை கவிதைகள்(63),எத்தனை கட்டுரைகள்(1960) எனப் பட்டியலிட்டு தமிழில் மட்டுமா, ஆங்கிலத்தில் இத்தனை என அய்யா கொடுக்கும் பேரறிஞர் அண்ணாவின் படைப்பு பட்டியலை இளைஞர்கள் ஊன்றிப்படிக்கவேண்டும். தலைவாருவது பற்றிக்கவலையில்லை,படுத்து உறங்க மெத்தை கேட்டதில்லை,மாபெரும் தலைவராக பவனி வந்த நேரத்திலும், தொண்டன் கொடுத்த பாயில், கையை தலையணாக வைத்து படுத்து உறங்கிய அந்த மக்கள் தலைவரின் படைப்புகளின் எண்ணிக்கையே  படிப்பவருக்கு மலைப்பை ஏற்படுத்துகிறது. எழுதுவதற்கு எனக்கு மனநிலை நன்றாக இருக்கவேண்டும், நல்ல இடம் வேண்டும்,சுற்றுலாத்தலம் போன்ற இடங்களில் இயற்கை கொஞ்சும் சூழலில் அமர்ந்தால்தான் எனக்கு எழுதவரும் என்று சொல்லக்கூடியவர்கள் மத்தியில், நாள்தோறும் தொண்டர்களைச்சந்திக்க பயணித்துக்கொண்டே இருந்த ஒரு தலைவர்,மாபெரும் இயக்கத்தின் தலைவராக இயங்கிக்கொண்டே இருந்த தலைவர், இவ்வளவு படைப்புகளை எழுதிக்குவித்திருக்கிறார் என்று சொன்னால்,எப்படி விளைந்தன இத்தனை படைப்புகள்?


அன்பினால் விளைந்த படைப்புகள் பேரறிஞர் அண்ணாவின் இலக்கியப் படைப்புகள். நாடாண்ட தமிழன், இப்படி நமது நாட்டிற்குப் பிழைக்கவந்த நாடோடிக்கூட்டத்தால்,ஆரிய வஞ்சகத்தால் அடிமைப்பட்டு கிடக்கிறார்களே என்னும் ஆற்றாமையால் விளைந்த படைப்புகள் அவை.நமது மக்கள் வீரத்தில் குறைந்தவர்களா? அறிவில் குறைந்தவர்களா? ஆற்றலில் குறைந்தவர்களா?, எதில் குறைந்தோம் நாம்? ஆனால் ஆண்டாண்டு காலமாக 'நாங்கள்தான் அறிவிற்கு முதன்மையானவர்கள்' என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொண்ட பரதேசிகள்,நம்மைப் பழிக்கிறார்களே என்னும் கோபத்தில் விளைந்த படைப்புகள் அவை.உண்மையை நமது மக்களுக்குச்சொல்லவேண்டுமே என்னும் உணர்வில் விளைந்த எழுத்துகள் அவை.


மேன்மையான நோக்கம் இருக்கும்போது,பற்றி எரியும் நெருப்பாய் ,மனதிற்குள் கொடுமைகளைக் கண்டு குமுறும் எரிமலையாய் சிந்தனைகள் இருக்கும்போது., சுற்றி நிகழும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளும் தத்துவமும், ஆட்சி செய்பவர்களின் அதிகார மமதையை எழுத்துகளால் வடிக்க வேண்டும் என்னும் வேகம் இருக்கும்போது மகத்தான இலக்கியப்படைப்புகள் பிறந்திருக்கின்றன..மக்களின் விடுதலைக்கு வழி வகுத்திருக்கின்றன.


'தாய்' என்னும் நாவலைப் படைத்த மகத்தான எழுத்தாளன் மார்க்சிம் கார்க்கி எழுதியது பணத்திற்காக அல்ல, புகழுக்காக அல்ல. இத்தனை மொழிகளில் தனது நாவல் மொழி பெயர்க்கப்படும் என்னும் எதிர்பார்ப்பில் அல்ல. மாறாக மக்களோடு மக்களாக இருந்த மார்க்சிம் கார்க்கி, தன்னைச்சுற்றி இருக்கும் உழைக்கும் மக்களின் வேதனைகளைப் பார்த்து, உழைத்து உழைத்து ஓடாய்ப்போகும் அவர்களின் நிலையைப் பார்த்து தனக்கு பிழைப்புக்காக கிடைத்த அத்தனை வேலைகளையும் பார்த்துக்கொண்டு, அடிபட்டு,மிதிபட்டு,அல்லல்பட்டு ,வாழ்வின் வேதனைகளை முழுமையாக உணர்ந்த நிலையில்,அன்றைய ரசியாவின் ஜார் மன்னனின் கோமாளித்தனத்தையும் ,அதிகாரத்திமிரையும் உள்வாங்கி அதற்கு எதிராகக் கிளர்ந்தெழும் கதாபாத்திரங்களை உள்ளடக்கி மகத்தான நாவலைப் படைத்திட்டான். உலக மக்களின் உள்ளத்திலே நிலைத்திட்டான். 


திராவிட இயக்க எழுத்தாளர்களின் எழுத்துகள் வெறும் பொழுது போக்கு இலக்கியமல்ல.கும்பகோணத்தில், காவிரிக்கரையில் வெற்றிலையைப் போட்டுக்கொண்டு அமர்ந்துகொண்டு, கரைபுரண்டு ஓடும் காவிரியைப் பார்த்துக்கொண்டு,ஒருத்தியை மோகித்து, மோகத்தின் முள்ளினை  நூற்றுக்கணக்கான பக்கங்களை எழுதி 'இதற்குத்தானா?' என்று கேட்கும் இலக்கியங்கள் முதல்தரமான இலக்கியங்கள் தமிழகத்தில் இருக்கும் சில விமர்சகர்களுக்கு...ஆனால் உள்ளத்தில் பற்றி எரியும் ,கொடுமைகளுக்கு எதிரான கருத்துத்தீயை எழுத்துக்களாக கொட்டிய எழுத்துகள் மூன்றாம் தர இலக்கியங்கள் சிலருக்கு...வாங்கடா வாங்க, எங்கள் திராவிட இயக்கத்து எழுத்தாளர்களை மட்டுமல்ல, உங்களையும் வாசித்துவிட்டுத்தான் நாங்கள் எழுதுகிறோம்..


'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 'என்னும் தத்துவத்திற்கு மாற்றாக, கடவுளின் முகத்திலே பிறந்தவர்கள்,தோளிலே பிறந்தவர்கள், தொடையிலே பிறந்தவர்கள், காலிலே பிறந்தவர்கள் என்று கதை கட்டி ,பெரும்பான்மையான மக்களை மயக்கத்திலே ஆழ்த்திய சதிகாரர்களுக்கு எதிராக களமாடிய எழுத்துகள் திராவிட இயக்க எழுத்துகள்.


பேரறிஞர் அண்ணாவை ,பொருளாதார நிலையில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட உயர்ந்து நிற்கும் நிலைக்கு அடித்தளம் இட்டதற்காக,'தமிழ் நாடு' என்னும் பெயர் வைத்தற்காக, இரு மொழிதான் ஆட்சி மொழி என்று உறுதி செய்தற்காக,, சுயமரியாதைத் திருமணத்தை சட்டபூர்வமாக ஆக்கியதற்காக என்று அறிந்து வைத்திருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்..அதே வேளையில், தனது பேச்சாற்றலால் உலகத்தை ஈர்த்த பல்வேறு பேச்சாளர்களை வரலாற்றில் படித்திருக்கிறோம் ஆனால் அவர்கள் எல்லோரையும் மிஞ்சிய பேச்சாளராக, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்கணக்கில் காத்திருந்து, பொறுத்திருந்து கேட்ட பேச்சாளராக பேரறிஞர் அண்ணாவை அறிந்திருக்கின்ற இளைஞர்கள், எழுத்தாளர் பேரறிஞர் அண்ணாவை முழுமையாக அறிய வேண்டும். அவரது படைப்புகளை நாவல்களை,சிறுகதைகளை, கவிதைகளை,கடிதங்களை எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் நாடகங்களைப் படிக்கவேண்டும். இன்றைய நிலையோடு பொருத்திப்பார்க்கவேண்டும். ஆங்கிலத்தில் ,மற்ற மொழிகளில் புலமையுள்ளவர்கள் பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை மொழிபெயர்க்க வேண்டும்.திருக்குறளை வேறு மொழிகளில் மொழி பெயர்க்க தமிழக அரசே முயற்சி எடுப்பதுபோல, பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை வேறு மொழிகளில் கொண்டு செல்ல தமிழக அரசே முயற்சி எடுக்க வேண்டும்.இளைஞர்கள் மத்தியில் பேரறிஞர் அண்ணாவின் படைப்புகளை கொண்டு செல்ல , இந்த நாளில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்.

               வாழ்க பேரறிஞர் அண்ணா! வாழ்க பேரறிஞர் அண்ணா புகழ்...  


Wednesday, 22 July 2020

என்னுடைய தோழர்கள்: புதுச்சேரி மு.ந.நடராசன்

என்னுடைய தோழர்கள்:    புதுச்சேரி மு.ந.நடராசன், மேனாள் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்துணைத்தலைவர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்துணைத்தலைவராக இருந்து மறைந்த அய்யா புதுச்சேரி மு.ந.நடராசன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (24.07.2020).புதுச்சேரி மு.ந. நடராசன் அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தில் என்னோடு இணைந்து பணியாற்றியவர்.2002- முதல் இறக்கும்வரை தொடர்பில் இருந்தவர். மாதம் ஒரு முறை அல்லது இருமுறை கட்டாயம் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும்.அவர் அழைக்கவில்லையென்றால் நான்  அழைப்பேன். புதுச்சேரி கூட்டத்திற்கு செல்லும்போதெல்லாம் அவரது இல்லத்தில்தான் பெரும்பாலும்  தங்கியிருக்கிறேன். அன்போடும் பாசத்தோடும் விருந்தோம்பல் செய்பவர். அவரது இணையர் அம்மா அவர்களும் அப்படி ஒரு உபசரிப்பு செய்வார்கள்.

முதலில் குடும்பத்தைச் சரிசெய்ய வேண்டும் என்பார். குடும்பக்கடமைகளை முதலில் முடிக்க வேண்டும் என்பார். மாதத்தின் முதல் வாரத்திலேயே வீட்டிற்கு வாங்க வேண்டிய பொருளை எல்லாம் வாங்கி வீட்டில் போட்டு விடுங்கள் என்பார். அவரை விட நான் 18 வயது இளையவன் என்றாலும் நான் மாநிலத்தலைவர் அவர் மாநிலத்துணைத்தலைவர் என்றாலும் எந்தவிதமான ஈகோ இல்லாமல் பழகக்கூடியவர்.அன்பு காட்டுபவர். ஆனால் தன் மனதிற்குப் பட்டதை மிகப் பளிச்சென்று சொல்வார். அய்யா ஆசிரியர் அவர்கள் அறிவிக்கும் பெரியார் திரைப்படம் உள்ளிட்ட அத்தனை அறிவிப்புக்களுக்கும் அவருடைய பங்களிப்பு என்பது முதலிலேயே இருக்கும்.தன்னுடைய பங்களிப்பை முதலில் கொடுத்துவிட்டுப் பின்பு வசூல் செய்தும் கொடுப்பார்.

தி.மு.க.வின் புதுச்சேரி மாநிலப்பொருளாராக இருந்து தி.மு.க. மாநில மாநாடு நடத்தியதைக் குறிப்பிடுவார்.மறைந்த தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் திருச்சி அன்பில்.தர்மலிங்கம் அவர்கள் அய்யா பெரியாருக்கு மோதிரம் செய்து கொடுக்க விரும்பியதையும், அதற்காக முதன் முதலில் தந்தை பெரியாரைத் திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்ததையும் அய்யா அவர்களுக்கு கைவிரல் அளவு எடுத்து மோதிரம் செய்து கொடுத்ததையும் அடிக்கடி குறிப்பிடுவார்.அந்த நிகழ்வைச் சொல்லும்போதெல்லாம் ஒரு சிறு குழந்தையைப் போல அந்த நிகழ்வை சொல்லிச் சொல்லி மகிழ்வார்.
தி.மு.க்.விலிருந்து திராவிடர் கழகத்திற்கு வந்தவர். பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்புகளிலேயே இருக்க விரும்பினார்.இருந்தார். சின்னச் சின்ன வெளியீடுகளாக பல வெளியீடுகளைக் கொண்டு வந்தார்.அந்த வெளியீடுகளை திராவிடர் கழக,பகுத்தறிவாளர் கழக நிகழ்வில் எல்லோருக்கும் கொடுப்ப்பார்.கொடுக்கச்செய்வார். மாநாட்டு நிகழ்வில் அய்யா மு.ந.நடராசன் அவர்களின் வெளியீடு கைக்கு வந்துவிட்டது என்றால் அய்யா மு.ந.நடராசன் வந்துவிட்டார் என்பதனைப் புரிந்துகொள்வோம்.  மதுரையில் நடந்த பகுத்தறிவாளர் கழகக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

விஜயவாடாவில் நடைபெற்ற உலக நாத்திக மாநாடுகள்,மகாராஷ்டிரா நாக்பூரில் நடைபெற்ற இந்திய நாத்திக மாநாடுகளில் நாங்கள் எல்லாம் இணைந்து கலந்துகொண்டு இருக்கின்றோம்.அங்கு வரும்போது ஆங்கிலத்தில் தனது வெளியீடுகளைக் கொண்டு வருவார். யார்? எவர் ? என்னும் தலைப்பில் தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி எனத் திராவிட இயக்கத்தின் தலைவர்களைப் பற்றித் தொடர்ச்சியாக வெளியீடுகளைக் கொண்டுவந்தார்.  சிக்கனமாக இருப்பார். ஆனால் நல்ல செயல்களுக்கு பணம் செலவு செய்வதைப் பற்றி எப்போதும் கவலைப்படாமல் செலவழிப்பார்.இளைஞரைப்போல எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்.

அவருடைய சொந்த ஊர் திருச்சி அருகில் உள்ள சிறுகாம்பூர். அந்த ஊரில் சில ஆண்டுகளுக்குமுன் அரசு உயர் நிலைப்பள்ளியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினார். என்னையும் மற்ற பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்களையும் அழைத்திருந்தார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி,போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி, ஆசிரியர்களுக்குத் தந்தை பெரியாரின் புத்தகங்களை வழங்கி என மிகப்பெரிய அளவில் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். இன்றைக்கும் கூட நினைவில் நிற்கிறது.

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில மாநாடு இரண்டு நாட்கள் புதுச்சேரியில் 2004-ஆம் ஆண்டில் நடைபெற்றது.மிகப்பிரமாண்டமாக நடந்த அந்த மாநாட்டின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு ,மிகப்பெரிய வெற்றி மாநாடாக நடத்திக்காட்டினார்.அதைப்போல இராவண லீலா தொடர் நிகழ்வுகளை புதுச்சேரியில் நடத்தினார். அய்யா சிவ.வீரமணி அவர்கள் புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத்தலைவராக வந்த பின்பு, அவரோடு இணைந்து பல இயக்க நிகழ்வுகளுக்கு உறுதுணையாக இருந்தார்.

அய்யா மு. ந.நடராசன் அவர்கள் மறைந்த பின்பு ,அய்யா மு.ந.நடராசன் அவர்களின் 73-ஆம் ஆண்டு பிறந்த நாள் அன்று(24.05.2020) மாலை நடைபெற்ற காணொளி நிகழ்வில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அய்யா துரை.சந்திரசேகரன் அவர்களும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் காணொளி வழியாக உரையாற்றினார்கள்.திராவிடர் கழகத்தின் அய்யா ஆசிரியர் அவர்கள் உரையாற்றும்போது "அருமைத்தோழர் மு.ந.நடராசன் அவர்கள் புதுவையில் மட்டுமல்ல, புதுமையான உலகம் அமையவேண்டும் என்பதற்காக தன் வாழ் நாள் முழுவதும் உழைத்து வாழ்ந்து காட்டியவர்.துரு துருவென்று சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்.எங்கு சென்றாலும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்றாலும் கூட திராவிடர் இயக்கத்தை,பகுத்தறிவாளர் கழகத்தை கையோடு எடுத்துச்சென்றவர்.விபத்துகள் எதிர்பாராதவை.அதிர்ச்சியாக நமக்கு அமைந்துவிடுபவை. ஆனால் நாம் பகுத்த்றிவாளர்கள். தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொண்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதனை செயல்படுத்துபவர்கள்.
தோழர் நடராசன் அவர்கள் தான் மட்டும் கொள்கையாளராக வாழவில்லை. அவருடைய வாழ்விணையராக இருந்தாலும் அவரது பிள்ளைகளானாலும் கொள்கைத்தங்கங்களாக இருப்பதும், விடுதலை வாசகர்களாக இருப்பதும்,இயக்கப்பணிகளுக்கு உறுதுணையாக இருப்பதும் நடராசன் அவர்கள் இன்னும் நம்மை விட்டு மறையவில்லை,ஆலமரம் விழுந்தாலும் அதனுடைய  விழுதுகள் தாங்கி நிற்பதுபோல வாழைமரம் சாய்ந்தாலும் அதன் கன்றுகள் நிற்பதுபோல அவரின் குடும்பத்தினர் இருக்கின்றனர்.ஒளிக்கீற்றாய் நடராசன் அவர்கள் பாடுபட்ட பகுத்தறிவு பரப்பலும், சாதி ஒழிப்பும், அறிவியல் மனப்பான்மை வளர்ப்புமான அந்த லட்சியச்சுடரை ஏந்தி தொடர்ந்து பயணிப்போம். " என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.


அவர் மறைந்து ஓராண்டாகி விட்டது.அவரின் நினைவு நாளில் அவரின் உணர்ச்சியும் வேகமும் இயக்க ஈடுபாடும் என் மனது முழுவதும் நிறைந்து நிற்கிறது. அவரது மூத்தமகன் பாஸ்கர் அவர்களோடு பேச வாய்ப்புக் கிடைத்தது.  மிக நல்ல பொறுப்பில் உயர் பதவியில் இருக்கும் அவரின் பெரியாரியல் பற்றி புரிதலும், அவரது அப்பாவைப் பற்றிய அவரின் மதிப்பீடும், தனது தந்தை மு.ந.நடராசன் அவர்கள் கிராமத்தில் பிறந்து வளர்ந்து,எப்படி ஒரு எதிர் நீச்சல்காரரை வாழ்க்கையில் உயர்ந்து திடீர் விபத்தால் மறைந்தார் என்பதனை அவர் பேசப்பேச, ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவரோடு உரையாடிய நிகழ்வு, அய்யா மு.ந.நடராசன் அவர்கள் தான் மறைந்தாலும் தனது உணர்ச்சியை, வேகத்தை,அறிவை, இயக்க ஈடுபாட்டை தனது குடும்பத்தினருக்கு அளித்துச்சென்றிருக்கார் என்பது மிகப்பெரும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. எனது தோழர்கள் எதையும் எதிர்பாராதவர்கள்,கொள்கைக்காக உயிரையும் கொடுக்கக்கூடியவர்கள், எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக உணமையை உரக்கச்சொல்வதனால், பொய்யர்களிடமிருந்தும்,ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து வரும் எதிர்ப்புக்களை எதிர்பார்த்தும்,எதிர்கொண்டும் வாழ்வில் செம்மையாக வாழ்பவர்கள்.

முதலாம் ஆண்டு நினைவு நாளினை ஒட்டி, புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக காணொளி வழிக்கூட்டம் நடத்துகிறார்கள். பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொறுப்பாளர்களோடு திராவிடர் கழகத்தின் பொருளாளர் அண்ணன் வீ.குமரேசன்,பொதுச்செயலாளர் அய்யா முனைவர் துரை.சந்திரசேகரன்,துணைத்தலைவர் அய்யா கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் காணோளி நிகழ்வில் கலந்துகொண்டு அய்யா சுயமரியாதைச்சுடரொளி மு.ந. நடராசன் நினைவு உரை நிகழ்த்துகிறார்கள். நிகழ்வு சிறக்கட்டும்.

புதுச்சேரி மு.ந.நடராசன் அவர்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்.முதலாம் ஆண்டு நினைவு நாளில் எனது அருமைத்தோழர், தமிழகம் &புதுச்சேரி மாநிலப்பகுத்தறிவாளர் கழகத்தின் முன்னாள் துணைத்தலைவர் அய்யா மு.ந. நடராசன் அவர்களுக்கு வீரவணக்கம்.

                            வா.நேரு, 23.07.2020 இரவு 10.15 மணி

Monday, 13 July 2020

போனாயே எங்கள் தோழா......



போனாயே எங்கள் தோழா......

மதுரை மண்டலத் திராவிடர் கழகத்தலைவர் அய்யா மா.பவுன்ராசா(வயது 58) இன்று 05.07.2020 மாரைடைப்பால் தூக்கத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார். காலையில் மிக அதிர்ச்சி தரத்தக்க இந்தச்செய்தியைச்சொல்லி , மாநில மகளிரணி அமைப்பாளர் மானமிகு தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள் உண்மையா எனக்கேட்டபோது,உறுதிப்படுத்திக்கொள்ள ,மதுரை புறநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தலைவர் மன்னர்மன்னன் அவர்களைத் தொடர்புகொண்டபோது,ஆமாம் அய்யா,உசிலம்பட்டியில் பவுன்ராசா வீட்டில்தான் இருக்கிறோம்,இரவில் தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது என்றார்.

கடந்த 30 ஆண்டுகளாக திராவிடர்கழகத்தின் அடிப்படையில் தொடர்பில் இருந்தவர். திராவிடர் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்.கரடுமுரடான தனது பகுதியில் பெரியார் கொள்கைக்கு பாதை அமைத்தவர். அதில் ஏற்பட்ட இன்னல்களை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டவர். அவர் தான் திராவிடர் கழகத்தில் இணைந்தது,தனது ஊரில் கூட்டம் நடத்தியது, அப்போது ஏற்பட்ட நிகழ்வுகள் போன்றவற்றை எல்லாம் அவ்வளவு ஈடுபாட்டோடு விவரிப்பார். இப்போது பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டத்தலைவராக இருக்கும் மன்னர்மன்னன் மூலமாகத்தான் இயக்கம் பற்றியும், தந்தை பெரியார் பற்றியும் தெரியும் என்று சொல்வார்.

டவுசர் போட்டுக்கொண்டிருந்த காலத்தில் ,உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள அய்யனார்குளத்தில் திராவிடர் கழகம் கூட்டம் போடவேண்டும் என்று விரும்பியதையும் அதற்காக மதுரை மேற்கு மாவட்ட திராவிடர்கழகத்தின் தலைவராக அப்போதிருந்த அய்யா பெரியகுளம் ம.பெ.முத்துக்கருப்பையா அவர்களைப் போய்ச்சந்தித்ததையும், அவர் டவுசர் போட்டு வந்த ஒரு பையன் கிராமத்தில் தி.க.கூட்டம் போட விரும்பியதை ஏற்றுக்கொண்டு தனது கிராமத்திற்கு வந்ததையும் ,அய்யா போடி இரகுநாகநாதன் .ம.பெ.முத்துக்கருப்பையா அவர்களின் வழிகாட்டுதலோடு முதன்முதலில் அய்யனார்குளத்தில் திராவிடர் கழக கூட்டம் நடைபெற்றதையும், அன்றைக்கு திராவிடர் கழகத்தின் பேச்சாளராக இருந்த கண்மணி தமிழரசன் அவர்களும், தமிழரசன்(தோழர் ஓவியாவின் தந்தை) அவர்களும் கலந்து கொண்டு பேசியதையும் குறிப்பிட்டு,
" அண்ணே, முதன் முதலில் உசிலம்பட்டி அய்யனார்குளத்தில் திராவிடர் கழகப்பொதுக்கூட்டம்.நம்ம கூட்டத்துக்கு நாமே காசு செலவழிக்காமலேயே பயங்கர விளம்பரம் ஆகிப்போச்சு. கடவுள் இல்லைன்னு சொல்றவங்க கூட்டம் போடுறாங்க,அதுவும் சின்னப்பையல்களா சேர்ந்து கூட்டம் போடுறாங்க என்று சொல்லி ஊர் முழுவதும் பரபரப்பு. கூட்டம் ஆரம்பிச்சு நடந்துக்கொண்டு இருக்கும்போது சத்தம் போட்டாங்கே,கலாட்டா பண்றது மாதிரி ஆளுங்க இங்குட்டு அங்குட்டு போய்க்கிட்டு கத்திக்கிட்டு இருந்தாங்கே...சிறப்பு பேச்சாளர் கண்மணி தமிழரசன் அவர்கள் பேச ஆரம்பிக்கும்போது நிறைய கல் வந்து விழுந்தது.ஒரு கல் கண்மணி தமிழரசன் அவர்களின் நெற்றியில் பட்டு, பொல பொல வென்று இரத்தம் வந்தது. சும்மா சொல்லக்கூடாது அந்த அம்மாவை... மேடையில் இருந்த சில ஆட்கள் எல்லாம் கீழே இறங்கியபோதும் தன்னுடைய சேலையின் முந்தானையில் ஒரு பகுதியை கிழித்து நெற்றியில் கட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தார். மூன்று மணி நேரம் பேசினார். அவரின் பேச்சுக்கு முதலில் இருந்த எதிர்ப்பு மறைந்து கொஞ்சம் கொஞ்சமாக உட்கார ஆரம்பித்தார்கள்.உங்களுக்காக பாடுபடும் இயக்கம் என்பதை அந்த மக்களுக்கு புரியும் மொழியில் பேச பேச கூட்டம் அப்படியே நின்றது" என்பதனைச்சொல்லி அடுத்து தொடர்ந்து அய்யனார்குளத்தில் கூட்டம் நடத்தியதையும் குறிப்பிடுவார். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திராவிடர்கழகத்தில் அய்யனார்குளம் பகுதியில் இணைந்ததற்கும், கொள்கை வழி நின்றதற்கும் அய்யா பவுன்ராசா அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகப்பெரிய காரணம்.

"உசிலம்பட்டி பகுதியில் மிகமிக பின் தங்கிய கிராமத்திலிருந்து சுமார் 10 கி.மீ நடந்து மெயின்ரோடு வந்து தான் பஸ் ஏற வேண்டும் - என்ற நிலையிலும் நான் அறிய சுமார் 30 ஆண்டு காலம் இயக்க நிகழ்வுகள் அனைத்திலும் முன்கூட்டியே வந்து விடுவார்.தமிழ்நாடு முழுவதும் ஏதாவது ஒரு நிகழ்வில் பங்கேற்றுக் கொண்டிருப்பார்.இயக்க வேலைகளை பிடிவாதமாக விரும்பி களத்தில் வேலை செய்யும் முன்னோடித் தோழர் அய்யா பவுன்ராஜா அவர்கள். போராட்டங்கள் ,இரத்ததான முகாம்கள் , பெரியார் 1000 , பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் -இவற்றையெல்லாம் பாம்பட்டிக்காட்டில்( பழமை நிறைந்த கிராமத்தில்) - முன்னின்று நடத்திக் காட்டியவர். தமிழர் தலைவர் அய்யா அவர்கள் மதுரை வருகிறார் என்ற செய்தியை விடுதலை யில் பார்த்தவுடன் எங்களிடம் வேலையைத் துவங்கி விடுவார் .அய்யா தலைவர் மதுரைவர்றாங்க 2 விடுதலை ஆண்டுச் சந்தா வாங்கிக் கொடுங்க என வேலையைத் துவங்கி விடுவார் எப்படியாவது தலைவர் அவர்களைப் பார்க்கும் போது விடுதலை,உண்மை சந்தா கொடுக்காமல் சந்திக்க மாட்டார். ஒரு கறுப்புச் சட்டைக்காரன் - இழப்பு என்பது அவ்வளவு சாதாரணமானது அல்ல. ஒரு முதலாளி மறைந்து விட்டால் இரண்டு முதலாளி அந்தக் குடும்பத்தில் தோன்றி விடுவார்.ஒரு தொழிலாளி மறைந்துவிட்டால் இன்னொரு தொழிலாளி கிடைத்து விடுவார்.ஒரு விவசாயி மறைந்துவிட்டால் இன்னொரு விவசாயி நம் குடும்பத்திலேயே கிடைத்து விடுவார்.ஒரு கட்சிக்காரன் மறைந்து விட்டால் இன்னொறு கட்சிக்காரன் கிடைத்து விடுவான்.ஆனால் ஒரு கொள்கைக்காரன் மறைந்துவிட்டால் - அந்த இடத்தை நிறப்புவது எளிதல்ல அதிலும் ஒரு கறுப்புச் சட்டைக் காரனின் இழப்பை ஈடுகட்டுவது அவ்வளவு எளிதான காரியமல்ல.தோழருக்கு வீரவணக்கம்l வீரவணக்கம்l.தமிழர் தலைவர் வணக்கத்திற்குறிய அய்யா அவர்கள் தலைமையில் பெரியார் பணி முடிப்போம்" .மேலே சொன்ன வரிகள் மதுரை புற நகர் மாவட்டத்திராவிடர் கழகத்தின் முன்னாள் மாவட்டச்செயலாளர், தலைமைக்கழகப்பேச்சாளர் அ.வேல்முருகன் அவர்கள் எழுதியது.

"நான் தி.க.வில் இருந்தபோது 1993 ல் எங்கள் ஊரில் RSS அமைப்புக்கும் எங்களுக்கும் மோதல் இருந்தது. தோழர் பவுன்ராசா அவர்களிடம் இதைப்பற்றிப் பேசினோம். மோதலை முடிவுக்குக் கொண்டுவர, ஒரு மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்தோம். எதிர்பார்த்தபடியே காவல்துறை வழியாக காவிகள் தடைவிதித்தனர். ஒரு சமரசத் தீர்வு உண்டானது. "மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் வேண்டாம். வெறும் ஊர்வலம் நடத்திக்கொள்ளுங்கள்" என்றது காவல்துறை. எங்களது விருப்பமும் அதுமட்டும் தான்.
உசிலம்பட்டியிலிருந்து கையில் அரிவாள்களுடன் 100 தோழர்களுடன் வந்து களமிறங்கினார் பவுன்ராசா. அவரோடு திண்டுக்கல் மாவட்ட தி.க.தோழர்கள், உள்ளூர் தோழர்கள் என நூற்றுக்கணக்கானோர் கையில் அரிவாள்களுடன் ஊர்வலத்தை நடத்தினோம். அந்த ஊர்வலத்திற்குப் பிறகு RSS அமைதியாகிவிட்டது. அதில் இருந்த பலர் சில ஆண்டுகளில் தி.க.வுக்கே வந்தனர். 1993 ல் எங்களுடன் மோதிய RSS ல் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள் தோழர் பவுன்ராசா அவர்களின் ஜாதியினர்தான். ஒருவர் அவரது உறவினர். ஆனாலும் பெரியாருக்காக, தனது ஜாதியையும் உறவுகளையும் எதிர்த்து 100 இளைஞர்களை - அரிவாளைத் தூக்குமளவுக்குத் தயாரிப்பது என்பதுதான் பெரியாரிஸ்ட்டுகளின் அடையாளம்.
பொதுவெளியில் எழுத இயலாத பலவற்றைச் சாதித்துக் காட்டிய உற்ற தோழர் பவுன்ராசா அவர்களுக்கு காட்டாறுகுழுவின் சார்பில் வீரவணக்கம். AThi Asuran"

நெஞ்சினில் கொண்ட கொள்கை. நினைவினில் தேக்கி நின்று
அஞ்சிடா பயணம் செய்து
அலைந்துமே ஊரூர் சென்று
துஞ்சலும் மறந்து நித்தம்
தொடர்ந்துமே தொண்ட றந்தான் விஞ்சினாய் புகழாம் வானை
வென்றதோர் கதிரைப் போல!
இயக்கமே வாழ்வாய்க் கண்டு
எளியதோர் தோற்றம் கொண்டு
தயங்கிடா தணுகி மக்கள்
தன்நிலை உணரச் செய்ய
அயர்விலா உழைப்பைத் தந்து
அனுதினம் செய்தாய் தொண்டு!
புயலென செயலால் வென்றாய் போனாயே எங்கள் தோழா!!
- சுப.முருகானந்தம்
மதுரை மாநகர் திராவிடர் கழகம்.

திராவிடர் கழகம் என்பது அரசியல் கட்சி அல்ல. இது ஒரு இயக்கம். இந்த இயக்கத்தில் இயங்கிக்கொண்டே இருந்தவர் அண்ணன் மா.பவுன்ராசா அவர்கள்.நான் தல்லாகுளம் தொலைபேசி நிலையத்தில் வேலை பார்த்தபொழுது அடிக்கடி வருவார். நிறையப் பேசுவோம். இயக்க நிகழ்வுகள் நடந்தவை, நடக்க இருப்பவை என்று பல செய்திகளைப் பகிர்ந்துகொள்வோம். எனக்குத் தெரிய மிகவும் வெளிப்படையாக எதையும் பேசுவார். திராவிடர்கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களிடமே பல விசயங்களைப் பேசுவார். இயக்க நடப்புகளைச்சொல்வார்.காணொலி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டிருந்தார்.

திராவிடர் கழகப்பொறுப்பாளர்கள் யாரேனும் விடுதலைக்கு சந்தா கட்டாவிட்டால் நன்றாகவே கோபப்படுவார். விடுதலையை வாங்க வலியுறுத்துவார். இரங்கல் அறிக்கையில் அய்யா ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல எவரையும் சந்தித்து துணிந்து பேசுவார். வாதாடுவார். தன்னுடைய பிறந்த நாளில்(12.06.2020), விடுதலையின் 86வது பிறந்த நாள் வரும் ஜீன் மாதத்தில் தான் பிறந்திருக்கிறேன் என்று குறிப்பிட்டு வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி சொல்லியிருந்தார்.கடந்த 10 நாட்களில் இரு முறை விடுதலையில் அவரின் வாசகர் கடிதம் வந்தது. நேற்று (விடுதலை வெளியூர் 04.07.2020) வந்த கடிதத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி ! என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார். தனது வாழ்வில் அய்யா ஆசிரியர் அவர்களுக்கு இறுதியாக அவர் சொல்லும் நன்றி என்பது நமக்கு தெரியாமல் போயிற்று.நேற்று(04.07.2020) மாலை நடைபெற்ற அய்யா ஆசிரியர் அவர்களின் ஒப்பற்ற தலைமை உரையை கேட்டுக்கொண்டு ,கம்பீரமாய் உசிலம்பட்டியில் அவரது இல்லத்தில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். இன்று அவர் இல்லை.ஒப்பற்ற ஒரு தோழரை இழந்திருக்கிறோம்.

வீரவணக்கம் எங்கள் தோழனே! அய்யனார் குளம் பவுன்ராசாவே! ஆற்றல் மிகு மதுரை மண்டலத்திராவிடர் கழகத்தலைவரே!..டவுசர் போட்ட காலம் முதல் இறக்கும் நொடி வரை ஒரே தலைவர்,ஒரே கொடி,ஒரே இயக்கம்-திராவிடர் கழகம் எனப் பாடுபட்ட எங்கள் தோழனே ! வீரவணக்கம். வீரவணக்கம்.

Sunday, 31 May 2020

செய்ய வேண்டியன செய்தலுக்காய்....

அய்ம்பத்து ஆறு
ஆண்டுகள் ஓடி
மறைந்திருக்கிறது...
அய்ம்பத்து ஏழு இன்று
பிறந்திருக்கிறது....

அய்ம்பத்து ஆறில் வாழ்வில்
நிகழ்ந்த பெரும் நிகழ்வு
விருப்ப ஓய்வு எனும் நிகழ்வு...

சென்ற வருடப் பிறந்த நாளில்
துளி கூட எண்ணமில்லை...
அடுத்த பிறந்த நாளில் நாம்
விருப்ப ஓய்வில் இருப்போமென்று...

மறைமுக அரசின் அழுத்தங்களும்
பணிச்சுமை தந்த அழுத்தங்களும்
இணைந்து விருப்ப ஓய்வு எனும்
முடிவினைத் தந்தது....எனினும்
மகிழ்ச்சி தரும் முடிவே இது....

இருக்கும் வாழ்வை
குடும்பத்தினருக்கு கூடுதல் நேரமும்
இயக்கத்திற்கும்
வாசிக்க எழுத என
உள்ளத்திற்கு உகந்தவை
அனைத்தும் செய்திட விருப்பம்....

முப்பத்தாறு ஆண்டுகள் பணியை
முழுவதாய்ச்செய்ததாக மன நிறைவு...
எத்தனை மனிதர்கள்..
எத்தனை தொழில் நுட்பங்கள்...
ஒரு நாவலுக்குள் அடக்கமுடியாத
அத்தனை அத்தியாயங்களும்
மனதுக்குள் ஓடும் பணி நிகழ்வுகள்...

சிறந்த ஊழியன் எனப் பெற்ற
தங்கப் பதக்கம் சான்றிதழைவிட
மனதார வாழ்த்திய வாடிக்கையாளர்களால்
நிறைவாக பணிக்காலம் முடிந்தது...

சராசரி இந்தியனின் வாழ்விற்கு
சில வருடங்களே இன்னும் பாக்கி..
அதற்குள் செய்ய வேண்டியன
செய்தலுக்காய் திட்டமிடலும்
செயல்படுத்தலுமே மீத வாழ்க்கையாய்..
                                                                         வா.நேரு...31.05.2020



Monday, 25 May 2020

நானும் புத்தக வாசிப்பும்.....வா.நேரு

நானும் புத்தக வாசிப்பும்
Posted on : Friday 22nd May, 2020

எனக்கு வயது இப்போது 55. புத்தக வாசிப்பின் மீதான ஈர்ப்பு என்பது 6-வது 7-வது படிக்கும்போதே ஆரம்பித்தது எனக்கு. நான் 9-ஆம் வகுப்பு படிக்கும்போது கல்கியின் ‘பொன்னியன் செல்வன்’ புத்தகத்தை எடுத்துக்கொண்டு, சாப்டூரில் எங்கள் வீட்டு மெத்தில் உட்காரந்து காலை 7 மணி முதல் படித்துக்கொண்டிருக்க, 11 மணியளவில் சாப்பிடுவதற்கு நேருவைக்காணாம் என்று வீடே தேட, மெத்திற்கு வந்த எனது மூத்த அண்ணன் ஒரு அடி அடித்து, சாப்பிடாமக் கூட கதைப்புத்தகம் படிக்கிறியா என்று கண்டித்தது நினைவில் இருக்கிறது.

உயர் நிலைப் பள்ளி படிக்கும் காலத்தில், எனது அம்மாவிற்கு சாப்டூர் கிளை நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை எடுத்துவர நான் தான் செல்வேன். புத்தகங்களைத் தேடுவது, படிப்பது என்பது அப்போதிருந்து ஆரம்பித்தது. ஜெயகாந்தன் புத்தகத்தை அப்படி ஒரு விருப்பத்தோடு ஆயிரம் வேலைகளுக்கு நடுவில் எனது அம்மா படித்தது, வாசிப்பின் மீதான ஆவலை அதிகரித்தது. ஒரு பத்து நிமிடம் நேரம் கிடைத்தால் கூட பையில் இருக்கும் ஏதேனும் ஒரு புத்தகத்தை எடுத்துப்படிப்பது என்பது இன்றுவரை தொடர்வதற்கு அத்தனை வேலைகளுக்கும் நடுவிலும் எனது அம்மாவிற்கு கிடைத்த வாசிப்பு மகிழ்ச்சியே அடித்தளம் எனலாம்.

கல்லூரி படிக்கும் காலத்தில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்துக்கொண்டே நூலகத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அதனால், அப்போது மெஸ் கட்டணம் கட்ட பணம் கிடைத்தது மிகப்பெரிய வாய்ப்பு.  சில பேராசிரியர்களும், மாணவர்களும் விரும்பி மீண்டும் மீண்டும் வந்து ஒரு சில புத்தகங்கள் வந்துவிட்டதா என என்னிடம் கேட்டபோது அப்படி ஒரு விருப்பம், இவர்களுக்கு புத்தகத்தின் மேல் ஏன் எனும் வினா எழுந்ததும் வாசிப்பின் மேல் நாட்டம் கொள்ள வைத்தது. 1983-& 84-ல் பெரியாரியல் பட்டயப் பயிற்சிக்காக எனது பேரா.கி. ஆழ்வார் அவர்கள்  மூலமாக கிடைத்த சில புத்தகங்கள் புதிய வெளிச்சங்களைக் காட்டியது. பெரியாரியல் பாடங்களை அனுப்பிய அய்யா கரந்தை புலவர் ந. இராமநாதன் அவர்களை நேரிடையாகச் சந்தித்ததும், புரட்சிக்கவிஞர் எழுதிய பாடல்களை அவரின் வாயிலாக ‘செவியுணர்வுச் சுவையுணர்வோடு ‘சுவைத்ததும் வாழ்வில் மறக்க இயலாதவை.  தடை செய்யப்பட்ட புத்தகமான காந்தியைக் கொன்ற கொலைகாரன் கோட்சே எழுதிய ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’ என்னும் புத்தகத்தை படித்ததும் அக்காலங்களில் நிகழ்ந்தது. படித்து முடித்தபொழுது காந்தியாரின் மேல் இருந்த மரியாதை கூடியதே ஒழிய குறையவில்லை.

படித்து முடித்து, திண்டுக்கல் தொலைத்தொடர்புத்துறையில் பணியில் சேர்ந்தபொழுது, வாசிக்கும் பழக்கமுடையோர் பலரும் பக்கத்து நாற்காலிகளில் உட்காரந்து வேலை செய்துகொண்டிருந்தனர். குறிப்பாக தொலைபேசி ஆப்ரேட்டராக இருந்த பலரில் அக்கா மீனாட்சி நிறைய வாசிப்பார். 1984 & 85-களில் பாலகுமாரின் இரும்புக்குதிரையை கையில் வைத்து விடாமல் படித்துக்கொண்டிருந்தபொழுது, ஏய் – தம்பி, பாலகுமாரன் என்ன எழுதுகிறார் என்பதை புரிந்துகொண்டுதான் படிக்கிறாயா? என்றுசொன்னதோடு பல கேள்விகளை எழுப்பியவர். கேள்விகள் இல்லாமல் எல்லாவற்றையும் வாசிப்பது என்பது அப்போது முடிவுக்கு வந்தது. திண்டுக்கல்லில் இருந்து உசிலம்பட்டிக்கு விருப்ப மாற்றலில் வந்தபொழுது, உசிலம்பட்டியில் இருந்த பொன்னுச்சாமி, சு.கருப்பையா ஆகியோர் வாசிக்கும் பழக்குமுடையவர்களாக இருந்தனர். நானும் வாசிக்கும் குழுவில் இணைந்தேன். கருப்பையா அண்ணன் சரித்திரக்கதைகளை விடாமல் படிப்பவர். பொன்னுச்சாமி சுந்தரராமசாமியைப் படிப்பார். இருவருக்கும் சண்டை இலக்கியரீதியாகவும் நடக்கும். பின்னர் மறுபடியும் திண்டுக்கல் வந்தபொழுது ஒரு வாடகை நூலகத்தில் இணைந்து ஆங்கிலத்தை மேம்படுத்த என ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் கதைகளை, 50-க்கும் மேற்பட்ட நூல்களை வாசித்ததும், இர்விங் வாலஸ் போன்றவர்களை வாசித்ததும் அந்தக்காலத்தில்தான். 1989-ல் பெரியகுளத்திற்கு வந்தபொழுது தோழர் விஜயரெங்கன் நிறைய வாசிப்பவராக இருந்தார்.

1991-ல் மதுரைக்கு மாறுதல். மதுரையில் தோழர் ந.முருகன் அவர்களோடு ஏற்பட்ட தொடர்பு பல புதிய புத்தகங்கள் வாசிப்பிற்கு துணைபுரிந்தது. ‘புதிய காற்று ‘ எனும் சிற்றிதழை நடத்திய அவரின் தூண்டுதல்  கவிதை,சில நூல்கள் அறிமுகம் என எனது எழுத்துப்பணி ஆரம்பமானது. ந.முருகன் வீடு முழுக்க புத்தகங்களால் நிரப்பியிருந்தார். நாலைந்து நண்பர்கள் இணைந்து புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தோம். குழுவில் உள்ள ஒருவர் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப ரூ1000-க்கு புத்தகங்கள் வாங்குவார். குழுவில் உள்ள அனைவரும் படிப்பதற்காக சுற்றில் வரும். கடைசியில் யார் வாங்கினார்களோ அவருக்குப் போய்விடும். பல கண்ணோட்டமுள்ளவர்கள் குழுவில் இருந்தனர். இப்படி பல கண்ணோட்டமுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கும்  புதிய புத்தகங்களைப் படிப்பதற்கு ஒரு வாய்ப்புக்கிடைத்தது.

மதுரைக்கு வந்த பின்னர், காரமுகில் என்னும் வாடகை புத்தக நிலையத்தில் வாடிக்கையாளரானேன். 20 நூல்கள் எடுத்தபின்பு, ஒரு நாள் அதன் நிறுவனர் தோழர் பாண்டியன் பேசினார். நான் என்னைப்பற்றி அறிமுகப்படுத்துவதற்கு முன்னாலேயே நீங்கள் 20 புத்தகம் என்ன எடுத்திருக்கிறீர்கள் என்று பார்த்துவிட்டேன், அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன் என்றார்.என்ன புத்தகம் எடுத்திருக்கிறோம்-படித்திருக்கின்றோம் என்பதனை வைத்து, நம்மை முடிவு செய்வது என்பது அவரின் பாணியாக இருந்தது.’ ‘ஸ்பார்ட்டகஸ்’ போன்ற அருமையான புத்தகங்களை அங்கு படித்ததும், பின்பு அங்கு படித்த நல்ல புத்தகங்களை பதிப்பகங்களின் மூலமாக விலைக்கு வாங்கி வைப்பதும் தொடர்ந்தது.

திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புத்தகங்களை விரும்பிப்படிப்பவர். சால்வைக்குப் பதிலாக புத்தகங்கள் அளித்தால் அளவிட இயலா மகிழ்ச்சி அடைபவர். சில அரிய புத்தகங்களைப் படித்து முடித்தவுடன் அய்யா ஆசிரியர் அவர்கள் மதுரைக்கு வரும்போது கொடுப்பதற்கு என எடுத்துவைப்பதும், அவரைப்பார்க்கும்போது கொடுப்பதும் தொடர்கிறது. அம்மா மோகனா வீரமணி அவர்கள், ‘நேரு, நீங்கள் கொடுக்கும் புத்தகங்களை நானும் விரும்பி படித்து விடுகின்றேன்’  என்று சொல்லிப்பாராட்டியதும், வாழ்வியல் சிந்தனை தொகுப்புகளில் அய்யா ஆசிரியர் அவர்கள் நான் கொடுத்த புத்தகங்களைப் பதிந்ததும் மறக்க இயலா நினைவுகள் புத்தகங்களால்.

 திராவிடர் கழகச்செயல்தலைவர் அய்யா சு.அறிவுக்கரசு அவர்கள் மிகப்பெரிய புத்தக விரும்பி. வீட்டில் மாடி முழுக்க ஆங்கில மற்றும் தமிழ் புத்தகங்களால் நிரப்பியிருப்பார். ஒரு எதிர்வினையாக ‘படித்த பார்ப்பன நண்பரே’ என்னும் கவிதையை விடுதலைக்கு அனுப்ப, படித்து பாராட்டிய அவர் அந்தக் கவிதையை விடுதலை ஞாயிறு மலரில் வெளியிட்டார். தொடர்ந்து வெளிவந்த கவிதைகள் எனது முதல் கவிதைத் தொகுப்பாக ‘பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்’ என்னும் பெயரில் பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் அய்யா சோம.இளங்கோவன் அவர்களால் மதுரையில் வெளியிடப்பட்டு வெளிவந்தது.

பழனி இயக்கத்தோழர் தமிழ் ஓவியா புத்தகங்களைப் பாதுகாப்பதற்காகக் கட்டியதுபோன்றே வீட்டைக் கட்டினார். புத்தகங்களை கண்ணாடிப்பெட்டகங்களுக்குள் அடுக்கினார். பட்டியலிட்டார். எவருக்குக் கொடுத்தாலும் எழுதி வைத்தார். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய புத்தகங்கள் இவரிடம் உறுதியாகக் கிடைக்கும் என்னும் வகையில் நூலகத்தை செழுமைப்படுத்தினார்.   மதுரையில்  எனது இயக்கத் தோழர் பா.சடகோபன் பல ஆண்டுகளாக நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துவதையே தனது வாழ்க்கையாகக் கொண்டிருக்கின்றார். ‘புத்தகத் தூதன்’ எனும் பெயரில் தெருத்தெருவாக நல்ல புத்தகங்களை  விற்று பெருமை சேர்த்தவர். மறைந்த அண்ணன் வழக்கறிஞர் கி.மகேந்திரன் தேடித்தேடி படித்தவர்.ஓய்வு பெற்ற நீதிபதி பொ.நடராசன்,வழக்கறிஞர் நா.கணேசன், க.அழகர், அழகுபாண்டி, மருத்துவர் அன்புமதி, சுப.முருகானந்தம், பெரி.காளியப்பன், அ.முருகானந்தம் எனப்புத்தக விரும்பிகள் பலரும் இயக்கத் தோழர்களாக இருக்கின்றனர்.

மதுரையில் திரு.வெ.இறையன்பு அய்.ஏ.எஸ் அவர்கள் வந்தபின்பு, அவரின் அறிமுகம் பல புதிய வாசிப்புகளுக்கான தளத்தைக் கொடுத்தது.மதுரை ரீடர்ஸ் கிளப்பில் இணைந்த பின்பு பல வாசிப்பாளர்கள் நண்பர்கள் என்பது போய் பல எழுத்தாளர்களின் நட்பும் அறிமுகமும் கிடைத்தது.திருக்குறளைப் பரப்புவதும்,பகிர்வதுமே தனது வாழ்க்கையாகக் கொண்ட, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பொறியாளர் திரு.க.சி.அகமுடை நம்பி அவர்களின் அறிமுகம் குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் கீதா இளங்கோவன், முனைவர் சுந்தர ஆவுடையப்பன்,முனைவர் க.பசும்பொன், சிவில் சர்வீஸ் அதிகாரி திரு.பா.இளங்கோவன், இந்து பத்திரிக்கை மேலாளர் முரளி, துணை ஆசிரியர் அண்ணாமலை  எனப்பலர் அறிமுகமாயினர்.புத்தகங்களை வாசிப்பவர்கள் என்பதை விட உயிராய் நேசிப்பவர்கள் தொடர்பு இதனால் கிடைத்தது எனலாம்….எனது முனைவர் பட்டத்திற்கு நெறியாளராக இருந்த பேரா.முனைவர் கு.ஞானசம்பந்தனின் வீட்டு நூலகம் அரிய புத்தகங்கள் பல அடங்கியது.. வாசிப்பதைக் காதலிக்கும் அவரின் வாசிப்பிற்கு குருவாக அவர் காட்டுவது எழுத்தாளர் தொ.பரமசிவம் அவர்களை…மதுரையில் கணினி பயிற்சியகம் வைத்திருந்த தோழர் ஓவியா, அவரின் கணவர் ஏ.பி.வள்ளிநாயகம் இருவரும் படிப்பாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் இருந்தனர். புதுக்கோட்டை கவிஞர் ந.முத்து நிலவன் அறிமுகம் கிடைத்தது.இப்படி பல திசைகளிலிருந்தும் புத்தகங்களை விரும்பிப் படிப்பவர்கள், படைப்பவர்கள் என அறிமுகமாயினர்.

எழுத்து என்னும் இணையதளத்தில் கவிதைகளைப் பதிவிட ஆரம்பித்தேன். பல கவிதைகளுக்கு பின்னூட்டமே இல்லாமல் இருந்தது. ஆனால் 75 கவிதைகளுக்குப் பின்னால் முன்பின் என்னை அறியாத கவிஞர் பொள்ளாச்சி அபி எனது கவிதைகளைப் பற்றி எழுதிய விமர்சனமும் பாராட்டும் ஒரு புதிய நம்பிக்கையை அளித்தது. பின்னர் அனைவரையும் இணைக்கும் அற்புதமான மனிதர் பாண்டிச்சேரி தோழர் அகனின் முயற்சியால் ‘சூரியக்கீற்றுகள்’’ என்னும் பெயரில் எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வந்தது. பாண்டிச்சேரியில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் பிறந்த நாளில் வெளியிடப்பட்டது.

எனது முதல் சிறுகதைத்தொகுப்பு ‘நெருப்பினுள் துஞ்சல் ‘‘சென்னை எமரால்டு பதிப்பகத்தால் 2019-ல் வெளியிடப்பட்டிருக்கிறது.சிறுகதைகளைப் படித்துவிட்டு பாராட்டுவது, கதைகளைப் பற்றித் தங்கள் கருத்துக்களை நண்பர்கள் தோழர்கள் பதிவு செய்வது மிகப்பெரிய ஊக்க சக்தியாக அடுத்தடுத்து எழுதுவதற்கு துணை செய்கிறது.

எனது தலைமை ஆசிரியராக இருந்த திரு.வீ.வீரிசெட்டி அவர்கள் நல்ல புத்தகங்களை நாடிப்படிப்பதில் அப்படி ஒரு விருப்பம் உடையவர். 80 வயது கடந்தவர்.படித்த புத்தகங்களில் பிடித்தவற்றை எழுதி வைத்த டைரிகள் பல அவரின் வீட்டில் இருக்கின்றன. நான் விரும்பிப்படித்த புத்தகத்தை அவரிடமும், அவர் விரும்பிப்படித்த புத்தகத்தை என்னிடமும் கொடுத்து கொடுத்து படித்துக் கொண்டிருக்கிறோம் சில ஆண்டுகளாய்…

மதுரை பி.எஸ்.என்.எல். நண்பர்கள் வாசிப்போர் களம் என்னும் அமைப்பைத் தொடங்கினர். அண்ணன் சு.கருப்பையா, எழுத்தாளர் தோழர் சங்கையா, எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன், கவிஞர்  சமயவேல் எனப்பலரும் நெருக்கமாயினர். தினந்தோறும்  அலுவலகத்தில் பார்ப்பவர்தான் சமயவேல்  என்றாலும் கவிஞர் சமயவேல் என்பது வாசிப்போர் களத்தினால்தான் தெரிந்தது. நல்ல புத்தகங்களை மாதம்தோறும் அறிமுகப்படுத்துதல் என்பது மட்டுமே நோக்கமாகக்கொண்ட வாசிப்போர் களம் வாசிப்பை இன்னும் தீவிரப்படுத்தியது.

புத்தகம் பற்றிப்பேசுவது, புத்தகத்தை அறிமுகம் செய்வது போன்றவை எனக்கு மிகவும் பிடித்த செயல்கள். மதுரையில் ‘‘காரல் மார்க்ஸ் நூலகம்’’ என்பதை தோழர் பிரபாகரன் நடத்திவந்தார். ‘‘எனக்குரிய இடம் எங்கே’’ என்னும் புத்தகம் பற்றிப்பேச வேண்டும் நான் என்றார்.மிக நல்ல புத்தகம் அது.  45 நிமிடம் நான் அந்தப்புத்தகத்தைப் பற்றிப் பேசியபின்பு, இப்போது புத்தகத்தை விமர்சனம் செய்தவருக்கு ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன் என அந்தப்புத்தகத்தின் ஆசிரியர் பேரா. மாடசாமி அவர்களை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன்பு எனக்கு அவர் அறிமுகமில்லை.கூட்டத்தில் அவர் உட்காரந்திருப்பதும் எனக்குத் தெரியாது. பின்பு புத்தக விமர்சனம் பற்றி நெகிழ்ந்து பேரா.மாடசாமி அவர்கள்  பேசினார். வானொலியில் ஒலிபரப்பான பல புத்தக விமர்சனங்களை எனது கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை உடைய தோழர் ஒருவர் எப்போதும் கேட்டு பாராட்டுகின்றார், கருத்துக்கூறுகின்றார். 

எனக்கு இணையாக எனது இணையர் நே.சொர்ணமும் வாசிக்கின்றார். அவரின் விருப்பம் இரமணிச்சந்திரன், லெட்சுமி, வாசந்தி என நிற்கின்றது.எனது மகன் சொ.நே.அன்புமணி விருப்பமாக எப்போதும் ஆங்கில மற்றும் தமிழப்புத்தகங்களை வாசிக்கின்றான். தனது உணர்வுகளைக் கவிதையாகப் பதிகின்றான். தமிழ் இலக்கியத்தை கல்லூரி முதுகலைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் எனது மகள் சொ.நே.அறிவுமதி எப்போதும் வாசிப்பில் ஆர்வம் காட்டுகின்றார். தொடர்ந்து எனது பிள்ளைகள் வாசிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ‘ நான் கொடுக்கும் உண்மையான சொத்து உங்களுக்கு நான் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களே’ என்று சொன்ன நேரத்தில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் அடித்த நக்கல் நினைவிற்கு வருகின்றது. ஆனால், மனதார அதுதான் உண்மையான சொத்தாக,எனது பிள்ளைகளுக்கு நான் அளிப்பது  என நான் நினைக்கின்றேன். அதனை வாசித்து அனுபவிக்கும் உள்ளம் அவர்களுக்கு இருப்பது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது,

மதுரையில் அய்.ஏ.எஸ். அதிகாரி திரு.உதயசந்திரன் அவர்கள் முயற்சியால் புத்தகத் திருவிழா ஆரம்பமாகியது.தொடர்ந்து சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.ஆயிரம் திருவிழாக்கள் மதுரையில் நடைபெற்றாலும் நம்மைப்போன்றவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும் திருவிழா புத்தகத்திருவிழாதான். பல நகரங்களில் தமிழகத்தில் புத்தகத்திருவிழாக்கள் நடைபெறவது மகிழ்ச்சிக்குரியது.

 எப்போதும் கையில் இருக்கும் பையில் சில புத்தகங்கள் இருக்கின்றது. புத்தகங்கள் விரும்பிகள் நண்பர்களாகவோ, இயக்க அல்லது தொழிற்சங்கத்தோழர்களாகவோ, அல்லது நான் பெரிதும் மதிக்கும் பெரியவர்களாகவோ இருக்கின்றார்கள். நல்ல புத்தகங்களைப் பகிர்தல் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. எனது வாழ்நாள் முழுவதும் நடைபெறும். பேருந்துப்பயணம், சில இடங்களில் காத்திருப்பு எல்லாம் கையில் புத்தகம் இருக்கும்போது தித்திக்கத் தொடங்குவிடுகின்றது. பல புத்தகங்களை 15 நாட்களுக்கு ஒருமுறை மதுரை மைய நூலகத்தில் மாற்றச்செல்வதும், புதிது புதிதாகப் புத்தகங்களை இரவலாக வீட்டிற்கு கொண்டுவந்து படிப்பதும் தொடர்கிறது. புதிய புத்தகம் வாங்குவதற்கு எப்போதும் மாதச்சம்பளத்தில் ஒதுக்கீடு இருக்கிறது. நூலகத்தில் எப்போதும் எடுக்கும் 9 புத்தகங்களில் ஒன்று மட்டுமாவது கட்டாயம் கவிதைப் புத்தகமாக இருக்கும். முதல் சிறுகதைத்தொகுப்பு  புத்தகங்களை விரும்பி,விரும்பி படிக்கின்றேன்.முடிந்தால் விருப்பத்தோடு வலைத்தளத்தில் பகிர்கின்றேன். எழுத்தாளரைக் கூப்பிட்டு நாலு வார்த்தைகள் பாராட்டைச்சொல்கின்றேன்.

எனது உரையில் எப்போதும் நான் படித்த சில புத்தகங்களை மேற்கோள் காட்டுகிறேன். கட்டுரைகள் சில புத்தகங்களின் அடிப்படையில் என்று சொல்கிறபோது கடகடவென எழுத்து ஓடுகின்றது.  மிகவும் விருப்பமாகப் படித்த புத்தகங்களை வலைப்பக்கத்தில் பகிர்ந்தால் என்ன என்ற கேள்வியால், எனது வலைத்தளத்தில் (vaanehru.blogspot.in) அண்மையில் படித்த புத்தகம் என்னும் தலைப்பில் பல புத்தகங்களைப் பற்றி எழுதியுள்ளேன். ஒரு பருந்துப்பார்வையாக படித்து எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபாலன் எழுதிய பாராட்டு, தோழர் கவிஞர் ந.முத்துநிலவன், அண்ணன் சு.கருப்பையா போன்றவர்களின் பாராட்டு இன்னும் பல புத்தகங்களைப் பற்றி அண்மையில் படித்த புத்தகம் என்னும் தலைப்பில் எழுத உதவும். பத்திரிக்கைகளில் வெளிவரும் புத்தக விமர்சனம் எப்போதும் என்னை ஈர்க்கிறது. புத்தகக் கடைகளும்தான். நாட்டில் மாற்றம் வருவதற்கு புத்தகங்களே அடிப்படை.புத்தகங்களை நேசிப்போம். வாசிப்பை நேசிப்பாக ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்ற முயற்சிகள் செய்வோம்.

வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.


நன்றி : கைத்தடி 


இந்தக் கட்டுரை 22.05.2020 அன்று கைத்தடி வலைத்தளத்தில் வெளியானது. இதன் பல பகுதிகள் ஏற்கனவே விடுதலையில் வெளியானது,எனது வலைத்தளத்திலும் வெளியானது.படித்ததை மீண்டும் படிப்பதாக தோன்றினால் பொறுத்துக்கொள்க

Tuesday, 12 May 2020

முதல் கட்டுரைக்குப் பாராட்டு.... வா.நேரு






விடுதலை 11.05.2020-ல் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத்தலைவர்,கல்வி அதிகாரி அண்ணா சரவணன் அவர்கள் எழுதிய 'சிங்கப்பூரில் தமிழர் தலைவர் ' என்னும் கட்டுரை படித்தேன். மிக நன்றாக இருந்தது. ஆற்றொழுக்கு நடையில், 'படித்ததில் பிடித்தது' என்னும் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கு பெற்றபோது, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் இந்தக் கரானோ காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த நிறைய இயக்க புத்தகங்களைப் படியுங்கள், படித்ததோடு நில்லாமல், 'படித்ததில் பிடித்தது ' என்னும் தலைப்பில் விடுதலைக்கு எழுதி அனுப்புங்கள் என்று அறிவுறுத்தியதை திராவிடர் கழகத்தின் பொருளாளர் அண்ணன் வீ.குமரேசன் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார்.அண்ணா சரவணன் அவர்கள் பேசியபோது, 'சிங்கப்பூரில் தமிழர் தலைவர் ' புத்தகம் படித்ததைப் பற்றிப் பேசினார். நானும் அண்ணன் குமரேசன் அவர்களும் அதனை அப்படியே எழுதி விடுதலைக்கு அனுப்புங்கள் என்று அண்ணா சரவணனிடம் வலியுறுத்தினோம்.

நேற்று(11.05.2020) மாலை விடுதலையில் கட்டுரையைப் படித்துவிட்டு , அண்ணா சரவணனை தொலைபேசியில் அழைத்து பாராட்டினேன். "அய்யா, நீங்களும் அய்யா குமரேசன் அவர்களும் சொன்னீர்கள். ஆனால் மிகுந்த தயக்கத்தோடுதான் விடுதலைக்கு அனுப்பினேன். இதுதான் எனது முதல் கட்டுரை " என்றார். "இது ஏதோ ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதியவர் எழுதியதுபோல அவ்வளவு நன்றாக, கோர்வையாக இருக்கிறது உங்கள் திருப்பத்தூர் மாவட்டச்செயலாளர் அய்யா வி.ஜி.இளங்கோ, அவரது இணையர் கவிதா அவர்களை பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள்.நமது இயக்கத்தோழர்களுக்கு, பொறுப்பாளர்களுக்கு அவர்களைப் பாராட்டி விடுதலையில் வரும் சொற்களுக்கு கூடுதலான பரிசு இந்த உலகத்தில் வேறு என்ன இருக்கிறது ? வாழ்த்துரை அளித்த சிங்கப்பூர் தமிழறிஞர்கள் வை.திருநாவுக்கரசு,டாக்டர் சுப.திண்ணப்பன் ஆகியோரைக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.  இந்தப் புத்தகத்தை அருமையாக கொண்டுவந்த அய்யா சிங்கப்பூர் எம்.இலியாஸ் அவர்களின் உழைப்பை பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள். அவர் முன்னுரையில் அய்யா ஆசிரியர் அவர்களைப் பற்றி குறிப்பிட்டிருப்பதை மிகச்சிறப்பாக வகைப்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப்புத்தகம் கிடைக்கவில்லை. மறுபதிப்பு போடவேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கின்றீர்கள். நானே இந்தப்புத்தகம் படித்ததில்லை. தங்களின் கட்டுரை மூலமாக புதிய பதிப்பில் நாங்கள் எல்லாம் படிக்கும் வாய்ப்பு கிடைக்க இருக்கிறது " எனக்குறிப்பிட்டேன்.

அன்பிற்கினிய தோழர்களே, " தட்டுத்தடுமாறி முதன்முதலாக இப்படி எழுதுகிறேன். " என்று அண்ணா சரவணன் இந்தக் கட்டுரையில் எழுதுகின்றார். அண்ணா சரவணன் போன்ற ஆயிரக்கணக்கான தோழர்கள், எழுதும் ஆற்றல் உள்ளவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்.ஆனால் நாம் எழுதினால் வெளியிடுவார்களா? நம்மால் எழுத முடியுமா என்னும் தயக்கம்தான் பலரையும் தடுக்கிறது. முதலில் இந்தத் தயக்கத்தை தூக்கி வங்களா விரிகுடாக் கடலில் எறியுங்கள். புதுக்கோட்டையைச்சார்ந்த மறைந்த கவிஞர் பாலா அவர்கள் ஒருமுறை சொன்னார்கள். " புதுக்கவிதை எழுத விரும்புகிறவர்கள் எல்லாம் எழுதட்டும். தமிழகத்தில் ஏழரைக் கோடி பேர் இருக்கிறார்கள் என்றால், ஏழைரைக் கோடிப்பேரும் எழுதட்டும். அதனால் என்ன கெட்டு விடும். எது நிற்கிறது, எது கால வெள்ளத்தில் கரைந்து போகிறது என்பதனை காலம் தீர்மானிக்கும். எல்லோரும் எழுதுகிறார்கள், அதனால் நான் எழுதவில்லை என்று சொல்லாதீர்கள். எழுதுங்கள்,எழுதுங்கள் " என்று சொன்னார். அதனைப்போல நமது தோழர்கள் ஒவ்வொருவரும் 'படித்ததில் பிடித்ததை' எழுதி விடுதலைக்கு அனுப்புங்கள். எது வெளியிடத்தகுந்தது என்பதனை விடுதலை முடிவுசெய்து வெளியிடும்.அதனைப் போல ஆங்கிலத்தில் எழுத விருப்பம் உள்ளவர்கள், ஆங்கிலத்தில் எழுதும் ஆற்றல் உள்ளவர்கள் ஒவ்வொரு பக்க கட்டுரையாக கூட தி மாடர்ன் ரேசனலிஸ்டு பத்திர்க்கைக்கு எழுதி அனுப்புங்கள். அண்ணா சரவணன்  " நம் குடும்பத்தலைவர் எல்லா வ்கையிலும் நம்மை பயிற்றுவித்து வருகிறார் என்பதற்கு நானே எடுத்துக்காட்டு ' என்று சொல்வதைப் போல நம் ஒவ்வொருவரையும் ஆங்கிலத்தில்,தமிழில் எழுதுவதை நமது தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் பயிற்றுவிக்கிறார்.முயற்சி செய்ய அழைக்கிறார்.களத்தில் நின்று பணியாற்றுவது போலவே நமது போராட்டங்களை,அனுபவங்களை, எண்ணங்களை காகிதத்தில் எழுதி பதிந்து வைப்பதுவும் மிகவும் முக்கியம்.எழுதுங்கள் தோழர்களே,எழுதுங்கள்.

முனைவர் வா.நேரு,
தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

நன்றி : விடுதலை 12.05.2020...ஆசிரியருக்கு கடிதம்:

Thursday, 7 May 2020

மிஸ்டர் இரக்கசாமி.......(சிறுகதை)... வா.நேரு

                                                   மிஸ்டர் இரக்கசாமி....(சிறுகதை)... வா.நேரு

” டேய்,உங்கப்பா முகத்திலே அப்படியே எழுதி வெச்சுருக்குடா ‘ என்றாள் கல,கலவெனச்சிரித்துக்கொண்டே கலா…” கட்டின பாவத்துக்கு நானும் ஒண்ணும் சொல்றதில்லடா,உங்கப்பாவ’ என்றாள் மேலும்….

‘அப்படியாம்மா, அப்பா முகத்திலே அப்படியா எழுதி ஒட்டிருக்கு..முகத்திலே பார்த்தா எனக்கு ஒண்ணும் தெரியலையேம்மா ‘ என்று அம்மாவின் நக்கலுக்கு சரிசமமாய் நக்கலடித்துக்கொண்டே அப்பாவின் முகத்தைப் பார்த்தான் 12-ஆம் வகுப்பு படிக்கும் கென்னடி.

மனைவியும் மகனும் பேசுவதைக் கேட்டுக்கொண்டே ,இடி விழுந்ததைப் போல அமைதியாக உட்கார்ந்திருந்தார் மிஸ்டர் இரக்கசாமி. இரக்கசாமி என்று பெயர் வைத்ததாலோ என்னவோ ,இரக்கப்படுகிறேன் என்று சொல்லி ஏமாளியாகிக் கொண்டிருந்த இரக்கசாமி தனது மனைவியையும் மகனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே பரிதாபமாக முழித்துக்கொண்டிருந்தார்.

மிஸ்டர் இரக்கசாமிக்கு மிகவும் தாராள குணம். எவர் வந்து கேட்டாலும் இல்லை என்று சொல்லக்கூடாது என்று மனதிற்குள் ஒரு பெரிய வைராக்கியம். ஒரு பெரிய பணக்கார வீட்டுப்பிள்ளையாகப்பிறந்து ,பெற்றோர்கள் நிறையச்சம்பாரித்து வைத்து அதனை செலவழிக்கும் ஒரு தாராள மனம் படைத்த பிள்ளையாய் மிஸ்டர் இரக்கசாமி இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை….

ஆனால் மிஸ்டர் இரக்கசாமி பிறந்ததிலிருந்தே அட்ட தரித்திரம். கன்னங்கரேர்ன்னு பிறந்திருக்கான்னு உறவுகள் எல்லாம் பிறந்தவுடனேயே பார்த்து முகத்தைச்சுழிக்க, சுத்தியிருந்த உறவுகள் எல்லாம் பழிக்க படாரென்னு மண்ணில் வந்து விழுந்தவுடனேயே வாங்கிக் கட்டிக்கொண்டவர் மிஸ்டர் இரக்கசாமி. சின்ன வயசிலியே அப்பனை முழுங்கிவிட்டான்… அதற்கு இந்த இரக்கசாமியின் முதுகில் இருக்கும் மொக்கப்பய மச்சமே காரணம்ன்னு ஒரு சோம்பேறி சோசியக்காரப் பயல் சொல்லிவைக்க ,அப்பா இல்லாமல் ஆளாகி வருவதற்குள் படாத பாடு பட்டு வளர்ந்து வந்தவர்தான் மிஸ்டர் இரக்கசாமி.

எவராவது பிரச்சனை என்று சொல்லி கடனாக பணம் கேட்டு வந்து விட்டால் அப்படியே உருகிவிடுவார் மிஸ்டர் இரக்கசாமி.சின்ன வயதில் பணத்திற்காக தான் துன்பப்பட்டது,துயரப்பட்டது, அல்லல்பட்டது,அசிங்கப்பட்டது என அத்தனையும் இரக்கசாமியின் மனதிற்குள் ஓடும்.எவராவது தன்னிடம் பணம் கேட்டு வந்து விட்டால் உடனே தன்னை அந்தப் பணம் கேட்டு வந்தவன் இடத்தில் நிறுத்திப்பார்ப்பார். அய்யோ, இவனுக்கு இந்த நேரத்தில் நாம் உதவவில்லையெனில் மனிதனாகத் தான் பிறந்து, வாழ்ந்து,வளர்ந்து என்ன பயன் என்று எண்ணிப் பணத்தைக் கொடுத்துவிடுவார்.

சில நேரங்களில் சிலருக்கு பணத்தைக் கொடுப்பதற்கு முன்பே இப்ப கொடுக்கும் பணம் திரும்ப வராது என்று தெரியும் மிஸ்டர் இரக்கசாமிக்கு.எழுத்தாளர் பிரபஞ்சன் தனது ‘நேற்றைய மனிதர்கள் ‘சிறுகதைத்தொகுப்பில் எழுதிய ஒரு சிறுகதையின் கதாபாத்திரம் போல, திரும்ப வராது என்று தெரிந்தே கடன் கொடுப்பார் மிஸ்டர் இரக்கசாமி.

இப்படி பவுன் 1000 ரூபாய் விற்கும் காலத்திலேயே 1000,2000 என்று மிஸ்டர் இரக்கசாமியிடம் கடன் வாங்கியவர்கள் பலவகையில் அறிமுகமானவர்கள். உடன் வேலை பார்ப்பவர்கள், உறவுக்காரர்கள் ,இலக்கியவாதிகள் எனப் பெரிய பட்டியலே மிஸ்டர் இரக்கசாமியிடம் உண்டு. பலருக்கு கொடுத்தது வீட்டிற்குத் தெரியும்.சிலருக்கு கொடுத்தது வீட்டிற்குத் தெரியாது.ஆனால் கொடுத்த எவரிடமும் அழுத்தி,அழுத்திப் பணத்தைக் கேட்டு திரும்பி வாங்கும் பழக்கம் இரக்கசாமியிடம் இல்லை.கொடுத்தவரிடம் ஒரு முறை இவர் கேட்கும் தோரணையிலேயே கடன் வாங்கிய ஆளுக்குத்தெரிந்துவிடும் இந்த ஆளுக்கு பணத்தைத் திருப்பிக்கொடுக்கவில்லையென்றாலும் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று.


மிஸ்டர் இரக்கசாமி சில நேரங்களில் தனது தாராள குணத்தால் சிக்கலிலும் மாட்டத்தெரிந்தார் என்றாலும் தனது தயாள குணத்தை அவரால் மாற்ற இயலவில்லை.அப்படித்தான் ஒரு போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களைத் தயார்படுத்தும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது நிகழ்ந்தது.

மிகுந்த உயர்பதவிக்காக மாணவர்களைத் தயார்படுத்தும் நிறுவனம் அது. மிஸ்டர் இரக்கசாமி பெரும் மதிப்பு வைத்திருக்கும் ஒருவர் நடத்திக்கொண்டிருந்தார்.அரசு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மிஸ்டர் இரக்கசாமி,பகுதி நேரமாக அந்த நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்தார். பகுதி நேரம் என்றால் பகுதி நேரம்தான். பத்துபைசா வருமானம் வராத பகுதி நேர வேலை,இருந்தாலும் தான் எப்போதோ படித்ததை,பகிர்ந்து கொள்ளக் கிடைத்த அரிய வாய்ப்பாக எண்ணி ,மிஸ்டர் இரக்கசாமி அந்த நிறுவனத்தில் போய் பாடங்கள் நடத்திக்கொண்டு இருந்தார்.

மிஸ்டர் இரக்கசாமி போலவே அந்த நிறுவனத்தில் ‘வரலாறு ‘ பாடம் எடுக்க திரு.காந்தி வந்து கொண்டிருந்தார்.’காந்தி ‘என்று சொன்னால் அவர் காந்திதான் என்று மிஸ்டர் இரக்கசாமிக்குத் தோன்றியது. எப்போதும் மிக எளிமையான உடையில் வந்து பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அன்றொரு நாள் அந்த நிறுவனத்தில் பாடம் நடத்தும் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரையும் அந்த நிறுவனத்தின் நிறுவனர் உணவு விடுதிக்கு அழைத்துச்சென்றார்.உணவு விடுதியில் வேண்டியதைச்சாப்பிடுங்கள் என்று சொன்னபோது, காந்தி மட்டும் 4 இட்லிமட்டும் போதும் என்று சொல்லிவிட்டார். மிஸ்டர் இரக்கசாமி மற்றும் உடன் இருந்தவர்கள் எல்லாம் ஸ்பெஷல் தோசை,சோளாப்பூரி என்று வித விதமான உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது , காந்தி மட்டும் 4 இட்லி போதும் என்று சொன்னதைப் பார்த்து நெகிழ்ந்து போனார் மிஸ்டர் இரக்கசாமி. ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல காந்தியைப் பற்றிய மதிப்பீட்டில் மிக உயர்ந்த மதிப்பெண்ணைப் போட்டுக்கொண்டார் மிஸ்டர் இரக்கசாமி.

திரு. காந்திக்கு வயது 50க்கு மேல் இருக்கும் . இன்னும் திருமணம் முடித்துக்கொள்ளவில்லை. தூத்துக்குடிக்கு அருகில் சொந்த ஊர் என்றாலும் மதுரையில் தங்கியிருந்தார். மதுரையின் ஒரு புகழ்பெற்ற தனியார் பள்ளிக்கூடத்தில் நிரந்தர ஆசிரியர் வேலை.அந்தத் தனியார் பள்ளிக்கூடத்தில் வரும் சம்பளத்தில் எண்பது சதவீதம் ஏழை மாணவர்களின் கல்விக்காக செலவிட்டு விடுவதாக அன்றொரு நாள் சொல்லிக்கொண்டிருந்தார்.தன்னைப் போலவே மாணவர்களின் நலனுக்காக தனது சொந்தப்பணத்தை செலவழித்து மிஸ்டர் காந்தி வந்து போய்க்கொண்டிருக்கிறாரே என மிஸ்டர் இரக்கசாமி நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.

அன்றொரு நாள் அந்த நிறுவனத்தில் பாடம் நடத்திவிட்டு வெளியில் வந்த போது , திடீரென மிஸ்டர் இரக்கசாமிக்கு முன்னால் வந்து நின்றார் காந்தி. அவசரமாக ஒரு 20,000 ரூபாய் கடன் வேண்டும் என்றார் மிஸ்டர் இரக்கசாமியிடம் .உடனே இரக்கசாமி ‘ எதற்காக உங்களுக்குப் பணம் கடனாக வேண்டும் ? ‘ என்று கேட்டார்.

‘கிறிஸ்துமஸ் பண்டிகை சீக்கிரம் வரப்போவதையும், தனக்கு குடும்பம் இல்லை என்றாலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு எப்போதும் தூத்துக்குடியில் இருக்கும் தனது தங்கையின் வீட்டுக்கு கிறிஸ்துமஸ்ஸிற்கு போவதாகவும், போகும்போது எப்போதும் தங்கையின் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாடைகள், இனிப்பு வாங்கிச்செல்வது வழக்கம் என்றும், இந்த வருடம் பணத்திற்காகப் பள்ளியின் மூலம் ஜி.பி.எப். பணத்திற்கு விண்ணப்பம் கொடுத்ததாகவும், அது வர தாமதமாகிறது, ஆனால் கிறிஸ்துமஸ் வரப்போவதால் பணம் தேவைப்படுகிறது என்றும்,ஜி.பி.எப். பணம் வந்தவுடன் ஓரிரு வாரத்தில் கொடுத்துவிடுவதாகவும் மிகவும் கவலை தோய்ந்த முகத்தோடு மிஸ்டர் இரக்கசாமியிடம் கோரிக்கை வைத்தார் காந்தி.

மிஸ்டர் இரக்கசாமி உடனே தன்னைக் காந்தியின் இடத்தில் வைத்துப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். ஆனாலும் மிஸ்டர் இரக்கசாமியிடம் பணம் இல்லை. தன்னிடம் பணம் இல்லையென்றும், உடனடியாக ரூ 20,000 தருவது தன்னால் இயலாத காரியம் என்பதையும் காந்திக்கு மிஸ்டர் இரக்கசாமி எடுத்துச்சொன்னார்.ரூ 10,000 மாவது தரும்படி காந்தி மறுபடியும் கேட்க, தன்னிடம் ரூ 500 கூட இப்போது இல்லை என்றும் ,ரூ 10,000 என்பது பெரிய தொகை, தன்னால் இயலாது, தன்னை மன்னிக்கும்படியும், உதவ வேண்டிய நேரத்தில் உதவி செய்ய முடியாமல் போன காரணத்தையும் மிஸ்டர் இரக்கசாமி காந்தியிடம் விளக்க முற்பட்டார்.

காந்தி உடனே மிஸ்டர் இரக்கசாமியின் பேச்சினை இடைமறித்தார். யாரிடமாவது வட்டிக்குக்கூட ரூபாய் 10,000 வாங்கித்தரும்படியும் ,ஓரிரு வாரத்தில் வட்டிப்பணத்தைத்தருவதோடு அசலையும் தானே கட்டிவிடுவதாகவும் தனக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டுமென்றும் , சமூகத்தில் நல்ல நிலைமையில் உள்ள தன்னால் கீழே இறங்கிச்சென்று கடன் வாங்க இயலவில்லையென்றும் , தான் கடந்த 20,25 வருடங்களாக தனது தங்கைக்கும் அவளது வீட்டிற்கும் கிறிஸ்துமஸ் விழாவிற்குச்செய்யும் உதவியைத் தொடர உதவி செய்யும் படியும் மிகவும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார் காந்தி. சரி,நான் கேட்டுப்பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு தனது அலுவலகத்திற்கு வந்தார் இரக்கசாமி.

மிஸ்டர் இரக்கசாமி வேலை பார்க்கும் இடத்தில் ஒருவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டிருந்தார். சில ஆண்டுகளாக அந்த அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் அவரிடமிருந்து தள்ளியே இருந்தார் மிஸ்டர் இரக்கசாமி. காந்திக்கு எப்படியாவது உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் அலுவலகத்தில் ஓடிக்கொண்டேயிருந்தது மிஸ்டர் இரக்கசாமிக்கு. சரி, வட்டிக்கு கொடுப்பவரிடம் கேட்டுப்பார்த்தாவது காந்திக்கு உதவி செய்ய வேண்டும் என்று இரக்கசாமிக்கு தோன்றியது.

மிஸ்டர் இரக்கசாமி வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கும் சந்திரனிடம் சென்று, இப்படித்தனக்கு தெரிந்தவர் மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் ,ஜி.பி.எப். பணம் வரவேண்டியது பாதித் தூரத்தில் நிற்பதாகவும்,வந்த உடன் அவர் கொடுத்து விடுவார் என்றும் அவருக்கு ரூபாய் 10,000 கொடுத்து உதவ வேண்டும் என்றும் கேட்டார். சந்திரன் மிகத்தெளிவாக, காந்தியைத் தனக்குத் தெரியாது என்றும், உங்களை நம்பி வேண்டுமென்றால் நான் தருகின்றேன், நீங்கள்தான் எனக்கு வட்டி கட்டவேண்டும், அசல் கட்டவேண்டும், நோட்டும் நீங்கள்தான் எழுதிக்கொடுக்க வேண்டும் என்றும் சொன்னபோது, மிஸ்டர் இரக்கசாமி மற்றவற்றிற்கு ஒப்புக்கொண்டு, நோட்டு மட்டும் காந்தியையே எழுதித்தரச்சொல்கிறேன் என்றார்.சந்திரன் மறுத்துவிட்டார். வேண்டுமென்றால் காந்தியிடம் உங்கள் பெயருக்கு ஒரு நோட் எழுதி வாங்கிக்கொள்ளுங்கள். நான் பணம் கொடுப்பது உங்களிடம்தான். எனக்கு நீங்கள்தான் நோட்டு எழுதிக்கொடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்.

மறு நாளே, அலுவலகத்திற்கு வந்த காந்தியை சந்திரனிடம் மிஸ்டர் இரக்கசாமி அறிமுகப்படுத்தினார். சந்திரன் கண்டுகொள்ளவில்லை.அவருக்கு முன்னாடியே சந்திரனின் மனைவி பெயருக்கு மிஸ்டர் இரக்கசாமி ரூ 10,000 க்கு நோட் எழுதிக்கொடுத்தார். மிஸ்டர் இரக்கசாமி பெயருக்கு,அலுவலக முகவரிக்கு ரூ 10,000 க்கு நோட்டை காந்தி எழுதிக்கொடுத்தார். சந்திரன் ரூ 10,000த்தில் முதல் மாத வட்டி 300 ரூபாயை எடுத்துக்கொண்டு ,மீதம் 9,700 ரூபாயை மிஸ்டர் இரக்கசாமியிடம் கொடுத்தார். இரக்கசாமி அந்தப்பணத்தை அப்படியே காந்தியிடம் கொடுத்தார்.மிக்க நன்றி,மிக்க நன்றி,வாழ்க்கையில் இந்த உதவியை மறக்கவே மாட்டேன் என்று சொல்லிக்கொண்டே காந்தி மிஸ்டர் இரக்கசாமியிடம் விடை பெற்றுக்கொண்டார்.மிஸ்டர் இரக்கசாமிக்கு மிகப்பெரும் நிறைவு காந்திக்கு உதவி செய்தது குறித்து

இரண்டு மாதம் சரியாக 2-ந்தேதி வட்டிப்பணத்தைக் கொடுத்தார் காந்தி.அப்படியே அந்தப்பணத்தை வாங்கி அலுவலகத்தில் சந்திரனிடம் கொடுத்து வந்தார் மிஸ்டர் இரக்கசாமி. ஜி.பி.எப். பணம் வந்துவிட்டதா என்று ஒரு வார்த்தை மிஸ்டர் இரக்கசாமி கேட்பதற்கு முன்பே ஜி.பி.எப். இன்னும் சில நாட்களில் வந்து விடும் என்று காந்தி சொல்லிக்கொண்டிருந்தார்.. மூன்றாவது மாதம் இரண்டாம் தேதி காந்தி வரவில்லை. 10-ந்தேதி வரை அவர் வரவில்லை. சந்திரனுக்கு வட்டிப்பணத்தை மிஸ்டர் இரக்கசாமியே கொடுத்துவிட்டார்.அந்த மாதம் முழுவதும் காந்தியைப் பார்க்கமுடியவில்லை.போட்டித் தேர்வுக்கு பாடம் நடத்தும் நிறுவனத்திற்கே காந்தி வரவில்லை.தொடர்பு கொள்ளவே முடியவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே இருக்கும்போதே மூன்று மாதங்கள் வட்டிப்பணத்தை சந்திரனுக்கு மிஸ்டர் இரக்கசாமி கட்டியிருந்தார்.

காந்தி போட்டித்தேர்வு பயிற்சி நிறுவனத்திற்கு மூன்று மாதங்களாக வரவில்லை என்றதும் ஏதோ தப்பாகப்போவது போல தெரிந்தது மிஸ்டர் இரக்கசாமிக்கு. அங்கிருந்த காந்தி வேலை பார்த்த பள்ளியின் முகவரியை எடுத்துக்கொண்டு காந்தி வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்திற்கு மிஸ்டர் இரக்கசாமி போனார். அங்கிருந்தவர்களிடம் காந்தியைப் பற்றிக் கேட்டவுடனேயே , நீங்கள் ஏதும் கடன் கொடுத்து இருக்கிறீர்களா? எனக்கேட்டவுடன் திடுக்கிட்டுப் போனார் மிஸ்டர் இரக்கசாமி. அவர்கள் காந்தியைப் பற்றி சொல்லச்சொல்ல கிறுகிறுப்பு வந்தது போல ஆகிவிட்டது மிஸ்டர் இரக்கசாமிக்கு...

காந்தி தன்னுடன் வேலை பார்க்கும் 20-க்கு மேற்பட்டவர்களிடம் இப்படி 10,000ம் 20,0000ம் என்று கடன் வாங்கியிருக்கிறார். ஒருவரிடம் வாங்கியது அடுத்தவருக்குத் தெரியாமலேயே கைமாத்து,அவசரம், மருத்துவம் எனப் பல பொய்களைச்சொல்லி பணம் வாங்கியிருக்கிறார். வேறு கெட்ட பழக்கம் இல்லாதவரே என்று ஆசிரியர்கள் தீர விசாரித்தபோது, மதுரையில் பெரிய பணக்காரர்கள் பலர் விளையாடும் சீட்டாட்டக்கிளப்பில் மெம்பராக இருப்பதும்,சீட்டு விளையாட்டில் பயங்கர மோகம் கொண்டு பணம் கட்டி இழப்பதும் தெரிய வந்திருக்கிறது. ஆசிரியர்கள் மாற்றி மாற்றி கடனைக் கேட்டபோது, ஒன்றுமே சொல்லாமல் பள்ளிக்கும் வராமல் இரண்டு மாதங்களாக பள்ளிக்கூடத்திற்கும் வராமல் இருப்பது தெரியவந்தது. எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் வராததை,மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்ததன் அடிப்படையில் அவர் தற்காலிக பணி நீப்பில் இருக்கிறார் என்பது தெரிந்தது.

என்ன செய்வது என்று தெரியவில்லை மிஸ்டர் இரக்கசாமிக்கு. ரூபாய் 300 மாதாமாதாம் வட்டி கட்டுவதை வீட்டில் மனைவியிடம் சொல்லவில்லை. அவராகவே சமாளித்துக்கொண்டிருந்தார். ஆனால் எவ்வளவு நாள் பணம் கட்டுவது? சந்திரனுக்கு அசலும் வட்டியும் கட்டினால்தான் புரோ நோட்டைத் தருவார் …என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே அலுவலகத்திற்கு போய் வந்து கொண்டிருந்தார். வட்டிப்பணத்தை மட்டும் சந்திரனுக்கு கட்டி வந்தார்.

திடீரென்று ஒரு நாள் அலுவலகத்தில் இருக்கும்போது மிஸ்டர் இரக்கசாமிக்கு தூத்துக்குடியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘மிஸ்டர் இரக்கசாமியா?’ என்று வினவியவரிடம் ‘ஆமாம் ‘என்றார். தான் காந்தியின் வக்கில் என்றும் அவர் நிறையக் கடன் பட்டு வாழ்க்கையில் நொந்து விட்டார் என்றும்,விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, சொத்துக்கள் ஏதும் இல்லாததால் மஞ்சள் கடிதாசி கொடுத்துவிட்டார் என்றும் ,உங்கள் வீட்டு முகவரி வேண்டும் சில தகவல்கள் அனுப்ப என்றும் கேட்டபோது வீட்டு முகவரியை மிஸ்டர் இரக்கசாமி தொலைபேசியிலேயே கொடுத்தார்.

மறு நாள் வீட்டிற்கு வந்தவுடன் மனைவி கலா அந்தக்கடிதத்தைக் கொடுத்தவுடன் படித்துப்பார்த்து அரண்டு விட்டார் மிஸ்டர் இரக்கசாமி. “மிஸ்டர் இரக்கசாமி, நீங்கள் அரசு வேலை பார்க்கிறீர்கள் ? எப்படி வட்டிக்கு பணம் கொடுத்தீர்கள்?” என்று விளக்கம் கேட்டு காந்தியின் வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பி இருந்தார். மனைவி கலாவிடமும்,மகன் கென்னடியிடமும் முழுக் கதையையும் சொன்னார் மிஸ்டர் இரக்கசாமி. முதலில் கோபப்பட்ட கலா பின்பு கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள்.

” இளிச்சவாயென்னு ” …” டேய்,உங்கப்பா முகத்திலே அப்படியே எழுதி வெச்சுருக்குடா ‘ என்றாள் கல,கலவெனச்சிரித்துக்கொண்டே கலா…” கட்டின பாவத்துக்கு நானும் ஒண்ணும் சொல்றதில்லடா,உங்கப்பாவ’ என்றாள் மேலும்….

‘அப்படியாம்மா, அப்பா முகத்திலே அப்படியா எழுதி ஒட்டிருக்கு..முகத்திலே பார்த்தா எனக்கு ஒண்ணும் தெரியலையேம்மா ‘ என்று அம்மாவின் நக்கலுக்கு சரிசமமாய் நக்கலடித்துக்கொண்டே அப்பாவின் முகத்தைப் பார்த்தான் 12-ஆம் வகுப்பு படிக்கும் கென்னடி.

மனைவியும் மகனும் பேசுவதைக் கேட்டுக்கொண்டே ,இடி விழுந்ததைப் போல அமைதியாக உட்கார்ந்திருந்தார் மிஸ்டர் இரக்கசாமி. இரக்கப்படுகிறேன் என்று சொல்லி ஏமாளியாகிக் கொண்டிருந்த இரக்கசாமி தனது மனைவியையும் மகனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே பரிதாபமாக முழித்துக்கொண்டிருந்தார்.

நன்றி : எனது சிறுகதையை வெளியிட்ட சிறுகதைகள்.காம்(sirukathaigal.com) இணையதளத்திற்கு



Thursday, 30 April 2020

எல்லைக் கோடுகளை பெரிதாக்கி.........வா.நேரு,


உழைக்கும் தோழர்களுக்குள்
ஓராயிரம் பிரிவு...
அதனை ஊதிப்பெருக்கும்
கடமையே சாதிமதப்பிரிவு....

அனைத்து சாதியும்
ஆளுக்கொரு நாள்
மலக்குழியில் இறங்கி
சுத்தம் செய்ய ஆணையிடுங்கள்
உடனடி இயந்திரம்
உடனே தயாராகும்...
இனமுரசு சத்யராஜின் முழக்கம்...

எவர் எவரோ
ஆள்பவர்களாத் தோன்றினும்
ஆள்பவர்கள் முதலாளிகளின்
ஏவல் ஆட்களே.....
வாராக் கடனும் அவர்களால்...
வங்கிகள் திவாலும் அவர்களால்...

உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராய்
சாதியால் மதத்தால்
மக்களைப் பிரிக்கும்
சதிகாரர்கள் ஆட்சிக்கட்டிலில்....
இங்கு மட்டுமல்ல உலகெங்கும்...

உழைப்பவனை அடிமையென
எண்ணும் உலுத்தர்களே
உலகெங்கும் ஆட்சிக்கட்டிலில்...
பிழைப்பதற்கு டெட்டால் ஊசி
போடப் பரிந்துரைக்கும் மேதாவிகள்...

நாட்டைப் பிரிக்கும்
எல்லைக் கோடுகளை பெரிதாக்கி
உழைக்கும் மக்களின்
வயிற்றுப்பசியினை சிறியதாக்கி
தேசபக்தி புலம்பல்கள் உலகெங்கும்..

தொழிலாளர்கள் பங்குதாரர்களாய்
ஆகும் தொழிற்கூடங்களே
வேண்டும் என்ற தோழர் பெரியார்

எட்டுமணி நேர வேலையை
எல்லாருக்கும் உறுதியாக்கிய
சட்டம் தந்த  தோழர் அம்பேத்கர்

உழைக்கும் தோழர்களின்
விடியலுக்காய் புதிய கீதம்
பாடிய தோழர் மார்க்ஸ்
இவர்களின் கருத்துக்களே
உழைக்கும் தோழர்களே !
நம்மை ஒருங்கிணைக்கும்!
விடியலுக்கு வழி வகுக்கும் !

இருட்டைக் கண்டு பயம் வேண்டாம்!
கரனா இருட்டும் ஒரு நாள் விடியும் !
சாதி மத இருட்டும் ஒரு நாள் ஒழியும்!
நம்பிக்கையோடு சொல்வோம்...
உலகத்தொழிலாளர்களே ஒன்றிணைவோம்!
ஒரு மித்த குரலில் ஓங்கிச்சொல்வோம்
வாழ்க! வாழ்க ! மேதினம் வாழ்க !
செவ்வானமாய் உலகம் ஒரு நாள் சிவக்கும்!
அந்நாளில் எல்லோருக்கும் எல்லாமுமாய்
புதிய உலகு விடியும் !
வாழ்க ! வாழ்க ! தொழிலாளர் தினம் வாழ்க!

                                           வா.நேரு,01.05.2020. 

Tuesday, 21 April 2020

கைதட்டச்சொன்னது போதும்...வா.நேரு.

என் உடலில் இருந்த இதயத்தை
எடுத்து தனியே வைத்தார்கள்...
என் உடலில் உயிர் இருக்க
செயற்கை இதயம் பொருத்தி
நாடியைத் துடிக்கவிட்டார்கள்...
தனியே எடுத்த இதயத்தில்
இருந்த  வால்வை
எடுத்து புது வால்வை வைத்தார்கள்..
எனக்கு புது வாழ்வை அளித்தார்கள்...

கடவுளை மறுக்கும் எனக்கு
கடவுளாய் எனக்கு அந்த
அறுவை சிகிச்சை மருத்துவர்கள்தான்
அன்று கண்ணில் தெரிந்தார்கள்....
இன்றும்கூட சென்னை அப்பலோ
மருத்துவர்கள் செங்கோட்டுவேலும்
ஸ்ரீதரும் வழிகாட்டிய மருத்துவர்
அய்யா சோம.இளங்கோவனும்
மனதில் நிற்கிறார்கள்..
என்றும் மனிதத்தின் உருவாக
மனதில் நிற்கிறார்கள்...


கரனா நோய்தொற்றால்
மறைந்த மருத்துவருக்கு
சுடுகாட்டில் இடமில்லை என
சிலர் கலாட்டா செய்த செயல்
என்ன சொல்லி நொந்து கொள்வது?
எப்படி இவர்களைத் திருத்துவது?
கரோனோவால்  தேவையில்லா பயம்
தெருவெங்கும் தொற்றிக்கொண்டதா?
மனித இனம் மறுபடியும்
காட்டுமிராண்டி காலத்தை
வரித்துக்கொண்டதா?


கரோனாவால் இறக்கும் மருத்துவர்களுக்கு
துப்பாக்கிக் குண்டுகள் முழங்க
அரசு மரியோதையோடு அடக்கம் செய்யுங்கள்...
கண்ணுக்குத் தெரியாத கிரிமிகளோடு
போராடும் மருத்துவர்கள்,நர்சுகள்
சுகாதாரப்பணியாளர்கள் எல்லாவகையிலும்
தேசம் காக்கும் போர்வீரர்களே...
கரோனா களத்தில் இருப்போர்க்கு மரியாதையும்
கரோனா களத்தில் இறப்போருக்கு அரசு மரியாதையும்
உறுதிப்படுத்துங்கள் அரசுகளே....
கைதட்டச்சொன்னது போதும்...அவர்களை
மனிதராக மதிக்க சட்டம் செய்யுங்கள்....

                                   .வா.நேரு.....21.04.2020

Sunday, 19 April 2020

அண்மையில் படித்த புத்தகம் : மாணவத்தோழர்களுக்கு....ஆசிரியர் கி.வீரமணி

அண்மையில் படித்த புத்தகம் : மாணவத்தோழர்களுக்கு
நூல் ஆசிரியர்               : ஆசிரியர் கி.வீரமணி
வெளியீடு                   : திராவிடர் கழக(இயக்க) வெளியீடு,பெரியார் திடல் ,சென்னை-7.
முதல் பதிப்பு                : ஜீலை 2018, மொத்த  பக்கங்கள் 24, விலை ரூ 15/-


உருவத்தில் மிகச்சிறிய புத்தகமாக இருந்தாலும் உள்ளடக்கத்தில் நிறைய செய்திகளை,கருத்துக்களைக் கொடுக்கக்கூடிய புத்தகம் இந்தப்புத்தகம் . 'மாணவத்தோழர்களுக்கு ' என்று மாணவர்களை அழைக்கும்விதமாகத் தான் புத்தகம் தொடங்குகிறது. 'குடந்தை மாநகரில் 75 ஆண்டுகளுக்கு முன்னால் உடைக்கப்பட்ட ஒரு தண்ணீர்ப்பானை ஒரு இயக்கத்தை உருவாக்கியது அதுதான் 8.7.2018-ல் பவள விழாக்காணும் திராவிட மாணவர் கழகம் என்ற சமூக நீதி சுயமரியாதை பகுத்தறிவு அமைப்பு '  என்னும் வரலாற்றுச்செய்தியோடு புத்தகம் தொடங்குகிறது.அன்று உடைந்தது வெறும் பானை அல்ல, எதைக்கொடுத்தாலும் கீழ்ஜாதிக்காரர்களுக்கு கல்வியைத் தராதே என்ற மனு சாஸ்திரச்சட்டம் எழுதிவைத்த பார்ப்பனியத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டது அந்த பானை உடைப்பின் மூலம் என்று விவரிக்கின்றது.  

திராவிட மாணவர் கழகத்தைத் தொடங்கிடும் நிலையில் தந்தை பெரியார் கொடுத்த அறிக்கையும் அதற்கு அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொடுக்கும் விளக்க உரையும் அடுத்து இடம் பெற்றுள்ளன.அந்த அறிக்கையில்தான் தந்தை பெரியாரின் புகழ்பெற்ற வாசகமான ' விழியுங்கள்,எழுந்திருங்கள்.ஆழ்ந்து சிந்தியுங்கள்.உங்கள் தனிப்பட்ட வாழ்வைக் காரித்துப்புங்கள் .உங்கள் இனத்தை மனிதத்தன்மையதாக்குங்கள்.நம் நாட்டை மேன்மையும் வீரமும் பொருந்திய நாடாக்குங்கள். நாடு நகரம் பட்டி தொட்டி எல்லாம் தன்மானக் குரலெழுப்புங்கள் " என்னும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. 


திராவிட மாணவர் கழகத்தில் இருப்பவர்கள் எப்படிப்பட்ட தன்மை உடையவர்களாக, குணங்கள் உடையவர்களாக தங்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதனை தந்தை பெரியாரின் , " ....மாணவர்கள் தங்கள் புத்தியை,தங்கள் சக்தியை கண்ட இடத்தில் எல்லாம் செலுத்தாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் ' என்னும்  அறிவுரைகளை மேற்கோள்களாகச்சுட்டிக்காட்டி " இதில் கண்ட இடத்தில் என்பதற்குப் பெரியார் காலத்தில் கடவுள் பக்தி,ஜாதி வெறி,மித மிஞ்சிய உல்லாசம்,கேளிக்கை,பதவி வெறி,சினிமா போதை இவை மட்டுமே இருந்தது. இப்போது அது மேலும் விரிவடைந்து SOCIAl MEDIA என்ற தொலைக்காட்சி ,கைத்தொலைபேசி மற்றும் முக நூல்,வாட்ஸ் அப்,டுவிட்டர் போன்றவை எல்லாம் சதா சர்வகாலமும் பயன்படுத்தக்கூடாத நேரத்திலும் நாம் பயன்படுத்தினால் மீண்டும் திரும்பாத அரிய காலத்தை வீணாக்குகின்றன" என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். உண்மைதான். எதை இழந்தாலும் திரும்பப்பெற இயலும்,.அரிய நேரத்தை வீணாக்கினால் திரும்பப்பெற இயலாது. அதிலும் மாணவப்பருவத்தில் வெட்டியாக பொழுது போக்கிவிட்டு பின்னால் வருந்துபவர்களை நிறையவே பார்த்திருக்கிறோம். 

மாணவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் ? இதோ பெரியார் சொல்கின்றார்..கேட்போம். " நீங்கள் உங்களைச்சாதாரண மனிதர்களாக நினைத்துக்கொள்ளவேண்டும். உங்கள் வாழ்க்கைச்சவுகரியங்களை எவ்வளவு குறைத்துக்கொள்ளவேண்டுமோ அவ்வளவு குறைத்துக்கொள்ளவேண்டும். உங்களுக்கு மிக மிக அடக்கம் வேண்டும். நீங்கள் மிக மிக தன்னலமற்றவர்களாக இருக்கவேண்டும். இப்படிப்பட்ட மாணவர்களால்தான் ஏதாவது உருப்படியான நன்மை ஏற்படும்....நமக்கு அறிவிருப்பதே நம் காரியங்களை இம்சையின்றி சாதித்துக்கொள்ளத்தான். அறிவு இருக்கும்போது மிருகத்தனத்தை ஏன் நாம் கடைப்பிடிக்க வேண்டும்? ..மனிதத்தன்மைக்கு மிக அவசியமானது அகிம்சைதான் " ..இவற்றையெல்லாம் மாணவர்கள் மனதில் மிக ஆழமாகப் பதியவைத்துவிட்டால் பாதிப் பிரச்சனை தீரும். 

திராவிட மாணவர் கழகத்தில் இணைந்தால் இலாபம் கிட்டாது, நட்டமே கிட்டும் என்று சொல்லி 'சூத்திர பஞ்சம்,அடிமை இழிவுப்பட்டம் ஒழியும் ' என்று ஆரம்பித்து ஒழியும் 8 நட்டங்களை பட்டியலிடுகின்றார் ஆசிரியர். பின்பு திராவிட மாணவர் கழக இயக்கத்தில் இணைந்த "மாணவத்தோழர்கள், இதன் விளைவாக செழிப்போடு வளரும் பகுத்தறிவு விளைச்சல்கள் ஆவார்கள். நீங்கள் அனைவரும் படிப்பை சமூக மாற்றத்திற்குரிய கருவியாக்கி மகிழ்வீர்கள். அறிவியல் மனப்பான்மை உங்களுள் பெருகும்,அதன் விசாலப் பார்வையால் விரிபயன் அடைவீர்..சமத்துவம் ,சுய மரியாதையால் சொக்கத்தங்ககளாவீர்...மான வாழ்வு பெற்ற மனிதம் உங்களிடையே மலரும்." என்று பயன்களை அடுக்குகின்றார் ஆசிரியர். திராவிட மாணவர்கள் என்று ஏன் சொல்லவேண்டும் என்பதற்கான தெளிவான விளக்கம் அடுத்தடுத்த பக்கங்களில் கிடைக்கிறது இந்தப் புத்தகத்தில்.திராவிடத்திற்கும் ஆரியத்திற்குமான 11 வேறுபாடுகளை வகைப்படுத்திக்கூறுகின்றார் ஆசிரியர் .இதனை மட்டுமே தனியாக முக நூல் போன்றவைகளில் பதிவிடலாம். நறுக்கென்று வேறுபாட்டை உணர்த்தும். 

அறிவியல் மனப்பான்மைக்கு எதிரான ஆட்சியாளர்கள், இன்றைக்கும் தொடரும் போராட்டம்,புரட்டர்களின் புகலிடமாக வரலாறு மாற்றப்படுதல் என இன்றைய செய்திகள் என விரியும் இந்தப்புத்தகத்தில் நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் வெங்கிட்ட இராமகிருஷ்ணன் சொன்ன கருத்தான " நான் ஏதாவது கருத்துச்சொன்னால், என்னை மேற்கத்திய சிந்தனைக்கு அடிமையாகி விட்டவன் என்பார்கள்.அறிவின் மிகப்பெரிய எதிரி அறியாமை அல்ல, தான் எல்லாம் அறிந்தவன் என்ற மயக்கம்தான் என்பார் ஹாக்கிங்.அதைத்தான் நான் வலியுறுத்த விரும்புகிறேன்' என்னும் கருத்து மிக ஆழமான கருத்து. இன்றைக்கும் உயர் ஜாதி பார்ப்பனர்கள் சாதாரண மக்களுக்கு கல்வி கிடைக்கக்கூடாது, சமூக நீதி நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதற்காக செய்யும் செயல்களையும் அதனை எதிர்த்து திராவிடர் கழகம் எப்படிப்பட்ட முயற்சிகளின் மூலம் முறியடித்தது என்பதையும் வரிசையாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.புரட்சிக் கவிஞரின் பாடலோடு இந்தப்புத்தகம் நிறைவு பெறுகிறது. முடிவில் (08.07.2018-ல் குடந்தையில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டில் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை) எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த மாநாட்டில் கலந்து கொண்டு நானும் அந்த உரையைக் கேட்டவன் என்றாலும் ,உரையை நூலாகப் படிக்கும்போது வியப்புதான் மேலிடுகின்றது.படிக்க வேண்டிய புத்தகம். மாணவர்களிடம் பரப்ப வேண்டிய புத்தகம். 


Saturday, 11 April 2020

கரோனாவும் திராவிட இயக்கமும் ......



நன்றி : இன்றைய(11.04.2020) விடுதலை

சாதாரண எழுத்தில் படிப்பதற்காக

"தற்போதைய சூழலில் ,கொரனாவுக்கு எதிரான ஒரே நம்பிக்கைச்சொல் கம்யூனிஸ்ட் நாடான கியூபா.அதனால்தான் ,இந்தக் குட்டித் தீவு நாட்டின் உதவியை உலகின் வல்லரசுகளும் நாடியிருக்கின்றன. இத்தாலி உள்ளிட்ட 59 நாடுகளில் ,கியூபாவின் 29 ஆயிரம் மருத்துவர்கள் கொரனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்....தங்களது மருத்துவர்களை உலக நாடுகளுக்கு அனுப்புவதன்மூலம்,ஆண்டொன்றுக்கு 6 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் கியூபா,பொருளாதாரத்தில் பின் தங்கிய லத்தீன்அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலவசமாகவே சிகிச்சை அளிக்கிறது.

வெளி நாடுகளுக்கு இவ்வளவு மெனக்கிடும் கியூபா,உள்நாட்டிலும் சிறப்பான பணியை மேற்கொண்டிருக்கிறது...சீனர்களை தனது இண்டர்ஃபெரான் ஆல்ஃபா 2பி தடுப்பு மருந்தைக்கொண்டு கொரனாவிலிருந்து குணப்படுத்தியதாக இருக்கட்டும்.மற்ற நாடுகள் மறுத்தபோது கொரணாத் தொற்றுள்ள பயணிகளுடன் கடலில் தத்தளித்த இங்கிலாந்து கப்பலை அனுமதித்து சிகிச்சை அளித்ததாக இருக்கட்டும். மனித நேயத்தால் மிளிர்கிறது கியூபா."ஆயுதங்கள் எதற்கு .நம்மிடம்தான் நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்களே " என்றார் கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ.அவரது இந்த வார்த்தை இன்று உலகுக்கே வழிகாட்டுகிறது...(ச.ப. மதிவாணன்...நக்கீரன்-10-4.2020 மின் இதழ்)".  

1000 பேருக்கு 67 டாக்டர்கள் கியூபாவில்...ஒரு பொதுவுடமை அரசை அமைப்பதற்காக அந்த நாடு பட்ட துன்பங்கள் எத்தனை?துயரங்கள் எத்தனை? பக்கத்திலேயே இருக்கும் பிற்போக்கத்தனத்திற்கு முன்னோடியாகத் திகழும் வல்லரசான அமெரிக்கா எத்தனை இன்னல்களை கியூபாவிற்கு கொடுத்தது ? உலக சுகாதார மையத்தின் (WHO)  புள்ளி விவரங்களின்படி  அமெரிக்காவிலேயே 1000 பேருக்கு 24 டாக்டர்கள்தான்.ஆனால் 1000 பேருக்கு 67 டாக்டர்கள் என்னும் கியூபாவின் சாதனை எவ்வளவு பெரிய சாதனை ?இதனைப் படித்தவுடன் கொரனாவிற்கு மருத்துவமும்  திராவிட இயக்கமும் என எனது சிந்தனை ஓடியது.

உலக சுகாதார மையத்தின் (WHO)  புள்ளி விவரங்களின்படி இந்தியாவை  எடுத்துக்கொண்டால் 1000 பேருக்கு 1 டாக்டர், இந்தியாவில் இருக்கும் மாநிலங்கள் என்று எடுத்துக்கொண்டால் முதலிடத்தில் தமிழகம் இருக்கிறது. அதாவது 1000 பேருக்கு 4 டாக்டர்கள்..அதாவது 253 பேருக்கு ஒரு டாக்டர் தமிழகத்தில் இருக்கிறார்.பி.ஜே.பி. ஆளும் ஜார்க்காண்ட் மாநிலத்தில் 8180 பேருக்கு ஒரு டாக்டர் ,அரியானாவில்  6037 பேருக்கு ஒரு டாக்டர் என இருக்கிறார்கள். சுவீடன் நாட்டினைப் போல, நார்வே நாட்டினைப் போல தமிழ் நாட்டில் 1000 பேருக்கு 4 டாக்டர்கள் இருக்கிறார்கள், அதிலும் கிராமப்புறங்களிலும் டாக்டர்கள் பற்றாக்குறை இல்லாமல் இருக்கிறார்கள் என உலக சுகாதார அறிக்கை கூறுகிறது.

தமிழ் நாட்டின் மருத்துவ வசதி என்பது ஒரே நாளில் ஏற்பட்ட மாற்றம் அல்ல. கடந்த 50 ஆண்டுகளாக நடைபெறும் திராவிட இயக்க ஆட்சிகளினால் ஏற்பட்ட மாற்றம்.இராமனைத் தினந்தோறும் கும்பிடும் பக்தர்கள் அதிகம் உள்ள ஜார்கண்ட்,அரியானா, உத்தரப்பிரதேசத்தை விட , கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் இராமசாமியின் வழியில் வந்த திராவிட இயக்க ஆட்சிகளால் ஏற்பட்ட மாற்றம் இது. மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என எண்ணிய அறிஞர் அண்ணா அவர்கள் சமூக நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.திராவிட இயக்க ஆட்சியில் கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற சமூக நலத்திட்டங்களில் மிக முக்கியமானது மருத்துவம். டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக ஆனவுடன் 1970-களிலேயே தமிழ் நாட்டின் அத்தனை ஒன்றியங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையம் வந்து விட்டது.பெரும்பாலான மாவட்டத்தலைநகரங்களில் அரசு மருத்துவக்கல்லூரிகளை டாக்டர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார். மற்றவர்களும் தொடர்ந்தார்கள்.  இன்றைக்கு, 35 அரசு மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் இருக்கின்றன. இது தவிர அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தமிழகத்தில் இருக்கின்றன.இந்தியாவின் மற்ற எந்தப்பகுதியிலும் இவ்வளவு மருத்துவக் கல்லூரிகள் இல்லை. தமிழ்நாடு  அரசால் ஏற்படுத்தப்பட்ட  மருத்துவ கல்லூரிகள் அனைத்திலும் தமிழ் நாட்டைச்சார்ந்த தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் படித்து மருத்துவர்களாகி இருக்கிறார்கள். எந்த நுழைவுத்தேர்வும் இல்லாமல் +2 மதிப்பெண் அடிப்படையில்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள்தான் தமிழகத்தில், இந்தியாவின் பல நகரங்களில், உலகின் பல நாடுகளில் புகழ் பெற்ற மருத்துவர்களாக இருக்கிறார்கள். அரசு மருத்துவக்கல்லூரியில் படித்த மருத்துவர்கள் மனிதாபிமானம் மிக்கவர்களாகவும், அர்ப்பணிப்பு உள்ள மனித நேயர்களாகவும் இருப்பது கண்கூடு.

திராவிட இயக்க ஆட்சிகளில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் மாநில அரசால் தொடங்கப்பட்டவையே. மத்திய அரசு உதவி செய்யவில்லையென்றாலும் மத்தியில் இருந்த காங்கிரசு அரசு இடைஞ்சல் செய்யவில்லை. 'மத்தியில் கூட்டாட்சி,மாநிலத்தில் சுயாட்சி' என்னும் கோட்பாட்டை முன்வைத்த திராவிட இயக்க முன்னாள் முதல்வர்கள்தான் இதற்கான அடித்தளம் அமைத்தார்கள் என்பது வரலாறு.தமிழ் நாட்டில் இருப்பது போல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் டாக்டர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்கு அந்தந்த மாநிலங்களில் மருத்துவக்கல்லூரிகளை துவக்குவதற்கு அந்தந்த மாநில அரசுகள் முன்வரவேண்டும்.அதனை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

ஆனால் மத்திய அரசு அப்படி வழிகாட்டுவதற்கு பதிலாக,நீட் தேர்வு என்று ஒன்றைக் கொண்டுவந்து தமிழகத்தில் இருக்கும் திராவிட இயக்க ஆட்சிகளில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மற்ற
மாநிலத்தைச்சார்ந்த மாணவர்களை சேர்ப்பதற்கு முயல்கிறார்கள்.எத்தனை விதமான பித்தலாட்டங்கள் நீட் தேர்வில் நடந்திருக்கின்றன என்பதனை செய்திகள் வாயிலாகப் படித்துக்கொண்டிருக்கிறோம். ஆள் மாறாட்டாம் பல இடங்களில் நடந்திருக்கிறது.இன்னும் என்னென்ன தில்லுமுல்லுகளோ...நமக்குத் தெரியவில்லை.இந்தியா முழுவதுமே  உயர் ஜாதிக்காரர்களுக்கும்,பணக்காரர்களுக்குமான படிப்பாக மருத்துவத்தை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது.

மருத்துவராக வேண்டும் எனும் கனவோடு அல்லும் பகலும் உழைத்து நீட் தேர்வு என்னும் கொடுமையால் உயிர் நீத்த அனிதா போன்றவர்களின் நோக்கம் பணம் ஈட்டுவதல்ல. மருத்துவம் இல்லாமல் எனது அன்னை இறந்தார்.நான் மருத்துவராகி எனது அம்மா போன்ற ஏழைகளுக்கு மருத்துவம் அளிக்கவேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருந்தது.மனித நேயத்துடன் மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மருத்துவம் படிக்க நினைப்பவர்களை வடிகட்டி நிறுத்துகிறது நீட் தேர்வு.நீட் என்னும் கொடுமையான ஒரு நுழைவைத்தேர்வைக் கொண்டு வந்து ,பணக்காரர்கள் மட்டுமே இரண்டு ஆண்டுகள் மூன்று ஆண்டுகள் இலட்சக்கணக்கில் பணம் கட்டி தனிப்பயிற்சியில்  படித்தவர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்னும் கொடுமையை மத்திய அரசு தனது காட்டுத்தனமான கொள்கையால்  கொண்டு வந்து நுழைத்திருக்கிறார்கள்.

 தமிழக சட்டமன்றத்திலே எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் இணைந்து நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என்னும் சட்ட முன்வடிவை குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக மத்திய அரசின் மூலமாக அனுப்பி வைத்ததை முதலில் காணாம்(காணவில்லை) என்றார்கள். பிறகு நீதிமன்றம் வேண்டாம் என்று சொல்லி விட்டது என்றார்கள். தமிழக மக்களின் உணர்வோடும் உயிரோடும் இன்று வரை நீட் தேர்வில் மத்திய அரசில் இருக்கும் சிலர்  விளையாண்டு கொண்டிருக்கிறார்கள்.

கடந்த மார்ச் 23-ந்தேதி மத்திய அரசின் அலுவலங்களுக்கும் முன்னால் நீட் தேர்வினை எதிர்த்து நடப்பதாக இருந்த மறியல் போராட்டம் கொரனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.  
நீட் தேர்வு கூடாது ஏன் என்பதனை வலியுறுத்தி திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஜனவரி 20 கன்னியாகுமரியில் ஆரம்பித்து ஜனவரி 31- சென்னைவரை நீட் எதிர்ப்பு பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். தமிழகம் முழுக்க பிரச்சாரக் கூட்டங்களை பல்வேறு கட்சியினரின்,.பொதுமக்களின் பெருத்த ஆதரவோடு இந்த நீட் தேர்வினை ஒழித்தே தீருவோம்  என்னும் சூளுரையோடு  நடத்தினார். ஒரே  நாளில் மூன்று நகரங்களில் இந்த 87 வயதிலும் மணிக்கணக்கில் உரையாற்றி மக்களுக்கு இந்த நீட் தேர்வின் தீமைகளை எடுத்துரைத்தார்.

"ஒரே தரத்தில் ஒரே முறையில் ஒரே கட்டமைப்பில் நாடு முழுவதும் கல்வி முறையும் பள்ளிகளும் இல்லாத நிலையில் பொதுவான நுழைவுத்தேர்வு எப்படிச் சரியாகும்? நியாயமாகும்? இந்தியாவில் மாநிலப் பாடத்திட்டங்கள், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன் முறை என்று பல்வேறு பாடத் திட்டங்கள் உள்ளன. இந்த நிலையில், அனைவருக்கும் ஒரே மாதிரியான மருத்துவப் படிப்பு அனுமதிக்கான நுழைவுத் தேர்வு என்பது எப்படிச் சரியானதாகவும் நேர்மையானதாகவும் நியாயமானதாகவும் இருக்க முடியும்? நகர்ப் பகுதிகளில் தெருவிற்குத் தெரு பயிற்சி மய்யங்கள் உள்ளன. நகர்ப் பகுதி மாணவர்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆண்டு முழுவதும் அதற்கான பயிற்சிகளை பகுதி நேரத்தில் பெறமுடியும். கிராமப்புற மாணவர்கள் தங்கள் பள்ளித் தேர்வை முடித்து விட்டு வந்துதான் நகரத்தில் மிகக் குறுகிய நாட்கள் தங்கிப் படித்துப் பயிற்சி பெறவேண்டும். பெரும் பொருளாதார வசதி வாய்ப்புள்ளவர்களுக்குதான் இது சாத்தியம். இவர்கள் இருவரையும் ஒரே களத்தில் நிறுத்துவது எப்படி நியாயமானதாகும்?"  என்று அடுக்கடுக்கான கேள்விகளை ஆசிரியர் கி.வீரமணி எழுப்பினாரே அதற்குப் பதில் என்ன ?

.மத்திய அரசின் திட்டங்களில் சுகாதாரத்திற்கென பெரிதாக நிதி ஒதுக்கப்படவில்லை.. புதிய பாராளுமன்றக் கட்டிடத்திற்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்கிறார்கள். செத்த மொழி சமஸ்கிருதத்திற்கு பல நூறு கோடி ரூபாய்களை  ஒதுக்குயிருக்கிறார்கள்..கங்கையை சுத்தம் செய்கிறேன் என்று சொல்லி பல கோடிகளை ஆற்றிலே கொட்டியிருக்கிறார்கள். ஆனால் சுகாதாரத்துறைக்கு ? தூய்மைப் பணி செய்யும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கு என எந்தத் திட்டமும் மத்திய அரசிடம் இல்லை.3000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை இப்போது பயன்படவில்லை.ஆனால் திராவிட இயக்க ஆட்சியிலே ஏற்படுத்தப்பட்ட மருத்துவமனைகளும், மருத்துவக்கல்லூரிகளும் மக்களின் துயர் துடைக்கும் பணியைச்செய்து கொண்டிருக்கின்றன.

கொரானாவின் காரணமாக ஸ்பெயின் நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தையும் தேசியமயமாக்கி  அரசு மருத்துவமனைகளாக மாற்றி உள்ளது அந்த நாட்டின்  அரசு.   இங்கிலாந்து பிரதமர் கொரனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கின்றார்.    எல்லோரையும் பாதிக்கும் நோய் இந்தக் கொரனா.   தமிழக அரசுக்கு இன்றைய தேவை என்பது முதுகெலும்பு. தமிழகத்திற்கு தேவையான நிதியைப் பெறுவதாக இருக்கட்டும் அல்லது நீட் தேர்வு எங்களுக்கு வேண்டாம் என்பதைச்சொல்வதாக இருக்கட்டும். அதனை அழுத்தம் திருத்தமாக தமிழக அரசு சொல்லவேண்டிய நேரம் இந்த நேரம்.'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்பதுதான் திராவிட இயக்க ஆட்சியில் முன்னாள் ஆட்சி செய்த முதல்வர்களின் முழக்கம். அந்த முழக்கத்தை பின்பற்ற வேண்டிய நேரம் இது என்பதனை தமிழக அரசு உணர வேண்டும். மத்திய அரசிற்கு உணர்த்த வேண்டும். நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டவே வேண்டாம் என்பதனை தமிழக அரசு அழுத்தமாகச்சொல்லி அதனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும் என்பதோடு இந்தக் கொரனா காலத்தில் மாநிலத்திற்கு தேவையான நிதியைத் தர மத்திய அரசிற்கு அனைத்து வகையிலும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதே  நமதே கோரிக்கை.